Home / அரசியல் / தெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை

தெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை

தெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை
அரங்கக் கூட்டம்
நாள் :  26-01-2013, சனிக்கிழமை மாலை 5 மணி
இடம் :  பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்

 

உரை:
பேராசிரியர் ஹரகோபால், ஆந்திர மக்கள் சிவில் உரிமைக் கழகம்
தோழர் சுரேஷ், ஆந்திர மக்கள் சிவில் உரிமைக் கழகம்
தோழர் விமலா, தெலங்கானா ஐக்கிய முன்னணி
தோழர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தோழர் பரிமளா, சேவ் தமிழ்சு இயக்கம்

 

தலித் எதிர்ப்பு சாதி அரசியல் புழுதியைக் கிளப்பி விட்டிருக்கும் சாதி அமைப்புகள், கர்நாடகா காவிரி தண்ணீர் தராததால் தற்கொலை செய்து வரும் டெல்டா மாவட்ட விவசாயிகள், 2012 மார்ச் 19 தொடங்கி இன்று வரை தமிழக அரசு போட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் துண்டிக்கப்பட்டிருக்கும் இடிந்தகரை மக்கள், அன்றாடம் வந்து கொண்டிருக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைச் செய்திகள், சிறுவணிகத்தை விழுங்க வரும் வால்மார்ட், பெட்ரோல்-டீசல் விலைவாசி உயர்வு என்று நம்மை நெருக்கடிகள் சூழ்ந்து நிற்குமொரு வேளையிலே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்து ஓர் அரங்கக் கூட்டம் தேவையா?

ஆம். தேவை தான். ஜனவரி 28க்குள் தெலங்கானா தனி மாநிலம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.  ஆந்திர சட்ட மன்றத்திற்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனையை ’நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டும்’ என்று அரசியல் சட்டத்திலிருக்கும் விதியைக் காரணம்காட்டியே தெலங்கானா மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது இந்தியாவின் போலிக் கூட்டாட்சி. நாராயணசாமி, சிதம்பரம் போன்ற அமைச்சர்களுக்கு தெலங்கானா மக்களின் கோரிக்கையைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகின்றது? விரும்பியோ விரும்பாமலோ நாமும் இந்தியக் ’கூட்டரசில்’ ஓர் அங்கமாகவும், அதில் ஒடுக்கப்பட்டும் இருப்பதாலேயே தெலங்கானா மக்களுக்கு தோள் கொடுத்து நிற்க வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகமாகின்றது.

இந்தி மொழித் திணிப்பு, மொழிப் போரில் 600க்கும் மேற்பட்டோரைக் கொன்றது, காவிரி, முல்லைப் பெரியாறு ஆற்று நீர் உரிமை மறுப்பு, கச்சத்தீவு தாரைவார்ப்பு, அணு மின்சாரம் என்ற பெயரில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பது, மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல், அனைத்துக்கும் மேலாக 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யத் துணை நின்றது, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து சிதறடித்தது, இன்று வரை இலங்கை இனப்படுகொலை அரசுக்கு துணை நிற்பது என்று இந்திய அரசு நம் மீது நடத்திக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகள் ஏராளம். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதில் இருந்து பெற்ற ஜனநாயக உணர்வு தெலங்கானா மக்கள் மீதான ஒடுக்குமுறையை உணர நமக்குத் துணை புரிகின்றது. இந்திய அரசால் ஒடுக்கப்படுவோர் என்ற புள்ளியில் தெலங்கானா மக்களும் நாமும் ஒன்றுபடுகின்றோம். உணர்வுபூர்வமாக தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்து நிற்கின்றோம்.

புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்

தெலங்கானா – போராட்ட வரலாறும், கோரிக்கை நியாயங்களும்
தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தெலங்கானா மக்கள். தங்கள் உழைப்பைச் சுரண்டி கடுமையான அடக்குமுறைகளைத் தங்கள் மீது ஏவிய நிலப்பிரபுக்களையும், நிஜாம் மன்னனையும் எதிர்த்து, கம்யூனிசப் பாதையை பற்றிக்கொண்டு, ஆயுதம் தாங்கிய வீரமிக்க போராட்ட வரலாற்றை எழுதியவர்கள் தெலங்கானா விவசாயிகளும் பழங்குடிகளும். தங்கள் கண் முன்னேயே, கணவன்மார்களையும், சகோதரர்களையும், குழந்தைகளையும் கொன்ற போதும், பாலியல் வன்முறைகளுக்கும், கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான போதும், ஆயுதம் ஏந்தி காட்டிலும் மேட்டிலும் அலைய நேரிட்ட போதும், ஆண்களோடு சமமாய் நின்று துணிச்சலோடு போராடியவர்கள் தெலங்கானா பெண்கள்.  இந்தியா 1947இல் சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவோடு இணைய மறுத்த நிஜாம் மன்னரின் முடிவை எதிர்த்து, நிஜாமின் ரசாக்கார் என்ற கொடூரமான படை அணியை விரட்டி அடித்தவர்கள். அடக்குமுறைக்கான போராட்டத்தில், நூற்றுக்கணக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள்.  வரலாற்றுத் தொடர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், ஒரே மொழி, பண்பாடு என்ற அடையாளத்துடன் இருப்பதால் ஓர் இன மக்களாகத் தங்களை உணர்பவர்கள்.

500 வருடங்கள் நிஜாம் மன்னர்களின் ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ் இருந்த தெலங்கானா மக்கள், கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, மொழி, பண்பாட்டு வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிப் போயினர். அதே கால கட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த ஆந்திரா மக்கள் கல்வி, விவசாயம், மொழி, பண்பாடு வளர்ச்சியில் முன்னேறிய நிலையில் இருந்தனர்.  இந்த நிலையில், காஷ்மீர், திருவிதாங்கூர் உள்ளிட்ட சமஸ்தானங்களை எப்படி இராணுவ பலத்தைக் காட்டி இந்திய அரசு இணைத்ததோ, அதேபோல், இந்திய யூனியனுடன் ஹைதராபாத் மாநிலம் என்ற பெயரில், தெலங்கானா பகுதியை 1948இல் இணைத்துக் கொண்டது.  ஹைதராபாத்தைக் கைப்பற்ற வந்த இந்திய இராணுவத்தினரை தங்களை நிஜாம் மன்னனின் ஒடுக்குமுறையில் இருந்து காப்பாற்ற வந்தவர்கள் என்று வரவேற்று மகிழ்ந்தனர் தெலங்கானாவின் உழைக்கும் மக்கள்.  ஆனால், நிஜாம் மன்னனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தை நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக அழித்து ஒழித்தது இந்திய அரசு.  1952இல் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு இறந்து போனார்.  1955இல் ஆந்திரா மாநிலத்துடனான இணைப்பு குறித்துக் கேட்டபோது, பின்தங்கிய நிலையில் இருந்த தெலங்கானா மக்கள், தங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையை மாநில மறுசீரமைப்பு ஆணையத்திடம் முன் வைத்தனர்.  தெலங்கானா மக்களின் கவலையை கருத்தில் கொண்ட ஆணையம் ‘1961இல் நடக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஹைதராபாத் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விருப்பம் தெரிவித்தால், ஹைதராபாத் மாநிலத்தை ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கலாம்’ என்றது.  ஆனால், இந்திய ஆளும் வர்க்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருந்த ஆந்திர முதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களுக்கு முன்னால் தெலங்கானா மக்களின் கோரிக்கையைத் தாங்கி வந்த இந்த அறிக்கை காணாமல் போனது. ‘ஜென்டில்மேன் ஒப்பந்தம்’ என்ற முக்கிய நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் தெலங்கானா பகுதியை ஆந்திராவுடன் இணைத்தனர்.

