Home / ஈழம் / நளினி விடுதலையில் இருந்தது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா..?

நளினி விடுதலையில் இருந்தது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா..?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைப்பட்டிருக்கும் நளினியை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழக அரசின் இந்த அறிவிப்பில் ஒளிந்திருப்பது அரசியல் சிக்கலா அல்லது சட்டச் சிக்கலா என்கிற தலைப்பில் கடந்த ஞாயிறன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

கீற்று.காம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் டி.அருள் எழிலன், வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு ஆகியோர் பேசினார்கள். பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவசர வேலையால் வர முடியாமல் போனதாகச் சொல்லப்பட்டது.

5 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் 6 மணிக்குத்தான் துவங்கியது. 100 பேராவது வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வலையுலகில் இருந்து வளர்மதி, பாரதிதம்பி, தமிழ்நதி வந்திருந்தார்கள். கார்ட்டூனிஸ்ட் பாலாவை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

பேசிய பேச்சாளர்கள் அனைவருமே நளினியை விடுதலை செய்ய முடியாது என்பதற்கு தமிழக அரசு தெரிவித்திருக்கும் நகைச்சுவையான சில காரணங்களைச் சுட்டிக் காட்டி படு காட்டமாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

பேசியவர்களின் பேச்சுக்களை என் நினைவில் இருக்கின்றவரையில் இங்கே எழுதுகிறேன். கவிஞர் தாமரை பேசியபோதுதான் நான் குறிப்பெடுக்கத் துவங்கியதால் கொஞ்சம் முழுமையானதாக இருக்காது. மன்னிக்கவும்..

முதலில் பூங்குழலி பேசினார்.

இவர் எழுதிய ‘தொடரும் தவிப்பு’ என்ற புத்தகம் சமீபத்தில்தான் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை மல்லிகை இல்லத்தில் வைத்து சிறப்பு விசாரணைப் படையினர் எப்படியெல்லாம் சித்ரவதை செய்து துன்புறுத்தினார்கள் என்பது பற்றி அந்த வழக்கில் கைதாகி பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட செல்வி என்கிற பெண் சொல்கின்ற கதைதான் அந்தப் புத்தகம். சமீபத்தில்கூட கீற்று இணையத் தளத்தில் இது பற்றிய கட்டுரைகள் வந்திருந்தன.

நளினியை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்து ஒரு ஆட்டோவில் வைத்து அவரை அழைத்துச் சென்றபோதே சி.பி.ஐ. அவர் மீது பாலியல் ரீதியான கொடுமையை ஆரம்பித்துவிட்டது என்று குற்றம்சாட்டினார் பூங்குழலி.

நளினிக்கு இந்தப் படுகொலை குறித்து முன்கூட்டியே தெரியவே தெரியாது என்றும், ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற பின்புதான் இந்தத் தகவல் அவருக்குச் தெரிந்திருக்கிறது என்கிற உண்மையையும் தெரிவித்தார் பூங்குழலி.

நளினியை விடுதலை செய்தால் ராயப்பேட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற காமெடியான காரணத்தைக் கிண்டலடித்தார் பூங்குழலி.

அடுத்துப் பேச வந்தார் வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன்.

நளினியின் வழக்கில் இருந்த மிக முக்கியமான சட்டப் பிரச்சினைகளை எளிமையாக என்னை மாதிரியான பட்டிக்காட்டான்களும் புரிந்து கொள்ளும்வகையில் எடுத்துரைத்தார்.

நளினி உளவியல் ரீதியாக சரியாகவில்லை என்று தமிழக அரசு சொன்ன காரணத்தை மறுத்து அதற்கு உதாரணமாக சாரதா என்கிற பெண்மணிக்கு வேலூரில் நடந்த கொடுமையை வெளிப்படுத்தினார் சுந்தர்ராஜன். டிரெயினில் வந்து கொண்டிருந்த சாரதா தான் கொண்டு வந்த பெட்டி மாறிவிட்டதை உணர்ந்து அதனைத் திருப்பிக் கொடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் சென்று “இந்தப் பெட்டியைத் தவறுதலாக நான் எடுத்து வந்துவிட்டேன்.. இதை வைத்துக் கொண்டு எனது பெட்டியை எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஸ்காட்லாண்டு யார்டு போலீஸாருக்கே அட்வைஸ் கொடுக்குமளவுக்கு புத்திசாலிகளான நமது போலீஸார் அந்த சாரதா மீதே திருட்டுக் குற்றம் சுமத்தி அவரை வேலூர் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர். அப்போது சாரதாவிடம் 5000 ரூபாய் பணம் இருந்திருக்கிறது. சிறைக்குள் நுழைந்தவுடன் சாரதாவிடம் பணம் இருப்பதைக் கண்ட அங்கிருந்த கன்விக்ட் வார்டன்கள் அதனை தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கியிருக்கிறார்கள்.

சில நாட்கள் கழித்து சாரதா அந்தப் பணத்தை வார்டன்களிடம் திருப்பிக் கேட்க அவர்கள் தர மறுத்திருக்கிறார்கள். உடனேயே இதை மேலதிகாரிகளிடம் சொல்லிவிடுவேன் என்று சாரதா அவர்களை மிரட்டியிருக்கிறார். இதனால் கோபமான பெண் வார்டன்கள் சிலர் ஒன்று சேர்ந்து சாரதாவை நிர்வாமணாக்கி தனி அறையில் வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இதனைத் தற்செயலாகப் பார்த்த நளினிதான் அந்த அறைக்குள் வம்பாக நுழைந்து சாரதாவை உயிருடன் மீட்டிருக்கிறார். அதோடு தன்னைப் பார்க்க வந்து தனது வக்கீலிடம் சாரதாவின் கதையைச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியர் கார்பஸ் வழக்குத் தொடர்ந்து சாரதாவின் விடுதலைக்காக உதவியிருக்கிறார் நளினி.

இந்தக் கதையைச் சொன்ன சுந்தர்ராஜன்.. “இந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மேம்பட்டுள்ளவரை அரசு ஏற்கவில்லை என்றால் இது கண்துடைப்பு காரணம்தான்..” என்றார்.

