Home / ஈழம் / தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை

தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை

சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல,

கட்டுரை ஆசிரியரின் குறிப்பு:

இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை ‘வட இந்தியர்’ களின் உறவுகள் என்று வரலாற்றுக்கு புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, தமிழீழத், தமிழ்த் தேசிய இனங்கள் குறித்த வரலாற்று தரவுகளை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

—-

ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஏறத்தாழ இற்றைக்கு 1,90,000 ஆண்டுகள் முதல் 1,60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றி கடந்த 75,000 ஆண்டுகளாக இந்த பூமி பந்தின் எல்லா இடங்களுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் M168 எனப்படும் மரபுயிரியல் குறியீட்டை தங்கள் Y குரோமோசோமில் கொண்டிருந்தனர் (Y குரோமோசோம் எனப்படுவது மனித இனத்தில் ஆண்களை அடையாளங்கானச் செய்யும் மரபுக் கூறுகளைக் கொண்டதாகும்). இவர்களின் இடப் பெயர்தலின் ஒரு கட்டமாக ஏறத்தாழ 85,000 – 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து நீக்ரோய்ட் இனக் குழு ஆதி மனிதர்கள் செங்கடல், அரேபிய குடா நாடுகள், பாரசீக வளைகுடா கடற்கரைகள் வழியாக தற்கால தமிழக – இலங்கைப் பகுதிக்கு இடம் பெயர்கின்றனர். இந்த பரம்பலின் மூலம் M130 என்ற புதிய மரபுயிரியல் குறியீடு இம்மககளிடையே உருவாகின்றது.

இவர்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் இருந்து ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 என்ற மரபுயிரியல் குறியீட்டை கொண்ட திராவிடர்களின் மூதாதையர்கள் என்று கூறிக்கப்படும் மனிதர்கள் தற்கால தமிழக இலங்கை பகுதிக்கு புலம் பெயர்ந்திருக்கின்றனர். இங்கு ’திராவிடர்’ என்று வழங்கப்படும் சொல் ஒரு மொழிக் குடும்பத்தை குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டு பிற்காலத்தில் இனக்குழுவைக் குறிக்கும் பெயராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ஏறத்தாழ 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் மெசப்படோமியாவின் இலம் பாகத்திலிருந்து M172 என்ற மரபுயிரியல் குறியீட்டைக் கொண்ட இலம்-திராவிடர்கள் என்ற இனக் குழுவினர் பலுச்சிசுதான் வழியாக இந்திய துணைக் கண்டத்திற்குள் வருகின்றனர். மெகார், சிந்து சமவெளி, கங்கைச் சமவெளி, கிருட்ணா – கோதாவரி என்று இந்த மரபுயிரியல் குறியீடு கொண்டவர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் விரவி வாழ்கின்றனர். தமிழகத்தில் வேளாண் தொழில் புரியும் மக்களிடம் இந்த மரபுயிரியல் குறியீடு 20 சதவிகிதத்திற்கு காணப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து ஏறத்தாழ 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆசிய பகுதிகளில் மந்தை மேய்க்கும் நாடோடிகளாக இருந்த இனக் குழுக்கள் ஈரான் வழியாக தற்கால இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடைய ஆண் பரம்பரையினரின் Y குரோமோசோமில் M17 எனும் மரபுயிரியல் குறியீடு காணப்படுவதை வைத்து இந்த மக்கள் அடையாளங் காணப்படுகின்றனர். இக்குறியீடு ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், வடமேற்கு இந்தியாவிலும் உள்ள ஆண்களிடையே 55 சதவிகிதமும், தில்லிப் பகுதியில் இந்தி மொழி பேசும் ஆண்களிடையே 35 சதவிகிதமும் இருப்பது அடையாளாங் காணப்பட்டுள்ளது. அதேவேளை வட இந்தியா முழுவதும் இந்த இந்தோ –ஆரிய இனக்குழு மக்களின் பரம்பல் நடைபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் தென்னிந்தியாவில் வாழும் ஆண்களில் 10 சதவிகித மக்களே இந்தோ -ஆரியர்களின் M17 குறியீட்டைக் கொண்டிருக்கின்றனர்.இப்பகுதியில் இக்குறியீட்டின் பரம்பல் பார்ப்பனர்களிடம் மட்டுமே முதன்மையாக பரிமாறப்படுகிறது.

