Home / அரசியல் / தாராளமயமும், தனியார்மயமும்- மக்களைச் சுரண்டவே!!!

தாராளமயமும், தனியார்மயமும்- மக்களைச் சுரண்டவே!!!

* எண்ணெய் இறக்குமதியை குறைக்கக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்- பெட்ரோலியத்துறை அமைச்சர்.

* விதிகளைப் பின்பற்ற மறுத்து மக்களைத் தண்ணீரில்லாமல் தவிக்கவிட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள்.

* ஆங்கில வழிக்கல்வியை கட்டாயமாக்கி, மக்களை தனியார் பள்ளிகள் நோக்கித் தள்ளும் தமிழக அரசின் ஆணை.

* இயற்கை எரிவாயு விலையை இரண்டு மடங்காக்கி, அம்பானிக்கு ஆதரவான முடிவை எடுத்தது மத்திய அரசு.

இவையெல்லாம் நாம் எப்போதும் போல கடந்து சென்ற அண்மைச் செய்திகள்.

குடிநீர், எரிவாயு,பெட்ரோல் என பல்வேறு துறைகளிலும் தனியாருக்கு ஆதரவாகவும், இன்னும் ஒரு படி மேலே சென்று அரசாங்கத்தையே மிரட்டும்,மிரட்டிக் கொண்டிருக்கும் உண்மைகள்.

என்னுடைய சிறுவயதில் அரசாங்கத் துறைகளில் யாரும் சரியாக வேலை பார்ப்பதே இல்லை, தனியாரிடம் இப்படி எல்லாம் வேலை பார்க்காமல் ஏமாற்ற முடியாது.அத்தோடு தனியாரின் சேவை என்றுமே தரத்தோடு இருக்கும் என்று என்னைவிட பெரியவர்கள் பேசி கேட்டிருக்கிறேன்.

ஆனால், 1991ல் இந்திய நடுவண் அரசு தாராளமயக் கொள்கையை புகுத்தி, இருபதாண்டுகள் ஆகியும் மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத் தேவைகள் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. தாராளமயக் கொள்கையை புகுத்தும் போது, பல்வேறு துறைகள் சுற்றி இருக்கும் சந்தையை தனியாருக்கு திறந்துவிடும் போது உருவாகும் கடும் போட்டியால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைந்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்ப வைக்கப்பட்டோம்.

ஏறும் விலைவாசியும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள செய்திகளும் இந்த கொள்கை யாருக்கானது என்பதைச் சொல்லும்.

இந்த தாராளமயக் கொள்கையாலும், தனியார் லாப வெறியாலும் சீரழிக்கப்பட்ட மக்களின் உரிமைகளில் ஒன்றான ஒரு பொதுத்துறையின் நிலைமையை கொண்டு விளக்க முயற்சித்துள்ளேன்.

இந்தத்துறை பற்றியும்,இதன் தேவைப் பற்றியும் 18 மணி நேர மின்வெட்டில் தவித்து, இப்போது மின்வெட்டை சட்டையே செய்யாமல் வாழப் பழகிவிட்ட நம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே இனி மின்சாரம் என்பதற்கான முதல் மணி தமிழ்நாட்டில் அடிக்கப்பட்டுவிட்டது.

2008 அக்டோபர் மாதத்தில் இருந்து வீடுகளில் எந்த அத்தியாவசியத் தேவைக்கும், மாணவர்கள் படிக்கவும், சிறுதொழில்கள் நடைபெறவும், மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாமல் நம் மக்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை.அதுவும் மின்வெட்டு காலநேரம் அறிவிக்கப்படாத ஒன்று, எப்போது மின்சாரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.இப்படியொரு சூழல் ஒரே நாளில் வந்திருக்காது என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலைக்கான தொடக்கப் புள்ளி 1991ஆம் ஆண்டில் இந்திய அரசால் எட்டவது ஐந்தாவது திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட புதிய தாராளமயக் கொள்கையினால் இடப்பட்டது.

மின்தேவை அதிகரிப்பு:

புதிய சந்தைப் பொருளாதாரமானது நவீன மின்னணு உபயோகப் பொருட்களை கொண்டு வந்து இந்திய மக்களிடம் கடை விரித்தது.இதனால் வளர்ந்த நுகர்வு கலாச்சாரமும், சந்தை விற்பனையும் மின்சாரத்தின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதிகரித்துவிட்டது. 2000 ல் அரசால் வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளும், நடுத்தர குடும்பங்களினால் தேவை என்று கருதப்பட்ட குளிர்சாதன பெட்டிகளும், சந்தை திறப்பால் புதிதாக வந்த வாகன உற்பத்தித் தொழில்களும்,தகவல் தொழில்நுட்பத் துறையும் மின்சாரத்துக்கான தேவையை பலமடங்கு உயர்த்திவிட்டது.

