Home / சமூகம் / உழைக்கும் பெண்களின் சம உரிமைக்கான நூற்றாண்டுப் பயணத்தில் எங்கே நாம்?

உழைக்கும் பெண்களின் சம உரிமைக்கான நூற்றாண்டுப் பயணத்தில் எங்கே நாம்?

இன்று, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல தனியார் துறைகளிலும், அரசுப் பணிகளிலும் லட்சகணக்கான பெண்கள் ஆண்களுக்கு சமமான சம்பளத்தோடும் மற்றும் சில உரிமைகளுடனும் பணியாற்றுவதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நூற்பாலைகளிலும் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் 15 மணி நேர வேலை, மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பற்ற வேலை சூழல் என எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தார்கள் பெண்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான சம்பளம், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, தேர்தலில் வாக்குரிமை, பாதுகாப்பான வேலை சூழல் போன்றவற்றிற்காக கடும் போராட்டங்களை நடத்திவந்தனர். தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இந்த கோரிக்கைகளை முன் வைத்து 15,000 பெண் தொழிலாளர்கள் திரண்டு நியூயார்க் நகர வீதிகளில் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். இந்த காலக்கட்டத்தில் பெண் தொழிலாளர்களின் சம உரிமைக்கானப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1910ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடைப்பெற்ற அனைத்துலக உழைக்கும் பெண்கள் மாநாட்டில், உலகம் முழுவதுமுள்ள பெண் தொழிளாலர்களின் சம உரிமைக்கான போராட்டத்தின் ஒரு வடிவமாக, உலகம் முழுவதும் ஒரே நாளில் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாடுவதென முடிவெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 1911ஆம் ஆண்டு முதல் அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் ஒரு போராட்டத்தினமாக கொண்டாடப்பட்டது. இந்த 2011ஆம் ஆண்டு அனைத்துலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டு.

பல தொடர் போரட்டங்கள் மூலமாகவே இன்று பெண்கள் பணியிடங்களில் ஓரளவு உரிமைகளைப் பெற்றவர்களாக உள்ளார்கள். இந்த வெற்றிகளை நாம் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில் இன்று அனைத்து தளத்திலும் பெண்களின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்து சம உரிமைக்கான போராட்டத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய தருணமிது.

· இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்படுகிறாள், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் நோக்கத்தற்காக கடத்தப்படுகிறாள், 54 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள், 90 நிமிடத்திற்கு ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது, என பெண்களுக்கு எதிரான வன்முறை சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

· இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ள 43 கோடி பேர்களில் 95.9 சதவிகிதம் பெண்கள். இவர்களின் பாதுகாப்புக்காகச்வென்று ஒரு சட்டம் கூட இல்லை.

· பெரும்பாலான திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இன்னபிற ஊடகங்களும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே சித்தரிக்கின்றன

· வேலை நேரம், பணிசுமை என்பது பற்றி பேசுவதே குற்றம் என்றாகிவிட்ட இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட கார்ப்பரேட் சூழ்நிலையில், பணி சுமையால் உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களுக்கு ஆளாவதுமட்டுமல்லாமல், அனைத்து வீட்டுவேளைகளையும் தானே செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் பெரும்பாலான வேலை பார்க்கும் பெண்கள்.

· அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள், ஊடகத்துறை, விளையாட்டு, அரசியல் என்று எல்லாத் துறையில் பெண்கள் சரி நிகராக இருக்கின்றார்களா? அரசியலில் பெண்களுக்கு 33% சதவிகித இடஒதுக்கீட்டைச் சட்டமாக்க முடியவில்லை நமது ஜனநாயகத்தில்.

· 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைப்பார்த்த பெண்களின் நிலையில்தான் இன்று திருப்பூரில் ஆயத்தஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் நம் பெண்கள் உள்ளனர். ‘சுமங்கலித் திட்டம்’ போன்ற திட்டங்களின் பெயரில், ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த ஊதியம், மிக அதிக வேலை நேரம் என பெண்களின் உழைப்பை சுரண்டுகின்றன. அதே போல் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்களும் நடக்கின்றன.

பெண்களின் உரிமைப் போராட்டம் கடந்து வந்த பாதையைக் கொண்டாடுவதோடு, இனி போக வேண்டிய தூரத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

About விசை

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*