Home / அரசியல் / கூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

கூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

கூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

எழுத்தாளர்கள் அருள் எழிலன், யுவபாரதி மணிகண்டன், சந்திரா ஆகியோரின் முயற்சியில் அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் விளக்கக்கூட்டம் நேற்று (04-பிப்ரவரி-2012) சென்னை லயோலா கல்லூரியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தமிழின் தேர்ந்த எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், மனுஷ்யபுத்திரன், குறும்பனை பெர்லின், அஜயன் பாலா சித்தார்த், பாமரன், பாஸ்கர் சக்தி, நிர்மலா கொற்றவை, ஞானி உட்பட பல எழுத்தாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் நிலைப்பாட்டை தெளிவாகவும், எளிமையாகவும் வெளிக்கொணர்ந்தது.

எந்தவொரு ஒரு அரசியல் கட்சியும் முன்னின்று நடத்தாத ஒரு போராட்டம் அறவழியில் மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராக நெல்லையில் உருவெடுத்திருக்கின்றது. பன்னாட்டு முதலாளித்துவத்தையும், மக்கள் விரோத இந்திய அரசையும் எதிர்த்து, தத்தமது வாழ்வாதாரங்களுக்காக போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், கூடன்குளத்தையும் அதைச்சுற்றியுள்ள மீனவ மக்களும் தலித்துகளும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் மீதான எங்கள் பார்வையை இவ்வரங்க கூட்டம் மாற்றியுள்ளது. இருப்பினும் இவ்வியக்கத்தின் முழு வெற்றி என்பது அணு உலை முற்றிலுமாக கைவிடப்பட்டு கூடன்குளம் அணு உலை திட்டத்திற்கே மூடுவிழா நடத்தப்படும் நாளில் தான். விழாவில் பேசிய படைப்பாளிகள் அனைவரது கருத்துகளும் கொண்ட ஒரு செய்திச் சுருக்கம்.

அணு உலைகளுக்கெதிராக போராடுவது இங்கே மிகப்பெரிய தேசத்துரோகமாக பார்க்கப்படுகின்றது. ஆகவே நாமனைவரும் தேசத்துரோகிகள். எனவே அங்கு போராடும் லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என தனது உரையை ஆரம்பித்தார்.

எழுத்தாளர். பா.செயப்பிரகாசம்.

நெய்தல் இயக்கச் செயலாளரான குறும்பனை பெர்லின் குமரியில் உள்ள ஒரு மணல் ஆலை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு (தோரியத்தை மணலில் இருந்து பிரிப்பதால் கதிர்வீச்சு ஏற்படுகின்றது) பாதிப்புகளினால் தனது குடும்பத்தில் பலரை புற்றுநோய் தாக்கியிருக்கிறது என்பதை தெரிவித்தார். 30,000 பேரிடம் நடத்திய ஆய்வில் 494 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இத்தரவுகளை வெளியிடாத நிர்வாகம், மீண்டும் மருத்துவர்களை வைத்து சோதித்ததில் வெறும் 19 பேர் மட்டுமே புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாக திரித்து வெளியிட்டிருக்கின்றது.

வெறும் மணல் ஆலையினால் கிளறிவிடப்படும் கதிரியக்கமே இத்தகைய பாதிப்புகளை தோற்றுவிக்குமாயின், அணு உலைகளால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியும். ஆனால் அரசோ கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படாது எனக்கூறுகின்றது, அப்படியென்றால் இந்த புற்றுநோயெல்லாம் எங்கள் முன்னோர் கருதியது போல கடவுள் கொடுத்ததா?

கூடங்குளம் அணு உலை போலவே நம்மை அச்சுறுத்தும் இன்னொரு பிரச்சனையும் நம்மை நெருங்குகின்றது. அது நியூட்ரினோ ஆய்வகம். அணு உலைக்கு எதிராக குறைந்தபட்ச விழிப்புணர்வாவது இருக்கின்றது. ஆனால் நியூட்ரினோ ஆய்வகம் பற்றியும், அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
கூடங்குளம் மக்களின் உண்மையான போரட்டத்திற்கு படைப்பாளிகளாகிய நாம் என்றுமே ஆதரவாக இருக்கவேண்டும். இருப்போம் என்றார் எழுத்தாளர். பாஸ்கர் சக்தி

எழுத்தாளர். அஜயன் பாலா சித்தார்த்தோ, இது மண்ணின் மைந்தர்களுக்கெதிராக நடக்கும் அடக்குமுறையாகும். நமது பொருளாதார சுழற்சி என்பது, நடுத்தர வர்க்கத்தின் வருவாய் மேல்தட்டு முதலாளித்துவத்தை நோக்கி திருப்பி விடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது தான் இத்தகைய அணு உலைகளை இந்திய அரசு ஊக்குவிப்பதன் காரணியாகும் என அவர் கூறினார்.

