Home / சமூகம் / திரைப்பட இயக்குனர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல்

திரைப்பட இயக்குனர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல்

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையுள்ள கதையைப் படைத்து முற்போக்கு சிந்தனையை சமூகத்தில் வளரத்தெடுக்க முற்படுபவரும், சாதி மதத்தை விட உயர்வானது மனிதனின் உன்னத உணர்வு காதல் என்று காதலின் மேன்மையை தன் ஒவ்வொரு படைப்பிலும் வடித்து இயக்கி நடித்து தமிழ்ச் சமூகத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள இயக்குநர், நடிகர் சேரனுக்கு கனத்த மனதுடன் எழுதும் மடல் இது…

அன்பு இயக்குநர் சேரன் அவர்களே,

நீங்கள் உங்கள் இளைய மகள் தாமினி மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் தமிழ்நாட்டில் இன்று பல பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை… அவ்வளவு பாசத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டீர்கள்… உங்கள் குடும்பப் பிரச்சனை, தாமினி-சந்துரு காதல் விவகாரம் இப்படி ஒரு ஊடக முதன்மை செய்தியாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் உங்களுடைய முதல் படத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், ஆதிக்க சாதி இளம்பெண்ணிற்குமான காதலையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் கதைக்களம் ஆக்கினீர்கள்… “காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்” என்று பாடிய பெருங்கவிஞரின் கவிக்காதலியை இணைத்து அந்த படத்திற்கு “பாரதி கண்ணம்மா” என்று சூட்டி படைத்தீர்கள்… நாங்கள் காதலின் பின்னால் உள்ள சமூகப் பிரச்சனையைப் புரிந்துகொண்டோம்… கண்டிப்பாக நீங்கள் சாதியினால் காதலை எதிப்பவர் அல்ல…

அதன்பின் “பொற்காலம்” படத்தில் கிராமத்தில் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் அந்த இரு குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் வரும் என்பதை எங்களுக்கு உணர்த்தியதோடு இறுதியில் பிரச்சனையைத் தீர்க்க முடியாத அந்தக் கதாநாயகன் சமூகத்தின் மீது கொண்ட கோபத்தில், சமூகத்திற்கு பாடம் கற்பிக்க தன் காதலைத் துறந்து, ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணை மணமுடித்ததாகத் திரைக்கதை அமைத்துக் காதலைப் புனிதமாக்கினீர்கள். கண்ணீரோடு காதலையும், சமூகத்தையும் புரிந்து கொண்டு வெளியில் வந்தோம்… அவனுடைய தொழில் அவன் காதலுக்கு எதிரியாக நிற்கவில்லை, எனவே நீங்கள் தொழிலால் காதலுக்கு எதிரியில்லை…

“வெற்றிக்கொடிக்கட்டு”, “பாண்டவர் பூமி” படங்களில் கிராமம் சார்ந்த நமதுத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளான விவசாயத்தை விட்டு நகரம் நோக்கி குடும்பம் குடும்பமாக மக்கள் நகர்வதையும், கிராமத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததால் வெளிநாடு செல்ல வேண்டும் என்று துடித்து ஏமாறும் சம்பவங்களையும் வைத்து படமாக எடுத்தீர்கள்… ஆனால் இவ்விரு படங்களிலுமே, சாதியை இன்னமும் வாழவைக்கும்-சுயசாதிக்குள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் அகமணமுறையை எதிர்த்து காதல் திருமணம் செய்துவைக்க நீங்கள் தவறவில்லை… சில பிற்போக்குவாதிகள் போல, கிராம-நகர பொருளியல் வாழ்க்கை மாற்றம் சமூக-பண்பாட்டு ஒழுங்கை சீர்குலைக்கிறது என்றும், காதல் ஏதோ மேலைநாட்டு இறக்குமதி போலவும் காதல் திருமணங்கள் சமூகத்திற்கு இழுக்கு என்றும் ஒருபோதும் நீங்கள் சொல்லவில்லை…

உங்களை மிக உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் “ஆட்டோகிராப்ஃ”, ஏன் என்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியத்தேவையில்லை… சிறுவயதில் துய்க்கும் அறியா காதல், பதின்ம வயதில் வரும் இளமைக் காதல், பின்னர் வரும் நட்பு கலந்த காதல்… கிட்டத்தட்ட இதில் வரும் ஒரு காட்சியேனும் கடந்து வராதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சாதி மதம், மொழி, இனத்தையும் கடந்து வந்த காதலும், காதல் தோல்வியுற்றதும் கதாநாயகன் செந்தில் படும் வேதனைகளும், அவன் செல்லும் தவறான வழிகளும் எங்கள் மனதையெல்லாம் கனமடையச் செய்துவிட்டது… கதாநாயகன் செந்தில் இறுதியில் வேறொரு பெண்ணை மணந்தது யதார்த்தம் என்று எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை, சமூகத்தில்-பெற்றோரிடத்தில் இருக்கும் காதலுக்கெதிரான இறுக்கமான மனநிலையே இதன் காரணம் என்று புரிந்தது…