மேலும் சில நீதிபதிகளிடம் இருந்து சில நல்ல தீர்ப்புகளும், பலரிடமிருந்து எதிர்மறையான தீர்ப்புகள் வெளிவருவது இப்போதெல்லாம் அதிகரித்து வருவதாகச் சொன்னார். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நீதிபதிகளால்தான் ஓரளவுக்கு நியாயமான தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

நீதிபதிகளில் சிலர் பதவி உயர்வு வேண்டியும், ஓய்வு பெற்றதற்குப் பின்னர் கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு கமிஷன் தலைவர் பதவிக்காகவும் ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ளாத அளவுக்கு தீர்ப்புகளை வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார். பெருவாரியான மக்களை ஊடகங்களும், அதன் முதலாளிகளும் திட்டமிட்டு திசை திருப்பிவருவதாகவும் குற்றமும் சுமத்தினார்.

இதற்கு உதாரணமாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நளினி விடுதலை பற்றிய நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது பற்றிக் குறிப்பிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் சேனலின் நிருபர் ஒரு தனி நபராகக் கருத்துச் சொல்லும்படி மீண்டும், மீண்டும் வற்புறுத்தியதை சுட்டிக் காட்டினார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே பொதுமக்களிடமிருந்து எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவையும் அங்கே தட்டச்சு செய்யப்பட்டு ஸ்கிரால் நியூஸாகக் காட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

அதில் நளினியைத் தூக்கில் போடு.. சாகும்வரை வெளியில் விடாதே என்பது போன்ற எஸ்.எம்.எஸ்.கள் ஓடிக் கொண்டிருந்ததையும் சுட்டிக் காட்டிய சுந்தர்ராஜன், “இவை போன்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் நளினியைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன” என்றார்.
ஹிந்து பத்திரிகையின் தலையங்கத்திற்கு வந்திருந்த விமர்சனங்களில் ஒன்றில் நளினியின் தன் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு அங்கஹீனப்படுத்திவிட்டு பின்பு அவரை வெளியில் விடலாம் என்று ஒரு தமிழர் எழுதியிருந்ததையும் குறிப்பிட்டார் சுந்தர்ராஜன்.

மேலும் அவர் பேசும்போது, “மக்களிடம் நளினியின் விடுதலை விஷயத்தை இன்னமும் மிக நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. மானாட மயிலாட ஆட்டத்தையும், சீரியல்களையும் பார்த்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்ற இந்த சமூகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்வை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். வேறு வழியில்லை..

மக்கள் ஒன்றை வசதியாக மறந்துபோய்விடுகிறார்கள். இன்னைக்கு நளினி சிறையில் இருக்கிறார் 19 வருஷமா.. நாளை இது போன்ற நிலைமை நம் குடும்பத்தில் ஒருவருக்கோ.. அல்லது நமக்கோ நடக்கலாமே.. வருமுன் காப்பது நமக்குத்தானே நல்லது..?” என்று சொல்லித் தன் உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து வந்த பத்திரிகையாளர் அருள்எழிலன் துவக்கத்திலேயே காட்டமாகத்தான் ஆரம்பித்தார்.

“நளினி விடுதலையைப் பத்தி பேசும்போது எல்லாருமே ராஜீவ்காந்தி கொலையைப் பத்தியே பேசுறாங்க.. ஏன் ராஜீவ்காந்தியை கொலை செஞ்சாங்கன்றதை மட்டும் கேக்க மாட்டேங்குறாங்க..? எங்க தேசியத் தலைவர் ராஜீவ்காந்தியை கொன்னுட்டாங்க.. கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க.. ஏன் கொன்னாங்க..?

அமைதிப்படை.. அமைதிப்படைன்னு சொல்லி ஒண்ணை இலங்கைக்கு அனுப்புனாங்க.. அந்தப் படைகளால் இலங்கையில், ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்டவர்களை யாராவது நினைத்துப் பார்த்தார்களா..? அந்த அமைதிப்படையை சைத்தானின் படைகள்ன்னு சொன்னாங்களே.. ஞாபகமிருக்கா..? அமைதிகாப்புப்படை சைத்தானின் படைன்னா அதை அனுப்புன சைத்தான் யாரு..?

பயங்கரவாதம், பயங்கரவாதக் குற்றம்னு சொல்றாங்க.. நாட்டுல ராஜீவ்காந்தி கொலை மட்டுமா நடந்திருக்கு.. இன்னும் எத்தனையோ கொலைகள் நடந்திருக்கு.. நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா அத்தனை கொலைக் குற்றவாளிகளுமா 19 வருஷம் ஜெயில்ல இருக்காங்க..? இல்லையே.. பத்து வருஷம், பதினாலு வருஷத்துல வெளில வந்தாங்களே.. நளினிக்கு மட்டுமே ஏன் விடுதலை மறுப்பு..?

நளினி விடுதலையை நாம் இப்படியே விட்டுவிடக்கூடாது.. எந்த வகையிலாவது.. நம்மால் முடிந்த வகையிலாவது ஏதேனும் ஒரு போராட்டத்தைத் துவக்கியாவது நளினியை விடுதலை செய்தாக வேண்டும்..” என்றார் அருள் எழிலன்.

அடுத்துப் பேச வந்தார் கவிஞர் தாமரை.

அமைதியாக ஆரம்பித்த இந்தப் புரட்சிப் பெண் கவிஞரின் பேச்சு போகப் போக சூடு பிடித்தது.

முதலில் இரண்டாண்டுகளுக்கு முன்பாக நளினிக்காக தான் ஒரு கையெழுத்து இயக்கம் துவக்கிய கதையைச் சொன்னார் தாமரை. அந்தத் தொடர்பு இருப்பதினால்தான் இந்தக் கூட்டத்துக்குத் தான் வந்ததாகவும் தெரிவித்தார்.