தற்கால இலங்கைத் தீவில் சில சிங்களவர்களிடம் வங்காளத்தைச் சேர்ந்தவர்களின் மரபுயிரியல் சாயல் காணப்படுகிறதே அன்றி M17 குறியீட்டைக் கொண்ட மக்கள் இலங்கைத் தீவில் காணப்படுவதற்கான சான்றுகள் இல்லை.

தொல்லியல் ஆய்வுகளின் படி தொடர்ச்சியான கடல் மட்ட உயர்வால் தற்கால இலங்கைத் தீவிற்கும் இந்தியத் துணைக் கண்டத்திற்கும் இருந்த நிலத் தொடர்பானது ஏறக்குறைய 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே பிளவு படுத்தப்பட்டு தற்கால இலங்கை நிலப்பரப்பு தனி தீவாக உருமாறுகிறது.

இந்த தீவின் உருவாக்கம் வரை இந்த நிலப்பகுதியில் நீக்ரோய்ட் – ஓசுரோலாயிட் இனக் குழுவினர், திராவிடர்களின் மூதாதையர்கள், இலம்-திராவிடர்கள் என பல காலகட்டங்களில் இடம்பெயர்ந்த தொல்குடி மக்களே வசித்து வந்துள்ளனர். பிற்காலத்தில் 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்தோ – ஆரியர்களின் பரம்பல் தற்கால தமிழகப் பகுதிகளில் கூட ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த வரலாறு படி, இவர்கள் வருகைக்கு முன்னரே பிளவு பட்டு தனித் தீவாகிப் போன தற்கால இலங்கைத் தீவிற்கு பெருந்தொகையானவர்களாக இவர்கள் புலம் பெயர்ந்து மக்கள் பரம்பலை நடந்திருப்பதற்கான வரலாற்று சாத்தியங்கள் மிக அரிதாகும்.

கலிங்கப் போரின் வெற்றியைத் தொடர்ந்து பெளத்த மதத்தைத் தழுவிய அசோகப் பேரரசன் பெளத்த மதத்தை தனது அரச மதமாக அறிவித்து அதனை உலகம் முழுவதும் பரப்புதல் மூலம் பெளத்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டான். இதன் ஒரு கட்டமாக கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் பூர்வ குடி மக்களாக வாழ்ந்து வந்த மக்களிடம் பெளத்த மதத்தை பரப்பும் பொருட்டு தனது மகன் மகிந்தனையும், தனது மகள் சங்கமித்ராவையும் அனுப்பி இலங்கைத் தீவின் தென் பகுதி அரசுகள் வழியாக பெளத்த மதத்தைப் பரப்புகிறான். அசோகப் பேரரசின் சார்பாக சென்ற இவர்கள் அங்கிருந்த தென்பகுதி மக்களிடம் பெளத்த மதத்தைப் பரப்பினார்களே அன்றி அது ஒரு இனக் கலப்பிற்கான நடவடிக்கையாக நடைபெறவில்லை.

