Home / கலை / கோலி சோடா – எளியவர்களுக்கான பானம்!

கோலி சோடா – எளியவர்களுக்கான பானம்!

உலகமய சூழலில் பெப்சியும், கோக்கும் மட்டுமே குடித்து பழகிய ஒரு தலைமுறையான நாம் முற்றிலும் மறந்துவிட்ட எளியவர்களின் பானம், ” கோலி சோடா “. 1990-க்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றத்தில் நம் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட எளியத் தொழில்களில் ஒன்று சோடா சுற்றுவது.

இப்படி நாம் எல்லோரும் மறந்துவிட்ட ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் தலைப்பு ” கோலி சோடா “. கதாபாத்திரங்களின் எளிமையையும், பொங்கி வரும் கோபத்தையும் வெளிக்காட்டும் மிகப் பொருத்தமான தலைப்பு.

கொத்தவால் சாவடியாக இருந்து கோயம்பேடு மார்க்கெட்டாக மாறிய காய்கறி சந்தைதான் கதைக்களம். மூட்டை தூக்கி பிழைப்பை நடத்தும் நான்கு சிறுவர்கள், கடை வைத்திருக்கும் ஆச்சி, அவரது மகள், பெற்றவர்களிடம் இருந்து விலகி விடுதியில் இருக்கும் ஒரு செடி ஒரு ப்ளவர் என்று அழைக்கப்படும் பெண் என்று எளியவர்களின் வாழ்க்கையால் நிரம்பியிருக்கிறது படம்.

நமக்கான அடையாளம் என்ன என்பதை பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் சிறுவர்கள், ஆச்சி மற்றும் சிறுவர்களின் தோழியின் உந்துதலில் மூட்டை தூக்கும் நேரம் போக மீதி நேரங்களில் உழைத்து “ஆச்சி மெஸ்” என்னும் உணவகம் வழியாக ஒரு அடையாளத்தைப் பெறுகின்றனர்.

மெஸ் நடத்த தன்னுடைய இடத்தை உள்நோக்கத்தோடு கொடுத்த என்.கே.பி. எனப்படும் வட்டிக்கு பணம் கொடுக்கும் நாயுடுவால்(சாதிப் பெயரை கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம், இவ்வாறு சாதிப் பெயரை பயன்படுத்துவதை பற்றிய பரவலான விமர்சனம் எதுவும் இல்லாதாது தவறான பார்வையாகும்). இடையூறு வரும் போது, அதை எதிர்க்கும் சிறுவர்கள் கடையை இழக்க வேண்டி வருகிறது. என்.கே.பி.யின் ஆள் மற்றும் அதிகார பலத்தோடு போராடி தங்களுடைய அடையாளமான உணவகத்தை எப்படி மீட்கிறார்கள் என்பதே கதை.

தங்களுடைய அடையாளத்தை மீட்கும் சிறுவர்கள், கடைக்காரர்களுக்கு தன் மேலுள்ள பயத்தை பயன்படுத்தி வட்டி தொழில் நடத்தும் என்.கே.பி.யின் அடையாளத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது ” அட!” போட வைக்கும் நேர்மறை சினிமா.

“எதுவும் இல்லாதவனை எல்லாம் இருக்கிறவன் என்ன வேணாலும் செய்யலாங்கிரத உடைக்கணும்-டா” போன்ற வசனங்கள் மிகக் கூர்மை.

“நான் உழைக்கற சாதி” என்று கையை ஓங்கி கதாநாயகன் பேசும் வசனங்கள் இல்லாமலயே படத்தின் பாத்திரங்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களை அவர்கள் வியர்வையுடன் பதிவு செய்கிறது.

முன்பாதியில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பற்றி எதார்த்தமாக பயணிக்கும் படம், இரண்டாம் பாதியில் சிறுவர்கள் நாயுடுவின் அடியாட்களை அடித்து நொறுக்கும் போது வழமையான சினிமாதனத்துக்குள் சிக்கிக் கொள்கிறது. சிறுவர்கள் நான்கு பேர் சேர்ந்து வெகு எளிதாக திட்டமிட்டு நாயுடுவை வீழ்த்துவது நடைமுறைக்கு முரணாக உள்ளது.

நாயகன் வந்தேதான் தவறைத் தட்டி கேட்க வேண்டும் என்ற நடைமுறையை கட்டுடைதமைக்கே படக்குழுவினரைப் பாராட்டலாம்.

தாகம் தணிக்க நாம் பருகிக் கொண்டிருந்த சோடா போன்றல்லாமல், நல்ல சினிமாவுக்கான நம்முடைய நம்பிக்கை தாகத்தை அதிகரித்துள்ளது, இந்த “கோலி சோடா ” !

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*