கடந்த கால மின்வெட்டு பிரச்சனைகள்:

1969-71 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற கொள்கையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் முதல்முறையாக மின்தட்டுப்பாடு ஏற்பட்டு மின்வெட்டு அமலுக்கு வந்தது. அப்போது நம்முடைய மொத்த மின் உற்பத்தி வெறும் 1965 மெகாவாட் மட்டுமே.மத்திய மின்தொகுப்பான நெய்வேலி மின்நிலையத்தில் இருந்து பெறப்பட்ட 600 மெகாவாட் மின்சாரமும் இதில் அடக்கம்.

அதன்பிறகு 1980-82 ஆண்டுகளில் கடுமையான மின்வெட்டு புழக்கத்திற்கு வந்தது.1982 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த மின்வெட்டு 100 விழுக்காடு எட்டி மூன்று நாட்கள் மாநிலமே இருளில் தவித்துள்ளது.

இந்த காலத்தில் எப்போது மின்சாரம் வரும் என்றே தெரியாத நிலை இருந்தது ஆனால் வரையறுக்கப்பட்ட காலஅளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்படியாக இருந்த மின்வெட்டின் நிலைமை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்த சிரத்தையான முயற்சிகளால் படிப்படியாக குறைக்கப்பட்டு நாளுக்கு சில மணி நேரங்கள் என்ற நிலை 1998 ஆம் ஆண்டு கோடை மாதங்களான மூன்று மாதம் மட்டுமே அமலில் இருந்தது.

இந்த நிலைமை மீண்டும் 2008ல் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பது தெரியாமல், கொடுக்கப்படும் கால அளவும் தெரிவிக்கப்படாமல் 18 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.கடந்த ஒரு மாதமாக மட்டும் காற்று காலம் நம்மைக் காப்பாற்றத் தொடங்கியிருக்கிறதே ஒழிய நாம் இன்னும் மின்தட்டுப்பாட்டிற்கு தீர்வை நோக்கி நகர தொடங்கவில்லை.

1991-ல் ஏற்பட்ட பொருளாதார கொள்கைகள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு மின்வாரியத்தை சுரண்டி தற்போது வாரியத்தின் கடன் தொகை ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் உள்ள நிலைக்கு தள்ளியது.1990க்கு முன் மின்வாரியத்தால் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையங்கள் மூலம் 2000ஆம் ஆண்டு வரையிலான காலம் மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.அதற்குப் பிறகுதான் தனியாரிடமும், திறந்த வெளிச் சந்தையிலும் மின்சாரத்தை வாங்கத் தொடங்கினர்.

தாராளமயக் கொள்கைகளினால் ஏற்பட்ட மாற்றங்கள்:

1. 1992-97 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் அதுவரை புதிய மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் மூலதன ஒதுக்கீடு நடுவண் அரசால் ரத்து செய்யப்பட்டது.

2. பொதுத்துறை நிறுவனங்களான மாநில மின் வாரியங்கள்,தேசிய அனல் மின்உற்பத்திக் கழகம் (என்.டி.பி.சி) போன்றவை புதிய மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்க அனுமதி மறுத்தது நடுவண் அரசு.

3. அனைத்து மின் உற்பத்தி திட்டங்களும் தனியாருக்கே வழங்கப்பட வேண்டும்.

4. 1948 மின் வழங்கல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யும் விலை நிர்ணயிப்பிற்க்கான வரையறையை கொண்டு வந்து, அதை தனியார் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான்கு முறை மாற்றியமைத்தது.

இந்த கொள்முதல் கட்டணம்தான் மின்வாரியங்களைச் சுரண்டி, பொது மக்கள் வரிப்பணத்தை லாபம் மூலம் கொள்ளையடிக்கும் முக்கிய முடிவாக அமைந்தது.

இம்முடிவின்படி, மின்சார உற்பத்தி விலையுடன் மூலதனக் கட்டணம் என்று ஒரு தொகை சேர்க்கப்பட்டு அதுவே ஆண்டின் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டது.மொத்த மூலதனத்தில் 24 விழுக்காடு ஒவ்வொரு ஆண்டும் மூலதனக் கட்டணமாக கொள்முதல் விலையில் சேர்க்கப்படும்.

