Home / FITE சங்கம் / பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

அண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது வெளிப்பட்ட இடமான பெங்களுரு-வைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது . ஏனென்றால், பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே வேலைக்கு ஆன நியமன ஆணை, உழைப்புக்கேற்ற ஊதியம், பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் என்றிருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இன்னொரு முகத்தைக் காட்டியது.

தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வியலை பார்த்தே வளர்ந்த எனது
பள்ளிப்பருவம் ஆகட்டும், இன்று நான் ஒரு தொழிலாளியாக பன்னாட்டு முதலாளிக்கு
வேலை பார்ப்பதாகட்டும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலும், பொருளாதார அடிப்படையிலான ஒடுக்கு முறையும் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருப்பதாகவே தெரிகிறது. பெரும்பாலான துறைகளில் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டும் தொழிலாளர்களின் நிலை இன்றும் மேன்மையுறவே இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையானது இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று,
நம்முடைய கல்வி சூழல் கற்றுத் தரும் போட்டி மனப்பான்மையின் தொடர்ச்சியாகவும்,
உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற கட்டமைக்கப்பட்ட மனோபாவத்தைக் கொண்டும் தன்னுடைய தொழிலாளர்கள் ஒன்றுபடுவதை அவர்களின் மனரீதியாகவே தடுத்துவிடுகிறது.

கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலில் இருந்து,” நமக்கு ஒரு பென்சில் தேவை என்றால் அதை நாமே சுயமாக உருவாகிக் கொள்ள நீண்ட நேரமும் உழைப்பும் இல்லாமல் பெற முடியாது.இதற்கு பதிலாக ஒரு விலை கொடுத்து இன்னொரு தொழிலாளியின் நேரத்தில் அவருடைய உழைப்பைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு பென்சிலை எளிதாக வாங்குகிறோம் நம்முடைய உழைப்புக்குப் பதிலாக இன்னொருவர் உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். ஆனால் நாம் கொடுக்கும் அந்த விலையானது அந்த தொழிலாளியை சென்று சேராமல், பெரும் லாபம் மூலதனமிட்ட அந்த முதலாளியையும், அதனை எந்த உழைப்பும் போடாமல் வாங்கி விற்கும் வியாபரியையுமே சென்று சேர்கிறது.

இது குறித்து எந்த பார்வையும் இல்லாமல், தன் உழைப்பைச் சுரண்டும் முதலாளியை தன்னை வாழ வைக்கும் கடவுளாகப் பார்க்கிறான் தொழிலாளி.அதோடு மட்டுமில்லாமல் வியாபாரத்தில் ஏற்படும் போட்டி, இழப்பு ஆகியவற்றைச் சரிகட்ட தொழிலாளர் நலனையே பணயமாக்குகிறான்”. இப்படி முதலாளிகளை நம்பி தன்னுடைய உச்ச உழைப்பினை கொட்டும் தொழிலாளர்களின் உழைப்பை முடிந்தவரை உறிஞ்சிக்கொண்டு, தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகள் மற்றும் வாழ்வாதரப் பிரச்சனைகளைப் பற்றிக் கேள்வி எழுப்பும் போதோ, தனக்கான சம்பள உயர்வைக் கோரும் போதோ முதலாளி வர்க்கத்தால் கைகழுவப்படுகிறான்.

தொழிலாளர்களின் வாழ்வாதார தேவைகள் அதிகரிக்கும் போது, அவர்களது உழைப்பிற்கான ஊதியத்தை வழங்கி அவர்களைக் காத்திட எந்த முதலாளியும் தயாராக இல்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தங்களுடைய லாபத்தில் ஒரு பைசா கூட குறைந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதனால்தான் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வேலை வாய்ப்பற்று எண்ணற்றவர்கள் இருப்பினும் பீகார், ஒரிசா போன்ற வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை வரவைப்பதும் , வட இந்திய பகுதிகளில் உள்ள பலகாரக் கடைகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொத்தடிமைகளாக சிறார்களை கூட்டிச் செல்வதும் நடைபெறுகிறது.