மக்கள் தொகையில் 40% உள்ள தெலங்கானா மக்களுக்கு கல்வியில், அரசு வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்கு, அமைச்சரவையில் 60 : 40 என்ற வீதத்தில் தெலங்கானா மக்களுக்குப் பிரதிநிதித்துவம், முதல்வர் அல்லது துணை முதல்வர் வாய்ப்பு, தெலங்கானா பகுதி நில வர்த்தகத்தை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பிராந்தியக் குழுக்கள், புதிய நீர் பாசனத் திட்டங்கள், புதிய கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சித் திட்டங்கள், தெலங்கானா பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவன வேலைவாய்ப்பில் தெலங்கானா பகுதி மக்களுக்கே முன்னுரிமை (முல்கி விதிகள்) போன்ற முக்கிய நிபந்தனைகள் ‘ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில்’ வைக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த 1955 தொடங்கி 2009 வரை அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் உள்ளிட்ட 9 ஆணையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் ஆணைகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், இந்திரா காந்தி தொடங்கி ப.சிதம்பரம் வரை அளித்த பல்வேறு வாக்குறுதிகள் என இவை அனைத்தும் காகிதத்தில் எழுதப்பட்டதாக மட்டுமே இருக்க, 1969 தொடங்கி இன்று வரை பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 1969இல் நடந்த போராட்டத்தில் மட்டும் 370 மாணவர்கள், இளைஞர்கள் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் தீக்குளித்ததுபோல், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்ததுபோல்,  தெலுங்கானா மாநிலம் கோரி இது வரை 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.  இப்படி தெலங்கானா இளைஞர்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வதும், அதை இந்தியத் துணைக்கண்டம் மௌனமாகக் கடந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் 45 விழுக்காடு காடுகளையும், நாட்டின் நிலக்கரி வளத்தின் 20 விழுக்காட்டையும், பாக்சைட், மைக்கா போன்ற கனிம வளங்களையும், சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்களான சுண்ணாம்பு கற்களையும், கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகளின் 50 விழுக்காட்டிற்கு மேலான நீர்ப் பிடிப்புப் பகுதிகளையும் கொண்ட வளமான பூமி தெலங்கானா.  எல்லா வளங்களையும் பெற்ற வளமான பகுதியாக இருந்தாலும் இன்றளவில் ஆந்திர மாநிலத்தின் 15 லட்சம் அரசு பணியிடங்களில் வெறும் 2 லட்சம் பணியிடங்களில் மட்டும் தெலங்கானா மக்கள்.  21 பல்கலைக் கழகங்களில் ஹைதராபாத்தைத் தவிர்த்து ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டும் தெலங்கானா பகுதியில். கிருஷ்ணா ஆற்று நீரில் 80 விழுக்காடு கடலோர ஆந்திர விவசாயத்திற்கும், 15 விழுக்காட்டிற்குக் குறைவான நீர் மட்டும் தெலங்கானா விவசாயத்திற்கு. கோதாவரி ஆற்று நீரைப் பயன்படுத்தி கடலோர ஆந்திராவில் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசனமும், தெலங்கானாவில் வெறும் 4 லட்சம் ஏக்கர் நிலங்களில் மட்டும்  விவசாயம். பின்தங்கிய தெலங்கானா பகுதியின் பெயரில் வாங்கப்படும் உலக வங்கியின் கடன், மத்திய அரசின் நிதி உதவி, ஆந்திராவின் வளர்ச்சிக்குச் செலவிடப்படுகிறது – கடன் சுமை மட்டும் தெலங்கானா மக்களின் தலையில். தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் ஆந்திரப் பகுதிகளில். தொடங்கப்படும் புதிய நீர்பாசன வசதிகள் எல்லாம் ஆந்திரப் பகுதிகளின் விவசாய மேம்பாட்டிற்கு. தெலங்கானா மக்கள் இப்படி பல்வேறு வகையில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியும், மொழி, பண்பாட்டு அடிப்படையில் சிறுமைப்படுத்தப்பட்டும் இரண்டாம் தரக் குடிமக்களாக தங்கள் சொந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். ஆற்று நீரை, கனிம வளங்களை, நிதி உதவிகளை, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, வேலைவாய்ப்புகளை என எதையும் தங்கள் மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வண்ணம், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை நியாயங்களின் மீது நிமிர்ந்து நிற்கின்றது!

