Home / அரசியல் / தனியார்துறையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு

தனியார்துறையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு

“தனியார்மயமும், தனியார் துறையும், தலித்துகளின் பிரச்சனையும்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 15 அன்று பெங்களூரில் மார்க்சிஸ்டு கம்யூனிசுட்டு கட்சியினால் நடத்தப்பட்டது, இந்த கருத்தரங்கிற்கான ஒருங்கிணைப்பு குழுவில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெங்களூர் கிளையும் பங்குகொண்டிருந்தது. இந்த கருத்தரங்கு முழுவதும் தனியார்துறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு தொடர்பானதாகவே இருந்தது. இக்கருத்தரங்கில் நானூற்றுக்கதிமானோர் கலந்து கொண்டனர்.

கட்சியின் தோழர்களால் எழுச்சி பாடல்கள் இசைக்கப்பட கருத்தரங்கம் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட இந்திய சமூக அறிவியல் மையத்தின் தலைமை நிர்வாகியும், பொருளாதார நிபுணருமான, முனைவர், சுகாதோ தோரட் முதன்மை உரையாற்றினார். அவரின் உரைவீச்சு பின்வருமாறு…

ஒரு சிறிய வரலாற்றுச் சுருக்கம்:

1990களில் இந்திய அரசு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது, பாராளுமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் தனியார்மயக்கொள்கையை அடிப்படையாக வைத்து முதல் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார், இதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை, தனியார்மயம் தான் எல்லாவற்றிற்கும் மாற்று என சொல்லப்பட்டது, . அதற்கடுத்த நாள் சில அமைப்புகள் சேர்ந்து மாற்று வரவு-செலவு அறிக்கையைத் (தனியார்மயக் கொள்கைக்கு மாற்று கொள்கையின் அடிப்படையில்)) தாக்கல் செய்தன, அவர்கள் சொல்வது போல தனியார்மயம் தான் ஒரே தீர்வு என்பது பொய், மாற்றுக்கான வாய்ப்பு(வேறு கொள்கைகளும்) இருக்கின்றது என்பதை இது நமக்கு தெரிவிக்கின்றது, 1994ல் இந்த மாற்று வரவு -செலவு அறிக்கை தயாரிக்கும் குழுவில் நானும் கலந்து கொண்டேன்.அதே 1994ஆம் ஆண்டு நடந்த ஒரு கருத்தரங்கில் தனியார்மயக் கொள்கைகளினால் வேலைவாய்ப்பு எப்படி குறையும் என்றும், இது எப்படி நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டு கொள்கையைப் பாதிக்கும் என்றும் நான் பேசினேன், இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். அன்றிலிருந்து(1994) 2008 வரை தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் நடந்த வண்ணமே இருந்தன. 2008ல் சமூகநலத்துறை அமைச்சர் மீரா குமார் தனியார் துறையில் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கினார், இது பின்னர் வர்த்தக அமைச்சரான ஆனந்த் சர்மாவினால் முன்னெடுக்கப்பட்டது, அப்பொழுது மத்திய அரசு என்னை அணுகி இரண்டு ஆய்வுகளை நடத்தக் கோரியது, முதலாய்வு 13 நாடுகளில் அமலில் இருக்கும் இடஒதுக்கீட்டு கொள்கைகளைப் பற்றியதாகவும், இரண்டாவது ஆய்வு அரசு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்து வரும் சலுகைகளைப் பற்றியதாகவும் இருந்தது, பின்னர் வழமை போல இந்த ஆய்வு முடிவுகள் பரணுக்கு சென்று விட்டன. இதன் பின்னர் நாங்கள் அதுவரை செய்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து “தனியார் துறையில் இடஒதுக்கீடு” தொடர்பாக ஒரு நூலாக வெளியிட்டோம் என தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பான ஒரு சிறிய வரலாற்று சுருக்கத்தை கூறினார்.

கம்யூனிசமும், இடஒதுக்கீடும்..

