Home / அரசியல் / ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்

ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்

அணுமின் நிலையம் இல்லாத, அணு ஆயுதங்கள் அற்ற தமிழகம்                     படைப்போம்!______________________________________________________________________________

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே!

வணக்கம். 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் நாள் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா எனும் நகரின் மீது முதல் அணு குண்டை வீசியது. சுமார் 80,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மக்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி இன்னும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி எனும் நகரின் மீது அடுத்த அணு குண்டு வீசப்பட்டது. அங்கும் இதே சாவு, சங்கடம், சந்ததிகள் அழிப்பு என ஜப்பான் நாடே சரிந்து விழுந்தது.

போன வருடம் மார்ச் மாதம் 11-ம் நாள் ஃபுகுஷிமா எனும் நகரிலுள்ள அணுமின் நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து அபாயகரமான கதிர்வீச்சை உமிழ்ந்தன. முப்பது கி.மீ. தூரத்தில் உள்ள மக்கள் இடப்பெயற்சி செய்யப்பட்டார்கள். கட்டுக்கோப்பான, கடமை உணர்வு மிக்க, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த ஜப்பான் நாட்டு மக்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர், அவதிப் பட்டுகொண்டிருக்கின்றனர். இதே துயரங்களை நாமும், நமது குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமா?

ஜப்பான், ஜெர்மனி போன்று மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்கலாமே? கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் நமது தமிழ் மண்ணுக்கு, நீருக்கு, காற்றுக்கு, கடலுக்கு, கடல் உணவுக்கு, நமது எதிர்கால சந்ததிகளுக்கு பெரும் கேடாக வந்து முடியும்.

[1] நாமெல்லாம் ஒன்றாகப் பயணம் செய்யும் இந்த மிகப் பெரிய விமானமாம் பூமியை அணுகுண்டு, அணுமின் நிலையங்களுடன் கடத்த முனையும் தீவிரவாதிகளை ஏன் கண்டிக்கவில்லை நீங்கள்?

[2] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைகள் துவங்கி நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. மத்திய அமைச்சர் நாராயணசுவாமி இரண்டு மாதங்களில் வருகிறது, பத்தே நாட்களில் வந்துவிடும் எனப் பல முறை சொல்லிவிட்டார். இவரை நம்பி முதல்வரும் ஒரு முறை சொன்னார். என்ன ஆயிற்று? ஏன் எதுவும் வரவில்லை? வந்தாலும், நமது மின் பற்றாக்குறைத் தீராதே?

[3] சிங்கள ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது, ஹஜ் பயணத்தில் தமிழர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தமிழ் மீனவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் குரல் கொடுக்கும் தமிழக முதல்வர்,நம் எதிர்காலத் தமிழ் சந்ததிகளை அழிக்க வரும் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை தமிழ் மண்ணில் அனுமதிப்பதேன்?

[4] ஈழத் தமிழர் நலன் காக்க டெசோ மாநாடு நடத்தும் தி.மு.க.வும் அதன் தலைவரும், இங்குள்ளத் தமிழர் நலன் காக்கத் தவறியது ஏன்? கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ஆதரிப்பது ஏன்?

[5] அரசு நலத்திட்டங்களின் அடிப்படையில், கூடங்குளம், செட்டிகுளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இன்னும் ஓராண்டுக்குள் அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த இருப்பதாகவும், உவரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இருப்பதாகவும் தமிழக அரசு கூறுகிறது. அணுமின் நிலையத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால், இத்தனை மருத்துவமனைகள் எதற்கு?

[6] கூடங்குளம் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களுக்காக தமிழக அரசு திட்டமிட்டப்படி 10,000 வீடுகள் 3 கட்டங்களில் 3ஆண்டுகளுக்குள் கட்டித் தருமாம். அப்படியானால் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்படுவார்களா?

[7] தமிழரை நேசிக்கும் அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும், சமூக இயக்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து அணுமின் நிலையம் இல்லாத, அணு ஆயுதங்கள் அற்ற தமிழகம் படைப்போம்!

                          தமிழர்களே! சிந்திப்பீர்!! செயல்படுவீர்!!!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,


இடிந்தகரை 627 104,  திருநெல்வேலி மாவட்டம்                     

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*