வாழ்க தெலங்கானா!

***************

தெலங்கானா – சில கேள்விகளும், பதில்களூம். 

ஒரே மொழி பேசும் மக்களுக்கு எதற்காக இரண்டு மாநிலங்கள்?

ஒரு மொழி பேசுபவர்களுக்கு ஒரு மாநிலம்தான் என்பது விதியாக இருந்தால், எதற்காக இந்தி மொழி பேசுபவர்களாக சொல்லப்படுபவர்களுக்கு 9 மாநிலங்கள் உள்ளன? இந்திக்கு அடுத்து, அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழி தெலுங்கு.  அம்மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் இருப்பதால் என்ன தவறு? மேலும் ஆந்திர மக்களில் சிலர் தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கு சரியான தெலுங்கு இல்லை என்றும், சிலர் அது தெலுங்கே கிடையாது என்றும் கூறி, எள்ளி நகையாடி வருகின்றனர். தெலங்கானா மக்கள் தனி மாநிலக் கோரிக்கை எழுப்பும்போது தெலுங்கு பேசுபவர்களுக்கு எதற்கு இரண்டு மாநிலங்கள் என முட்டுக்கட்டை போடுவதும் இவர்கள்தான்…

ஹைதராபாத்தை ஆந்திர மக்கள் உருவாக்கினார்கள். அவர்களை இப்பொழுது அங்கிருந்து வெளியேறச் சொல்வது சரியா?

நிஜாமின் ஆட்சிக்காலத்தில் தெலங்கானா கிராம மக்களின் வியர்வையினாலும் உழைப்பினாலும் உருவாக்கப்பட்டது ஹைதராபாத் நகரம். தெலங்கானாவை ஆந்திராவுடன் சேர்க்கவேண்டும் என ஆந்திர மக்கள் முடிவு செய்ததற்கு ஒரு காரணம் ஹைதராபாத் நகரம். இதனால் அவர்களுக்கு ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒரு தலைநகரம் உடனடியாகக் கிடைக்கும் (1956 வரை ஆந்திராவின் தலைநகரம் கர்னூல்) என்பதுதான் காரணம். மேலும் தெலங்கானாவின் மீது உள்ள பாசத்தினால் அல்ல; தங்களது தேவை கருதியே பணக்கார ஆந்திரர்கள் ஹைதராபாத்தில் வந்து தங்கத் தொடங்கினர். ஹைதராபாத் இன்றும் வளர்வதற்குக் காரணம் ஆந்திரர்கள் அல்ல, தங்கள் வாழ்வாதாரத்திற்காக அங்கு வந்து வேலை செய்யும் தெலங்கானா கிராம மக்களின் உழைப்பினால்தான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் தொடர்ந்த புறக்கணிப்பினாலும், பருவ மழைகள் பொய்த்ததாலும் தெலங்கானா கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் இருந்து யாரும் வெளியேறத் தேவையில்லை. இந்தியாவில் யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் சென்று வாழலாம். மேலும் ஹைதராபாத் ஒரு பல்கலாச்சார நகரம். அங்கு பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு நடப்பது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை அல்ல, தெலங்கானா மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவும், அரசியல் செய்து கொள்வதற்குமான ஒரு மாநில உருவாக்கம் மட்டுமே. அங்கு போய் தங்குபவர்கள் தாராளமாகத் தங்கி தெலங்கானாவின் வெற்றிக்கு அவர்கள் பங்களிப்பை கொடுக்கலாம்…

சிறிய மாநிலங்கள் தோன்றினால் அவை நீடித்தும் உறுதியாகவும் இருக்குமா?

இந்தியாவில் தற்பொழுது மொத்தம் 35 மாநிலங்கள் உள்ளன (28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்). இதில் உள்ள 70% மாநிலங்களை விட அதிகமான மக்கள் தொகையை (3 கோடிக்கும் மேல்) தெலங்கானா கொண்டுள்ளது. தெலங்கானாவை விடக் குறைந்த மக்கள் தொகை கொண்ட 25  மாநிலங்கள் நீடித்தும் உறுதியாகவும் இருக்கும் போது தெலங்கானா மட்டும் நீடித்து இருக்க முடியாதா?
தெலங்கானா பகுதி வளர்ச்சியில் பின்தங்கிய / புறக்கணிக்கப்பட்ட பகுதி என்ற காரணத்திற்காகவே தனி மாநிலம் கேட்பது சரியா?
பின்தங்கிய நிலை என்பது தெலங்கானா தனி மாநிலம் கேட்பதற்கான ஒரு காரணம் மட்டுமே.  ஆனால் அதுவே முழுமையான காரணமல்ல. தெலங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களும் ஒரே வரலாற்றுப் பின்புலமும், தொடர்ச்சியான நிலப்பரப்பும், பண்பாட்டுத் தொடர்பும், ஒரே மொழியும், நாம் என்ற ஓர்மையும் கொண்டுள்ளன. இதன் காரணமாகவும்தான் தெலங்கானா மக்கள் தனிமாநிலம் கோருகின்றார்களே தவிர வெறும் வளர்ச்சிப் புறக்கணிப்பு மட்டுமே அதற்குக் காரணமல்ல…

தெலங்கானா கோரிக்கை வேலையில்லாத சில அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றார்களே?

வேலையில்லாத அரசியில்வாதிகளின் வெற்று முழக்கமல்ல “தெலங்கானா”. இது மக்கள் கோரிக்கை என்பதை அவர்களின் போராட்ட வரலாறு சொல்லும். இக்கோரிக்கைக்காக இதுவரை பல நூறுபேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.  எந்த ஒரு மக்கள்திரள் போராட்டத்திலும் வேலையில்லாத அரசியல்வாதிகள் நுழைவது இயல்பே. ஆனால் அவர்கள் இருந்தாலும், போனாலும் கோரிக்கை நிறைவேறாமல் மக்கள் போராட்டம் ஓயாது.

ஒரே மொழி பேசும் மக்களைப் பிரிப்பது தேசியத்திற்கு எதிரானது இல்லையா?

தேசியம் என்பது வரலாற்று வழியில் உருவாவது.   தொடர்ச்சியான நிலப்பரப்பிலிருந்தாலும் ஒரே மொழி பேசும் 21 அரபு நாடுகள் இருக்கின்றன. எனவே ஒரே மொழி மட்டுமே தேசியத்திற்கான வரையறை அல்ல என்ற சிக்கலான கோட்பாடு இங்கு நினைவுகூரத்தக்கது.  மேலும், மக்களை யாரும் பிரிக்கவில்லை. ஆந்திர மாநில உருவாக்கத்தின் பின்னர் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், ஆளவும் ஆன ஒரு மாநிலத்தைத் தான் கோருகின்றார்கள். ஒரே மொழி பேசுகின்றார்கள் என்பதற்காக பிடிக்காத இரண்டு பகுதி மக்களை சேர்ந்து வாழச் சொல்வதுதான் எதிர்காலத்தில் தேசிய ஓர்மையோ அல்லது மேலான ஒற்றுமையோ உருவாவதற்கு இருக்கும் வாய்ப்புகளைச் சிதைக்குமே அன்றி அவர்கள் அரசியல்ரீதியாகப் பிரிந்து போவதல்ல.

Facebook Event ID : https://www.facebook.com/events/240872199381118


Save Tamils Movement

Website:           http://save-tamils.org/
Google groups: http://groups.google.co.in/group/save-tamils
Facebook:         http://www.facebook.com/save.tamils
Twitter:             http://twitter.com/savetamils
Blog:                 http://save-tamils.blogspot.com/
YouTube:          http://www.youtube.com/user/Tamilsfortamileelam

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*