“அண்ணா நூற்றாண்டையொட்டி கைதிகள் விடுவிக்கபட இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டபோது நளினியின் ஞாபகம் எனக்கு வந்தது.. அவரை விடுதலை செய்ய ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தலாம் என்று எனக்குத் தோன்றியது. இதற்காக எனது நண்பர்கள்(நண்பர்களின் பெயரைச் சொன்னார். எனக்குத்தான் மறந்துபோய்விட்டது. மன்னிக்கவும்) சிலருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் உதவிக்கு வர ஒத்துக் கொண்டார்கள்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்காக எனது சினிமா பாடல் எழுதும் தொழிலைக்கூட ஒரு வருடத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு இதிலேயே மூழ்கினேன். பலருக்கும் தொலைபேசி செய்து இதைப் பற்றிச் சொல்லி அவர்களிடத்தில் அதை அனுப்பி வைத்து கையெழுத்து பெற்றேன். சிலரிடம் நானே நேரில் சென்றேன்.. கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து, கவிஞர் பா.விஜய் என்று திரையுலகப் பிரபலங்களெல்லாம் கையெழுத்திட்டிருந்தார்கள்.

ஓரளவுக்குக் கையெழுத்துக்கள் கிடைத்தவுடன் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு கனிமொழிக்கு போன் செய்தேன். அப்போது கனிமொழி ‘இதுக்கெதுக்கு அப்பாவை பார்க்கணும்.. டெல்லிதான முடிவு பண்ணணும்..?’ என்றார். அவருக்கு நான் இது சம்பந்தமான சட்டப் பிரிவுகளை விளக்கி ‘இல்லை.. இல்லை.. ஐயாதான் செய்யணும்.. நேரம் மட்டும் வாங்கிக் கொடுங்க’ என்றேன். கனிமொழியும் அதில் கையெழுத்துப் போட்டார். அதோடு கலைஞரை சந்திக்க நேரமும் வாங்கிக் கொடுத்தார்.

என்னுடைய நண்பர்களோடு கலைஞரைச் சந்தித்து அந்தக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அப்போது கலைஞர் சொன்ன பதில் என்ன தெரியுமா..? ‘சோனியாவுக்கு ஆட்சேபணையில்லைன்னா எனக்கும் ஒண்ணுமில்லைம்மா.. விட்ரலாம்..’ என்றார் கலைஞர். அப்போது நான் ‘ஐயா.. இது தமிழக அரசு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது செக்ஷன்படி மாநில அரசே இதில் முடிவெடுக்கலாம்..’ அப்படீன்னு சொன்னேன்.. ‘சரி.. பார்க்குறேம்மா..’ என்று சொல்லியனுப்பினார். கூடவே ‘தூக்குத் தண்டனை கூடவே கூடாது.. தமிழ்நாட்டில் நீங்கள் அதனை அனுமதிக்கவே கூடாது’ என்றும் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

ரெண்டு வருஷமாயிருச்சு.. ஒண்ணும் மாற்றமில்லை.. இப்போது நமது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தவுடன் மத்திய அரசின் வழக்கறிஞர் வந்து சொல்கிறார்.. ‘இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..’ என்று… அப்படீன்னா நீங்க இத்தனை நாளா ‘கைதியை விடுதலை செய்வது மத்திய அரசின் கையில் உள்ளது’ என்று சொல்லி வந்தது மக்களை ஏமாற்றவா..?

பத்தாண்டுகள் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வருடாவருடம் விடுவித்த நீங்கள் 19 வருஷத்தைக் கழித்த நளினியை விடுதலை செய்ய மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டுன்னு எப்படி சொல்ல முடியும்..? ஏன் இப்படி எங்களை ஏமாத்தினீங்க..?

இடைல திடீர்ன்னு சொன்னாங்க.. ஒரு கைதி தன்னை விடுதலை செய்யக் கோரவே முடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை அப்படீன்னு.. உண்மைதான். ஆனா அதே கைதி மற்றக் கைதிகளைப் போலவே தன்னையும் சமமா பாவிக்கணும்.. சமமா நடத்தணும் அப்படின்னு அரசுக்கு கோரிக்கை வைக்க உரிமையுண்டு. இதைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் சுப்பிரமணியசுவாமி வழக்கில் மிக முக்கிய பாயிண்ட்டா வைச்சு நளினி விடுதலை குறித்து நடவடிக்கைகள் எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆர்டர் போட்டுச்சு..

அப்புறம் நீங்க என்ன பண்ணுனீங்க..? ‘அறிவுரைக் கழகம்’னு ஒண்ணை நியமிச்சீங்க.. அது யார், யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..? வேலூர் ஜெயில் சூப்பிரடெண்ட், வேலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரி, ஒரு மனநல மருத்துவர், அப்புறம் ஒரு சமூக சேவகர்.. இவங்கதான்.. இவங்க எல்லாரும் சேர்ந்துதான் சிபாரிசு பண்ணிருக்காங்களாம் ‘நளினியை விடுதலை செய்யக் கூடாது’ன்னு..

நான் சொல்றேன்.. அந்த மனநல மருத்துவரும், சமூக சேவகரும் ‘நளினியை விடுதலை செய்யணும்’னு சொல்லியிருப்பாங்க.. ஆனா மற்ற மூன்று அரசு அதிகாரிகளும் அரசுக்கு எதிராக எப்படிச் சொல்வாங்க..? பேசுவாங்க.? ஏன்னா அரசு அறிவுரைக் கழகம் அமைக்கிறதுக்கு முன்னாடியே நளினியை விடுவிக்கக் கூடாது அப்படீன்னு ஒரு முடிவை எடுத்திருச்சு.. முன்னாடியே எடுத்த அந்த முடிவைத்தான் இப்போ அவங்க அமல்படுத்தியிருக்காங்க..

சரி.. நளினியை உள்ள வைச்சிருக்கீங்க.. அவங்க பெத்த பிள்ளை.. அரித்ரான்ற அந்தப் பொண்ணு தன் தாயைப் பார்க்க விரும்புது.. அதுக்கு அனுமதிகூட கொடுக்க மாட்டேங்குறாங்க.. இது என்ன நியாயம்..? நீங்கதான் வெளில விடலை.. சரி அதை ஒரு பேச்சுக்கு ஒத்துக்குவோம்.. ஆனா அவங்க பொண்ணையாவது வர விடலாம்ல.. ஏன் விட மாட்டேங்குறீங்க..?