தொழிலாளர்களின் வாழ்வாதராத் தேவைகளும், அதற்கான செலவினங்களும் அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களின் ஊதியம் உயர்த்தப்படாமல் மற்றப் பகுதிகளில் இருந்து வரும் அதாவது அடுத்த வேலை உணவிற்கும், வாழ்விற்கும் வழியில்லாத பகுதி மக்களைக் கொண்டு அடியோடு மாற்றப்படுகிறார்கள்.இதே யுக்திதான் பன்னாட்டு முதலாளிகளால் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொணரப்படும் சேவைப் பணிகளை இந்தியப் பணியாளர்களைப் வைத்து முடிக்கும் பணிதான் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ளது.இதற்கான காரணமும் மேற்சொன்னது போல முதலாளிகளின் லாபவெறி மட்டுமே.

Outsourcing = (Cutting Costs + Low Wages) – Employee Rights

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்அதிகரித்திருக்கும் வாழ்வாதராத் தேவைகளும், அங்கு இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மென்பொருள் சேவைப் பணிகளை இந்தியாவை நோக்கி வரவைக்கிறது.(1)

எரியும் பனிக்காடு நாவலின் வரிகளிலிருந்து,”மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித்தருவதற்காகவே இங்கே வந்திருக்கின்றோம். அதுவும் கொழுத்த இலாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதோ அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு இலாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்”. இந்த வரிகள் அன்றைய பிரிட்டிஷ் காலனிய முதலாளிகளுக்கும் மட்டும் அல்ல.இன்று உள்ள தகவல் தொழில்நுட்பத் துறைக்கும், ஏன்? அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்று ஏற்றுக்கொள்ளும் வரை நம்மால் அதை நிவர்த்தி செய்யவே முடியாது.

“None are more hopelessly enslaved than those who falsely believe they are free. – Johann Wolfgang von Goethe “

நம்மில் சிலர் நமக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவதாக நம்புகிறோம்.பரதேசி படத்தில் காட்டப்பட்டுள்ள தொழிலாளர் அடிமை வாழ்க்கை முறையைவிட, இன்றைய தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் மீது கட்டமைக்கப்படும் வாழ்க்கை முறையானது மிகவும் அபாயகரமானது. நாம் அடிமையாக்கப்பட்டு சுரண்டப்படுகிறோம் என்று கூட தெரியாத நிலை பெரும் சிக்கலானது.

ஐ.டி தொழிலாளர்கள் , நம்மைச் சுற்றி மாறியுள்ள நகரங்களை கொண்டும், அதன் வாழ்க்கை முறையைக் கொண்டும் நாம் வளர்ந்துள்ளதாக வாதிடலாம், ஆனால் நுகர்வு கலாச்சார மோகத்தில் பல்வேறு பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் கடன்காரர்கள் நாம் என்பதே நிதர்சனம்.

இதற்கு பரதேசி படத்தில் வரும் ஒரு காட்சியை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்,
தேயிலை தோட்டக் கூலிகளுக்கு ஆன கணக்கு முடிக்கும் நாளில் கங்காணி, மருந்து
கொடுப்பவர், கங்காணியின் உதவியாளர், மளிகைக் கடைக்காரர் என்று அனைவரும்
அமர்ந்திருப்பர், கூலிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தில் அவர்களுக்கு தரவேண்டிய தொகைப் பிடித்தம் போக மீதியே கொடுக்கப்படும்.அதேபோல, நமக்கு வரும் சம்பளப் பணமானது, வீட்டுக் கடனுக்கான நிலுவை, வாகனக் கடனுக்கான நிலுவை என்று தனியார் பெருவங்கிகளின் கைகளுக்கும், மருத்துவக் காப்பீடு என்று தனியார் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்ய வைக்கபடுகிறது.

இது எல்லாம் போதாது என்று காதலர் தினம், உழைக்கும் மகளிர் தினத்தின் முதலாளித்துவ வடிவமாக்கப்பட்ட பெண்கள் தினம், அன்னையர் தினம் என்று அனைத்துக்கும் தினம் கொண்டாட பழக்கபடுத்தி நம்முடைய சம்பளம் முதலாளிகள் வசமே சென்று மீண்டும் நமக்கே வரும் சுழற்சிக்குள் வைக்கபட்டிருக்கும் அடிமைகள் நாம். (2)

இவ்வாறு நாம் அடிமைகள் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்று உணராமல் பொருளீட்டும்
வேட்கையில் இருக்கும் நாம் தேவைகளை உணர்ந்து, நுகர்வு மோகத்தில் இருந்து வெளியேறாமல் இந்த விலங்கை உடைப்பது என்பது சாத்தியமாகாது.

தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும், பாட்டாளி வர்க்கப் புரட்சியை வென்றெடுக்கவும் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் ” என்றார் மார்க்சு. ஆனால் நாம் இன்றளவும் நம்மை மற்ற துறை தொழிலாளர்கள் இடமிருந்து விலகி ஒரு மேட்டிமைதனத்திலயே உள்ளோம்.

தினமும் எட்டு மணி நேர வேலை என்று வெளியில் சொல்லிக்கொள்ளும் நிறுவனங்கள், ஊழியர்களை கசக்கி பிழிவதும், அதனால் பணியாளர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதும், தனக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ளமுடியாமலும் தவிப்பதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.(3)

இப்படிப்பட்ட சூழலில், நாம் நம்முடைய வாழ்க்கைமுறை அடிமையாக இருக்கிறோம் என்று பெற்றுவிடாத வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது ஏன் என்று காரணம் தெரிவிக்காமல் நம்மில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர். இதற்கும் எந்த பெரிய நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கவில்லை, அவர்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய மட்டுமே முடியவில்லை.

“Recession is Only For Employees, Not For Employers”

நம்மை நாம் “Professionals”, “Intellectuals” ஆக பார்க்கிறோம் ஆனால், நிறுவங்கள் வெறும் கூலிகளாகவே “Coding Coolies”, ” Knowledge Slaves” பார்க்கின்றன (4).

இன்றைய சூழலில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளும்,
அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து வந்து வேலைப் பார்க்கும் ஊழியர்கள் தங்களின்
முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள் என்ற மக்களின் எண்ணமும், அதற்கேற்ப வேலைக்கான விசா வழங்குவதில் கெடுபிடியும், அமெரிக்காவில் வந்து வேலை பார்க்கும்
நபர் ஒன்றுக்கு $1000 வீதம் என்ற சட்டம் இயற்றுதல் நோக்கி அமெரிக்க அரசு நகர்வதும் நமக்கான எதிர்காலத்தை கேள்விகுறியக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் நம்மீது உள்ள அடிமைத்தளையினை உடைக்க விழித்துக் கொள்ள வேண்டிய செம்மையான தருணமிது.(4,5)

ஐ.டி.தொழிலாளர்களுக்கு யூனியன்கள் அமைப்பதை விரும்பாத பெருநிறுவனங்களும்,முதலாளிகளும் அவர்களுக்கான கூட்டமைப்பை உருவாக்க தவறவில்லை.இந்தியாவில் ஐ.டி முதலாளிகளின் யூனியன்தான், NASSCOM.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் ஐ.டி நிறுவனங்களை நெறிப்படுத்தும் 40க்கும்
மேற்பட்ட சட்டங்களை NASSCOM, ஐ.டி நிறுவனங்கள் சேர்ந்து தடுத்துள்ளார்கள். இதற்காக கடந்த ஆண்டு Cognizant நிறுவனம் மட்டும் 5.9 இலட்சம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.(6,7) தொழிலாளர் நலச் சட்டங்களை தடுக்க இவ்வளவு பணத்தை செலவு செய்யும் இவர்கள், தங்களது தொழிலாளியின் சம்பளத்தை உயர்த்தி தர மட்டும் ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பார்கள். இந்த நிலையில் நம்முடைய சட்டங்கள் பற்றியும்,அதை நிறைவேற்றுபவர்களின் “கறை படியா கரங்கள்” பற்றியும் நாம் அனைவரும் அறிந்ததே.

தங்களது சந்தையையும், அதிக லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் அவர்களுக்கான யூனியனை வைத்திருக்கும்போது, நம்முடைய உரிமைகளுக்காக நாம்
ஒருங்கிணைய வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் இருக்கிறோம்.

