Home / அரசியல் / அரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக???

அரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக???

கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி, ஒடிசா (பழைய பெயர் – ஒரிசா) மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டனா கிராமத்தில், POSCO இரும்பு ஆலை அமைவதற்கான பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் இறந்து போயினர். ஒருவர் படுகாயமுற்று கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போதும்,இதற்கு தொடர்புடைய நிகழ்வுகளிலும் அரசு இயந்திரமும், காவல் துறையும் யாருக்காக பணி செய்தன? என்பதை உண்மை அறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில் தெரிவிக்க விழைவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், கல்வியாளர்கள்,ஜனநாயக மற்றும் மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகிய பன்னிரண்டு பேர் உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

POSCO இரும்பு ஆலை திட்டம்

2005 ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசும், தென்கொரிய பன்னாட்டு நிறுவனமான POSCO வும் 54 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதன் உற்பத்தி ஆண்டுக்கு 12 மில்லியன் டன் இரும்பு என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையுடன் சேர்த்து ஒருங்கமைந்த குடியிருப்புப் பகுதியும்,அனல் மின் நிலையமும், பாரதீப் துறைமுகத்தில் இருந்து தெற்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆலைக்குச் சொந்தமாக துறைமுகமும் அமைக்கப்படுவதாக உள்ளது.

இந்த திட்டத்திற்காக சுமார் 4004 ஏக்கர் நிலம் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட எட்டு கிராமங்களில் இருந்து கையகப்படுத்த அரசு இயந்திரத்தால் முடிவு செய்யப்பட்டது.இந்த மூன்று கிராம பஞ்சாயத்துகளில் திங்கியா பஞ்சாயத்துக்குட்பட்ட மூன்று கிராமங்களான திங்கியா,கோபிந்தபூர் மற்றும் பட்டனா கிராமங்கள்தான் இந்த நில ஆக்கிரமிப்பால் அதிகம் பாதிக்கப்படுபவை.

காட்டு வளத்தை ஆதாரமாக கொண்டு பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளும் , வேளாண்மை,மேய்ச்சல்,மீன்பிடி தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதிகளும்தான் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. இதனால் காடுகளை அழிப்பது மட்டுமின்றி, நிலங்களைப் பறிப்பதால் வேளாண்மையை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கூலிக்கு வேலை செய்யும் நிலமற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

மக்கள் எதிர்ப்பும், இயக்கமும்

கிராம மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி POSCO -விடம் கையளிக்கும் பணிகள் 2005 முதலே அரசு இயந்திரத்தால் தொடங்கப்பட்டது.

இன்றளவும் மனிதர்கள் மீதான அக்கறையும்,மண் சார்ந்த நேசமும் கொண்ட பாமர மக்களால்தான் மனித உரிமைகளுக்கான பெரும்பாலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தொடக்கம் முதலே மக்கள் POSCO ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

போராட முன்வந்த மக்களை ஒருங்கிணைத்து PPSS (POSCO Pratirodh Sangram Samiti) -POSCO எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு என்ற இயக்கம் தலைமையேற்று ஆலை நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்து மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வருகிறது.

அரசு மற்றும் காவல்துறையின் அடக்குமுறை

தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க போராடி வரும் மக்களை ஒடுக்க மாநில அரசும், காவல் துறையும் இதுவரை இருநூறுக்கும் அதிகமான பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் இதுவரை 1500க்கும் அதிகமான கைது உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இதில் 340 பெண்களுக்கு எதிரான கைது உத்தரவுகளும் அடங்கும்.இவை மட்டுமின்றி மார்ச் மாதம் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு முன்னரே இது போன்ற சில திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை ஆலை நிர்வாகமும், அரசு இயந்திரமும் இணைந்து நிகழ்த்தியுள்ள‌னர்.

இத்திட்டத்தின் தொலைநோக்கு,இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சட்டபூர்வமான அனுமதி தொடர்பாக தொடுக்கப்பட்ட மக்களின் கேள்விகளால் நில கையகப்படுத்துதல் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதற்கான நீதி மற்றும் சட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

03-02-2013 அன்று ஜகத்சிங்பூர் மாவட்ட நிர்வாகம், கோபிந்தபூர் கிராமத்தில் மீண்டும் நில கையகப்படுத்தலை தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பின் போது நிலங்களில் விவசாயத்திற்காக வளர்க்கபட்டிருந்த வெற்றிலை செடிகள் அழிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் விதித்திருந்த தடைகளை மீறியே இந்த பணி மீண்டும் முடுக்கிவிடப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், ஒடிசா உயர் நீதிமன்றம் கஹண்டதர் சுரங்களில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.இந்த வழக்கில் அரசு தரப்பிலான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஜகத்சிங்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை எஸ்.பி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நில கையகப்படுத்துதல் தொடங்கப்பட்டது .

சட்டபூர்வ அனுமதியின்றி, விதிமுறைகளைப் பற்றி எவ்வித கவனமும் இல்லாமல் நிலங்களைப் பிடுங்கி, மக்களை விரட்டும் பணி அரசாலும், ஆலை நிர்வாகத்தாலும் வேகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டப் பணிகளை மேற்கொள்வதில் மாநில அரசாங்கத்திற்கு இருந்த முனைப்பும், மத்திய அரசு மற்றும் POSCO நிர்வாகத்தால் மாநில நிர்வாகத்தின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தமும் சேர்ந்து மக்களையும், அவர்களது வாழ்வாதார உரிமைகளையும் வதைத்து வருகின்றன.

தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடிய மக்களை ஒடுக்கவும்,அச்சுறுத்தவும் ஒடிசா மாநில காவல் துறை, கோபிந்தபூர் கிராமத்தில் ஆயுதம் தாங்கிய காவலர்களின் முகாமை அமைத்து மாநில அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு துணை நிற்கின்றது.

இதனால் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் முன்னின்று போராடியவர்கள் அண்டை கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாயிற்று. இத்தோடு, ரவுடிகளையும், குண்டர்களையும் கூலிக்கு அமர்த்தி மக்களைத் தொடர்ந்து தாக்கியும், குண்டு வீசி மக்களை கொன்றும் உள்ளது ஆலை நிர்வாகம். இதற்கு அரசும், காவல் துறையும் துணை நிற்கின்றன‌.

குண்டு வெடிப்பும்,நிர்வாகங்களின் பங்கும்

கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள்திரள் அறவழிப் போராட்டங்களும், சட்டரீதியான முன்னெடுப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் இந்தியாவில் உள்ள மற்ற ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்று தந்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் உரிமை ஆர்வலர்கள் ஒடிசா மக்களின் மீது நடத்தப்படும் அரச வன்முறைப் பற்றி உணரலாயினர்.வழமையாக தங்களுக்குத் தேவையான செய்திகளை மட்டுமே வெளியிடும் கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது POSCO திட்டப் பகுதியில் நடைபெறும் அரச பயங்கரவாதம் பற்றி வாய் திறப்பதில்லை.

உண்மை அறியும் குழு PPSS இயக்கத்தினர் மற்றும் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்தது. அத்தோடு காவல் துறை எஸ்.பியையும், மாவட்ட ஆட்சியரையும் சந்திக்க முயற்சித்தது ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் PPSS இயக்கத்தைச் சார்ந்த தபஸ் மண்டல் என்கிறவர் பலியானார். கடந்த மார்ச் மாதம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் PPSS இயக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களான தருண் மண்டல், நரஹரி சாஹு, மனஸ் ஜெனாஆகியோர் உயிரிழந்தனர்.லக்ஷ்மன் ப்ரமணிக் என்பவர் படுகாயமுற்று மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் .