இதுல ஒரு வார்த்தை(ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைச் சொன்னார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை) இந்த வார்த்தையை தமிழக அரசு கோர்ட்டில் பயன்படுத்தி வருகிறது.. ஆனால் முதல்முதல்லா இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதே சுப்பிரமணியம்சுவாமிதான். போயும், போயும் அந்தாள் சொன்ன வார்த்தையைக் கடன் வாங்கித்தான் நளினி வழக்குல நீங்க சமாதானம் சொல்லிக்கணுமா..?

நளினி செய்தது ‘தேசத்துரோகம்’ என்கிறார்கள். எல்லாரும் ஒண்ணை வசதியா மறந்திர்றாங்க.. ‘நளினி செய்தது தேசத்துரோகம் அல்ல.. அவர் பயங்கரவாதியும் அல்ல’ அப்படீன்னு உச்சநீதிமன்றமே தெள்ளத் தெளிவாச் சொல்லியிருக்கு.. ஏன்னா நளினியின் அண்ணன் பாக்யநாதன் தன்னோட வாக்குமூலத்துல நளினி தன்கிட்ட சொன்னதா ஒரு விஷயத்தை சொல்லிப் பதிவு செஞ்சிருக்காரு. அது ‘நளினிக்கு ஸ்ரீபெரும்புதூர் போறவரைக்கும் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுகிற விஷயம் தெரியவே தெரியாது’ என்பதுதான். இதை சுப்ரீம் கோர்ட்டும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டிருக்கு.. அப்புறம் இதுல எங்க இருக்க பயங்கரவாதம்.. தேசத் துரோகம்..?

‘எது பயங்கரவாதம்’..? ‘எது தேசத்துரோகம்’னு நான் சொல்லட்டுமா..? 1984-ல போபால் விஷவாயு சம்பவத்துல பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிச்சாங்களே அந்தக் கம்பெனி யூனியன் கார்பைடு நிறுவனம்.. இன்னிவரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு கொடுக்கலை.. இப்பவும் அந்த ஆலைக்கு எதிராக ஆலையின் எதிராகவே மக்கள் போராடிக்கிட்டிருக்காங்க.. அந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை வாங்கித் தர முடிஞ்சதா உங்களால..?

இது போதாதுன்னு அந்தக் கம்பெனி இப்ப பெயரை மாத்திக்கிட்டு மறுபடியும் இந்தியாவுக்குள்ளே தொழில் நடத்த வந்திருக்கு. நம்ம அரசும் அதை வரவேற்றிருக்காங்க. இப்ப யாரு பயங்கரவாதி..? எது தேசத்துரோகம்..?

அடுத்தது சமீபத்துல அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம்.. இந்த ஒப்பந்தப்படி என்னன்னு பார்த்தீங்கன்னா இந்த அணுசக்தி ஆலைல ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டுட்டா அதுக்கான நஷ்ட ஈட்டை கேட்கவே மாட்டோம்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காங்க..

நாளைக்கு நிஜமாவே ஏதாவது ஒண்ணு ஆகிப் போயி, விபத்து ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்புன்னா அதுக்கு யாரு பொறுப்பு..? இது தேசத்துரோகமில்லையா..? அப்ப மன்மோகன்சிங்கை தூக்குல போட்டிரலாமா..?

‘ராஜீவ்காந்தி பெரிய தலைவர்.. அவரைக் கொன்னது தப்பு’ங்குறீங்க..? அவர் செத்துப் போய் 19 வருஷமாச்சு.. இன்னும் எந்த அடிப்படையில எந்த அடிப்படைச் சட்டத்துல அவரை பெரிய தலைவர்ன்னு சொல்றீங்க..? இன்னும் 20 வருஷம் கழிச்சாலும் ராஜீவ்காந்தி செத்தவர் செத்தவர்தான்.. அதுல ஒண்ணும் மாற்றமில்லை..

‘இவங்க செஞ்சது தீவிரவாதம்’ங்கிறாங்க.. உச்சநீதிமன்றம் என்ன சொல்லுச்சு.. ‘தடா சட்டம் செல்லாது’ன்னு ஒரு தீர்ப்பைச் சொல்லுச்சே.. அப்பவே இது ‘தீவிரவாதம் இல்லை’ன்னு ஆகிப் போச்சே.. ஆனா அப்பவே என்ன செஞ்சிருக்கணும்.. சாதாரண குற்ற நடைமுறைச்சட்டப்படி இந்த வழக்கை திரும்பவும் விசாரிச்சிருக்கணுமா இல்லையா..? ஆனா இவங்க துரதிருஷ்டம்.. ராஜீவ் கொலை வழக்கை வழக்கை தடா சட்டப் பிரிவின்படி விசாரித்தது சரிதான்னு ஒரு விதிவிலக்கு கொடுத்ததால இவங்க வழக்கை மறுபடியும் விசாரிக்க முடியாம போச்சு..

இந்த அறிவுரைக் கழகம் நளினியை விடுதலை செய்ய முடியாது என்பதற்காக சொன்ன காமெடியான அந்தக் காரணங்களை பார்ப்போம்..

நளினி படிச்சிருக்காருன்றதுக்காக அவரை விடுவிக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்க.. அப்ப படிக்காம இருந்திருந்தா வெளில விட்ருப்பாங்களா..? இல்லாட்டி சிறையில் கஞ்சா வித்துக்கிட்டிருந்தா மட்டும் விடுதலை செஞ்சிருப்பாங்களா? உங்களுடைய அறிவுரைக் கழகம் என்னய்யா எதிர்பார்க்குது..?

