Home / அரசியல் / இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும்

இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104

பத்திரிகைச் செய்திஆகஸ்ட் 2, 2012

     இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும்

கூடங்குளத்தில் தாங்கள் நிறுவியிருக்கும் அணு உலைகளில் விபத்துக்களோ, வேறு பாதிப்புக்களோ ஏற்பட்டால், தமது நாட்டு நிறுவனங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது; நட்ட ஈடு எதுவும் வழங்க மாட்டோம் என்று ரஷ்ய அரசு துவக்கம் முதலே வாதிட்டு வருகிறது. பாரத பிரதமர் திடீரென விழித்துக் கொண்டவர்போல, ரஷ்யாவுக்கு இப்படிப்பட்ட சலுகை கொடுத்தால், அமெரிக்கர்களும், பிரெஞ்சு நாட்டவரும் கேட்பார்கள், எனவே அந்த சலுகையை தரமுடியாது என்று முதல் முறையாக பேசியிருக்கிறார்.

இந்திய அரசு நிறுவனமான நியுகிளியர் பவர் கார்பரேஷனும், கூடங்குளத்திற்கு அணு உலை விநியோகிக்கும் ரஷ்ய நிறுவனமான ஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனமும் 2010-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. ரஷ்ய கம்பெனி நிறுவுகின்ற உலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த கம்பெனியிடமிருந்து நட்ட ஈடு கோருவோம் என இந்திய அரசு வாதித்தது. ஆனால் 2008-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று காரணம் காட்டி ரஷ்யா நட்ட ஈடு தர மறுக்கிறது.

2008-ம் ஆண்டு ஒப்பந்தம் பிரிவு 13 அணு உலை கட்டும்போதோ அல்லது இயங்கும்போதோ நிகழும் அனைத்து விபத்துகளுக்கும், நட்டங்களுக்கும் இந்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்பதாக தெரிவிக்கிறது. இந்திய அரசு இரகசியமாக, தான்தோன்றித்தனமாக இந்த மக்கள் விரோத ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்படி மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தினால், மாசு ஏற்படுத்துபவரே நட்ட ஈடு வழங்கவேண்டும். 1963-ம் ஆண்டின் வியன்னா அணு விபத்து உரிமையியல் பொறுப்படைவு சட்டத்தின்படியும் அணு உலைகள் தயாரித்து விற்கின்ற கம்பெனி நட்டங்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்துகிறது.

நம் நாட்டு சட்டங்களுக்கு எதிராக நமது அரசே இரகசிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதையும், அனைத்துலக விதிகளுக்கு எதிராக ரஷ்ய அரசு செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

போபால் விடவாயு முதன்மைக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் தப்பியோட உதவி செய்துவிட்டு, 26 ஆண்டுகள் கழித்து முக்கியமற்ற எட்டு பேரைப் பிடித்து இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து, அன்று மாலையே அவர்களை ஜாமீனில் விட்டது இந்திய அரசு. இன்றும் இதே மனப்போக்குடன் இந்திய அரசு செயல்படுவதை சுட்டிக்காட்டி அதனைத் தட்டிகேட்கிறோம்.

“தரமற்ற அணு உலை வியாபாரத்தால் வரும் லாபமெல்லாம் எங்களுக்கு, அதனால் வரும் பாதிப்பு, நட்டமெல்லாம் உங்களுக்கு” என்று பொறுப்பற்ற முறையில் செயல்படும் ரஷ்ய அரசினை கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்திய மக்களின், தமிழர்களின் உயிருக்கு விலையுமில்லை, மதிப்புமில்லை என்று எண்ணும் அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு அரசுகளையும், கம்பெனிகளையும் உறுதியுடன் நிந்திக்கிறோம். இந்த இனவெறி சித்தாந்தத்திற்கு உறுதுணையாக செயல்படும் இந்திய அரசின் துரோகத்தை வன்மையாகச் சாடுகிறோம்.

இன்றைக்கு எதுமறியாதவர்போல பிரதமர் நட்ட ஈடு பற்றி பேசுவது நடிப்பா, அல்லது கூடங்குளம் அணு உலைகள் 3, 4-க்கும் முன்பு போலவே சலுகைகள் கொடுப்பதற்கான ஒத்திகையா, அல்லது கூடங்குளம் அணு உலைகள் “ஊத்திக்கிச்சு” என்பது தெரிந்து நடத்தும் கபட நாடகமா – தெரியவில்லை.

இந்திய மக்களே, தமிழர்களே, விழித்துக்கொள்ளுங்கள். இல்லையேல், போபால் மக்களின் கதிதான் உங்களுக்கும்.

போராட்டக்குழு

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*