Home / அரசியல் / ம‌னு சாஸ்திர‌ எரிப்புப் போராட்ட‌ம்

ம‌னு சாஸ்திர‌ எரிப்புப் போராட்ட‌ம்

ஜாதியின் அடித்தளத்தை உலுக்கும் முயற்சியாக – ஏப்ரல் 14 ல் மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டம் – ஒத்த சிந்தனை கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், சிந்தனையாளர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் அழைப்பு

அன்பு தோழருக்கு, வணக்கம்.

உலகில் எங்கும் இல்லாத ஜாதிப் பிரிவினைகள் இந்திய ‘புண்ணிய’ (?) பூமியில் மட்டுமே உள்ளது ; ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஜாதி வரிசையின் உச்சியில் உள்ள பார்ப்பனர்கள், தாம் தடையில்லாமல் அனுபவித்துவரும் அதிகாரம், மேலாண்மை குறையாமல் இருக்க செய்த -– செய்துவரும் சூழ்ச்சிகள் ஏராளம்.

பார்ப்பனர்களுக்கு, அவர்களைத் தவிர அனைவருமே கீழானவர்கள் தான்; தீண்டத்தகாதவர்கள் தான். இது புரியாத பெரும்பாலோர் மனதில் தனக்குக் கீழ் உள்ளவர்களைக் காட்டி மகிழ்ச்சியுறச் செய்வதும், மிகக் கீழ்ப் படியில் உள்ள ஆணும் தங்களுக்கு அடிமையாய் பெண்கள் இருப்பதைக் கண்டு மன நிறைவடையச் செய்வதுமான உளவியலை, இந்து மதம் உண்டாக்கி வைத்துள்ளது.

மெல்ல, மெல்ல – ஜாதிப்பிரிவினை, மேல்கீழ் மனநிலை உருவாகியிருந்திருந்தாலும் அதை கறார்ப்படுத்தி, கோட்பாடாக்கி நிலைக்கச் செய்த பெருங்கொடுமைக்கு மூலமாக விளங்குவதே மனுசாஸ்திரம். மேல்கீழ் படிநிலை, சூத்திர, பஞ்சம இழிவுகள், பெண்ணடிமை ஆகியவற்றுக்கு எதிராக – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சிந்தனை கொண்ட யாரும் மனுசாஸ்திரம், அதையொத்த சாஸ்திரங்களை வெறுக்கவே செய்வார்கள்.

பல சமூகப் புரட்சிகளின் காரணமாக ஏற்பட்டு வரும் சமத்துவம் நோக்கிய முன்னேற்றத்தைக் குலைப்பதோடு, பின்னிழுக்கும் கீழ்ச் செயல்களும் இப்போது நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இப்படிப்பட்ட பிற்போக்கு நிகழ்வுகளுக்கு பல ஆண்டுகாலம் முன்பிருந்தே திராவிடர் விடுதலைக் கழகம் ( முன்பு பெரியார் திராவிடர் கழகம் ) தன்னாலான பரப்புரை – போராட்டங்கள் வழியாக சமத்துவ சமுதாயப் படைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியே வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஜாதியின் அடித்தளத்தை உலுக்கும் முயற்சியாக, 2012 டிசம்பர் –24 பெரியார் நினைவு நாளில் ஈரோட்டில் நடைபெற்ற எமது மாநில மாநாட்டில் எடுத்த முடிவின்படி, எதிர் வரும் ஏப்ரல் – 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில்,

– ஜாதி படிநிலை அமைப்பின் மீதும்

– பெண்ணடிமைத் தனத்தின் மீதும்

– ஜாதிக்குள்ளேயே திருமணம், ஜாதித்தொழிலையே செய்யவேண்டும் எனும் மானுட சுதந்திரத்தைப் பறிக்கும் அகங்கார சிந்தனை மீதும்

நமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் ஆவலோடும் …..………

மேற்காணும் கொடுமைகளின் மூல ஊற்றான மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தைத் தமிழ்நாடெங்கும், குறிப்பாக மாவட்டத் தலைநகர்களில், ஒத்த சிந்தனை கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், சிந்தனையாளர்களின் பேராதரவோடு நடத்த தீர்மானித்தோம் ; அதை விளக்கும் வகையில் பல பரப்புரைப் பயணங்களையும் நடத்தியுள்ளோம்.

இதன் முத்தாய்ப்பாக 14.04.2013 அன்று நடைபெற உள்ள மனுசாஸ்திர எரிப்புக் கிளர்ச்சியில் தாங்களும், தங்கள் இயக்கமும் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்பு , பெண்ணடிமை ஒழிப்பு எழுச்சியை வெளிப்படுத்தி அக்கிளர்ச்சியின் நோக்கங்கள் நிறைவேற உதவ வேண்டுமாறு மிகுந்த தோழமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

எங்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ளும்போது கிளர்ச்சிக்கான திட்டமிடுதல், செயல்படுத்துதலில் இணைந்து செயலாற்றுமாறு தங்களின் மாவட்ட அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ந‌ன்றி – திராவிடர் விடுதலைக் கழகம் விடுத‌லை க‌ழ‌க‌ம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*