1940களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தங்களது உரிமைகளை எப்படி பாதுகாத்தார்களோ அது போல நாமும் இன்று ஒருங்கிணைந்து நமது உரிமைகளை பாதுகாத்திடுவோம். இல்லையென்றால் பின்வரும் வாக்கியம் உண்மையாகிவிடும்.
“ஆம்!!! நானும் ஒரு பரதேசியே!!! நுகர்வு பரதேசி !!!”

க‌திர‌வ‌ன்
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் (Save Tamils Movement)

தரவுகள்:

1. http://www.guardian.co.uk/business/2013/may/13/aviva-outsourcing-betrays-uk-workforce

2. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ்

3. http://economictimes.indiatimes.com/news/news-by-company/corporate-trends/psychiatrists-report-sudden-rise-in-cases-of-depression-among-it-workers-nasscom-says-all-is-well/articleshow/19717627.cms

4.. http://gadgets.ndtv.com/laptops/news/the-end-of-indian-it-staffing-as-we-know-it-346597

5.socialism.in/index.php/life-in-the-indian-it-industry-high-life-for-the-bosses-low-life-for-the-workers/

6. http://timesofindia.indiatimes.com/business/india-business/Nasscom-engages-lobbying-firm-in-US/articleshow/19924148.cms

7. . http://economictimes.indiatimes.com/tech/ites/cognizant-spent-1-95-million-on-lobbying-last-year-heftiest-among-it-peers/articleshow/19685292.cms

About கதிரவன்

15 comments

1. ஐ.டி தொழிலாளர்களின் நிலை பற்றிய நல்ல கட்டுரை தோழர்.கதிரவன். அதேசமயம் பிரச்சனையை பற்றி மட்டும் கூறாமல் அதற்கான தீர்வாக ஐ.டி தொழிலாளர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.

நட்புடன்
நற்றமிழன்.ப‌

2. Article timing is apt.
much needed one.

3. Good one Kathir. Looks neat. Could have added some more spices. That's OK to start with. Keep this up!

4. நன்றி தோழர்களே!!!

5. பரதேசி படம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே அளவுக்கு இந்த பதிப்பும் பாதிப்பை ஏற்படுத்தியது. பதிப்பு மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

நமக்கு விடிவு காலம் ஏற்படும் என்று நாம் நம்புவோம்.

6. நல்ல கட்டுரை நண்பா. இன்னும் எத்தனை நாட்கள் நாம் பேசி கொண்டே இருக்க போகிறோம் . தகவல் தொழில்நுட்ப அடிமைகளுக்க என்று ஒரு இயக்க வேண்டாமா ??

7. அருமையான் கட்டுரை தோழர் !!!

8. படிக்காத இளைகர்கள் கையில் சுதந்திரத்தை கொடுத்துவிட்டு
படித்த இளைகர்களின் மூளைகளை அடிமையாகிய மேலை நாட்டு முதலாளித்துவத்தை மிக தெளிவாக எடுத்துரைத்தமைக்கு தோழர்.கதிரவன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்……

9. மிகவும் அருமையான,பொருத்தமான தலைப்பு!

10. A daring article.. Thanks kathiravan for writing out most IT employees unexpressed thoughts. It's high time to bring change.. One should see this article as employees and economic friendly not against employers.

11. “ஆம்!!! நானும் ஒரு பரதேசியே!!! நுகர்வு பரதேசி " – அருமையான பதிவு கதிரவன் ..

12. Thanks Friends, We are trying to create some open discussions on our issues in the Facebook page, "Techies Voice". Come let us find a way to work together!!!

13. நாம் நமக்கான ஒரு அமைப்பு என்பதன் அவசியம் இன்னும் பல பேருக்கு தெளிவாக உணர்த்த படவேண்டும். எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால் நமக்கு முன்னரே இதை உணரந்தவர்களும் அதற்கான முயற்சிகளை எடுத்தவர்களும் இன்னும் அதை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கான காரணமே நாம் தான் என்றால் அதை மறுப்பதற்கு இல்லை, யாரும் மறுக்கவும் முடியாது. உதாரணதுக்கு All time facebook, twitter போதாக்குறைக்கு மண்ணுல போகபோற அவன்/அவள்

14. மிகவும் அருமையான பதிவு . முகத்தில் அறையும் உண்மைகள். வாழ்த்துக்கள் கதிரவன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *