Home / இனப்படுகொலை / முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் – இலங்கையை புறக்கணிப்போம் என ஐ.டி ஊழியர்கள் உறுதியேற்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் – இலங்கையை புறக்கணிப்போம் என ஐ.டி ஊழியர்கள் உறுதியேற்பு

பல்வேறு தடைகளுக்கு பின் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் இருசக்கர வாகனப்பரப்புரையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது.புதிய உறுப்பினர்களும் மற்றும் பல ஐ.டி ஊழியர்களும் உணர்வாளர்களும் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கான இடையறாத உழைப்பையும் பரப்புரையையும் கடந்த இருவாரங்களாக எமது இயக்கத் தோழர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வந்தனர்.இலங்கையின் இறுதி கட்டப் போரில் சிங்கள இராணுவத்தால் மிகக் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவில் பல்லாயிரக்கணக்கான நம் தமிழ் சொந்தங்களை நாம் இழந்தோம்.மனித குல வரலாற்றின் இருண்ட பக்கங்களால் சூழப்பட்ட அப்பேரழிவை வெறும் நினைவஞ்சலியோடு மட்டும் கடந்து சென்று விடாமல்,சிங்கள இனவெறி அரசை உலக அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, பண்பாட்டு தளங்களில் முற்றிலுமாக புறக்கணிப்போம் என்றவொரு சூளுரையோடு நேற்றை நிகழ்வை கட்டமைக்கப்பட்டிருந்தது.“இலங்கையை புறக்கணிப்போம்” என்ற அந்த சூளுரை, சிங்கள அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் அனைத்து வழிகளையும் புறக்கணிக்கும் ஒரு ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு ஆரம்ப கட்ட முன்முயற்சியாகும்.இந்நிகழ்வை ஒரு பொதுக்கூட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தோம்.இறுதி நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை அனுமதி மறுத்தது.காகிதத்தில் சட்டம் ஒழுங்கு என்று எழுதியிருந்தாலும், ஏற்கெனவே சோழிங்க நல்லூர் சந்திப்பில் சேவ் தமிழ்சு நடத்தியிருந்த தருமபுரி வன்கொடுமை பற்றிய தெருமுனைக் கூட்டத்தையே அவர்கள் காரணம் காட்டி அனுமதி மறுத்திருக்கின்றனர்.

”இலங்கையை புறக்கணிப்போம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு வடிவங்களில் இப்பரப்புரையை மக்களிடம் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டு,பின்னலாடையில் ”இலங்கையை புறக்கணிப்போம்” வாசங்களை அச்சிடுவது, கைப் பட்டை(Wrist Band), வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பான்கள்(Reflective stickers) என்று சிறு சிறு வழிகளில்,இவ்வரசியலை கொண்டு சென்றோம். துண்டறிக்கைகளும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு விநியோகிப்பட்டன.கடந்த இரண்டு வாரங்களாக சென்னை கடற்கரை – திருவான்மியூர் பறக்கும் இரயில் மார்க்கம் மற்றும் கிண்டி – தாம்பரம் மார்க்கம் இவ்வழித் தடங்களில் எமது இயக்கத் தோழர்கள் பரப்புரை செய்தனர். டைடல் பார்க், வேளச்சேரி ஆகிய இடங்களிலும் துண்டறிக்கை பரப்புரை செய்யப்பட்டது.மேலும் மே 17 அன்று முள்ளிவாய்க்கால் பேரழிவு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு முன்பாக ஒரு வாகனப்பரப்புரையோடு, நினைவேந்தல் நடக்கும் இடமான சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.சென்னை DLF ஐ.டி வளாகத்திலிருந்து ஒரு குழு புறப்பட்டு, சென்னை டைடல் பார்க் முன்பு குழுமியிருந்த ஒரு குழுவினரோடு இணைந்து வாகனப் பேரணி தொடங்கியது. தோழர்கள் இலங்கையை புறக்கணிப்போம் என்ற விண்ணதிர முழக்கமிட்டவாறே பழைய மகாபலிபுரம் சாலை முழுதும் வாகனப் பேரணியில் ஈடுபட்டனர் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிப்பட்டன.

மாலை சரியாக 6.30க்கு நினைவேந்தல் தொடங்கியது.தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து தமீழீழ விடுதலையை வலியுறுத்தியும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவு கூர்ந்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக தோழர் செந்தில் இலங்கையை புறக்கணிப்பதன் அரசியல் குறித்து ஒரு சிறு உரை ஆற்றினார். பிறகு அனைத்து தோழர்களும் இயக்கத்தின் புதிய உறுப்பினர்களின் சந்திப்பும் துரைப்பாக்கத்தில் ஒரு சிறு அரங்கில் தொடங்கியது.

பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களும் மற்ற ஐ.டி ஊழியர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.இலங்கையை புறக்கணிப்போம் என்ற இவ்வரசியலை அடுத்த கட்டமாக எப்படி நகர்த்துவது
என்று ஆலோசனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.

இந்நிகழ்வை அரசியல் ரீதியாக வெற்றியடையச் செய்த புதிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல ஐ.டி ஊழியர் உணர்வாளர்களுக்கும் சேவ் தமிழ்சு இயக்கம் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.மீண்டுமொரு போராட்ட நிகழ்வில் ஒன்றிணைவோம்.

இலங்கையை புறக்கணிப்போம்..தமிழீழ விடுதலைக்கு என்றென்றும் தோள்கொடுப்போம் !!!!

நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படங்கள்:
=====================================

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*