அதாவது, மின்வாரியமானது ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கான மொத்த மூலதனத்தையும் நான்கு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

தனியார் மின் உற்பத்தித் திட்டங்கள்:

புதிய பொருளாதார மாற்றங்களால் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தனியார் முதலீட்டை நோக்கி நகர்ந்தது தமிழக அரசு. தொடக்கத்தில் மொத்தம் 42 ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டன, ஆனால் தனியாரின் லாப நோக்கத்திற்காக மின் கொள்முதல் விலை நிர்ணய சட்டம் பல்வேறு முறை திருத்தப்பட்டதால் 1996 ஆம் ஆண்டு வரை எந்த தனியாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை.1996ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்களிலும் தனியாருக்கு ஆதரவான கொள்கைகளே கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் ஒன்றான வீடியோகான் 2000ஆம் ஆண்டு வரை எந்த முதலீட்டையும் செய்து பணிகளைத் தொடங்கவில்லை.அதனால் மின்வாரியம் அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் உற்பத்தி தொடங்கப்படாத நிலையத்திற்கு இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கில் வெற்றியும் பெற்றது !!! இவ்வழக்கின் மூலம் பணிகள் தொடங்கப்படாத போதும் மின்வாரியம் 150 கோடி இழப்பீடு தரவேண்டி வந்தது. இந்த வழக்கில் வீடியோகான் நிறுவனத்திற்காக வாதாடியவர் வேறு யாரும் அல்ல, தற்போது நிதி அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் ஆவார்.

இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்திற்கு தேவைப்படும் உபரி நிலக்கரி பிற மாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் தொடர்வண்டியின் மூலம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்குக் கொண்டு சேர்க்கப்படும்.நிலக்கரியை கொண்டு வரத்தேவைப்படும் போக்குவரத்து செலவு எரிபொருளுக்கான செலவை இருமடங்காக உயர்த்திவிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் ஒரே நிலக்கரிச் சுரங்கமான நெய்வேலியின் புதிய மின் உற்பத்தி நிலையத்தை தனியாருக்கு தாரை வார்த்தது நடுவண் அரசு.

இந்த ஒப்பந்தத்தை பெற்ற எஸ்.டி.சி.எம்.எஸ் நிறுவனம் இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு 1408கோடி என்று கூறியது. ஆனால், இதன் மதிப்பு 600 கோடியை தாண்டாது என்றமின்வாரியம்சொன்னது,இப்படியொரு சூழ்நிலையில் மத்திய அரசு 1408 கோடி என்ற முதலீட்டு மதிப்பிற்கே அனுமதி வழங்கியது.இதற்கான வழக்கு எஸ்.டி.சி.எம்.எஸ் நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது.இந்த வழக்கில் எஸ்.டி.சி.எம்.எஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்காடியவர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி ஆவார்.

இந்த இரண்டு தேசிய கட்சிகளும் யாருக்காக செயல்படுகின்றன என்பதை இந்த இருவேறு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தனியாரின் கொள்(ளை)முதல் விலையும், மின்வாரியத்தின் கடனும் :

நாம் ஏற்கனவே பார்த்தது போன்று தனியாருக்கு லாபம் கொழிக்கக் கூடிய வகையில் மின்சார வழங்கல் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தனியாரின் மின் உற்பத்தி நிலையங்களுக்கான முதலீட்டுச் செலவை நான்கு ஆண்டுகளிலேயே திருப்பிச் செலுத்துமாறு வரையறை செய்யப்பட்டதோடு அல்லாமல், 70% க்கும் மேலான தொகை வங்கிகளில் கடனாக வழங்கப்பட்டது.ஆக, தனியார் நிறுவங்களின் மொத்த முதலீடு 30% ஆகவே இருந்துள்ளது.

தமிழக மின்சார வாரியம் மொத்த முதலீட்டிற்கான பணத்தைச் செலுத்திய பின்பாவது வாரியமே உற்பத்தி நிலையத்தை எடுத்துக் கொள்ளும்படி சட்டத் திருத்தம் செய்திருக்க வேண்டும்.

முதலீடு பணத்தையும் செலுத்திவிட்டு, மின்சாரத்தையும் விலைக் கொடுத்து கொள்முதல் செய்வது, தன் சொந்தக் கடையிலயே காசு கொடுத்து பொருள் வாங்கும்போது காசு முழுவதும் பழைய முதலாளிக்கு செல்வதாக உள்ளது எவ்வளவு பெரிய கொள்ளை.

