Home / அரசியல் / கூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் – தேர்தல் அரசியலும்

கூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் – தேர்தல் அரசியலும்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கி 900 நாட்கள் நிறைவடைந்த‌ ஜனவரி 31,2014 ஆம் நாளிலிருந்து, அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழுவைச் சார்ந்த‌ சிலர், பின்வரும் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியிருக்கின்றனர்.

[1] கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

[2] தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும், ஊழல்கள் மலிந்திருக்கும், குளறுபடிகள் நிறைந்திருக்கும், நம்பகத்தன்மையற்ற முதலிரண்டு அணுஉலைகளின் முழுமையான, உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகளால் பரிசோதித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த 15-அம்ச பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றனவா எனும் தகவல்களை மக்களிடம் முழுமையாகச் சொல்ல வேண்டும். எங்கள் குற்றச்சாட்டுக்கள் உண்மையென்று தெரியும்போது, 1-2 உலைகளை இழுத்து மூடவேண்டும்.

[3] மத்தியத் தகவல் ஆணையம் பணித்திருப்பது போல, கூடங்குளம் அணுஉலைகள் சம்பந்தமான தள‌ ஆய்வறிக்கை (Site Evaluation Report), பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report), பேரிடர் தயாரிப்பு அறிக்கை (Emergency Preparedness Report), விவிஇஆர்–ரக அணுஉலை செயல்திறன் அறிக்கை (VVER Reactors Performance Report) போன்றவற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

[4] மீனவர்கள், விவசாயிகள் போன்றோரின் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார இழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் ஏற்பாடுகள் பற்றி முழுமையானத் தகவல்களைச் சொல்ல வேண்டும்.

[5] இரண்டு லட்சத்து இருபத்தேழாயிரம் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் 360 பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

2011 செப்டம்பரில் போராட்டக் குழு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது, வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஹரிப்பூர் அணு உலையை தடுத்து நிறுத்தியதைப் போல, கூடங்குளம் அணு உலையையும் மூட வழி வகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட போது, “அந்தத் திட்டம் துவக்க நிலையில் இருப்பதால் அவரால் அப்படி கேட்டுக் கொள்ள முடிகிறது; ஆனால் கூடங்குளம் திட்டம் முடியும் தருவாயில் இருக்கிறதே” என்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்திருக்கிறார்.

ஆனால் இன்று கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, இடமும் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அறிவித்து விட்ட போதிலும், முதல்வர் ஜெயலலிதா ஏன் மம்தாவின் வழியைப் பின்பற்றாமல், அமைதி காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. தவிர, போராட்டக்காரர்களின் மீது போடப் பட்ட 360 வழக்குகளை
திரும்பப் பெறக் கூறி, உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து விட்டாலும், தமிழக அரசு அவ்வழக்குகளை திரும்பப் பெறவில்லை.

கூடங்குளம் அணு உலை கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைத்து வைக்கப் போவதாய், மத்திய அமைச்சர் நாராயண சாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்.. கர்நாடக மாநிலம், கோலார் தங்கச் சுரங்கத்தில் அணு உலை கழிவுகளை புதைக்கப் போவதாய் அறிவிக்கப் பட்டதை எதிர்த்து, அப்பகுதி முழுதுமே கொதித்தெழுந்து போராடியது. தமிழக மண்ணிலிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகளை ஆற்றப் போகிறோம். உலகமே அணுக் கழிவுகளை அகற்றுவதற்கு, திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய விஞ்ஞானிகளான பாலு போன்றோர், அதை அணுக்கழிவுகள் (Nuclear Waste ) என்று சொல்லக் கூடாது, பயன்படுத்தப் பட்ட எரிபொருள் ( Spent Fuel ) என்று சொல்லுங்கள் என்று கதை விடுவது வாடியாகி விட்டது.

போராட்டம் தொடங்கிய நாளிலிருந்து, இத்தனை நாட்கள் மத்திய மாநில ஆளும் அரசுகளிட‌ம் நீதி வேண்டியே அம்மக்களுடைய கோரிக்கைகள் இருந்தன. ஆனால் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த காலவரையற்ற பட்டினிப் போராட்டமானது, அரசுகளை மட்டுமின்றி, இதுநாள் வரை உடனிருந்து போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த சில பல‌ கட்சிகளின் மெளனத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிற‌து. இங்கு நடக்கும் தேர்தல் கூட்டணிக் கணக்குகள், தமிழக மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டவையாகவே அறிய முடிகிறது. இது ஒன்றும் புதிதில்லை என்றாலும், குஜராத்தில் “மிதி விர்டி”என்ற இடத்தில் அணு உலை நிறுவப்படுவதை எதிர்த்து, அங்கு வாழும் விவசாயிகளும் பொதுமக்களும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தான் மோடி தலைமையிலான பா.ஜ.கவோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி வைக்கிறது. அணு உலை ஆதரவு கட்சியான தி.மு.கவோடு, அணு உலை எதிர்ப்பு கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கை கோர்த்திருப்பதையும் காண்கிறோம். அணு உலை எதிர்ப்பு கட்சிகள், இத்தகைய தேர்தல் கூட்டணியின் போது, குறைந்த பட்சம் தங்கள் கோரிக்கைகளை, நிலைப்பாடுகளை முன்னிறுத்தியாவது, பெரிய கட்சிகளோடு இணைதல் என்பது சாத்தியமானதே.

இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில் தான் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களின் காலவரையற்ற பட்டினிப் போராட்டம், அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோருகிறது. போராளிக் குழுக்கள், மாணவர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள அனைவரும் அம்மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்றலும் முடிந்தவரை போராட்டம் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளுதலும், 900 நாட்கள் இடையறாது எரிந்து கொண்டிருக்கும் தணலை அணையாது பாதுகாக்கும்.

ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் வெல்க‌!

அ.மு.செய்ய‌து

சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*