Home / FITE சங்கம் / கண்ணாடிக் கட்டிடங்களுக்குள்!

கண்ணாடிக் கட்டிடங்களுக்குள்!

கடந்த சில தினங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு எட்டியிருக்கும் என்ற அறியாமையும், இந்த செய்திகள் பற்றி நாம் கவலைப்பட என்ன இருக்கிறது என்பதை சொல்லவுமே இதனை எழுதுகிறேன்.

சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக (PROJECT MANAGER) பணியாற்றிய கிருஷ்ணகுமார் என்னும் ஊழியர், மனிதவள(HR) அதிகாரிகளால் பணிக்கமர்த்தப்பட்ட குண்டர்களால்(Bouncers) தாக்கப்பட்டு அது தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அத்தோடு கடந்த வாரம் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 10-வது மாடியில் இருந்து ரேஷ்மா என்கிற பெண் ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் வெளியானது. இந்த ஆண்டு (சென்னையில் மட்டும்) தற்கொலை செய்து கொள்ளும் ஐந்தாவது தகவல் தொழில்நுட்ப ஊழியர் இவர் (1)..

நான் என்னுடைய நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்ட போது, அந்த தொழில்நுட்பப் பூங்காவில் இது பற்றி எந்த ஒரு சத்தமோ, சலனமோ இல்லை என்றும், அப்படி ஒரு தற்கொலை நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நிறுவனங்கள் இயங்குவதாகவும் தெரிவித்தார். ஒரு சக ஊழியரின் உயிர் பறிபோவது பற்றிக் கூட சிந்திக்க நமக்கு உண்மையிலேயே நேரமில்லையா? அல்லது மனமில்லையா?.

அலுவலகத்தில் நமக்கு அடுத்த இருக்கையில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலும் நாம் அதுபற்றி எந்த ஒரு கவலையுமின்றி கடந்து செல்கின்றோம். மறுபுறம், தகவல் தொழில்நுட்பத் துறையின் பணிச் சுமையும், அழுத்தமும் காரணம் என்று நாம் பேசும் போது நீங்கள்தான் அதிகம் சம்பாதிக்கறீர்களே என்று சமூகமும் கடந்து செல்கிறது. சமூக நடுநிலையாளர்களோ விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஊடகங்களும், தற்கொலைக்கான காரணங்களை விசாரிக்க வரும் காவல் துறையும் காதல் மற்றும் தனிநபர் பிரச்சனைகளையே காரணம் காட்டி வழக்கை முடிக்கின்றனர்.

நிகழும் தற்கொலைகளுக்கும், சக ஊழியர்களுக்காகக்கூட நாம் குரல் கொடுக்காமல் இருப்பதற்கும், நீங்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறீர்களே என்று நம்மீது ஏனையோர் பாய்வதற்குமான காரணம் நம் சம்பாத்தியம் மட்டும் அல்ல.

குளிரூட்டப்பட்ட பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை என்று வெளியில் இருப்பவர்களின் பார்வையில் நின்று இதனைப் பார்க்காமல் சற்று உள்ளே சென்று பார்த்தோமானால் இதற்கான காரணங்கள் ஒரு பெர்முடா முக்கோணம் போன்ற தளத்தில் அமைந்துள்ளதை அறிய முடியும். முக்கோணத்தின் ஒரு முனையில் ஊழியர்களான நாமும், இரண்டாவது முனையில் அரசு, காவல்துறை மற்றும் பல்வேறு பிரிவினரைக் கொண்ட சமூகமும், உச்ச முனையில் LPG (தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம்) என்று சொல்லப்படும் பொருளாதார மாற்றமும் அதன் வழி வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் நின்று கொண்டு நம் சக ஊழியர்களின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன.

1. தகவல் தொழிநுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களைவிட்டு பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்து பணிபுரிபவர்களே. நம்முடன் பணிபுரிபவர்களுடனோ, நண்பர்களுடனோ அல்லது விடுதிகளிலோ தங்குபவர்கள் ஏராளம். பெரும்பாலான பெண் ஊழியர்கள் விடுதிகளிலேயே தங்கி பணிபுரிகிறார்கள்.

