Home / அரசியல் / நிதியமைச்சர் வீட்டு நாயும் – 66A சட்டமும்

நிதியமைச்சர் வீட்டு நாயும் – 66A சட்டமும்

“அந்த நிதியமைச்சரின் வீட்டில் வளரும் நாய்க்குட்டி நல்ல புஷ்டியாக‌ மொசு மொசுவென்று வளர்ந்திருக்கிறது. நல்ல ஆரோக்கியமான பால் குடித்து வளருகிறது போல‌” என்று முகநூலில் ஒரு கருத்து வெளியிடுகிறீர்கள். நீங்கள் நிஜமாகவே நல்லவர். யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். அமைச்சர் வீட்டில் வாங்கும் பால் குறித்தோ, அல்லது இந்தியாவில் புழங்கும் பாலின் தரம் குறித்தோ, அல்லது அமைச்சர் அஃறிணை உயிரினங்களின் மீது காட்டும் பரிபாலனம் குறித்தோ புகழ்வதற்காகத் தான் உச்சி முகர்ந்து அக்கருத்தை வெளியிடுகிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கு கூட அது புரிந்து, லைக்குகளை வாரி வழங்குகின்றனர்.

ஆனால் உங்களின் போதாத நேரம், அமைச்சருக்கு அது வேறு மாதிரியாக‌ பட்டு விட்டது. தன் வீட்டில் கணக்கற்ற சொத்தின் காரணமாக, நாய்க்குட்டிகள் கூட மினுக்கித் திரிகின்றன என்று நீங்கள் அவரை ஏளனம் செய்வதாக கருதுகிறார். காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்கிறார். தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, 66அ சட்டப் பிரிவுகளை பிரித்து படித்துப் பார்க்கிறார் காவல்துறை அதிகாரி. அல்லது படிக்காமலே அமைச்சரின் சட்டப் புலமையின் மீது நம்பிக்கை வைத்தவராக, தலையாட்டுகிறார்.

“grossly” offensive or cause “annoyance or inconvenience”, or, in case of information known to be false, cause “danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will”.

“யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைதொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ : அ) விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது ஆ) தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது இ) யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசௌகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு) மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று வ‌ரைய‌றுக்க‌ப் ப‌டாத‌ அப‌ராத‌மும் விதிக்க‌ப் ப‌டும்.” என்று சட்டக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

நீங்கள் கைது செய்யப் படுகிறீர்கள். காரணம் உங்கள் விகல்பமான வார்த்தைகளால் நீங்கள் அமைச்சரை (Inconvenience) அசெளகரியப் படுத்தி வீட்டீர்கள். உங்கள் நண்பர்களுக்கு புரிந்த அந்த சுத்தமான கருத்து, விகல்பமான‌ கருத்தாக நினைக்கப் பட்டிருக்கிறது. அமைச்சரின் மனைவி கூட பின்னாளில், அக் கருத்தைப் பார்த்து, உங்களை பாராட்டியிருக்கக் கூடும்.

எது நல்ல வார்த்தை, எது அசெளகரியம், எது விகல்பம் என்று புரியாதவனாக நீங்கள் அழுது புலம்புகிறீர்கள். மேலும் அசெளகரியப் படுத்துதல் எப்படி சிறை செல்லுமளவுக்கு குற்றமாகும் என்றும் அழுகைக்கு நடுவே கேள்வியெழுப்புகிறீர்கள். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இது தான் நடைமுறை. இது தான் இந்திய தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, 66அ பிரிவு.

இது தான் இந்திய சனநாயகம்.

மேலே குறிப்பிட்டுள்ள பல விதமான காரணிகள் யாவும் நிச்சயத் த‌ன்மைய‌ற்றவைக‌ளாக‌ இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு புரிதல்களை ஏற்படுத்துபவைகளாகவும் இருக்கின்றன. அல்லது குழப்புகின்றன. தெளிவாக சொல்ல வேண்டுமானால், அதிகார வர்க்கத்தினரின் நலன்களுக்காக அப்படியான‌ சொற்கள் சட்டங்களாக்கப் பட்டிருக்கின்றன. அதிகார மையத்திற்கு நெருக்கமான அரசியல் தலைவரோ, பெருமுதலாளியோ, சிறு முதலாளியோ, சினிமா பிரபலமோ, பணமுதலையோ தங்களுக்கு ஒவ்வாத கருத்துகள், முகநூலிலோ, ட்விட்டரிலோ, வலைப்பூவிலோ பகிரப் படும் போது, அக்கருத்துகளை வெளியிட்டவர் மீது சட்டத்தின் உதவியுடன் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த‌ தகவல் தொழில் நுட்பச் சட்டம்.