எழுத்தாளர். மனுஷ்யபுத்திரன் பேசியதிலிருந்து ’’எந்த சமூகப் பிரச்சினையிலும் அபிப்ராயம் சொல்வதில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டுமே ஏன் எப்போதும் இடம்பெறுகின்றன? பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு எந்தப் பிரச்சினையிலும் எந்தக் கருத்துக்களும் இல்லையா’என்று கேட்டார். ’’அணு உலை ஆதரவாளர்களின் கைகளில் அதிகாரம், ஊடகம் எல்லாம் இருக்கின்றது…. மக்களுக்கு இருப்பதோ தெருக்கள் மட்டுமே. அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தெருக்களில் திரள்வதே ஒரே வழி…… படித்தவர்கள் அயோக்கியர்களாக மாறி வரும் ஒரு சமூகத்தில் ஆதிவாசிகளும், கிராம மக்களும் தான் நீதிக்காக போராடி வருகின்றார்கள். இன்று கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ்காரகளும், இந்துத்துவவாதிகளும் கூடங்குளம் விவகாரத்தில் ஒரு அணிக்கு வந்துவிட்டது தான் பெரும் வரலாற்று அவலமாகும். வளர்ச்சி என்ற பெயரில் அரசு செய்யக்கூடிய படுகொலைக்கு எதிரான போராட்டம் தான் கூடங்குளம் போராட்டமாகும் .’’

எழுத்தாளர். பாமரன் பேசும் பொழுது “அணு உலையில் விபத்து ஏற்பட்டால் கையால் வாயைப் மூடிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் ஓட வேண்டும்” என்ற அணு உலை அதிகாரிகளின் ஆலோசனைகளே மக்களின் போராட்டத்திற்கு மிக முக்கிய காரணமாகும், மேலும் 1988ல் அவர் எழுதிய ‘புத்தர் சிரித்தார்’ என்ற நூலை இரண்டாம் முறையாக அவர் “அணு அணுவாய் சாவோம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார், அந்த நூலிலிருந்து அப்துல் கலாமுக்கான பல கடிதங்களை வாசித்தார்.

“இந்த உலகத்திலேயே அணு குண்டை நேசிக்கிற அதே நேரத்தில் குழந்தைகளை நேசிக்கிற விஞ்ஞானி நீங்க மட்டும் தான் கலாம். எவ்வளவோ ஏவுகணை கண்டுபுடிச்சீங்க ஆனா நீங்க சொல்லாத ஒன்னே ஒன்னு அந்த ஏவுகணைக்கெல்லாம் இலக்கு மக்களாகிய நாங்கள் தானென்று”.

பெண்ணிய செயல்பாட்டாளர் நிர்மலா கொற்றவை கூறுகையில் – பெண்கள் தான் கூடங்குளம் போராட்டத்தின் பலம், பெண்கள் சமூக பங்களிப்பு அளிப்பதையும் ,போராடுவதையும், மதவாதிகளாலும், முதலாளித்துவத்திற்கு துணை நிற்கும் எந்த அரசு அமைப்புகளால் சகித்து கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது என்றார்.

இந்த விழாவின் குறிப்பிடத்தக்க நிறைவுரையாக எழுத்தாளர். ஞானியின் பேச்சு இருந்தது.1987 லேயே 15,000 மீனவர்கள் கூடிய ஒரு கூட்டத்தில் அணு உலைக்கெதிராக பேசிய பேச்சாளர்களில் ஞானியும் ஒருவர். இப்போராட்டத்தின் வயது 25 வருடம் என்பதற்கு தானும் ஒரு சாட்சியம் என்பதை எடுத்துரைத்தார்.அக்கால கட்டங்களிலேயே போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீது பொய் வழக்கு போடப்பட்டதால், வெளிநாடுகளில் தஞ்சமடைந்த இடிந்த கரையைச் சேர்ந்த பலரின் கடிதங்களை அவர் குறிப்பிட்டார். 80-களில் அமெரிக்காவின் ஒரு சின்ன பஞ்சாயத்தான ச‌ஃபோக் கவுண்டியின் எதிர்ப்பால் அவ்வூரில் கட்டப்பட்ட அணு உலையை அமெரிக்க‌ ஃபெடரல் அரசாங்கத்தையும் மூடியது. அந்த இழப்பீட்டை அவர்கள் எப்படி ஈடுகட்டினார்கள் என்பதையும் தெளிவாக முன்வைத்தார் ஞானி.

அணு உலையை எரிபொருள் மாற்று முறையின் மூலம் அனல்மின் உற்பத்தி நிலையமாக மாற்றி உபயோகித்தார்கள் எனக்கூறினார். தமிழ்நாட்டில் குண்டுபல்புகளை பயன்படுத்துவதை நிறுத்துவிட்டு, அனைவரும் CFL என்றழைக்கக்கூடிய குழல் விளக்குகள் பயன்படுத்துவதால் மட்டுமே 500 மெகாவாட் உபரியாக மின்சாரம் சேமிக்கலாம் என்ற கருத்தையும் கூறினார்.

இத்திட்டத்தை தமிழக அரசே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியது போல திட்டமிடலாம் என்பதோடு ரேஷன் கடையிலேயே குழல் விளக்குகளை விநியோகிக்கலாம் என்றுரைத்தார். மேலும், இன்று (04-பிப்ரவரி 2012) தமிழக முதல்வர் நியமித்துள்ள நிபுணர் குழுவில் போராட்டக்குழு நிபுணர்களும் இடம் பெறவேண்டும் ;அனைத்து எழுத்தாளர்களும் ஒன்று திரண்டு தமிழக முதல்வரைச் சந்தித்து இதை ஆவணச் செய்ய வேண்டும் என்று தன்னுரையை நிறைவு செய்தார் ஞானி.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*