Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!

அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

இடிந்தகரை 627 104

திருநெல்வேலி மாவட்டம் பிப்ருவரி 10, 2013

அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!சனநாயகப் பண்புகளை, நடைமுறைகளை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு, மக்கள் கேட்கும் எந்தத் தகவல்களையும் தராது, தமிழக மக்களை கடுகளவும் மதிக்காது, பழுதுபட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை மத்திய அரசு இயக்க எத்தனித்தால், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் உதயகுமார், புஷ்பராயன், மை. பா. சேசுராசு, முகிலன் மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கூடங்குளம் அணுமின் நிலயத்தின் முன்னால் அறவழியில் முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுக்கு ஆதரவு தருகிற தன்மானமிக்க தமிழ் மக்கள் தமிழகமெங்கும் சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்திட அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கூடங்குளம் திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதற்காக கடுமையான செயற்கை மின்வெட்டை நம் மீது திணித்து; கொசுத் தொல்லையாலும், தூக்கமின்மையாலும், டெங்கு போன்ற நோய்களாலும் மக்களை சித்திரவதை செய்து; சிறு, குறு தொழிலதிபர்கள், தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தி ஒரு மிகப் பெரிய அழிவை மத்திய, மாநில அரசுகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதோ வருகிறது, அதோ வருகிறது, பதினைந்து நாளில் வரும் என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எனப் பலரும் கதை சொல்லியும், இதுவரையில் மின்சாரம் வரவில்லை, கசிவுதான் வருகிறது.

உலகத்தரம் வாய்ந்த, உன்னதமான, ஏழடுக்கு பாதுகாப்பு கொண்ட, அப்துல் கலாம், முத்துநாயகம், இனியன், எம். ஆர். ஸ்ரீநிவாசன், சரத்குமார் என எண்ணற்ற அறிஞர்கள் நற்சான்றிதழ் வழங்கிய கூடங்குளம் அணுமின் நிலயத்தின் குழாய்களில், வால்வுகளில் எல்லாம் பழுதுகள் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நாராயணசாமி அண்மையில் தெரிவித்தார். இதற்கிடையே ரஷ்ய அரசு தனது அணுமின் நிலையத் திட்டங்களுக்கு தரம்குறைந்த உபகரணங்களை வழங்கிய குற்றத்துக்காக ஜியோ போல்ஸ்க் எனும் நிறுவனம் பற்றி விசாரணை நடத்தி அதன் தலைவரை கைது செய்திருக்கிறது. இப்படி பொய்கள், புரட்டுக்கள், திருட்டுக்கள், தொழிற்நுட்பப் பிரச்சினைகள் என தத்தளித்துக்கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய உண்மைகளைச் சொல்லுங்கள், எங்கள் உயிரோடு விளையாடாதீர்கள், ஒரு வெள்ளை அறிக்கைத் தாருங்கள் எனக் கேட்டோம்.

தனி நபருக்கு அறிக்கைத் தரவேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நாராயணசாமி எங்கள் கோரிக்கையை நிராகரித்தார். நாங்கள் தனி நபர்கள் அல்ல; கூடங்குளம் காவல் நிலையத்தில் மட்டும் 325 வழக்குகள் 5,296 பேர் மீது பெயர் குறிப்பிட்டும், 2,21,483 பேர் மீது பெயர் குறிப்பிடாமலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராதாபுரம், பழவூர் காவல் நிலையங்களில் மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகமது கசாப் மீது ஒரே ஒரு தேசத்துரோக வழக்கும், ஒரே ஒரு தேசத்தின்மீது போர் தொடுத்த வழக்கும்தான் போடப்பட்டன. ஆனால் எங்கள் மக்கள் 8,456 பேர் மீது 19 தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன; 13,350 பேர் மீது தேசத்தின்மீது போர் தொடுத்த வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டமான எங்கள் தமிழ் மக்கள் பாதுகாப்பு கருதித்தான் கேட்கிறோம் என்று மன்றாடிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே இங்கே வரக்கூடாது என்று தமிழ் மக்கள் போராடுவதை அப்படியே நிராகரிக்கும் மத்திய அரசு, அதே பாணியில் ரவி பூஷண் குரோவர் என்று யாரோ ஓர் அணுசக்தித் துறை அதிகாரியை வைத்து தில்லியிலிருந்து பதில் சொல்லியிருக்கிறது. ஓரிரு தினங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கும் என்று அவர் அறிவித்திருக்கிறார். முகமது கசாப், அப்சல் குரு போன்றோரை அதிரடியாக, அவசரம் அவசரமாக, இரகசியமாகத் தூக்கிலிட்ட மத்திய அரசு, அதே பாணியில் பழுதுபட்ட, பாதுகாப்பற்ற, ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கலாம்.

தமிழர்கள் உணர்வுக்கோ, உயிருக்கோ மத்திய அரசும், காங்கிரசு கட்சியும் எந்த மதிப்பும் அழிப்பதில்லை. அதே போல தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை, தமிழர்கள் பரிசளிக்கவிருக்கும் 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்குக்காகத்தான் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலைகிறார்கள்.

மத்திய அரசோ, மாநில அரசோ, இவற்றை நடத்துகிற தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரசு கட்சிகளோ கண்டுகொள்ளாத நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் எப்போது திறக்கப்பட்டாலும், போராடுகிற ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நடந்து சென்று அணுமின் நிலயத்தின் முன்னால் அறவழியில் முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று மீண்டுமொருமுறை அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இந்த இறுதிப் போராட்டத்தினால் எழுகிற விளைவுகளுக்கு தமிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசும், மத்தியில் ஆளும் காங்கிரசு-தி.மு.க. அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்

——–

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*