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று இரவே, தொலைக்காட்சி ஊடகம் ஒன்று குண்டுவெடிப்பைப் பற்றியும்,அதில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் செய்தி ஒளிபரப்பியது. அந்த‌ ஒளிபரப்பில், ஜகத்சிங்பூர் காவல்துறை எஸ்.பி திரு.சத்யப்ரட்டா போய் அவர்கள் இந்த குண்டுவெடிப்பு ஒரு விபத்து என்றும்,இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.குண்டு வெடிப்பு நிகழ்ந்த 15 மணி நேரத்திற்கு போலீஸ் அந்த இடத்திற்கு வரவில்லை என்பதே உண்மை.இதுவரை காவல்துறை தரப்பில் இருந்தும், மாநில அரசு நிர்வாகத்திடம் இருந்தும் இந்தச் சம்பவத்தை விசாரிப்பதற்க்கான எந்த ஒரு அக்கறையும் காட்டப்படவில்லை.

குண்டு வெடிப்பு நடந்த அடுத்த நாளே கோபிந்தபூர் கிராமத்தில் வெற்றிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு நிலங்களை கையகப்படுத்தும் வேலைகள் தொடர்ந்தன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லக்ஷ்மன் ப்ரமணிக், ‘ அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்த போது அவர்களின் மீது குண்டுகள் வீசப்பட்டதாகவும், மரணத்தின் விளிம்பில் இருக்கும் தான் பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதுமில்லை’ என்று உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று இரவு, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற காவலர்கள், வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் குண்டு வெடிப்பு ஏற்பட்டது என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

இது மட்டுமின்றி, காவல் துறையில் புகார் அளிக்க சென்ற நரஹரி சஹுவின் உறவு பெண்ணான குசும்பதி சாஹூ போலீசாரால் வழக்குப் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையானது,வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத POSCO ஆதரவாளரான ரஞ்சன் பர்தான் என்பவரது வாக்குமூல அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஏற்க மறுத்த காவல் துறை, ரஞ்சன் பர்தனின் வாக்குமூலத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டது.PPSS இயக்கத்தவருக்கு எதிராக இந்த முதல் தகவல் அறிக்கை பதிவானது.

பன்னிரண்டு அணிகள் கொண்ட காவல் படையினர் துணையோடு தொடர்ந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதில் பெண்களும்,குழந்தைகள் உட்பட எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒடிசா தொழில் கட்டமைப்பு வளர்ச்சிக் குழும அதிகாரி திரு. சங்கரம் முஹபாத்ரா போராடும் மக்களை விரட்டி விரட்டித் தாக்கியது காவல்துறையின் செயலற்றத்தனத்தை காட்டும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிய ஜகத்சிங்பூரில் முகாமிட்டிருக்கும் காவல் துறை அதிகாரி திலீப் தாசை உண்மை அறியும் குழுவினர் தொடர்பு கொண்ட போது, அவர்கள் பேசுவதற்கு சரியான ஆள் என்று POSCO ஆதரவாளரான ரஞ்சன் பர்தனிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.உண்மை அறியும் குழுவினரிடம், முகாமிட்டிருக்கும் காவல் துறை சார்பில் POSCO ஆதரவாளர் ஒருவர் பேசியுள்ளார். இதிலிருந்து காவல் துறை POSCO நிர்வாகம் மற்றும் அரசின் ஏவல் படையாகவே செயல்பட்டுள்ளது என்பது திண்ணம்.

நில கையகப்படுத்தலுக்கு ஆதரவாக அவர் பேசிய போதிலும் அரசு தரும் பணத்தால் இன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில்,இழந்த நிலத்தையும், அதனால் கிடைத்த வாழ்வாதாரத்தையும் ஈடு செய்யவே முடியாது என்பதை ஒப்புக் கொண்டார்.

பெரும்பாலான கிராமமக்கள் கோபிந்தபூர் முகாமில் உள்ள காவலர்களை கண்டு அச்சமுறுவதாகவும், இயல்பாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.எத்தனையோ ஆடம்பர, சொகுசுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அங்கு மக்களின் வீட்டு வாசலில் நிற்கிறது காவல் துறை.

