Home / அரசியல் / “தோழர் ஊகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”

“தோழர் ஊகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”

29 மார்ச் 2013 மாலை தேனாம்பேட்டை பெஃபி அர‌ங்கில் “தோழர் ஊகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்” என்ற‌ த‌லைப்பில் ஒரு க‌ருத்த‌ர‌ங்க‌த்தை சேவ் தமிழ்சு இயக்கம் ஒருங்கிணைத்திருந்த‌து. சேவ் த‌மிழ்சு இய‌க்க‌த் தோழ‌ர்.ஜார்ஜ் இந்நிக‌ழ்வை தொகுத்து வ‌ழ‌ங்கினார். முத‌லில் பேசிய‌ தோழ‌ர்.ம‌கேந்திர‌ன் பின்வ‌ரும் க‌ருத்துக‌ளை முன்வைத்து பேசினார். “ஒரு புரட்சிக்காரனுடைய வாழ்க்கை ஒரு புதிய வாழ்க்கை முறையை தொடங்கி வைக்கிறது. அவனுடைய வாழ்க்கை, அவன் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து அடுத்த கட்ட மாறுதலை நோக்கி பயணிப்பது தான் புரட்சிக்காரனின் மரபாக இருக்கிறது.

அவ்வகையில் உலகிற்கு இன்று ஒரு வெளிச்சமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் திகழ்கிறதென்றால் அதற்கு அடிப்படையான பங்களிப்பு சாவேசுடையது. அவர் 21 ஆம் நூற்றாண்டின் அடிப்படை தன்மைகளை புரிந்து வைத்திருந்தார். சமூக மனிதர்களாகிய நாம், இன்றைய காலகட்டத்திற்கு மார்க்சியம் எவ்வளவு பொருந்துகிறது என்பதை புரிந்து கொள்வேமேயானால் மார்க்சியம் தொடங்கிய நாள் முதலாக அது சந்தித்த சாதனைகள் என்ன ? நெருக்கடிகள் என்ன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கால மாற்றத்திற்கான மையமே மார்க்சியத்தின் இயங்கியல் அடிப்படையாகும். இந்த உண்மையை, சோசலிசத்தை மக்களின் நம்பிக்கையாக மாற்றியவர் சாவேஸ்.

எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி, அதன் வருவாயை நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் சென்று சேரும் படி ஆக்கினார். இது தான் பொருளாதார அரசியலில் மக்களின் நேரடி பங்கேற்புக்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் இது தான் சாவேசின் சாதனை என தோழர்.மகேந்திரன் அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், சாவேஸை, பிடல் காஸ்ட்ரோவின் சீடர் என்று சிலர் நினைக்கிறார்கள். சாவேஸூக்கு அரசியல் குரு டிராஸ்கி. பிடலுக்கு அரசியல் குரு லெனின். லெனினை பின்பற்றுபவர்கள் நிச்சயம் டிராஸ்கியை ஒதுக்கியே வைப்பார்கள். ரஷ்யாவில் லெனினின் எழுச்சிக்கு பிறகு டிராஸ்கி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தவும் பட்டார். ஆனால் இவ்விருவரையும் பின்பற்றுபது தான் 21 ஆம் நூற்றாண்டின் தேவை என்ற கருத்தை சாவேஸ் முன் வைத்தார். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைத்து, அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளுக்கெதிராக அணி திரட்டினார் சாவேஸ் என்றார் தோழ‌ர். ம‌கேந்திர‌ன்.

அடுத்து பேசிய‌ தோழ‌ர்.சித‌ம்பர‌ நாத‌ன் அவ‌ர்க‌ள் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக, வெனிசுலாவையும் ஊகோ சாவேஸைப் பற்றியும் இணைய தளத்தில் எழும் கடும் விமர்சனங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார், இந்த ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்த வெனிசுலா மக்களின் போராட்டத்தையும் அதை வழிநடத்திய தலைவரையும் கொச்சைப்படுத்துதல் தவறு என்றார். 1922 ரஷ்யாவில் மின்மயமாக்கலின் தேவை இருந்த போது, மின் விளக்குகள் தயாரிப்பதற்கு ரஷ்யாவில் தொழில் நுட்பம் அறவே இல்லாமல் இருந்தது.அதனால் இங்கிலாந்திலிருந்து சில முதலாளிகளை ரஷ்யா அணுகிய போது, அம்முதலாளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர். அம்முதலாளிகளின் சொத்துகளை ரஷ்யா நாட்டுடைமையாக்க கூடாது. லாபத்தை பறிக்கக் கூடாது என்பன போன்றவை. எனவே லெனின் “ அந்நிய நாடுகள் இங்கு தொழில் தொடங்கினால், உள்ளூர் தொழிற்சங்கங்கள் அவர்களை எதிர்த்து எந்த போராட்டத்தையும் நடத்தக் கூடாது” என்று கூறினார். இந்த ஒரு நிகழ்வை வைத்து, லெனின் என்ற பிம்பத்தையே கொச்சைப் படுத்த முடியுமா ?