ஸ்ரேயா சிங்கால் என்ற 21 வயதான டெல்லி மாணவி, 66அ சட்டப்பிரிவில் இருக்கும் குளறுபடிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012 நவம்பர் மாதம் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவ்வழக்கில்,66அ சட்டப்பிரிவில் இருக்கும் சொற்பிரயோகங்கள் நீளமானதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டவைகளாகவும், பல்பொருள் தன்மை கொண்டதாகவும் இருப்பதாகவும், மேலும் ஏற்கெனவே இருக்கும் கருத்துரிமை சட்டங்களான 14,19(1அ) மற்றும் 21 பிரிவுகளுக்கு அது முரணாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நீதித்துறை ந‌டுவ‌ரின் ஆணைக‌ளின்றி, காவ‌ல்துறை கைது ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்வ‌து குறித்தும் அவ்வழ‌க்கில் கேள்வி எழுப்பியிருந்தார்.

த‌லைமை நீதிப‌தி, அல்த‌மாஸ் கபீர் முன்னிலையில் இவ்வ‌ழ‌க்கு, அவ‌ச‌ர‌ கால‌ நிலையில் விசார‌ணைக்கு எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து. எதிர்பார்த்த‌து போல‌வே, பெரிதாக‌ ச‌ட்ட‌ திருத்த‌ங்க‌ள் ஒன்றும் மேற்கொள்ள‌ப் ப‌ட‌வில்லை. வ‌ழ‌க்க‌ம் போல, ச‌ட்ட‌ப்பிரிவை செய‌ல்ப‌டுத்துவ‌தில் மாநில அரசுகளுக்கு ஒரே ஒரு அறிவுரையை வ‌ழ‌ங்கி ம‌ட்டும் தீர்ப்ப‌ளித்த‌து. மாந‌க‌ர‌ங்க‌ளில் காவ‌ல்துறை ஐ.ஜி, மாவ‌ட்ட‌ங்க‌ளில் காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் ப‌த‌விகளுக்கு குறையாத‌ அதிகாரிக‌ளின் ஆணையின்றி, 66அ ச‌ட்ட‌ப்பிரிவை ப‌ய‌ன்ப‌டுத்தி காவல்துறை ஒருவ‌ரை கைது செய்ய‌க் கூடாது என்ப‌து தான் அந்த‌ அறிவுரை.

காவ‌ல்துறை உய‌ர‌திகாரிக‌ள் யாருக்காக வேலை செய்வார்கள் என்பது சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. சாதார‌ண‌மாக‌, பேருந்தில் ஈவ் டீசிங் செய்யும் ஒரு ஆணைப் ப‌ற்றி,காவல்துறையில் ஒரு சாமானியப் பெண் புகார் கொடுக்க‌ வேண்டுமாயின், எத்த‌கைய‌ கொடுமைக‌ளை அவ‌ள் அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌தையும் விள‌க்க‌த் தேவையில்லை. இருந்தாலும் மிகப் பெரிய சினிமாப் பாடகியாக இருக்கும் பட்சத்திலும், காவல் துறை தலைமை ஆணையர் அப்பெண்ணுக்கு நெருங்கிய உறவினராக இருக்கும் பட்சத்திலும் இணையத்தில் (முகநூல், ட்விட்டர், வலைப்பூ) தன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் ஒரு ஆணைப் பற்றி, காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கே சென்று அப்பெண்ணால் புகார் கொடுத்து, அடுத்த நாளே “அக்கொடிய நபரை” கைது செய்ய முடியுமல்லவா ?

