Home / அரசியல் / ஈழ‌ப்போராட்ட‌த்தின் ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று – மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம்

ஈழ‌ப்போராட்ட‌த்தின் ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று – மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம்

த‌ஞ்சை ரெங்க‌ராஜ் க‌லைக்குழுவின‌ரின் ப‌றை இசையுடனும், க‌ரகாட்டத்துடனும் “பன்னாட்டு இளைஞர் மாநாட்டின்” மாலை அமர்வு தொடங்கிய‌து. அதற்கு முன்பாக, சுருக்கமானதொரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. மாநாட்டிற்கு வ‌ருகை த‌ந்திருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் செய‌ற்பாட்டாள‌ர்க‌ளும் இதில் ப‌ங்கேற்று, மாநாட்டு செய்திக‌ளை ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு அளித்த‌ன‌ர்.

மாலை சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்களான மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் கம்யூனிசுட்டு கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா , திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொது செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றினர். தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில், காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடக்குமாயின், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைபதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் உரைக்குறிப்புகளிலிருந்து சில.

சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்:

2009 இலங்கையில் நடந்த இறுதி கட்ட போருக்கு பிறகு ஈழப் போராட்டம் முடிவடைந்து விட்டதாக கருதினர். ஆனால் 2013 மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஈழப்போராட்டம் இன்னும் முடியவடையவில்லை என்பதை மெய்ப்பித்து காட்டியது. 2009க்கு முன்னர் ஈழத்தமிழர்களின் தாகமாக இருந்த சுதந்திரத் தமிழீழம் இன்று உலகத் தமிழர்களின் தாகமாக மாறியிருக்கின்றது. எந்த‌ ஒரு தேசிய‌ இன‌விடுத‌லை போராட்ட‌த்திற்கும் கால‌ எல்லை கிடையாது, ஆத‌லால் அடுத்த‌ த‌லைமுறைக்கு நாம் தேசிய‌ இன‌விடுத‌லை போராட்ட‌த்தை கைய‌ளித்த‌ல் முக்கிய‌மான‌து, இந்த‌ நோக்க‌த்தை மைய‌ப்ப‌டுத்தியே இந்த “ப‌ன்னாட்டு இளைஞ‌ர் மாநாட்டை” த‌மிழீழ‌த்திற்கான‌ மாண‌வ‌ர் போராட்ட‌க்குழுவுட‌ன் சேர்ந்து சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் முன்னெடுத்துள்ள‌து என்று மாநாட்டின் நோக்க‌த்தை கூறினார்.

தோழர் வைகோ:

அந்தப் பாலகன் என்ன செய்துவிட்டான்? அந்தப் பாலகனின் கண்கள் தான் மாணவர்களைத் தட்டியெழுப்பியது, சோர்ந்து கிடந்த போராட்டத்திற்குப் புது வீரியம் பாய்ச்சியுள்ளது…

ஓ வாலிபனே வா! இதில் இணைந்துக் கொள்! ஓ அன்னியனே வெளியேறு! தாயக ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறு! என்று முழக்கமிட்டு தெருவில் இருங்கிப் போராடினார்கள் இந்த மாணவர்கள்.

தமிழினத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்த இந்திய அரசைத் தூக்கியெறியும் தீப்பொறி இளைஞர்களிடம் இருந்துதான் புறப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் சனநாயகம் மற்றும் மனித உரிமையை மீறிய நாடுகளை தற்காலிகமாக நீக்கி வைப்பர்… அப்படி நைஜீரியா, பாகிசுதான், பிஜி , தென் அப்பிரிக்கா போன்ற நாடுகள் நீக்கப்பட்டுள்ளன, பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போல சனநாயகம் மற்றும் மனித உரிமையை மீறிய இலங்கையை நீக்க முயற்சிக்காமல், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இந்தியா ஏன் முயற்சிக்கிறது? கூட்டுக்குற்றவாளி என்பதாலா?