அசோகப் பேரரசின் அழுத்ததிற்கு அடிபணிந்து பெளத்தத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட இலங்கைத் தீவின் தென் பகுதி மக்கள் தமிழகப் பகுதியில் இருந்து தொடர்ச்சியாக சோழ, பாண்டிய அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளாலும் ஒடுக்குமுறைகளாலும் இயற்கையான அச்ச உணர்வில் தங்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். வணிக மொழியாக பிராகிருத மொழி பரவலாக பயன்படுத்தப்பட்ட காலத்தை தொடர்ந்து, இலங்கைத் தீவின் தென்பகுதி மக்களிடம் பாலி, தமிழ், சமஸ்கிருத, பிராகிருத மொழிகளின் கலப்பில் இருந்து சிங்கள மொழி புதிய மொழியாக தோற்றம் பெறுகிறது.இந்த சிங்கள மொழி இவ்வுலகில் இலங்கைத் தீவில் தேரவாத பெளத்தத்தை தழுவி வாழும் மக்களின் மொழியாக மட்டுமே விளங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனத்தின் வரலாற்று ரீதியான உருவாக்கம் இப்படி இருக்க கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழினம் மீது இனஅழிப்பை நடத்திவரும் சிங்கள இனம் வட இந்தியர்களுடன் எவ்வித மரபியல் தொடர்பும் இல்லாத பொழுதும் தமிழகத்தின் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியாவில் உள்ள தமிழர்கள் தவிர்த்த பிற தேசிய இன மக்களிடம் இருந்து ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு முற்றிலும் வரலாற்றுக்கு புறம்பான ‘சிங்களவர்களும் வட இந்தியர்களும் ஒன்றே’ என்ற கருத்தைப் பரப்புகின்றது.

வரலாற்றுத் தரவுகளுக்கு புறம்பான இக்கருத்தை ஆதரிப்பதோ அல்லது உண்மை என்று சொல்வதோ ஈழத்திற்கான போராட்டத்தில் தமிழர்களைத் தனிமைப்படுத்த விழையும் சிங்களவரின் பேரினவாத செயல் திட்டத்திற்குள் நாம் வீழ்ந்துவிடுவதாகவே அமையும்.

தமிழர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொள்ளும் இந்த பொய்ப் பரப்புரையை ஆதரித்து நிற்பதால் சிங்கள அரசிற்கு இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தமிழர்கள் தவிர்த்த மற்ற தேசிய இனங்களுடன் ஒரு அணி சேர்க்கைக்கு வழியமைத்துக் கொடுக்கின்றோம். விடுதலைப் போராட்ட அரசியலின் அடிப்படையே எதிரியைத் தனிமைப்படுத்துவது தான். அதற்கு மாறாக நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது அல்ல.

உலகில் உள்ள எந்தவொரு ஏகாதிபத்ய நாடும் தேசிய இனவிடுதலை என்ற அரசியல் புள்ளியில் நாடற்ற, நாடுகளுக்காக போராடும் தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கின்றன. இதன் வெளிப்பாடே உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்றும் அரசற்ற தேசிய இனங்களாக வாழ்வதும் வெகு சில தேசிய இனங்களே தங்களின் இன விடுதலைக்காக போராடி வருவதும் பல இனங்கள் தங்கள் உரிமைகளை இழந்து மறந்து ஏகாதிபத்ய நாடுகளின் புதிய-காலனிய நாடுகளாக தொடர்வதுமாகும்.ஈழத்திற்கும் – பாலஸ்தினத்திற்கும் இடையே ஒருங்கிணைவு இல்லாதது மட்டுமல்ல தமிழகத்திற்கும் காஷ்மீருக்கும் இடையேயும் இத்தகைய ஒருங்கிணைவு இல்லை என்பதை நாம் கவனிக்க தவறும் சூழலே நிலவுகின்றது. நாம் ஒரு தனித்த தேசிய இனம் என்று உணர்கின்ற அதே வேளை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் ஏனைய தேசிய இனங்களை அணி திரட்டி முன்செல்வதே ஒடுக்குமுறையை செலுத்தும் இலங்கை அரசை எதிர்கொள்ள நாடற்ற தேசங்களாகிய நமக்கு இருக்கும் முதன்மைக் கடமையாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இங்கு நிலவும் அரசியல் உரிமை சிக்கல்களுக்கு காரணம் மக்களிடம் அரசியல் அதிகாரம் இல்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. மொழி, இனம், பண்பாடு, நிலப்பரப்பு என்று குறியீடுகளின் அடிப்படையிலும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் தேசியத்தின் வளர்ச்சி கட்டங்களை தமிழகம் கடந்து கொண்டிருகின்ற சூழலில், தேசியத்தின் அடிப்படை கூறான அரசியல் உரிமைகளை பெற மக்கள் சனநாயகப்படுதலும், நாம் என்ற உணர்வு பெறுதலும் இல்லாது வட்டார, சாதிய மனநிலையும் நடைமுறையும் நீடித்து நிற்பது தமிழகத்தில் தேசியத்திற்கான போராட்டத்தை அதன் உள் அர்த்ததில் முன்னெடுக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது. தமிழகத்தின் அரசியல் இயக்கங்கள், அமைப்புகள், ஆற்றல்களுக்கு நம் மக்களை சனநாயகப்படுத்துதல் அதன் மூலமாக அரசியல் அதிகாரத்தை அடைதல் என்ற தேசியத்திற்கான வளர்ச்சி நிலைகளை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய வரலாற்றுக் கடமையும் பொறுப்புமிருக்கின்றது.