வெறும் தனி நபர்களை பாதுகாக்க மட்டுமே, இச்சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன‌ என்று குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. பொழுது போக்கு ஊடகங்களாக, அறியப் பட்ட சமூக வலை தளங்களான ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் இன்று பெருவாரியான‌ இளைஞ‌ர்கள் அர‌சிய‌ல் பேசுகின்ற‌ன‌ர். சரியோ தவறோ, தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை, அரசியல் தலைவர்கள் பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைக்கின்றனர். சினிமா,பொழுது போக்கு, விளையாட்டு போன்ற விஷயங்களோடு, அரசியலே முதன்மையான பேசுபொருளாக எடுத்தாளப் படுகிறது. மக்கள் பிரச்சினைகள் அலசப் படுகின்றன. சாலைகளில் இறங்கி கத்த வேண்டும் போலிருக்கிறது என்று விரும்புவோருக்கு, ஒரு கருத்து வெளி உருவாகியிருக்கிறது. மக்களின் இயல்பான கோபங்களிலிருந்து அவர்களை திசை திருப்பி, அவர்களின் அரசியல் அறிவை, போராட்ட குணத்தை மழுங்கடித்து, காலம் முழுதும் அவர்களை அரசியலற்ற‌வர்க‌ளாகவே வைத்து அழ‌கு பார்க்க‌ விரும்பும் ஆளும் வ‌ர்க்க‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கு, இணைய‌ வெளியின் க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌ம் குர‌ல்வ‌ளையில் க‌த்தியைச் சொருகுகிற‌து. அது மட்டுமின்றி, ஆளும் அரசுகளையே புரட்டிப் போடுமளவுக்கு, இணைய‌ப்புரட்சிகள் காலந்தோறும் செய்திகளாகி விட்டன.

எகிப்து,துனிஷியா போன்ற நாடுகளில், ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள், வீதிக்கு வந்து போராடினார்கள். அப்போராட்டங்களை ஒன்று திரட்டியது இணையம். வங்க தேசத்தில், இஸ்லாமிய மத வாத அமைப்புகளுக்கெதிராக, 1971 – வங்க தேச மக்களின் இனப்படுகொலைக்கான நீதி வேண்டி, ஷாபாக் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதும் அதே இணைய வெளியில் பரப்புரை செய்யப் பட்ட போது தான். அநியாய‌ கல்விக் கட்டணங்களை எதிர்த்து, லண்டன் மாநகரை முற்றுகையிடுவோம் என்று முகநூலில் ஒரு அழைப்பு விடுக்கப் பட்டது. மூன்று லட்சம் பேர் அவ்வழைப்பை ஏற்று, அம்முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கிலாந்து அரசு, பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்பப் பெற்றது. தமிழகத்தில் கூட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டமும், கடந்த மார்ச் மாதம் ந‌டைபெற்ற மாண‌வ‌ப் பேரெழுச்சியும் ஃபேஸ்புக்கின் மூல‌மாக‌வும் ப‌ர‌ப்புரை செய்யப்பட்டு வலுப்பெற்ற போராட்டங்கள். இந்த காரணங்களால் தான், இணையவெளியை கண்காணிக்க ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான “தமிழக காவல் துறையும்” பூட்சு கால்கள் தட தடக்க‌ ஃபேஸ்புக்கில் தற்போது களம் இறங்கியிருக்கிறது.

பலபேர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66அ பற்றி படும் படாமலும் தொட்டும் தொடாமலும் இணையத்தில் பேசினாலும், நாட்டில் சில இடங்களில் தான் தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கு எதிராக பொதுவெளியில் போராட்டங்கள் நடந்தன.

ஆனால் அதுவும் பெரிய கவனம் பெறவில்லை, பெருவாரியானவர்கள் இதற்கு எதிராக அணிதிரளவில்லை, இயக்கமாகவில்லை, போராடவில்லை… ஏன்? என்ற கேள்விக்கு போகுமுன், இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கும் தேசத் துரோக சட்டத்திற்கும் (இந்தியத் தண்டனைச் சட்டம் 124A) என்ன வேறுபாடு என்று பார்த்தால் சில நுணுக்கங்கள், விபரங்கள் இன்னமும் தெளிவாய்ப் புரியும்…

தற்போதையக் காலக்கட்டத்தில் சராசரி நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரே வழியான கட்டற்ற இணையம் மூலம் தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்களுக்கு விரோதமாக செயல்படும் அரசின் மீதான விமர்சனங்களை வைக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் எப்படி அவர்களை மட்டுப்படுத்த அரச அதிகாரங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைப் பாய்க்கிறதோ இதைப்போலத்தான் இதற்கு முந்தையக் காலக்கட்டத்தில் தேசத் துரோக சட்டம் பாய்ந்தது…