அடுத்தது ‘அவர் மன்னிப்பு கேட்கவில்லை’ என்கிறார்கள்.. நளினி தப்பே செய்யலையே.. அப்புறம் எதுக்கு அவர் மன்னிப்பு கேட்கணும்..? சரி.. அப்படியே வைச்சுக்கலாம். மன்னிப்பு கடிதம் கொடுத்தா விட்ருவீங்களா.. இப்ப நான் லெட்டர் வாங்கித் தரவா..? விட்ருவீங்களா..? சொல்லுங்க.. என்னதான் சொல்ல வர்றீங்க..?

அப்புறம் சொல்றாங்க.. அவங்க ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையெல்லாம் ஒரு கணக்குல எடுத்துக்க முடியாதுன்னு.. அப்போ தாயா இல்லாம இருந்தா விட்ருப்பீங்களா..? குழந்தைகள் விஷயத்துல இருக்கு.. இல்லை.. இந்த ரெண்டு ஆப்ஷன்தாங்க இருக்கு.. வேறென்ன இருக்கு..?

‘சட்டம் ஒழுங்கு சீர்கெடும்’னு ராயப்பேட்டை ஆய்வாளர் சொல்லியிருக்காரு.. ஆமாமா.. நளினி விடுதலையானவுடனே அப்படியே மெளண்ட் ரோட்டு பத்தி எரியும்.. ஒருத்தரும் ரோட்டுல நடக்க முடியாது.. பாருங்க.. காரணம் சொல்றாங்களாம் காரணம்..

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை..? ராயப்பேட்டைல அவர் இருக்குறதுதான் பிரச்சினைய…? வேண்டாம்.. நான் கோடம்பாக்கத்துல என் வீட்ல கூப்பிட்டு வைச்சுக்குறேன்.. வெளில விடுங்க.. நான் பார்த்துக்குறேன்.. இதுவும் பிடிக்கலையா..? வெளிநாட்டுக்கு போயிரணுமா..? என் செலவுல நான் அனுப்பி வைக்கிறேன்.. அவங்க பொண்ணு இருக்குற நாட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்.. சொல்லுங்கய்யா..

‘நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை’ என்கிறார்கள். பிரியங்கா காந்தி வந்து நளினியை சந்திச்சிட்டுப் போனப்ப அவங்க என்ன சொன்னாங்க.. ‘நளினி தான் செஞ்சதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.. வேதனைப்பட்டாங்க’ அப்படீன்னு சொன்னாங்களா இல்லையா..? அப்புறமென்ன..?

இது அத்தனையும் கேலிக்கூத்து.. பச்சைப் பொய்.. முன்கூட்டியே திட்டமிட்டு நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று எழுதி வைத்துக் கொண்டு மாநில அரசு நாடமாடுகிறது. கலைஞர் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.

ஆனாலும் இன்னும் ஒரேயொரு சான்ஸ் இருக்கு.. நீதிமன்றத்தில் இப்ப நான் கேட்ட அத்தனை கேள்வியையும் நீதிபதி கேட்கத்தான் போறார்.. ஒருவேளை நீதிமன்றத்தில் இருந்து ஒரு வாய்ப்பு நமக்கு வந்தாலும் வரலாம்.. அந்த நம்பிக்கையோடு இருப்போம்..” என்று தனது நீண்ட பேச்சை முடித்துக் கொண்டார் கவிஞர் தாமரை.

அடுத்து பேச வந்தவர் விடுதலை ராசேந்திரன்.

“கருணாநிதியை சந்திக்க கனிமொழியிடம் நேரம் கேட்டபோது கனிமொழி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். தாமரைதான் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.. என்ன இருந்தாலும் நம்ம எல்லாரையும்விட கனிமொழிக்குத்தானே தனது தந்தையைப் பற்றி நன்கு தெரியும். அதுனாலதான் தெள்ளத் தெளிவா ‘டெல்லிலதான அந்த மனுவைக் கொடுக்கணும்’னு சொல்லியிருக்காங்க..” என்று டைமிங் காமெடியோடு தனது பேச்சைத் துவக்கினார்.

“நளினிக்கு தன்னை விடுதலை செய்யக் கோரும் உரிமை நிச்சயம் உண்டு. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு கைதிக்கும் அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறது.. ஏதோ அறிவுரைக் கழகம் ஒன்றை அமைத்தார்கள். எதற்கு அந்த அறிவுரைக் கழகம்..? அதுதான் டெல்லியிலிருந்து அறிவுரைகள் கிடைக்கிறதே.. சோனியாகாந்திதானே அதுக்கு லீடர்..?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி மாநில அரசுகள் நினைத்தால் தாங்கள் விரும்பிய கைதிகளுக்கு விடுதலை வழங்கலாம். இதற்கு எந்தவித வழிமுறைகளும் கிடையாது.. அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டும் என்கிற விதிமுறையும் கிடையாது. ஆனாலும் இந்த வழக்கில் மட்டும் அறிவுரைக் கழகத்தை அமைத்துக் கொண்டார்கள். காரணம் அப்போதுதானே டெல்லியில் இருந்து வருகின்ற அறிவுரையைக் கேட்க முடியும்..?

இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் அரசின் ஆதரவில் ஐ.கே.குஜ்ரால் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

ஜெயின் கமிஷன் அறிக்கையில், ‘ராஜீவ் கொலை வழக்கில் தி.மு.க.வினருக்கும் பங்கு இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்போது அமைச்சர் பதவியில் தி.மு.க. அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் வற்புறுத்தியது. ஆனால் தி.மு.க. அதனை ஏற்கவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.. அதே காங்கிரஸ் கட்சியுடன் அல்லவா இப்போது நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்..? அதே போன்ற சூழ்நிலைக்குப் பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா?

நளினி விடுதலை குறித்து, இங்கேயிருக்கின்ற பல அரசியல் கட்சிகள்.. ஏன் இடதுசாரிகள்கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாதபோது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியமானது.