பெண்களின் நிலை

POSCO – வை எதிர்த்து நடைபெறும் இந்த மக்கள்திரள் போராட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது.

PPSS இயக்கத்தின் பெண்கள் பிரிவு ‘துர்கா பாஹினி ‘ என்றழைக்கப்படுகிறது. முகாமிட்டுள்ள காவல்துறையினரை வெளியேறச் சொல்லி மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தாக்குதலில் காயமுற்ற 41 பேரில் 35 பெண்களும் குழந்தைகளும் ஆவர்.நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில்தான் நம் அரசுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர் இந்த கிராமத்து பெண்கள்.

இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் பின்வருமாறு கூறினார்,

‘இன்னும் எவ்வளவு அடிகளை எங்களால் தாங்க முடியும்?,நீங்களே சொல்லுங்கள்,எங்களிடம் நிலங்கள் இல்லை; இங்கு நாங்கள் உழைப்பையே நம்பி வாழ்ந்தோம்; நாங்கள் ஒவ்வொரு முறை POSCO -விற்கு எதிராக போராடும் போதும் அரசு லத்தியைக் கொண்டே பேசியது, என்ன சொல்வதென்று தெரிவதில்லை,என் உடலில் உள்ள காயங்களையும்,வீக்கத்தையுமே காண்பிக்க முடியும்’.

கோபிந்தபூரில் முகாமிட்டுள்ள காவல் துறையினரைத் திரும்ப பெறாவிடில் பெண்கள் நிர்வாணமாக போராடுவார்கள் என்று PPSS இயக்கம் அறிவித்தது .இது அந்த பகுதி செய்தித்தாள்களிலும் வெளி வந்தது. இயக்கத்தில் இருந்த ஆதரவாளர்கள் பலரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டம் கைவிடப்பட்டது என்றாலும் தன்னெழுச்சியாக முன்வந்து மூன்று பெண்கள் நிர்வாணமாக போராடினர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களையும், காவல் துறையையும் பின்வாங்க வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறியது.

அதே சமயம், இந்த மூன்று பெண்கள் மற்றும் PPSS இயக்கத் தலைவர் அபய் சாஹூ மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல் துறை.இந்த மாவட்டத்தில் வசிக்கும் மற்ற பெண்களின் மீது இதே பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெண்களை வணிகப் பொருளாக சித்திரிப்பதையும், ஐ.பி.எல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் உள்ள ஆபாசத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாத அரசு நிர்வாகம்,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய பெண்களின் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தன் கடமையை ஆற்றியது.

முதல்வருக்குக் கடிதம்

பெண்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து பாலியல் வன்கொடுமை மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்கள் அமைப்பு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்,

‘பன்னாட்டு நிறுவனத்திற்காக தன் சொந்த மாநில மக்களை நீங்கள் புறக்கணித்ததே பெண்களை இப்படிப்பட்ட முடிவை நோக்கித் தள்ளியது, ஆலை நிர்வாகத்தால் அமர்த்தப்பட்ட கூலிப் படைக்கு தங்கள் உறவினர்களையும்,நண்பர்களையும் பலியாக கொடுத்ததே அவர்களைத் தள்ளியது,ஆயுதம் தாங்கிய போலீசையே மாநில அரசு போராடும் மக்களின் முன்னால் நிறுத்தியது, அறவழியில் போராடிய மக்களை ஒடுக்கி அவர்களின் நிலங்களை பறித்தீர்கள்,சுற்றுச்சூழல் வாரிய அனுமதி பெறாத போதும் நீங்கள் ஆலை நிர்வாகத்தையே ஆதரித்தீர்கள்,ஒரு சிறிய மருத்துவ முதலுதுவி பெறாதவாறு எங்களை முடக்கியுள்ளீர்கள்’ என்று எழுதினர்.