2. நம்முடைய அலுவலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள போட்டி சூழல் காரணமாக சக ஊழியர்களிடத்தில் நட்பு பாராட்டுவதும், அலுவலகப் பணிகள் தாண்டி கலந்துரையாடுவதும் அரிதாக உள்ளது. இவ்வாறு உள்ள பணிச் சூழலில் நாம் ஒவ்வொருவரும் நம்முடன் பேசுவதற்கும், நம்முடைய வெறுமையையும்,ஆற்றாமையையும் போக்குவதற்கும் யாரும் இல்லாமல் தனித்தீவுகளாகி இருக்கிறோம். அதே சமயம் அலுவலக சூழலும், சக ஊழியர்களுக்கான பணிச்சுமையும், நாம் ஒன்றுபடாமல் இருக்க கட்டமைக்கப்பட்ட போட்டி மனப்பான்மையும் நம்மை ஒருங்கிணையவிடாமல் தடுப்பதை நாம் உணராமல் இருக்கின்றோம்.

3. அத்தோடு நம்முடைய பெற்றோர்கள் ஒரு வருடம் உழைத்து பெற்றதற்கு நிகரான பணத்தை ஒரு மாத ஊதியமாக பெரும் நாம் சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நம் தேவைகள் பற்றி சிந்திக்காமல் வாங்கி குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கிறோம். வேலைக்கு சேர்ந்து ஓரிரு வருடங்களில் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்குவதும், பின்னர் மீண்டும் கடன் வாங்கியாவது கார் வாங்குவதும் இங்கு எளிதாக நடக்கின்றன. பின்னர் கடன் கழுத்தை நெரிக்கும் சூழல் வரும்போதோ, வேலை பறிபோகும் நிலையிலோ சில ஊழியர்கள் தற்கொலைகள் பற்றி சிந்திக்கின்றனர்.

நம்முடைய பணிச்சூழல் மற்றும் அழுத்தம் பற்றி பேசும்போதெல்லாம் விவசாயிகள் தற்கொலையைப் பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள், விவசாயிகளுக்காக பேச சங்கங்கள் இருக்கின்றன, பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நமக்காக பேச நாதியில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை என்பதே அதற்காகத்தான் என்று சொல்லும் மனிதவளத் துறை அதிகாரிகள் நம்மைச் சமாளிக்க குண்டர்களை நியமிக்கும் வேலையில் மும்முரமாக உள்ளனர் (2).
இன்றைய சூழலில், நமக்காக பேச யாரும் வரமாட்டார்கள், அதற்குக் காரணமும் நாமே. அதிக சம்பாத்தியமும், நுகர்வும் ஊட்டிய போதையில் நாம் சமூகத்தைவிட்டு மிகவும் விலகி இருக்கிறோம்.

1990-களுக்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றங்களினால் சமூகத் தராசின் ஏற்ற தட்டில் நமக்கே தெரியாமல் வைக்கப்பட்டவர்கள் நாம். ஏற்றத்தின் பக்கம் முன்னர் இருந்தவர்கள் போலவே நாமும், நம்மை வளர்த்த சமூகத்தை மறந்துவிட்டோம் என்பதும் உண்மையே. ஆனால் சம்பாதிக்கிறீர்களே? இறந்தால் என்ன?? என்பது நிச்சயம் நாம் கண்டிக்க வேண்டிய விடயமே. ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை கேள்வி கேட்பதற்கு முன்னர், நாம் பணியிடத்தில் நம்முடைய உரிமைகளை மீட்டாக வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் உள்ளோம்.

வழமைப் போலவே பணியிடங்களில் நடக்கும் பிரச்சனைகளையும், தற்கொலைகளையும் நாம் கடந்து சென்றோம் என்றால், உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இன்றுள்ள நாம், உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி போராடும் நிலையும், காலமும் விரைவில் வரும்.

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பே சமூகம் என்று பள்ளிப்பருவத்தில் படித்ததாக நினைவு, நாம் நமது அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும், நமக்குள்ளாக இருக்கும் போட்டி என்ற நிலையைத் தாண்டி சக மனிதராக, நட்பாக பணிச்சூழலை மாற்றுவதுமே நம்முடைய தரப்பில் இருந்து நாம் செய்ய வேண்டியது. இவ்வாறு நாம் ஒருங்கிணையும் போதுதான் நம் உரிமைகளைக் கேட்டு பெறுவதற்கான வெளியும், வாய்ப்புகளும் உருவாகும்.

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

About கதிரவன்

One comment

  1. This kind of situation prevails only in under developed MNC&#39;s and not in every MNC&#39;s and moreover most important cause is peoples around us it all depends on luck and managing skill.<br />And these generation young bloods are not surrounded by ny debts that makes them to commit sucide…if man is a social animal we can manage but now a days man as become an animal and that is very well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*