‘தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்’ என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதாகூட, ஒரு பெண் என்ற வகையில்கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

‘நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை’ என்று கூறுகிறார்களே, நான் கேட்கிறேன்.. எத்தனையோ தேர்தல்களில் நீங்கள் தோல்வியடைந்திருக்கிறீர்கள். அப்படித் தோற்றபோது குறைந்தபட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இந்தக் குறைந்தபட்சத் தார்மீகப் பொறுப்புகூட இல்லாதபோது, நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்..?

‘பயங்கரவாதம்’.. ‘தீவிரவாதம்’.. என்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரியான டி.ஆர்.கார்த்திகேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் ‘தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது’ என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காரணம் தடா சட்டத்தில் ஒரு டி.எஸ்.பி. முன்பாக ஒரு கைதி கொடுக்கின்ற வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். இந்த ஒன்றை வைத்துத்தான் அவர்கள் 26 பேருக்கும் பூந்தமல்லி செஷன்ஸ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் என்னாச்சு..? அங்கே உடைத்தெறியப்பட்டதே..

இந்திராகாந்தியின் படுகொலை நடந்தபோது டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குற்றம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?

அண்ணல் காந்தியார் கோட்சே என்னும் பார்ப்பனானால்தான் கொலை செய்யப்பட்டார். அப்போது சென்னை ரேடியோவில் இரங்கல் உரை நிகழ்த்திய பெரியார் ‘இந்தத் தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்’ என்றார். கூடவே ‘தமிழ்நாட்டில் இதனால் எந்த வன்முறையும் நிகழக் கூடாது’ என்றும் கேட்டுக் கொண்டார்.

இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே..?

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே திலீபன். அவருடைய உயிரைக் காப்பாற்றும்படி அப்போதைய அமைதி காப்புப் படையின் தளபதி கல்கத், அப்போதைய தூதுவர் தீட்சித்திடம் எவ்வளவோ மன்றாடியும் இந்திய ஏகாதிபத்தியம் அசைந்து கொடுக்கவில்லையே.. போராளி திலீபனின் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா? பார்ப்பனீயப் பயங்கரவாதம் இல்லையா இது..?

இப்போது ஜெயந்திரர் வழக்கில் என்ன நடக்கிறது..? அந்த வழக்கில் அரசுத் தரப்பின் முக்கியச் சாட்சியே பல்டியடித்துவிட்டார். அந்த வழக்கு விசாரணையில் தினம்தோறும் சாட்சிகள் பல்டியடிப்பதுதான் தொடர்கிறது.. இந்த இருள்நீக்கி சுப்பிரமணியனை காப்பாற்றும் நோக்கில் இந்த தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நளினிக்கு எந்த விதத்திலும் உதவ மறுக்கிறது..

நளினியை மட்டும் விடுதலை செய் என்று நாங்கள் கேட்கவில்லை. அநீதியாக சிறைக்குள் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார் என்று இந்த வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்..

பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டுகிறார் என்கிறார்களே.. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் அதற்குப் பிறகுதான் ஈழத்தில் போர் தீவிரமடைந்தது.. மே-21 அன்று ராஜீவ் நினைவு தினம் வருகிறது என்பதால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்யவேண்டும் என்பதற்காகத்தானே, மே 20-ம் தேதியன்று முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். இது திட்டமிட்ட சதி..” என்று சொல்லி முடித்தார்..

கடைசியாக தோழர் தியாகு பேசுவதற்காக வந்தார்.

பல சட்டப் புத்தகங்களில் இருந்து முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி பல்வேறு ஆதாரங்களுடன் நிறுத்தி, நிதானமாகப் பொறுமையாகப் பேசிய இவருடைய பேச்சும் அருமையாக இருந்தது.

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே ஒரு கைதியை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கலாம். 432-435 வரையிலான சட்டங்கள் மூலம் விடுதலை பரிசீலனை என்றால்தான் அறிவுரைக் கழகம் அமைக்கப்படுதல் வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் 161-வது பிரிவின்படிதான் நளினியின் விடுதலையை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசுதான் தேவையே இல்லாமல் அறிவுரைக் கழகத்தை அமைத்து நேரத்தை ஒப்பேற்றியது.

பொதுவாக நாடு முழுவதும் எந்த நீதிமன்றங்களும் தண்டனை காலத்திற்கு முன்பாகவே கைதிகளை விடுவித்ததில்லை.

நக்ஸலைட் கலியப்பெருமாள், அனந்தநாயகி வழக்கில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் நிருபர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவர்களது கருணை மனுவை விசாரியுங்கள் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வேண்டுகோள்தான் வைத்தது. மத்திய, மாநில அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அந்த மனுவை தானே விசாரித்த உச்சநீதிமன்றம் கலியபெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்நாள் பிணை கொடுத்தது. அதில்தான் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தார்கள். இது ஒரு வரலாறு..

பரூவா வழக்கில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு சொன்னபோது, ‘ஒரு குற்றவாளிக்கு எட்டு ஆண்டுகள் தண்டனையே போதுமானது. அதற்கு மேல் அவனை சிறையில் வைத்தால் நாட்டுக்கும் நல்லதல்ல.. அவன் சார்ந்த சமூகத்திற்கும் நல்லதல்ல’ என்று தெளிவாகவே சொன்னார்.

மிகச் சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கைதி 45 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தது தெரிய வந்து அவரை விடுவித்தார்கள். இன்னமும் சட்டீஸ்கர் மாநிலச் சிறைகளில் சிலர் விசாரணைக் கைதியாகவே 20 வருடங்கள், 25 வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏதோ ‘நளினி வெளியில் வந்தால் ஆட்சிக்கு எதிராக சட்டம் ஒழுங்கு கெடும்.. தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்’ என்கிறார்களே.. காந்தியாரை சுட்டுக் கொன்ற வழக்கில் நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேவுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த கோபால் கோட்சேவுக்கு கொலையில் நேரடி பங்கில்லை. நளினியைப் போலவே தெரிந்து வைத்திருந்ததுதான்.

14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு கோபால் கோட்சே தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆயுள் தண்டனை என்றால் அது அவர்கள் உயிருடன் இருக்கும்வரையில் சிறையில் இருப்பதுதான் என்றது நீதிமன்றம். ஆனால் அந்த கோபால் கோட்சேயை முன் விடுதலையில் விடுவித்தது அப்போதைய மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு.