மருத்துவ உதவி வேண்டிக் கூட வெளியில் செல்லமுடியாமல் முடக்கப்பட்டுள்ளனர் இந்த கிராம மக்கள். 2011 அக்டோபர் மாத மத்தியில் மருத்துவமனைக்கு சென்ற 45 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளி வந்தார்.சிறையில் இருந்த போது 4 காவலர்கள் அவரைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கான சுதந்திரம் இதுதானா?

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டம் கண்முன் வந்து நின்றது .குழந்தைகளுக்கான பால் கூட அங்குள்ள மக்களுக்கு கிடைக்காதவாறு எவ்வாறு அரசு மக்களை வதைக்கிறதோ, அதுபோலத்தான் ஓடிசாவில் மட்டுமின்றி மக்கள் எங்கு போராடினாலும் இந்த அரசும்,காவல் துறையும் தங்கள் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி அடக்கும் என்பதே நிதர்சனம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை பற்றி பேசும் போது தொடக்கத்திலேயே போராடவேண்டியது தானே என்று கேட்கும் நடுநிலைவாதிகள்(கூடங்குளத்திலும் தொடக்கத்திலிருந்தே போராடி வருகின்றார்கள் என்ற போதிலும்), ஒடிசாவில் தொடக்கத்திலேயே போராடும் மக்கள் மீது ஆலை நிர்வாகத்தாலும், அரசாலும் ஏவப்படும் வன்முறையை தடுக்காமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்.

தலித்துகளின் நிலை

அண்மைக்காலம் வரை POSCO எதிர்ப்பு இயக்கத்தில் இணையாது இருந்த தலித்துகள் தற்போது அரசின் அடக்குமுறையால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். வெற்றிலை தோட்டங்களில் வேலைப் பார்த்து வந்த நிலமற்ற தலித்துகளின் நிலை மிகவும் மோசமானது.

இதனால் நாளைக்கு ரூபாய் 300 முதல் 350 வரை தாங்கள் பெற்று வந்த வருவாயை இழந்துள்ளனர். நில உரிமையாளர்கள் பெறும் ஈட்டுத் தொகையில் தொழிலாளர்களுக்கு செல்ல வேண்டிய பங்கு இதுவரை செய்யப்பட்ட கையகபடுத்துதலில் அரசு நிர்வாகத்தாலோ, ஆலை நிர்வாகத்தாலோ கொடுக்கப்படவில்லை.இதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கான வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படவில்லை.

உண்மை அறியும் குழுவினரால் கவனிக்கப்பட்டவை

மார்ச் மாதம் நான்காம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு இந்த கிராமங்களில் நிலவி வந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்துள்ளது. 2012 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலங்களைப் பறிக்கும் பணியில் 105 வெற்றிலை தோட்டங்கள் கையகப்படுத்தபட்டதாக சொல்லப்பட்டாலும் அதில் சரி பாதி போலியாக அமைக்கப்பட்ட தோட்டங்கள். ஊடகங்கள் முன்னிலையில் மக்களாக முன்வந்து நிலங்களை தருவதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முன்தின இரவு அமைக்கப்பட்டவை அவை.

கிராம மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தை கொடுத்த பிறகும் நிவாரணம் கொடுக்கவில்லை என்று இருவர் புகார் அளித்துள்ளனர். எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாத நிலமற்ற தலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திடமும், அரசு நிர்வாகத்திடமும் குவிந்துள்ள அதிகாரம் தங்களுடைய சொந்த மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு உள்ளது.பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவான மாநில நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயக அமைப்புக்கு எதிரானவை.

தன் சொந்த மக்களின் நலனை விட பன்னாட்டு நிறுவங்களுக்கு செய்து கொடுத்த ஒப்பந்தங்களுக்கே மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தருகின்றன.வெளிநாட்டு நிறுவனத்தின் பணபலம் அதிகாரிகள் பலரையும் மேற்படி கிராமங்களில் உள்ள சில நபர்களையும் விலைக்கு வாங்கி தங்கள் தேவைகளை நடத்தப் பார்க்கிறது.தங்களுக்கு உரித்தான உரிமைகளுக்காக போராடும் மக்களை ஒடுக்கி, அவர்களின் அமைதியை குலைப்பது பணபலம் மட்டுமே. ஆனால் போராடும் மக்களுக்கு தேவையானது பணமல்ல, அவர்களின் நிலமும்,வாழ்வாதாரத்துடன் கூடிய உரிமைகள் மட்டுமே.

