Home / அரசியல் / தோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”

தோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”

தோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”

நாள்: 29-03-2013, வெள்ளி கிழமை மாலை 5 மணி

இடம்: பெஃபி அரங்கம், தேனாம்பேட்டை

உரை:

தோழர். சி.மகேந்திரன், மாநில துணைப் பொது செயலாளர், இந்திய பொதுவுடைமை கட்சி

தோழர். சிதரம்பரநாதன், தலைவர், பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, தமிழ்நாடு

தோழர். செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்)

தோழர். செந்தில், சேவ் தமிழ்சு இயக்கம்.

இன்றைய உலகமயச் சூழலில் அதிபர் பதவிக்கு வந்த 1999ஆம் ஆண்டே வெனிசுவேலாவின் இயற்கை வளமான எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்கினார் சாவேஸ். அந்த எண்ணெய் நிறுவனங்களின் மூலம் கிடைத்த வருவாயை மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிட்ட சாவேஸ், பல மாற்றங்களை உள்நாட்டில் கொண்டு வந்தார். அவற்றில் சில… அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை கிடைக்கும்படிச் செய்தார். வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 6 மணி நேரமாகக் குறைத்தார். 1998ல் குறைந்தபட்ச மாத ஊதியமாக இருந்த 16 அமெரிக்க டாலர், 2012ல் 247 டாலராக உயர்ந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, சரிவிகித வளர்ச்சி சாத்தியமானது. சமுதாயக் கூடங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பங்குகொள்ளும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அந்தப் பகுதிக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, அவர்களே செயல்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சனநாயகத்தில் மக்கள் பங்குகொள்ளும் நிலை அதிகரிக்கப்பட்டது. இது மட்டுமின்றி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வறுமையை ஒழிக்க இதுவரை 8,800 மில்லியன் அமெரிக்க டாலரை செலவிட்டுள்ளார். அமெரிக்காவை, உலக வங்கியை மட்டுமே மையப்படுத்திய உலக ஒழுங்கை மாற்றி ” இலத்தீன் அமெரிக்க மக்களுக்கான பொலிவாரிய கூட்டமைப்பை” (Bolivarian Alliance for the Peoples of Our America – ALBA) உருவாக்கியுள்ளார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சாவேஸின் பங்கு அளப்பரியதாகும். சாவேஸிற்கு செவ்வணக்கம் கூறுவோம்…. சாவேஸ் மேற்கொண்ட பணிகளை அறிந்துகொள்வது தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு உதவும்.

சாவேஸ் தலைமையிலான வெனிசுவேலா அரசு, இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஐ.நாவில் ஆதரித்தது, இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழர்களையும், அவர்களின் உறவுகளான தமிழகத் தமிழர்களையும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்களை இணைக்கும் வலை பின்னல் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஈழத் தமிழ் மக்களின் உண்மை நிலை அவர்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை போன்ற காரணங்கள் இருந்தாலும், உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளின் சர்வதேச உறவு என்பது இன்றளவில் தவறாகத்தான் உள்ளது. ஆனால் பெருகிவரும் சர்வதேச நெருக்கடி இத்தகைய நிலைப்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவரும்; ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுடைய இயல்பான நண்பர்களை அடையாளம் காணச் செய்யும்.

மேலும், இன்றைய உலக ஒழுங்கு இனப்படுகொலைகளை அனுமதித்து வருகின்றது. இந்த ஒழுங்கு மாற்றப்பட்டு, உலகில் ஒடுக்கப்படும் மக்களும், ஒடுக்கப்படும் அரசற்ற தேசங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளும் ஒன்றிணைந்த ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பது தமிழீழத்தில் நடக்கும் இனப்படுகொலை நமக்கு எடுத்துச் சொல்லும் பாடம்.

அத்தகைய ஓர் உலக ஒழுங்கைப் படைப்பதில் வெனிசுவேலாவும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளும் முன்னோடியாகத் திகழும். வெனிசுவேலா மக்களும், தமிழக மக்களும் இயல்பான நட்பு சக்திகளாக அமைவர். ஒரு வரலாற்றுக் கட்டத்தில் தமிழக மக்களாகிய நாமும் அத்தகைய இணைவிற்காக கை நீட்டுவோம்.

ஏகாதிபத்திய நாடுகளுடன் நமது நலன்கள் இணையும் புள்ளியில் நாம் செய்ய வேண்டியதுதான் ‘லாபி’ எனும் அரசதந்திர நடவடிக்கைகள். அவை தற்காலிகமானவை. ஆனால், ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளுடன் நாம் அமைக்க வேண்டியது இயற்கையான கூட்டணியாகும். அது நீடித்தும் இருக்கும்.

இன்றிருக்கும் உலக ஒழுங்கை மாற்றுவதற்காகவும், சோசலிச உலகைப் படைப்பதற்கும் சாவேஸ் செய்த பணிகளை நாம் நினைவுகூர்தல் வேண்டும்.

– சேவ் தமிழ்சு இயக்கம் www.save-tamils.org +91 98416 24006

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*