செய்த கொலை தேசத்தந்தை காந்தியாரின் படுகொலை. இப்போது ஆட்சியில் இருந்ததோ காங்கிரஸ் அரசு.. ஆனாலும் கோபால் கோட்சேயை விடுவித்தது. எதனால்..? இந்த கோபால்கோட்சே வெளியில் வந்த பிறகு என்ன செய்தார்..?

அமெரிக்க டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார். ‘காந்தியை கொன்றதற்கு நீங்கள் வருந்துகிறீர்களா..?’ என்ற நிருபரின் கேள்விக்கு கோபால்கோட்சே பதில் சொல்கிறார் ‘நான் ஏன் வருந்தவேண்டும்..? எனக்கு துளிக்கூட வருத்தமில்லை..’ என்றார். இதுவும் இந்தியாவில் கிடைத்த நீதியால் விளைந்ததுதான்.

இப்படி இந்தியா முழுவதிலுமே பல்வேறு வழக்குகளில் பல்வேறு வகையான தீர்ப்புகளும், வித்தியாசமான பார்வைகளும் வெளிப்பட்டுள்ளன. முதலில் நீதிக்கு இந்தியா முழுவதும் சமத்துவம் வேண்டும்.. நளினி வழக்கில் தமிழக அரசு திட்டமிட்டு தான் என்ன நினைத்ததோ, என்ன செய்ய நினைத்ததோ அதனை அறிவுரைக் கழகத்தின் மூலம் செய்து காட்டிவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் ஒரு முறை ‘தூக்குத் தண்டனை என்பது தேவைதான். ஆனால் அதனை அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருந்தார்கள். பகத்சிங் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.பகவதி தீர்ப்பு சொல்லும்போது, ‘அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றால் இது அரிதிலும், அரிதான வழக்கு என்று யார் எப்படி முடிவு செய்வது..?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

யூகோஸ்லாவியாவின் பிரதமர் டிட்டோ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அந்நாட்டு நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவித்தது. இதையடுத்து டிட்டோவின் மனைவியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். ‘உங்கள் கணவரைக் கொன்றவர்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டதே.. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று..?’ அந்த அம்மையார் திருப்பிக் கேட்டார்.. ‘அதுதான் நீதிமன்றமே அவர்களை நிரபராதீகள் என்று விடுவித்திருக்கிறதே.. நீங்கள் எப்படி அவர்களை குற்றவாளிகள் என்று அழைக்கலாம்..?’ என்றார். இதுவெல்லாம் வரலாற்று உதாரணங்கள்..

‘நளினி விடுதலையானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும்’ என்கிறார்களே.. உச்சநீதிமன்றத்தால் முன்பு 21 பேர் விடுதலையானார்களே..? அப்போது தமிழ்நாடு என்ன பற்றியா எரிந்தது..?

முதலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை ஒரு பயங்கரவாத, தீவிரவாத வழக்காகவே பார்க்கக் கூடாது.. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகளே தெள்ளத் தெளிவாகத் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘இந்திய அமைதி காப்புப்படை இலங்கைக்குச் சென்றபோது அங்கிருந்த மக்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப் பழியாகத்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. இதில் எந்த பயங்கரவாதமும் இல்லை. தீவிரவாதமும் இல்லை.. தடா சட்டம் இதற்குப் பொருந்தது’ என்றுதான் அவர்கள் தீர்ப்புச் சொன்னார்கள்.

நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுத்த விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்தில் ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இரண்டு நீதிபதிகள் தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று சொல்ல ஒருவர் மட்டும் ‘தேவையில்லை. இதில் அவரது பங்கு மிகச் சாதாரணமானது’ என்று சொல்லி நளினிக்கு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவுள்ளார் என்கிற விஷயமே ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற பின்புதான் தெரியும் என்கிற உண்மையை எடுத்துக் காட்டிச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு நீதிபதி தனது தீர்ப்பில் நளினிக்கு ஏன் மரண தண்டனை என்கிற காரணத்தை எழுதும்போது ‘ராஜீவ்காந்தி கூடவே பதினைந்து காவல்துறையினர் இறந்து போயிருக்கிறார்களே..’ என்று உருகியிருக்கிறார். ஆனால் ஈழத்தில் இந்திய அமைதிக்காப்புப் படையால் கொல்லப்பட்ட, வதைபட்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி மக்களை அவர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.. அந்த ஆயிரக்கணக்கான மக்களைவிடவும் இறந்து போன காவலர்களின் உயிர் மேலானதா..?

இதே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வேறொரு செய்தியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறானது.. இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதன் பின்தான் நாட்டுக்காக நிறைவேற்றப்பட்டது என்று ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தார்.

நான் கேட்கிறேன்.. இந்தியப் பாராளுமன்றத்தில் என்றைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் முன் வைக்கப்பட்டு உறுப்பினர்களிடம் கருத்து கோரப்பட்டு நிறைவேற்றப்பட்டது? பொதுவாக நாம் வேறு நாடுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுவதில்லை. அதற்கு அரசியல் சட்டத்தில் அவசியமும் இல்லை. அரசியல் சட்ட முன் வடிவு.. திருத்தம் செய்வதாக இருந்தால் மட்டும்தான் அவைகள் அவையில் வைக்கப்படும். அப்படியிருக்க இந்த நீதிபதியின் இந்தக் கருத்து பொய்யானது.

நான் ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருந்தபோது அரசிடம் தண்டனை குறைப்பு கேட்டு விண்ணப்பித்து முறைப்படி அறிவுரைக் கழகத்தைச் சந்தித்து மனு கொடுத்து அதன் பின்புதான் விடுவிக்கப்பட்டேன். அதன் பின்பு இது குறித்து நான் எழுதிய கட்டுரையில், ‘ஐயா கலைஞரே.. நான் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டேன்.. ஆனால் என்னைவிடவும் அதிகமாக 14, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிப்பவர்களெல்லாம் உள்ளே இருக்கிறார்களே.. அவர்களையெல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்..?’ என்று கேட்டிருந்தேன். எனது கட்டுரையை ‘முரசொலி’யில் பிரசுரித்தபோது இந்த வரிகளை மட்டும் நீக்கிவிட்டு பிரசுரித்திருந்தார் கலைஞர்.

