Home / அரசியல் / அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா?

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா?

போலீஸ் அதிகாரம் இல்லை, ஜன்லோக்பால் உட்பட எந்த மசோதாவையும் டெல்லி சட்டசபையில் நிறைவேற்ற முடியாத அமைப்பு, எதற்கும் மத்திய அரசின் ஒப்புதலைக் கேட்கும் நிலை; என மாநகராட்சி மேயர் பதவி அளவிற்கே அதிகாரம் கொண்டது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி சட்டசபை அரசியல் அமைப்பு என்று மக்களுக்கு அம்பலபடுத்தியிருக்கிறார் டெல்லியில் 48 நாட்கள் முதல் அமைச்சராக‌ இருந்து பதவி விலகிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜிரிவால்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கே அதிகாரம் இல்லை என்று மக்களாட்சி தத்துவத்தின் மீது தனது விமர்சனத்தை வைத்ததாலும், மக்களுக்கு அதை அம்பலபடுத்தியதாலும் மீண்டும் போட்டியிடும்போது ஆம் ஆத்மி கட்சி கடந்தமுறை நடந்ததுபோல அல்லாமல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படாமல் தனிப் பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரிய வெற்றி பெறலாம். அல்லது மீண்டும் ஆம் ஆத்மி கட்சி வந்தாலும் மீண்டும் போராடித்தான் ஆக வேண்டும், இந்த அதிகாரமற்ற டெல்லி அரசியல் அமைப்பு வடிவத்தை மாற்ற முடியவாப் போகிறது? என எண்ணி மக்கள் காங்கிரஸ் அல்லது பிஜேபியைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் நினைத்தால் அரசியல் அமைப்பை மாற்ற முடியும்!

மக்கள் நினைத்தால் டெல்லியின் சட்டசபை அரசியல் அமைப்பு வடிவத்தை மாற்ற முடியும், குறைந்தபட்சம் மற்ற மாநில சட்டசபை அளவிற்காவாவது அதிகாரம் பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தாவிடில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களே கூட கட்சிக்கு டெல்லியில் வேலை செய்வார்களா என்பது ஐயமே.

டெல்லி அளவிற்கு இல்லையென்றாலும், போலீஸ் அதிகாரம் போன்ற முக்கிய அதிகார‌ங்கள் பெற்றிருக்கிறது பிற மாநில சட்டசபை அரசியல் அமைப்பு. ஆனாலும் மாநில மக்களின் நலன்களை பாதிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது; வெளியுறவு போன்ற நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் எந்த அதிகாரமும் கிடையாது; ஆக குறுகிய அதிகார வரம்பு கொண்ட மாநில சட்டசபைக்கும் அரசியல் அமைப்பு வடிவ மாற்றம் என்பதும் தேவையே. ‘மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற மாநில உரிமையையும் மாநில மக்களின் நலன்களையும் வலியுறுத்தி மக்களிடம் வாக்குகளைப்பெற்று தமிழ்நாடு மாநில சட்டசபையில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது திமுக கட்சி. இந்திய துணைக்கண்டத்தில் ஆட்சியைப் பிடித்த முதல் மாநில கட்சி திமுக தான். சில அமைச்சர் பதவிகளுக்காக மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக‌ கைவிட்டதை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு எதிலும் அன்னிய முதலீடு என நாட்டை, நாட்டின் வளங்களை வெளிநாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்கள் சூரையாட அனுமதிக்கும், மாநில மக்களின் முழு அதிகாரத்தையும் தன்னுள் குவித்து வைத்துக்கொண்டு மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுக்கும் மத்திய அரசியல் அமைப்பு வடிவ மாற்றமும் அவசியம் என்பதை இத்துடன் இணைத்தே பார்க்க வேண்டும்.

மக்களுக்கு மாற்று தேவை, அதே நேரத்தில் தீர்வும் தேவை!