பணம் படைத்தவர்களுக்கான அரசு

நிலங்களை அரசிடம் கையகப்படுத்திய மக்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கியுள்ளது இந்த வளர்ச்சித் திட்டம். POSCO திட்டப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்களை அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அதிகாரியே மக்களை அடிக்கிறார், அதை வேடிக்கைப் பார்க்கிறது காவல்துறை, கூடிய விரைவில் நிலங்களை பிடுங்குமாறு சொல்லும் மத்திய,மாநில அரசுகள், வெடி குண்டு தயாரித்ததாக பொய் வழக்கு போடும் மாவட்ட எஸ்.பி..

இப்படித்தான் தோழர்களே,

தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அறவழியில் போராடும் மக்களை அடக்கி, ஒடுக்கி ஆயுதப் போராட்டங்களை நோக்கித் தள்ளும் வேலையை இந்த அரசுகளும், அரசு இயந்திரமும் செய்து வருகிறது.

வளர்ச்சி என்பதற்கான அர்த்தம் மனிதர்களைப் பொறுத்து மாறும் இன்றைய சூழலில், கிராமங்களில் இருக்கும் மக்களை அங்கிருந்து பிடுங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த வளர்ச்சி யாருக்கானது?, சொந்தமாக தொழில் செய்து வாழும் மக்களை வேலையற்றவர்களாக நிறுத்தும் இந்த வளர்ச்சியின் பலன்கள் யாருக்கானது?. இதற்காக தன் சொந்த மக்களை தன் நாட்டிற்குள்ளயே அகதியாக்கும் வேலையை இந்த அரசு யாருக்காக செய்கிறது?

“பொருளாதாரத்தில் ஆதிக்கம் உள்ளவர்கள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் அடக்க உருவாக்கிக் கொண்ட கருவிதான் அரசு “ – தோழர் ஏங்கெல்ஸ்

தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளால் வளமாக வேண்டிய மக்களின் வாழ்வாதாரத்தையே காவு கேட்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொழுத்த லாபம் ஈட்டும், அரசியல் தரகர்களின் செல்வ செழிப்பைக் கூட்டும் இந்த வளர்ச்சி மக்களுக்கானது இல்லை என்பதே நிதர்சனம்.

தோழர்.கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

தரவுகள்

1. http://sanhati.com/excerpted/6693/

2 . http://sanhati.com/articles/3634/

About கதிரவன்

2 comments

  1. அன்றும் இப்படிதான், வழி தவறி வந்தவனை வாஞ்சையோடு அழைத்து வரவேற்றோம், பின் அவன் கடை போட்டான் , நம் வளங்கள் மீது நமக்கே வரி போட்டான். அப்போதாவது நாம் விழித்து கொள்ளவும், போராடவும் நமக்கென தன்னலமற்றவர்கள் இருந்தனர். ஆனால் இன்று எவனை வெளியேறு என்று முழக்கமிட்டோமோ அவனையே நம்மின் சார்பாக (நமது விருப்பம் இல்லாமல் ) அவன் கொடுக்கும் பிச்சை கமிஷனுக்கு ஆசைப்பட்டு மக்கள் தலைவர்கள் என்று சொல்லிகொள்ளும்

  2. சுதந்திரமெல்லாம் அதிகாரவர்கதினருக்கும், பணம்படைதவர்களுக்கும்தான். அன்றாட உழைக்கும் மக்களுக்கு கிடையாது. இந்தநிலை மாறவேண்டும் இல்லை நாம்தான் மாற்றவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*