சுப்பிரமணியம் சுவாமி இப்போது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் ‘விடுதலை குறித்து சி.பி.ஐ.தான் கருத்துச் சொல்ல வேண்டும்.. மற்றவர்களுக்கு அதிகாரமில்லை’ என்று.. குற்றநடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின்படி விடுதலை கோரினால் மட்டும்தான் சிபிஐயிடம் கேட்க முடியும்.. சிபிஐ தலையிட முடியும்.. இது அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.. சுப்பிரமணியம் சுவாமியை ஆரம்பப் பாடசாலையில் போய் படித்துவிட்டு வரச் சொல்லுங்கள்..

மேலும் அரசியலமைப்புச் சட்டம் 72-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரே எந்தக் குற்றவாளியையும் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் சிறையில் இருந்து விடுதலை செய்யலாம். இது அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்குக் கொடுத்துள்ள தனி சுதந்திரம்..

அப்சல்குருவின் விடுதலையின்போதும் உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக இதையேதான் சொன்னது.. ‘அப்சல் குரு எந்த தீவிரவாத அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதவர்… அதனால் அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாய்ந்தது செல்லாது’ என்றது.. அப்சல் குருவிடம் விடுதலை குறித்து கேட்டபோது, ‘விடுதலையானதில் எனக்குச் சந்தோஷம்தான்.. ஆனால் இது அநீதியானது’ என்றார்.

‘கருத்து’ அமைப்பு நடத்திய கூட்டத்தில் இல.கணேசன் அப்சல்குருவை விடுவித்தது தவறு என்று வாதிட்டபோது நான் இதைத்தான் அவரிடம் கேட்டேன்.. “நான் அப்சல் குரு பற்றி பேப்பரில் படித்துதான் தெரிந்து கொண்டேன்..” என்று சொல்லி நழுவிவிட்டார்.

‘ஏற்கெனவே நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கும் சூழலில் மறுபடியும் ஒரு சலுகையை அவர் பெற முடியுமா? அதனை சட்டம் அனுமதிக்கிறதா?’ என்றெல்லாம் கேட்டார்கள். 164-வது சட்டப் பிரிவின்படி ஒரு குற்றவாளிக்கு எத்தனை முறைகள் வேண்டுமானாலும் தண்டனைக் குறைப்பு செய்யலாம். இப்படி ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பே உள்ளது.

‘ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தேசத் தலைவர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார்’ என்கிறார்கள். ‘போபர்ஸ் திருடன், ஈழ மக்களின் துரோகி’யான ராஜீவ்காந்தியைத் தண்டிக்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. அதனால்தான் தண்டித்தார்கள். இதில் ஒன்றும் தவறில்லையே..

இன்றைக்கு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நளினி விடுதலையை ஆதரிக்கும் அமைப்பின் கடிதம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதில் கையெழுத்திட்டவர்களெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள்..?” என்று நீண்ட விளக்கமளித்துப் பேசினார்.

கடைசியாக கீற்று.காம் சார்பில் பிரியா நன்றிகூற நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்தப் பேச்சில் நான் குறிப்பெடுத்ததில் இருந்துதான் எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் பெரிதும் மன்னிக்கவும்..

இதோ இன்று தீர்ப்பே வந்துவிட்டது. “நளினியை விடுவிக்கவே முடியாது!” என்று..!

இதற்கான காரணங்களாக நீதிபதிகள் சொல்லியிருப்பது, “ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.

சி.பி.ஐ. வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது.” என்பதுதான்.

இது மிகவும்அநீதியான தீர்ப்பு.. கொலை நடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே தெரிந்து கொண்ட ஒரே காரணத்திற்காக 19 வருடச் சிறைத் தண்டனை என்பது அநீதி.. அவர் ஒரு பெண்.. அதிலும் ஒரு குழந்தைக்குத் தாய் என்கின்ற ரீதியிலாவது பரிசீலித்து அவரை விடுவித்திருக்கலாம்.

ஆனாலும் எனக்கு ஏற்பட்ட இன்னொரு அதிர்ச்சி. தமிழக அரசு சொல்லியிருக்கும் ‘இவன் என்னைக் கிள்ளிட்டான் ஸார்’ போன்ற ஸ்கூல் வாழ்க்கை காமெடி காரணங்களை எப்படி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பதுதான் தெரியவில்லை..

கவிஞர் தாமரை சொல்லியிருப்பதைப்போல் கலைஞர், டில்லி அம்மாவின் பேச்சைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துகிறார் என்பதற்கு மிகச் சிறந்த உண்மையான உதாரணம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனி இவர் வரலாற்று நாயகர் அல்ல.. வெறும் ஜோக்கர்தான். தலையாட்டி பொம்மை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் ‘மாநில சுயாட்சி, நாங்கள் திராவிடப் பரம்பரையில் வந்தவர்கள். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு நாங்கள்தான்’ என்று உதார்விட்டுக் கொண்டிருந்த இவர்களின் யோக்கியதை, கவிஞர் தாமரையின் வாக்குமூலத்தில் பல்லைக் காட்டுகிறது..!

அரசியல் காரணங்களுக்காக, ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்கிற மமதையில் சட்டத்தைத் தங்கள் சுயலாபத்துக்காக திசை திருப்பும் இந்தக் கோமாளிகளுக்கு ஒரு முடிவே வராதா..?

பதிவை பிரசுரிக்க உதவிய பதிவர் உண்மைத் தமிழனுக்கு நன்றி

About விசை

One comment

  1. Nalini … The Love that lost a Nation. This idiot 'Nalini' preyed upon 'Murugan' in a infatuation love. Had she not been seen in that photo, history would have turned upside down …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*