அது புரிந்துதானோ என்னவோ, உங்களின் அடுத்த படைப்பான “தவமாய் தவமிருந்து” படத்தில் பதின்ம வயதில் வந்த காதலை அத்தோடு முடித்துக்கொள்ளாமல் அதற்கு அடுத்த பருவத்தில் கதாநாயகனோடு அவரின் கல்லூரிக் காதலியோடு அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சேர்த்துவைத்தீர்கள்… அந்த கதாநாயகன் பதின்ம வயதில் கல்லூரியில் படிக்கும் போது புகைப்பிடிப்பான், மது அருந்துவான், காதலியோடு கலவி கூட செய்வான். அதனால் அவனைத் தவறானவன், காமுகன் என்று சொன்னீர்களா? இணை ஏற்பு நடந்தபின் இருவரும் வெறும் காதலர்களாக இல்லாமல் குடும்பத் தலைவியாக, தலைவனாக மாறும்போது எப்படி பொறுப்போடு வாழ்ந்தார்கள், உழைத்து முன்னேறினார்கள், பெற்றோர்களை-சமூகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தார்கள் என்பதில் தானே உள்ளது அந்த காதலின் வெற்றி இருந்தது, அதைத்தானே உங்கள் படைப்பு சொல்லிற்று… அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையைத் துவக்க பொருளாதாரமோ, வேலையோ, சமூகத்தின் பார்வையில் உள்ள கெட்டப்பழக்கவழக்கங்களோ தடையாக இல்லையே?

உங்கள் படைப்பிற்கு ஒரு நியாயம், உங்கள் சுய வாழ்க்கைக்கு ஒரு நியாயமா? உங்கள் திரைப்படைப்பில் அந்தக் காதலியின் பெற்றோர் அவளைத் துரத்திச் சென்று வாழ விடாமல், காதலை நிரூபிக்கவிடாமல் தடுக்கவில்லை, ஆனால் காதலிக்கும் உங்கள் மகள் தாமினிக்கு ஒரு பெற்றோராய் நீங்கள் செய்து வருவது என்ன?

உங்கள் மகளின் காதலனான சந்துருவின் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன? பல பெண்களோடு தொடர்புடையவன் (womanizer), (இரு ஆண்டுகள் நேரம் கொடுத்தும்) நிலையான(?) வேலை எதுவும் தேடாமல் பொருளாதாரத்தில் தற்சார்பு நிலை பெறாதவன்… மொத்தத்தில் பணம் பறிக்கும் நோக்கோடு காதல் புரிபவன்…

பெருமதிப்பிற்குரிய திரு.சேரன் அவர்களே, உங்கள் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் போது, உங்கள் நண்பர், இயக்குநர் அமீர் சொல்வதுபோல நிரூபிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் இருக்கும்போது இந்த விடயம் ஊடகத்திற்கு வருமுன்னே தண்டனைச் சட்டத்தில் அவரை காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ இழுத்து அவருக்கு தண்டனையை வாங்கிக்கொடுக்க முயற்சிக்கவே இல்லையா? நியாயமும் பணமும் அதிகாரமும் இருக்கிற உங்களுக்கு ஏன் தண்டனையை வாங்கிக்கொடுக்க முடியவில்லை? ஊடகத்தில் அவரின், சாதாரண எளிய பின்புலம் கொண்ட சந்துருவின் குடும்பத்தினரின் பெயரைக் களங்கம் ஏற்படுத்தும்படி பேசக் காரணம் என்ன? நீங்கள் பேசுவதை மக்கள் நம்பி உங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதாலா? நீங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் சந்துருவோடுதான் வாழ விரும்புகிறேன் என்று சொல்லும் தாமினியின் மனதைக் கலைப்பதற்காகவா?

குற்றச்சாட்டு இருந்தால் காவல்நிலையத்தில், நீதிமன்றத்தில் முதலில் முறையிடாமல் ஊடகத்தின் முன்பு சந்துருவையும் அவரது குடும்பத்தாரையும் பற்றி ஏதோ தமிழ்நாட்டின் பெரிய தீயசக்தி(இயக்குநர் அமீர் ஒருபடி மேலே சென்று அரசின் உளவுத்துறை அவரைப்பற்றி விசாரிக்க ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்… நீங்கள் எழுதிய இந்தத் திரைக்கதையில் நகைச்சுவை பகுதி அதுதான், ஒருவேளை அவர்மேல் குற்றம் நிரூபிக்க உங்களால் முடியவில்லை என்றால் இதே ஊடகங்களைக் கூட்டி மன்னிப்புக் கேட்பீர்களா?) போல பட்டியலிடுவது சந்துரு உங்களைப் போன்று பெரிய இடம் இல்லை அதனால் குடும்பத்தோடு பயந்து ஓடிவிடுவார், தன் பலத்தை மீறி இருவரும் வாழ முடியாது என்று காட்டவா?

உங்களைக் குற்றவாளி என்று சொல்லவில்லை… உங்கள் அன்பு மகள் தாமினிக்கு அவளின் வாழ்க்கை நலமுடன் இருக்க நீங்கள் அறிவுரைகள் கூற முழு உரிமையும் உண்டு… ஆனால் முடிவாக சந்துருவுடன் தான் வாழப் போகிறேன் என்றால் அது தனிமனிதனாக அவரின் சுய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அதில் தலையிட அப்பாவே ஆனாலும் நீங்கள் தலையிடுவது சரியன்று… நீங்கள் சொல்வது போல இது திரைப்படம் அல்ல, நீங்கள் வில்லனாக மாறி அவர்களைப் பிரித்துவைக்க… ஒருவேளை அவரின் தேர்வு நீங்கள் சொல்வது போலவே தவறாகவே இருந்தாலும், “நான் தான் அப்போதே சொன்னேனே” என்று ஒதுக்காமல் தன் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூக சிந்தனை கொண்ட உங்களுக்கு வந்தால் போதும்… பெற்றோரின் ஏற்பாட்டுத் திருமணங்கள் தோல்வியில் முடிந்ததே இல்லையா? அவரின் தேர்வும் தோல்வியடையலாம்… அதனால் காதலே தோற்றது என்றாகாது என்பதும் உங்களுக்கே தெரியும்.

உங்கள் நண்பர்-சமூகப் போராளி-சமரசமற்ற படைப்பாளி அமீர் கூறுகிறார் “சமூக ஆர்வலர்கள் அவசரப்பட்டு தருமபுரியில் (பாமக இராமதாசின் சாதிவெறி அரசியலால்) மாண்ட இளவரசன் – அவரின் காதலி திவ்யா காதல் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசிவிட வேண்டாம்” என்று… உண்மையில் இதைவைத்து அரசியல் செய்வது காதலை “நாடகக் காதல்” என்று சொல்லி பெண்களின் உரிமைக்கெதிராகவும், அதுவும் குறிப்பாக தலித் இளைஞர்கள் மேல் வருவது தவறு என்று மானுடத்திற்கு, தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பேசிவரும் சாதி அரசியல் பிழைப்புவாதி இராமதாசு அவர்கள் தான்… இந்தப்போக்கு சமூக வளர்ச்சிக்கு, சமூக மாற்றத்திற்கு எதிராய் எதிர்த்திசையில் செயலாற்றுகிறது என்பது உங்களுக்கு ஒருவேளை இதுவரைப் புரியாமல் இருந்தால் இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்…

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாமினி தனது செயல்களை அலசி ஆராய்ந்து, தான் செய்த தவறுகளை உணர்ந்ததுடன், சந்துரு பற்றிய உண்மைகளையும் புரிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பெற்றோரான எங்களுடன் வருவதென்ற முடிவை அவர் சுயமாக எடுத்து, இன்று எங்களிடம் வந்து சேர்ந்துள்ளார். இது பெற்றோருக்கு கிடைத்த வெற்றி.”

பத்து பதினைந்து நாட்கள் இடைவிடாத பாசப்போரட்டத்திற்கு(?) பின் உங்கள் மகளின் காதலை நீதிமன்றம் துணைகொண்டே பிரித்துவைத்துவிட்டீர்கள்… இதைவிட ஒரு தந்தையாக நீங்கள் உங்கள் மகளுக்கு ஒரு தீங்கை செய்ய முடியாது… நீதிம‌ன்ற‌ங்க‌ளும் இது போன்ற‌ வ‌ழ‌க்குக‌ளில் ஒருத‌லைப‌ட்ச‌மாக‌வே செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌து நீதி அதிகார‌த்திற்கு ஆத‌ர‌வாக‌ சாய்ந்து விட்ட‌ பிம்ப‌த்தையே ஏற்ப‌டுத்துகின்ற‌து. அதே போல‌ ஊட‌க‌ங்க‌ளின் ந‌டுநிலைமை, அற‌ம் போன்ற‌வையும் இங்கே கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டும், ஒரு ம‌ணி நேர‌ம் சேர‌னின் த‌ர‌ப்பை ம‌ட்டுமே ஓளிப‌ர‌ப்பும் இவ‌ர்க‌ளுக்கு, ச‌ந்துருவின் த‌ர‌ப்பை ஒளிப‌ர‌ப்ப‌ ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் ம‌ட்டுமே கிடைக்கின்ற‌து ?????.

வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.

About வினோத்

2 comments

  1. Defeating the very purpose of Save-Tamils Movement, you are interfering in the personal affairs of a popular family as a cheap alternate medium.

  2. ஒரு தனிப்பட்ட நபர் குடும்ப விசயத்தை எதற்காக எல்லா ஊடகத்தையும் வைத்துக் கொண்டு விவரிக்கின்றார்? இடைக்கால தீர்ப்பு வந்ததும் எதற்காக ஊடகங்களுக்கு நன்றி சொல்கின்றார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*