Home / அரசியல் / நான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லாம் – உச்ச நீதிம‌ன்ற‌ம்

நான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லாம் – உச்ச நீதிம‌ன்ற‌ம்

மின்சாரமில்லாமல் மனிதன் இயங்கமுடியா இன்றைய நிலையில், தமிழகம் மட்டும் “மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?” என்ற கட்டாய கல்வியைப் பயின்று வருகின்றது. தெற்காசிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை வகுத்துள்ள இந்தியா, தன்னளவில் மின்பாற்றாக்குறையுடனே உள்ளது. அதே போன்ற சரியான திட்டமிடல் இல்லாத மத்திய அரசினால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அண்டை மாநிலங்களிடம் பங்கிட்டு கொடுக்கப்பட்டு‌ தமிழ்நாடு 30 விழுக்காடு மின்பாற்றக்குறையுடன் உள்ளது; ஆனால், தமிழகத்திற்குள் மின்சாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது – ஆம், ஒரு நாளுக்கு 14 மணிநேரத்திற்கு மேல் உலவினால் கைது! இரவில் எல்லோரும் உறங்கும் போது, உலவ தடை! எப்போது கைதாவார், எப்போது விடுதலை ஆவார் என்பதை அறியாதவராய், பாவம் இந்த மின்சாரம். இவ்வாறாக வேடிக்கையாய் போன மின்சாரம், சிறு குறு தொழில்களையும், நிலத்தடி நீர் சார் விவசாயிகளையும், அவர்களின் குடும்பங்களையும் பொருளாதார புழுக்கத்தில் தள்ளி, அவர்களது கனவுகளுக்கான வழியை இருளால் அடைத்துள்ள‌து. அதே ச‌ம‌ய‌ம், ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், உள்நாட்டு பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ளுக்கும், வணிக கேளிக்கையாக நடத்தப்படும் IPL -க்கும் தடையில்லா மின்சாரம்.

இந்த மின்நெருக்கடி சூழலில், மின்பற்றாகுறையை சீர்செய்ய தொலைநோக்கு திட்டம் வகுக்காத தமிழக அரசு, மத்திய அரசின் அணுசக்தி கொள்கைக்கு இரையானது. கூடங்குளம் அணுஉலை மிகவும் மேப்பட்ட முறையில் அமைக்கபட்டது, என அரசு விளம்பரம் செய்த நிலையில், அந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில், “உபகரணங்கள் பழுது; அதனால் கசிவு” என மத்திய அமைச்சர் அம்பலமாக்கியதும், இதை திறப்பதில் ஏற்படும் கால தாமதமும், அணு உலையில் பல தொழில்நுட்ப கோளாறும் இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. zio-podolsk என்ற ரஷ்ய நிறுவனம், கூடங்குளம் அணுஉலைக்கு உபகரணங்கள் வழங்கியதும், மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரி, ஊழல் மற்றும் தரமற்ற உபகரணங்கள் விநியோகம் செய்த குற்றத்திற்காக, பெப்ரவரி மாதம், 2012ல் கைதாகிய தகவலும், அணுஉலையின் பாதுகாப்பற்ற தன்மையை மேலும் வலுப்படுத்தியது. புகுசிமா அணு உலை பேரழிவிற்கு பின்னர் இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் அமைத்த 17 விதிகளை கூடங்குளத்தில் கட்டப்படும் 1,2 அணு உலைகளில் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தொடுத்திருந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேற்கூறிய 17 விதிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே அணு உலையில் எரிபொருளை நிரப்ப அனுமதிக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பில் எந்த வித சமர‌சமும் செய்யக்கூடாது போன்ற கோரிக்கைகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வைத்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், நீதி செய்த முறையோ விநோதமானது…