இந்தியா ஈழப்போருக்கு ஆயுதங்கள், ரேடார்கள், போர்க்கப்பல்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது. அதனால் இந்தியாவும் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் கூட்டுக்குற்றவாளி தான். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்பது மட்டுமல்ல நமது கோரிக்கை, ஏனென்றால் கடைசி நிமிடத்தில் அங்கே பிரதமர் செல்லவில்லை என்று சொல்வார் உடனே இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் இதை வெற்றி என்று கொண்டாடுவார்கள். அதற்கு தாம் தாம் காரணம் என்றும் சொல்வார்கள். காமன்வெல்த் மாநாடே இலங்கையில் நிகழக்கூடாது என்பதே நமது பிரதானக் கோரிக்கை.அங்கு ஒருவேளை காமன்வெல்த் மாநாடு நடந்தால் அடுத்த இரண்டு வருடத்திற்கு இலங்கை சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்சே தான் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் ஆவார். அப்படியிருக்கும் பொழுது நாம் கோரியுள்ள இனப்படுகொலைக்கான சுயேச்சையான பன்னாட்டு நீதி விசாரணை எப்படி நிகழும்? எப்படி நமக்கு நீதி கிடைக்கும்? சுதந்திர தமிழீழம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்பதில் முதலில் இருந்து ஒரே நிலைப்பாடோடு முன்னெடுத்துச் சென்றது நாங்கள் தான். அரசியல் காரணமாக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இதில் நாங்கள் சமரசம் செய்துகொண்டதே இல்லை. மக்கள் விருப்பத்தின் படி ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் நாங்கள் தான் முதலில் பதிவு செய்தோம்.ஈழம் மலரும் வரை எங்கள் அர்ப்பணிப்பான போராட்டம் தொடரும்.

மறுக்கப்பட்டாலும் நீதி அழியாது. நமது இளைஞர்கள் மறுக்கப்பட்ட நீதியை ஈழத் தமிழர்களுக்குப் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தோழர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்:

உகாண்டா , ருடிசியா, நைஜிரியா , தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை மதிக்கவில்லை என ஏற்கனவே காமன்வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட வர‌லாறுகள் உண்டு, எனவே அது போல பல மடங்கு குற்றம் புரிந்த இலங்கையும் காமன்வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட வேண்டும்.
காம‌ன்வெல்த் அமைப்பு நாடுக‌ளின் சாற்றுரைக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ உறுப்பின‌ர்க‌ளின் த‌குதிக‌ளான‌, சனநாய‌க‌ம், பாதுகாப்பு, ச‌கிப்புத்த‌ன்மை, ப‌த்திரிக்கைச் சுத‌ந்திர‌ம் போன்ற‌ எந்த‌ த‌குதியும் இல‌ங்கையில் துளியும் இல்லாத பொழுது எப்படி காமன்வெல்த் அமைப்பு இன்னும் இலங்கையை உறுப்பு நாடாக வைத்துள்ளது? என்ற கேள்வியை த‌ன‌து உரையில் ப‌திவு செய்தார் தோழர் ஜவாஹிருல்லா.

எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி:

மாணவர்கள் போராட்டம் ஈழப் போராட்டப் பாதையில் புது நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

அண்மையில் ஐநா மனித உரிமை மன்றச் செயலாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்றிருந்தார், அங்கு நடப்பதை ஆய்வு செய்துவிட்டு, அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது என்றார். இதைச் சொன்னதால் இலங்கை அமைச்சரே நவநீதம் பிள்ளையைப் பற்றி கொச்சையாகவும், கேவலமாகவும் பரப்புரைச் செய்துள்ளார். இது போதாதா? இலங்கை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேறு என்ன தகுதி வேண்டும்? ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் இந்திய மன்மோகன் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக பிஜேபி இருக்க முடியாது, அப்படியான மாற்றுக்கொள்கை அக்கட்சிக்கு துளியும் கிடையாது. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்துகிற‌ தமிழ்நாட்டில் தமிழர் நலனில் அக்கறையுள்ள மூன்றாவது அணி இந்தியாவில் உருவாக வேண்டும். அதை நாம் தான் உருவாக்க வேண்டும்.