ஜன்லோக்பால், போலீஸ் அதிகாரம் இவைகளையும் தாண்டி மக்களின் அடிப்படை பிரச்சினைகளான தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி இவற்றில் ஆம் ஆத்மி கட்சி தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். டெல்லி தாண்டினால் சாதி, மத வேறுபாடுகள், கல்வி வேலைகளில் இடஒதுக்கீடு, மாநிலங்களிடையே நீர் பங்கீடு, மீனவர்கள்-விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்சனைகள் என நாட்டில்லுள்ள‌ எல்லா மாநில மக்களுக்கும் அடிப்படை பிரச்சனைகள் தாண்டி எண்ணற்ற பிரச்சனைகள். தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அண்டை மாநிலங்களுடன் நீர் பங்கீடு பிரச்சனை, இலங்கை ராணுவத்தால் நாள்தோறும் பிரச்சனைகளை சந்திக்கும் மீனவர் பிரச்ச்னை, மக்களின் எதிர்ப்பை மீறி மீனவர்கள்-விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ருசிய-அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்கள், டெல்டா மாவட்ட விவசாயத்தை அழிக்கும் மீத்தேன் திட்டம், கொங்கு மண்டல விவசாயத்தை கெடுக்க வரும் கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டம், நாகை மாவட்டத்தில் மக்களின் வாழ்வை அழித்து சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்போகும் 12 அனல்மின் நிலையத் திட்டங்கள், சீரற்ற தொழில்துறை வளர்ச்சி, விவசாய உற்பத்தியில் தேக்கம் என பல்வேறு பிரச்சனைகள். இவைகள் எல்லாவற்றிற்கும் ஆம் ஆத்மி கட்சியிடம் கொள்கை முடிவு உள்ளதா? மக்களுக்கு மாற்று தேவை, அதே நேரத்தில் அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வும் தேவை…

சனநாயகத்தின் அடிப்படையும் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வும்!

‘மக்களாட்சியில் அதிகாரமிக்கவர்கள் மக்களே’ என்ற சனநாயக அடிப்படையை மக்களுக்கு உணர்த்தி மக்களுக்கு முதலில் நம்பிக்கையை ஏற்படுத்த‌ வேண்டும்; அதோடு அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் தீர்வாக தனது கொள்கையை முன்வைத்தால் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் தொடர்ந்து இருப்பார்கள். அது மற்ற மாநில மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சில இந்திய அளவிலான ஊடகங்களின் ஆதரவு, ‘நாட்டின் நலம்(?) விரும்பும்’ சில கார்பரேட் நிறுவனங்களின் முன்னாள் செயல்அதிகாரிகளின் பலம், ஊழல் எதிர்ப்பு கொள்கை, ஜன்லோக்பால் திட்டம், அதிகாரமற்ற டெல்லி சட்டசபையின் 48 நாட்கள் போராட்ட ஆட்சி அனுபவம் இவைகள் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அடுத்த மாற்று என‌ கருத வைக்குமா? மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிற கொள்கை முடிவும், உகாண்டா பெண்கள் மீது அத்துமீறல்களை கட்டவிழ்த்த சட்ட அமைச்சரைத் தாங்கிப் பிடித்தது போன்ற தவறுகளை அவர்கள் களைவதும், இதுவரை அதிகாரக் கனியின் சுவையை அறிந்திராத தாழ்த்தப்பட்டவர்கள்-சிறுபான்மையினர்-மீனவர்கள்-பெண்கள்-மாற்றுப் பாலினர்-மாற்றுத் திறனாளிகள் என ‘கடைக்கோடி மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும்’ என்ற சனநாயக நோக்க‌மும் இல்லையென்றால் அது எந்த புனிதக் கட்சியானாலும், மக்களிடம் ஓட்டு மட்டும் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் பகல் கொள்ளை அடிக்கும் மற்ற கட்சிகளுக்கு இணையானதே! அதேவேளையில் சரியான கொள்கையுள்ள மாற்றை மக்கள் ஆதரிக்கவும் தயாராகவே உள்ளார்கள். உண்மையில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்நாபக் வினோத்.

About வினோத்

One comment

  1. நிச்சயமாக நல்ல வேண்டுகோள்களை வைதுள்ளிர்கள்.உகண்டா பெண்கள் விவாகரத்தில் அந்த பெண்களே தங்களை காப்பாற்ற ஆம் ஆத்மியை நாடி இருக்கிறார்கள்.மாநில பிரச்சினைகளில் கொள்கை முடிவு எடுக்காமல் இருப்பதற்கு காரணம் இன்னும் சரியான முறையில் காலுன்றாமல் இருப்பதே காரணம்.தங்களை போன்றவர்கள் இதில் சேர்ந்து நல்லதொரு கொள்கை முடிவுகளை எடுக்க உதவ வேண்டும்.மக்கள் நல்லதொரு மாற்று சக்தியை அடைய விரும்புகிறார்கள்.இந்த நல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*