2000ல் உற்பத்தியைத் தொடங்கிய ஐந்து நிறுவனங்களுக்கும் சேர்த்து மின்சார வாரியத்தால் செலுத்தப்பட்ட நிலைத்தொகை ஆண்டு ஒன்றுக்கு 1006 கோடி.

2006 ஆம் ஆண்டு பி.பி.என் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்த கோடி யூனிட்டிற்கு செலுத்தப்பட்ட நிலைக் கட்டணம் மட்டும் 330.04 கோடியாகும்.இதுபோக மின் கொள்முதலுக்காக 103.78 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த மின் அளவானது இந்நிறுவனத்தின் 35 நாள் உற்பத்தி மட்டுமே, அதாவது வருடம் 365 நாட்களில், 330 நாட்கள் உற்பத்தியே நடைபெறாத கணக்கில் இயங்கிய போதிலும், நாள் ஒன்றுக்கு நிலைக் கட்டணமாக ஒரு கோடியை அந்த நிறுவனம் பெற்றது.

இதுதவிர அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஈடுசெய்யும் வகையில் சந்தையில் கொள்முதல் செய்யும் சந்தையின் விலை என்பது ஒப்பீடே செய்யமுடியாத அளவுக்கு அதிகம்.உதாரணத்துக்கு, 2008-2009 ஆண்டுகளில் சந்தையில் கொள்முதல் செய்த மின்சாரத்தின் விலை யூனிட்டிற்கு ரூபாய் 52.38 ஆகும்.

இப்படி ஒப்பந்த தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபமீட்டும் கொள்முதல் விலையாலும், மின்தேவை அதிகரிக்கும் போது எல்லாம் திறந்தவெளிச் சந்தையில் விலைகொடுத்து வாங்கப்பட்ட மின்சாரமும் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன்தொகையை ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளது.

மின்கட்டண உயர்வும் ஒழுங்குமுறை ஆணையமும்:

மக்கள் என்னதான் மின்வெட்டால் அவதிப்பட்டாலும், நாம் செலுத்தும் மின்கட்டணம் வருடாவருடம் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு வரை மின் கொள்முதல்,மின் கட்டணம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசிடம்தான் இருந்தது. 2002லிருந்து மின்கட்டணம், மின் கொள்முதல் போன்றவற்றை நிர்ணயிக்கும் உரிமை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற தனிப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாநில சுயாட்சிப் பற்றி வெற்றுக் கூச்சலிடும் ஆளும் கட்சிகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காதது அவ‌ர்க‌ளின் உண்மை முக‌த்தை காட்டுகின்ற‌து.

மக்களுக்கான மின்கட்டணத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசானது மின்சாரக் கொள்முதலுக்கான கூடுதல் விலையை விவசாயிகள் மீதும், சாமானிய மக்கள் மீதும் இறக்கக்கூடாது என்பதற்காக தொழில் மற்றும் வணிக நிறுவனங்களிடம் மட்டுமே கட்டண உயர்வை விதிக்க வேண்டும் என்று நடைமுறைப்படுத்தி இருந்தது.ஆனால், மின்கட்டண உயர்வு அனைத்தும் பொருளாதார வலிமை படைத்தவர்கள் மீதே சுமத்தப்படுவது கூடாது என்று கூறி மின் கட்டண நிர்ணய உரிமையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கியது.

ஒழுங்குமுறை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டிலேயே மின்வாரியத்தால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யும் அளவு உயர்த்தப்பட்டது.

2010ல் ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்திய போது, தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய மின்வாரியத்தால் குறிக்கப்பட்ட விலையான யூனிட்டிற்கு மூன்று ரூபாய் ஐம்பது காசு என்பதற்கு பதிலாக 3.65 ரூபாய் என்று நிர்ணயித்தது.இதனை ஒரு யூனிட் என்று பார்த்தால் வெறும் 15 காசு மட்டும்தான், ஆனால் அப்போதைய மின்சாரக் கொள்முதல் அளவான 4439.4 கோடி யூனிட்டிற்கு கணக்கிட்டால் 665.9 கோடி ரூபாய் ஆகும்.இது வெறும் மின்கொள்முதல் விலை மட்டுமே ஆனால் அது மக்களை வந்தடையும்போது கம்பி இழப்பு மற்றும் நிர்வாகச் செலவினால் ஒன்றரை மடங்கு உயர்ந்து 1065.5 கோடியாக மக்கள் தலையில் விழுகிறது.