மேலும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசம் குறித்து பேசிய தோழர் சிதம்பரநாதன், எப்படியெல்லாம் சோசலிசம் நெருக்கடிக்குள்ளாகியது என்பதை விவரித்தார். மின்மயமாக்கலுக்கு எப்படி முதலாளித்துவ நாடுகளை ரஷ்யா அணுகியதோ அது போல, பற்பசை கூட இந்தியாவின் கொல்கத்தா நகரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆக உற்பத்தி சக்திகள் முற்றிலும் வளர்ந்திராத ஒரு வெற்றிடத்தில் வளர வேண்டிய
நிர்பந்தத்தில் சோசலிசம் இருந்தது. சீனாவும் இதே போல சோசலிச அரசை கட்டுமானம் செய்வதில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தது.ரஷ்யா சீனாவை விட, கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து உள்ளிட்ட சோசலிச நாடுகளும் இத்தகைய நெருக்கடிகளை சந்தித்தன. மேலும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் ( Market Economy ) சோசலிச பொருளாதாரத்திற்குமான வேறுபாடுகளை அவர் பின்வருமாறு விவரித்தார்.

ச‌ந்தைப் பொருளாதாரம் – சோசலிச பொருளாதாரம்

1)உற்பத்திச் சக்திகள் அனைத்தும் தனியாரிடம் இருக்க வேண்டும் – உற்பத்திச் சக்திகள் பொதுமக்களிடம் இருத்தல் வேண்டும்

2)உற்பத்தி என்பவை இலாபத்திற்காக மட்டுமே – உற்பத்தி என்பது பொது மக்களின் தேவைக்காக மட்டுமே

3)இலாபத்தின் பெரும்பங்கு முதலாளிகளுக்கு – இலாபத்தின் பெரும்பங்கு உழைக்கும் கரங்களான தொழிலாளிகளுக்கு

4) சந்தை ஏற்ற இறக்கங்களை முதலாளிகளே கவனித்துக் கொள்ளுதல் – மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் வேண்டும்.

மேலே குறிப்பிட்ட சோசலிச பொருளாதாரத்தை இன்று வெனிசுலாவில் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் சாவேஸ் என்று கூறி த‌ன் உரையை நிறைவு செய்தார் தோழ‌ர்.சித‌ம்பர‌ நாத‌ன்.

அடுத்து உரையாற்றிய‌ தோழ‌ர்.செல்வா அவ‌ர்க‌ள் சாவேஸ் அதிபராக பொறுப்பேற்றவுடன் அமெரிக்க எண்ணை நிறுவனங்களை வெனிசுலாவில் இருந்து வெளியேற்றி எண்ணெய் நிறுவ‌ன‌ங்க‌ளை தேசிய‌மய‌மாக்கினார். இதன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை மக்கள் நல திட்டங்களான கல்வி, மருத்துவம், ஏழைக்களுக்கு வீடு கட்சி தருதல் போன்றவற்றிற்கு செலவிட்டார். சனநாயகத்தில் மக்கள் பங்கெடுப்பை அதிகப்படுத்தும் விதமாக கிராம பஞ்சாயத்துக்கு(மக்கள் மன்றங்கள்- சமுதாய கூடங்களுக்கு) நேரடியாக நிதியை கொடுத்து, அதனை செலவிடும் அதிகாரத்தையும் கொடுத்தார். சட்டம் மக்களுக்கானது என கூறிய அவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களை , மக்கள் விரும்பும் பட்சத்தில் திரும்ப பெறலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தார்.அதன் படி தனது ஆட்சி காலத்தில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றார். மிகசிறந்த புத்தக வாசிப்பாளராக இருந்த அவர் தொடர்ச்சியான தனது எழுத்துகளின் மூலம் மக்களிடம் தனது கருத்தியலை கொண்டு சேர்த்தார். அதே சமயம் சிறந்த பெண்ணியவாதியாகவும் , சூழலியல் ஆர்வலராகவும் இருந்தார், மேலும் உல‌க‌ வ‌ங்கியை மைய‌ப்ப‌டுத்தி இருந்த‌ பொருளாதார‌ ஒழுங்க‌மைப்பை மாற்றி இல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌னான‌ வ‌ர்த்த‌ கூட்ட‌மைப்பை உருவாக்கினார்.

இதனை தொடர்ந்து “இப்பொழுது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் – Now the People have Awaken” என்ற வெனிசுவேலா தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இறுதியாக பேசிய சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர்.செந்தில் 19ஆம் நூற்றாண்டிலிருந்து த‌ற்போதைய‌ 21ஆம் நூற்றாண்டு சோச‌லிச‌ம் வ‌ரை, சோச‌லிச‌த்தின் வ‌ள‌ர்ச்சியை ப‌ற்றி பேசினார். 21ஆம் நூற்றாண்டு சோச‌லிசத்தை படைக்க இன்றைய உலக ஒழுங்கு மாற்றப்பட வேண்டும், உருவாக வேண்டிய புதிய உலக ஒழுங்கு என்ப‌து உலகில் ஒடுக்கப்படும் மக்களும், ஒடுக்கப்படும் அரசற்ற தேசங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளும் ஒன்றிணைந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய ஓர் உலக ஒழுங்கைப் படைப்பதில் வெனிசுவேலா, பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள “நமது அமெரிக்க மக்களுக்கான பொலிவாரிய கூட்டமைப்பு” (ALBA – Boloivarian Alliance for our people of America) முன்னோடியாகத் திகழும். இன்றிருக்கும் உலக ஒழுங்கை மாற்றுவதற்காகவும், சோசலிச உலகைப் படைப்பதற்கும் சாவேஸ் செய்த பணிகளை நாம் நினைவுகூர்தல் வேண்டும். சாவேசுக்கு செவ்வ‌ண‌க்க‌ம் கூறுவோம்.

சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*