காசுமீர் மக்களின் மீதான இந்திய இராணுவ ஒடுக்குமுறையை எதிர்த்தும், காசுமீரத்தை சுதந்திரமாக காசுமீரிகளிடம் தான் கொடுக்க வேண்டும் என்றும் தன் கருத்தைச் சொன்னதற்காக அருந்ததிராய் மீது தேசத்துரோக வழக்குப் பதிந்து தன் கொடுங்கோன்மையை நிறுவியது அரசு… மத்திய இந்தியாவில் வனங்களை அழித்து சுரங்கம் தோண்டி கனிம வளங்களைச் சுரண்டி, பெருமளவு தரகு பணத்திற்கு தனியாருக்கு விற்றது அரசு, அதற்கு எதிராக இருந்த காரணத்தினால் பழங்குடியினரை இராணுவம் கொண்டு அகற்றும் இந்திய அரசை விமர்சித்ததாலும், பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துவந்ததாலும் மாவோயிஸ்ட் என்றும், பயங்கரவாதி என்றும் பட்டம் சுமத்தப்பட்டு அதேத் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு நெடுங்காலம் சிறையில் அடைக்கப்பட்டார் மருத்துவர் பினாயக் சென்…

இந்திய ஒன்றியத்தின் தென் எல்லையில், பல மாநில மக்களும் அரசுகளும் ஏற்கமறுத்த அணுஉலையை கூடங்குளத்தில் ரசிய நாட்டு நிறுவன உதவியுடன் நிறுவிவருகிறது இந்திய அரசு, இதை எதிர்த்து போராடி வரும் மக்களின் மீது 2 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பாய்ந்துள்ளது, அவற்றில் பெரும்பான்மை தேச துரோக வழக்குகளாகும். இந்த பகுதியில் அணு உலையை நிறுவாதீர்கள், எங்களுக்கு உடன்பாடில்லை என்று தங்கள் கருத்தை சனநாயக பூர்வமான வழிகளில் தெரிவித்ததற்காக அரசு சர்வாதிகாரமான முறையில் அளித்த பரிசு தான் இவ்வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்றுதான், மக்களின் தயவால் வந்த அரசை, அமெரிக்கா போன்ற உலக ஆதிக்க அரசுகளின் நலன்களைக் காக்கும், பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களின் நலன்களைக் காக்கும், அதன் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் போராடினால் இது தான் நிகழும் என்ற எச்சரிக்கை…

அரசியல் கட்சித்தலைவர்களானாலும் ஆளும் அரசிற்கு எதிராய் பேசினால் விமர்சித்தால் இந்த சட்டம் பாய்வது உறுதி… தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கொளத்தூர் மணி, வைகோ, சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் அரசை விமர்சிப்பதால், அரசிற்கு எதிராக கருத்தைச் சொன்னதால் பலமுறை இந்தச் சட்டத்தில் தண்டனை அனுபவித்துள்ளனர்.

அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து போராடுவதால் அரசு மக்களை ஒடுக்க பயன்படுத்திய இந்தச் சட்டம் ஏதோ கொஞ்சகாலமாக நடந்துவருகிறது என நினைத்துவிட வேண்டாம், இந்த நிகழ்வுகள் பெயரளவு சுதந்திர நாடாக ஆன நாள் முதல் இன்று வரை வெகுகாலமாக நடந்துவருகின்றன… தமிழகத்தைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் அரசிற்கு எதிராக கருத்து சொன்னால் என்னவாகும் என்பதை மக்களுக்கு விளக்கிய நிகழ்வு 1987ல் விகடனில் வந்த அரசியல்வாதிகள் குறித்த விமர்சன கேலிசித்திரத்திற்கு எதிராக அதன் ஆசிரியர் மீது அரசு எடுத்த நடவடிக்கை தான்…

அரசிற்கு எதிராக, ஆளும் அதிகாரங்களுக்கு எதிராக, ஆளும் அதிகாரங்களின் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக கருத்தை மக்கள் போராட்டம் வடிவிலோ அரசியல் மேடையிலோ வைத்தால் தேசத் துரோகச் சட்டம், இணையத்தில் வைத்தால் தகவல் தொழில்நுட்பச் சட்டம்…

அப்படி என்றால் இந்திய நாட்டில் போராடும் உரிமை, கருத்தைச் சொல்லும் உரிமை மக்களுக்கு இல்லையா? இதை உண்மையில் இந்திய அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்கிறதா?