இறுதியாக, தேசியவாதம் எங்கு ஆதிக்க வாதம் ஆகின்றதோ, எங்கு இனவாதம் ஆகின்றதோ அப்பொழுது அது சனநாயகத்திற்கு எதிர்வாதமாக மாறி சனநாயக விரோதப் பாத்திரத்தை வகித்து பேரினவாதமாக மாறிவிடுகின்றது. எடுத்துக்காட்டாக யூத எதிர்ப்பில் வளர்த்தெடுக்கப்பட்ட ஜெர்மானிய தேசியம் பாசிசமாகிப் போனது.கிறுத்துவ மிஷினரிகளுக்கு எதிராகவும் அதை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள தேசியம் பெளத்த சிங்கள பேரினவாதமாகி இன்று ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்து கொண்டிருக்கின்றது. மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் யூதர்களும், தமிழர்களும் மட்டும் வஞ்சிக்கப்பட வில்லை ஜெர்மானியர்களுக்கும் சிங்களர்களுக்கும் சேர்ந்தே அவர் தம் தேசியம் தீங்கு இழைத்து, வரலாற்றில் தான் பெற்றிருக்க வேண்டிய முற்போக்கானப் பாத்திரத்தைத் அத்தேசியங்கள் இழந்துவிட்டன.

ஆதலால் தேசியம் என்பது மன்னராட்சிக் காலத்திற்கும், கற்காலத்திற்கும், இனக்குழுக்களாய் வாழ்ந்த காலத்திற்கும் திரும்பச் செல்லும் ஒரு பழமைவாதமல்ல. தேசியம் என்பது இன்றைய காலகட்டத்தை விடவும் முன்னோக்கிச் செல்ல வல்ல ஒரு புதுமையான அரசியல் வடிவமாகும். அது மென்மேலும் பரந்த சனநாயக விருப்பங்களை முன்னெடுத்துச் செல்லும் முற்போக்கான ஒரு கோட்பாடும் நடைமுறையும் ஆகும். இந்த புரிதலில் இருந்து நடைமுறையை முன்னெடுப்பதே 21 ஆம் நூற்றாண்டில் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு உதவும்.

நூல் குறிப்புகள்:
================

1.சுப்ரமணியன் விசாகன், இலங்கையில் மனிதக் குடியமைவு (Peopling of SriLanka)
2.விடியல் பதிப்பகம், தேசியமும் ஜனநாயகமும்

– ச.இளங்கோவன், சேவ் தமிழ்சு இயக்கம் ( elango.yuvan@gmail.com )

நன்றி : பொங்குதமிழ் இணைய இதழ்

========================================================================================

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*