“பெருவாரியான மக்களின் நலனுக்காக, ஒரு சிறிய கூட்டம் தியாகம் செய்யலாம்”, என தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது , ஹிட்லரின் போதனையான, “ஜெர்மானிய மக்களின் நலனுக்காக, யூதர்களை கொல்வது தவறில்லை”என்பதை தான் நினைவூட்டுகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் அணு உலையின் மூலம் மின்சாரம் என்பது “ஒரு சிறிய கூட்டத்தின் நலனுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை பலிகொடுப்பதே”. எனவே இது பெருவாரியான மக்களின் பிரச்சனை; அணு உலையால் உருவாகும் கதிரியக்கம் அதை சுற்றி வாழும் மக்களை மெல்ல, மெல்ல கொல்லும். அதே போல் அணு கழிவு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அழியா அணுகுண்டுகளை, நமக்காக ஆங்காங்கே புதைத்து கொள்ளும் ஒரு உயர் தொழில்நுட்பமாகும். தெரு குப்பைகளையும், கழிவு நீர் கால்வாய்களையும் பராமரிக்க இயலாத அரசு நிர்வாகம், அணு கழிவைப் பாதுகாக்கும் இடத்தைக் கூடத் தெரிவு செய்யாமல் நாங்கள் அணுக்கழிவை முறையாக பராமரிப்போம் என்பது நகைமுரணேயாகும். இதுவரை கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.6 இலட்சம் கோடி, ஏன் அணு சக்தி தான் மின்பற்றாகுறைக்கான ஒரே தீர்வு என அரசுகளும், அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், சில விஞ்ஞானிகளும் பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதற்கு பதில் இங்கே தான் உள்ளது.

“தடையில்லா வளர்ச்சியையும், வாழ்வுரிமையையும் சமப்படுத்த அணு உலை அவசியம் ஆகும்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறுகின்றது. அணு சக்தி கொள்கை வளர்ச்சிக்கானது என்ற அடிப்படை எண்ணத்திலேயே இந்த வழக்கு அணுகபட்டுள்ளது. இயற்கையாக நிகழும் பரிணாமம்(கூர்ப்புக் கொள்கை) கூட எப்போதும் வளர்ச்சியை நோக்கி பயணித்ததும் இல்லை. உதாரணமாக, ‘டோடோ’ என்பது மொரிசியஸ் தீவில் வாழ்ந்த ஒரு பறவையின் பெயராகும். தீவில் தன்னை வேட்டையாட எந்த உயிரினமும், பல நூற்றாண்டுகளளாக, இல்லாத சூழலில், பரிணாம மாற்றத்தில் தனது பறக்கும் திறனை இழந்தது. இதன் விளைவாக, 16ஆம் நூற்றாண்டில் குடியேறிய மக்களுக்கு, ‘டோடோ’வை வேட்டையாடுவது எளிதானது. 17ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாக இந்த பறவையினம் அழிந்தது. பரிணாமம் என்ற இயற்கை மாற்றமே, என்றும் வளர்ச்சியை நோக்கி பயணிக்காத நிலையில், அணுசக்தி என்ற செயற்கையான முன்னெடுப்புகள், வளர்ச்சிக்கானது என முடிவுக்கு வருவது, பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பெறுவதையும், அதில் ஆய்வு மேற்கொள்வதையும் தடை செய்து(டோடோ பறக்கும் தன்மையை இழந்தது போல), பல அணுஉலைகளை சுமந்து கொண்டு, அதன் கதிர் இயக்கத்தால் வேட்டையாடப்படும் நிலைக்கு ஆளாவோம்.

கருவறை நுழைந்து கதிர் இயக்கும்,

கருவின் அவயம் வளர்ச்சி அறுக்கும்

அணு உலைகளை மறுப்போம்.

பாதுகாப்பான முறையில் மின்சாரம் பெற தொடர்ந்து போராடுவோம்.

ஏர்வளவன்
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

About ஏர்வளவன்

2 comments

  1. அணு உலையை எதிர்க்கிறோம் என்று மொட்டையாக ஒரு விஷயத்தை எதிர்க்க கூடாது. நீங்கள் குறிப்பிடுவதை போல எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மனிதனும் இயற்கைக்கு எதிரானவன் தான். உதாரணத்துக்கு வாகன எரிபொருள், கலப்பின உணவுகள்(Hybrid food), அலைபேசி(செல்போன்) இன்னும் பல, இதில் அலைபேசியை(செல்போன்) எடுத்துக்கொள்வோம், இதன் எண்ணற்ற நன்மைகள் போல, தீமைகளும் உள்ளன, இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இதன் மின்காந்த அலைகள் நமக்கும் ,

  2. தாய்ப்பாலை நொடி பொழுதில் நச்சாக்கும் இந்த கதிர் வீச்சை எதனுடனும் ஒப்பிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*