2010ஆம் ஆண்டு மின்கட்டண உயர்வை அறிவித்த போது தமிழக அரசின் அறிவிப்பை மீறி தகவல் தொழில்நுட்பத் துறையை உயர்கட்டண‌ப் பிரிவான வணிகப் பிரிவிலிருந்து குறைந்த கட்டணம் உடைய தொழில் பிரிவுக்கு அவர்கள் கேட்காமலேயே மாற்றியது. ஆனால் விவசாயிக‌ளுக்கும், சிறு குறு வ‌ணிக‌ர்க‌ளுக்கும் மின்க‌ட்ட‌ண‌த்தை குறைக்க‌ வேண்டும் என்ற‌ நீண்ட‌ நாள் கோரிக்கை க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட‌வேயில்லை.

இவ்வாறு மாநில தலையீடே கூடாது என்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒரு நிழல் அரசு போன்றே செயல்பட்டன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் செயலராக பணிசெய்த பல இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பின்னாட்களில் இதே தனியார் மின் நிறுவனங்களில் இயக்குனராக செயல்பட்டனர். இதில் இருந்தே ஒழுங்குமுறை ஆணையத்தின் நேர்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

2012 ஆம் ஆண்டு இந்திய மாநில மின்வாரியங்களின் இழப்பு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடியை எட்டும் என்றும்,அதனால் தனியாருக்கு வரவேண்டிய ஒப்பந்ததொகைகள் வராமல் போகும் வாய்ப்புள்ளதால் இந்த இழப்புத் தொகையினை மின்பயனீட்டாளர்கள் மீது சுமத்த ஆவண செய்யுமாறு வழங்கிய ஆலோசனையை யாரிடமும் விவாதிக்காமல் ஒழுங்குமுறை ஆணையங்கள் நிறைவேற்றின.இழப்பைச் சந்தித்து வரும் மின்வாரிய அதிகாரிகளிடம் கூட இதை விவாதிக்கவில்லை.

மின்கொள்முதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் முன்னுக்குப்பின் நிலைப்பாடுகளை எடுத்து, தனியாருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தனியார் நிறுவங்களின் கைக்கூலியாகவே செயல்பட்டது ஒழுங்குமுறை ஆணையம்.

தீர்வு காணப் பயணிக்க வேண்டிய பாதை:

தனியார் நிறுவனங்களின் சுரண்டலாலும், அரசின் மக்கள் விரோதப் போக்காலும் 18 மணிநேர மின்வெட்டை தீர்க்கவும், மின்கட்டண உயர்வை தடுக்கவும் அரசும், மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணமிது.

1. ஒப்பந்தத் தனியார் நிறுவனங்கள், வணிக மின் உற்பத்தியாளர்கள், சுய தேவைக்கான உற்பத்தியாளர்கள் என்று அனைத்துவகை தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும், சுரண்டலும் களையப்பட வேண்டும். குறிப்பாக,வணிக மின் உற்பத்தியாளர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை அதனால், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், வளங்களை பயன்படுத்துவதில் அளிக்கப்படும் முன்னுரிமையும் விளக்கப்பட வேண்டும் .

2. மின்சார‌ ஒழுங்குமுறை ஆணைய‌ம் போன்ற‌ த‌னியார் முத‌லாளிக‌ளின் த‌ர‌கு அமைப்புக‌ள் நீக்க‌ப்ப‌ட்டு மீண்டும் முழுமையான மின்சார நிர்வாகம் அந்த‌ந்த‌ மாநில‌ மின்வாரிய‌ங்க‌ளிட‌மே கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3. புதிய மின் திட்டங்களுக்கு நடுவண் அரசால் ரத்து செய்யப்பட்ட நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

4. காற்றாலை, சூரிய‌ ஒளி போன்ற‌ ம‌ர‌பு சாரா மின்னுற்ப‌த்தியில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

5. கம்பி மற்றும் நிர்வாக இழப்பை கட்டுபடுத்தும் பொருட்டு சுயசார்புள்ள மின்வட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

6. சூரிய‌ ஒளி போன்ற‌ ம‌ர‌பு சாரா மின்ன்னுற்ப‌த்தி பெரிய அளவில் செயல்பாட்டுக்கு வர நீண்டகாலம் பிடிக்கும் என்ற நிலையில் தெருவிளக்குகளுக்கு அதற்கு தேவையான மின்சாரத்தைப் பெரும் பொருட்டு சூரிய பதாகைகளை இணைக்கலாம்.