இந்திய அரசின் அரசிலமைப்புச் சட்டம் 19அ தெளிவாகச் சொல்கிறது, ஒவ்வொரு குடிமகனும் தனது கருத்தை சுதந்திரமாக எடுத்துரைக்கும் உரிமை(கருத்துரிமை) அடிப்படை சனநாயக உரிமை என்று… பின்னர் எப்படி இந்த வன்மையானச் சட்டங்கள், கைதுகள், வன்கொடுமைகள் அரசால் சாத்தியப்படுகிறது? சாத்தியப்படுத்த ஓட்டைகள் பல இல்லாமலா போய்விடும்… ஆம், அரசிலைப்புச் சட்டம் 19ஆ-வில் சொல்லப்பட்டுள்ள “19அ கருத்துரிமையில் அடங்காத குறிப்புகள்” என்றத் தெளிவற்றச் சரத்துகளைப் பயன்படுத்தியும், பாதுகாப்பு மற்றும் இறையாண்மை என்ற காரணங்களைச் சொல்லியும் குற்றங்கள் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படாதத் தேசத் துரோகச் சட்டம் (இது பிரித்தானியப் பேரரசு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது அதன் அடிமை நாட்டுக் குடிமக்களின் அடிப்படை போராடும், கருத்துச் சொல்லும் உரிமைகளைப் பறிக்க போட்டச் சட்டமாகும்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் என்ற இரு சட்டங்களை இயற்றியுள்ளது இந்திய அரசு… தன் சொந்த மக்கள் மீதே இந்த கொடுமையானச் சட்டங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இருக்கும் அதிகார மையங்கள் தங்களின் நலனையும், பெருமுதலாளிகளின் நலனையும் காத்து வருவதோடு சராசரி மக்களின் அடிப்படை சனநாயக உரிமையான கருத்துரிமையை போராடும் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது…

இந்த பெயரளவு சுதந்திர நாட்டில் அதன் அரசினால் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவரும் அதன் சாமானிய மக்கள் மீது பாயும் இந்த வன்மையான சட்டங்களினால் நிகழ்ந்தேறும் சனநாயகப் படுகொலையைத் தகற்த்தெறிய சரியான செயல்திட்டங்கள் இல்லாமல் அதிகாரமற்ற பெருவாரியான உழைக்கும் சாமானிய மக்கள் வெற்றிபெற முடியாது…

உடனடியாக நாம் செய்யவேண்டியது:

தங்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுவதால் போராடித் தினம் தினம் துன்பத்தில் உழலும் சாதாரண மக்களையும், அன்றாடும் இணையத்தில் கலக்கத்துடன் கருத்துகளை பரிமாறிவரும் இளைஞர்களையும் இணைத்து, போராடும் உரிமைக்கு எதிரான-கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான சட்டங்கள், கைதுகள், வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு கூட்டியக்கம் ஏற்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போராடுவது.

வினோத் & செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

நன்றி. அனைத்து கேலி சித்திரக்காரர்களுக்கும், புகைப்பட உதவி புரிந்தவர்களுக்கும்…

பயன்படுத்திய தரவுகள்:

http://www.thehindu.com/news/cities/chennai/facebook-twitter-come-under-police-scanner/article4674196.ece

http://news.vikatan.com/article.php?module=news&aid=14433

ட்விட்டர் கைதுகள் !… தூண்டும் விவாதங்கள் ! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21970&Itemid=139

http://saffroninfo.blogspot.in/2012/05/blog-post_17.html

http://www.ndtv.com/article/cities/mamata-cartoon-row-defamation-charges-dropped-against-professor-ambikesh-mahapatra-279067

http://www.ndtv.com/article/india/sedition-charges-against-cartoonist-aseem-trivedi-dropped-278731?h_related_also_see

http://www.thehindu.com/news/national/other-states/sedition-charge-against-cartoonist-to-be-revoked/article3990964.ece

http://www.niticentral.com/2013/02/25/111-people-arrested-in-kerala-for-defaming-pj-kurien-online-49715.html

http://janamejayan.wordpress.com/2012/12/06/sec-66a-curbs-on-free-speech-are-part-of-nehru-family-legacy/

http://www.thehindu.com/news/national/supreme-court-to-hear-plea-against-vindhyala-arrest/article4717545.ece

http://www.aazham.in/?p=1958

http://guhankatturai.blogspot.in/2012/09/blog-post_11.html

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22145&Itemid=139

http://oosssai.blogspot.com/2012/04/blog-post_24.html

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*