தோழர் வீரபாண்டியன் – இந்திய கம்யூனிசுட்டு கட்சி:

சர்வாதிகாரத்திற்காக ஒரு நாடு தடை செய்யப்பட வேண்டுமானால் இலங்கை தான் முத‌லில் தடை செய்யப்பட வேண்டிய நாடு. நான்கு மந்திரிகளும் நான்கு அதிகாரிகளும் மட்டுமே முடிவு எடுக்கின்றனர்.இந்திய‌ மக்களின் உரிமைகளும், ஜன‌நாயகமும் காங்கிரசு அரசால் குழி தோண்டி புதைக்கப் படுகின்றன.

குணசேகரன் – மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்:

நாங்கள் மலேசிய அரசும் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என போராடிக் கொண்டு இருக்கிறோம். வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மலேசிய பாராளுமன்ற கூட்டத்தில் இதை வலியுறுத்தி பேச உள்ளோம். ஆனாலும் மலேசிய அரசு கலந்து கொள்ளும். காரணம் மலேசிய ஆளும் அரசாங்க‌த்தில் உள்ள மந்திரிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையில் முதலீடு செய்து உள்ளனர். நான் எதிர் கட்சியில் இருந்து கொண்டு இது போல் பேசுவதால் மலேசியாவுக்கான இலங்கை தூதர் என்னை சந்திக்க இரண்டு முறை அழைப்பு விடுத்தார். நான் செல்லவில்லை, இதுபோல் அழைப்பு கிடைத்து செல்லுபவர்களுக்கு 50,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை இலங்கை தூதர் பரிசாக கொடுப்பார். இப்படித்தான் இலங்கை அரசு தனக்கு ஆதரவாக பேச பத்திரிக்கைகளையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறது.

சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா:

இந்திரா காந்தி போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரவளித்தார். இராஜிவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தங்களுக்கு மெனக்கெட்டார் என்றெல்லாம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அவையெல்லாம் ஈழ விடுதலைக்கான அக்கறைகளோ, ஈழத்தமிழர்களின் மீதான பாசமோ கிடையாது. இந்திய விரிவாதிக்க நலன்களையொட்டியும், இலங்கை ஒரு போதும் எந்தவொரு வல்லாதிக்கத்தின் கீழும் சென்று விடக்கூடாது என்ற கவன ஏற்பாடுமே, இந்திரா காந்தியின் புலிகள் ஆதரவு நடவடிக்கைகளுக்கான காரணமாக இருந்தன.

ராஜபக்சே இந்தியாவுக்கான போரைத் தான் நாங்கள் நடத்தினோம் என்று பகிரங்கமாக அறிவித்தாரோ, அதைப் போலத் தான், இலங்கை அரசின் நலனுக்காகவும், இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மூடி மறைப்பதற்காகவுமே, இந்திய அரசு தான் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகவே காமன் வெல்த் அமைப்புகளின் உறுப்பு நாடுகளிடம் “இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது” என்று கோரிக்கை வைப்பதை விட‌ அக்கோரிக்கையை இந்தியாவை நோக்கி வைப்பதே முக்கிய‌மானது.

பாதிக்கப் பட்ட ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்வாதாரங்க‌ளை பாதுகாக்க ஈழத்தில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகம் அமைப்பதையோ அல்லது அங்கீகரிக்கப் பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பின் மேற்பார்வையிலான பாதுகாப்பையோ உறுதி செய்வதை நோக்கித் தான் நமது அடுத்த கட்ட முன்னகர்வுகளும், போராட்டங்களும் அமையப் பெற வேண்டும். இங்குள்ள‌ அரசியல் இயக்கங்களும் மாணவர் அமைப்புகளும் இதை பரிசீலித்து, அதற்கான‌ வேலைகளை முன்னெடுக்க வேண்டும். இது வெறும் மனிதாபிமான நடவடிக்கையல்ல, தமிழர் தாயக நிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும். நமது இறுதி இலக்கு எப்பொழுதும் தமிழீழ விடுதலையே.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*