7. ஆந்திர மாநில சிம்மாத்ரி அனல் மின் நிலையத்தின் உற்பத்தி முழுவதும் அந்த மாநிலத்திற்கே வழங்கப்படுவது போன்று, நெய்வேலி போன்ற‌ ம‌த்திய‌ நிறுவ‌ன‌ மின்சார‌ம் முழுவ‌தும் த‌மிழ‌க‌த்திற்கே கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இதன் மூலம் கம்பி இழப்பு குறைக்கப்படும்.

இப்படி, அரசு தன் கொள்கைரீதியாக மேற்கொள்ள பல நடவடிக்கைகள் இருப்பது போல, மக்களாகிய நாமும் சிலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.

1. மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிக்கனம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

2. அரசு தரும் சூரிய பதாகைக்கான மானியத்தை வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. குறைந்த அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் ஒளிவிளக்குகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இவை எல்லவற்றையும்விட, அரசு மக்களுக்கு எதிரான கொள்கைகளைப் புகுத்தும் போது எல்லாம் பெரும் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மக்களைச் சுரண்டவே!!!

தனியார் பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே கொள்கையாக கொண்ட மத்திய அரசும், அதை எதிர்க்கும் துணிவற்ற மாநில அரசுகளும் சேர்ந்து தனியாரின் கொள்ளைக்கு துணைப்போவது மட்டும் அல்லாமல்,மின்சாரம் தயாரிக்க தேவையான இயற்கை வளத்தையும் சுரண்ட அனுமதித்து வருகின்றன. ஆனால் இப்போதும் தமிழக அரசு யூனிட்டிற்கு ரூபாய் 4.91 கொள்முதல் விலைகொண்ட மின் ஒப்பந்தங்களை செய்துகொண்டுதான் இருக்கிறது.

அதாவது “வெல்லம் தின்பவன் ஒருவன் விரல் சூப்புவது இன்னொருவன் என்பது போல” மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு அனைத்தும் மக்களின் தலையிலேயே மின்கட்டண உயர்வாக வந்து விடிவது மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கு மானியமாக மக்கள் வரிப்பணமே செலவு செய்யப்படுகின்றது.

இப்படி மின் வாரியங்களின் உற்பத்தித் திட்டங்களை தடுத்து,அவற்றை பொருளாதார ரீதியாக இழப்பீட்டிற்குள்ளாக்கி, மக்கள் இருளில் தவிப்பது பற்றி துளியும் கவலைப்படாமல் தனியாருக்கு சாமரம் வீசுகிறது நடுவண் அரசும், மாநில அரசும்.

தமிழகத்தில் மின்வெட்டினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளவை ஒரு சிறுத் துளியே, ஆனால் நாடு முழுக்க இவ்வாறு தனியார் பெருமுதலாளிகளால் சுரண்டப்படும் துறைகள் ஏராளம்.

எப்போதும் ஊழல் என்றாலே அரசியல்வாதிகள்தான் நம் கண்முன் தோன்றுவர், ஆனால் அலைக்கற்றை ஊழல் முதல் நிலக்கரி சுரங்க ஊழல் வரை பயனடைந்து எப்போதும் முறைகேடுகளின் ஊற்றுக் கண்ணாக இருப்பது தனியார் பெருமுதலாளிகளே!!!

தனியார் முதலாளிகளின் லாபத்திற்கு உழைப்பதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா,தி.மு.க.,அ.தி.மு.க என்று எந்த கட்சியும் சளைத்தவை அல்ல.அதனால் நாம் போகவேண்டிய பாதை ஆட்சி மாற்றத்தை நோக்கி அல்ல;மக்கள் அதிகாரத்தில் பங்கேற்கும் உண்மை ஜனநாயகத்தை நோக்கியே!!!

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்:

1. தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும் – சா.காந்தி.

நன்றி. கார்ட்டூனிஸ்ட்.பாலா

About கதிரவன்

One comment

  1. மிகத்தெளிவான கட்டுரை தோழர்.கதிரவன். <br /><br />இந்த மாத இந்தியா டுடே மாத இதழில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற திரு.அமர்த்தியா சென்னும், அவரது மாணவரான ஜீன் ட்ரெசும் இணைந்து எழுதியுள்ள புதிய நூலான &quot; The Uncertain Glory&quot; பற்றிய நூலாய்வும், அந்த நூலிலிருந்து சில குறிப்பான பகுதிகளையும் கொடுத்திருந்தார்கள். வல்லரசு கனவில் மிதக்கும் இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை, புத்தகமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*