கம்யூனிசம் அடித்தளம், மேல் தளம் என்ற தளங்களாக சமூகத்தை பிரிக்கின்றது, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அடித்தளமும், பொருளாதாரம் சாராத மற்றவை எல்லாம் மேல் தளத்திலும் உள்ளன, இந்த மேல் தளத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு சாதியே செயல்படுகின்றது. 1920ல் அம்பேத்கர் முதன்முறையாகத் தொடங்கியது சுயேட்சை தொழிலாளர் கட்சியாகும், பின்னர் (1920 லிருந்து 1937 வரை) அம்பேத்கர் கம்யூனிசுட்டுகளுடனான ஒரு தொடர் விவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். சாதியம் தொடர்பாக அதுவரை தத்துவ கோட்பாடு இல்லாதிருந்தது. அம்பேத்கர் “சாதியை ஒழிப்பது எப்படி”(Annihilation of caste) நூல்(முதலில் அம்பேத்கர் பேசிய இந்த உரை பின்னர் நூலாக வெளியிடப்பட்டது) அந்த தத்துவ கோட்பாட்டு அடித்தளத்தை வழங்கியது. சாதி ஒரே நேரத்தில் கருத்தியல், பொருளியல் தளங்களில் இங்கு செயல்பட்டு வருகின்றது என்பதை அந்நூல் எடுத்தியம்புகின்றது, அதுமட்டுமின்றி அந்நூல் நீங்கள் இங்கு எங்கு திரும்பினாலும் சாதிப்பூதம் தான் உங்கள் முன்னால் நிற்கும், அதற்கு பதில் சொல்லாமல் உங்களால் இங்கு எந்த மாற்றமும் செய்யமுடியாது என இந்திய சமூக நிலையை தெளிவாக எடுத்தியம்புகின்றது. இது, இடஒதுக்கீடு ஏன் தேவை என்ற அடித்தளத்தை கம்யூனிசுட்டுகளுக்கு வழங்குகின்றது.

இன்றைய நிலை:

இன்றைய நிலையைப் பார்ப்பதற்கு முன்னர், இதற்கு(1947க்கு) முன்னால் இருந்த நிலைமையை பார்த்துவிடுவோம்…

ஏழைகள் என்ற நிலையில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், உண்மை நிலையில் (சமூக யதார்த்தத்தில்) இருவரும் ஒரே நிலையில் இல்லை. 1901லிருந்து 1947 வரை பஞ்சாப் மாகாணத்தில் தலித்துகளுக்கு நிலங்களை வாங்கும் உரிமையில்லை என்பது சட்டபூர்வமாக இருந்தது. வெறும் 46 ஆண்டு அமலில் இருந்த சட்டத்தின் விளைவு இன்று வரை அங்கு உணரப்படுகின்றது. ஜாட்களிடமே பெரும்பான்மை நிலம் உள்ளது.2010ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 95% தலித் மக்கள் சொந்த நிலமில்லாமல் இருக்கிறார்கள். அதே போல நூற்றாண்டுகளுக்கு மேலாக இங்கிருந்த சமூகப்புறக்கணிப்பின் தொடர்ச்சியே இன்றைய தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மை நிலைக்கு காரணம் என்பதும், நிலப்பிரத்துவமுறையல்ல என்பதும் உங்களுக்கு புரியவேண்டும். அதே போல இங்கு ஒரு தலித் கடையைத் தொடங்கினால் அவனிடம் சென்று பொருட்களை வாங்காமல், புறக்கணித்து இறுதியில் கடையை மூடும் படி செய்துவிடுகின்றனர், ஆனால் அதே பொருளாதார நிலைமையில் உள்ள உயர்த்தப்பட்ட சாதிக்காரன் கடையைத் தொடங்கினால், எல்லோரும் சென்று அங்கு பொருட்கள் வாங்குவதன் மூலம் அந்த கடை தொடர்ந்து நடைபெறச் செய்கின்றனர். இதே அநீதி தான் இன்று ஹரியானாவில் வால்மீகி பெண்களுக்கும் நடைபெற்று வருகின்றது. அவர்களுக்கு அரசு மாடுகளை வழங்கியுள்ளது, அவர்களிடமிருந்து பாலை கூட்டுறவு சங்கங்கள் வாங்கக்கூடாது என ஜாட் சாதியினரால் மிரட்டப்பட்டு, இறுதியில் அவர்கள் மாட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதே போல இங்கு தொழிலாளர் வர்க்கமும் சாதி ரீதியாக பிரிந்தே கிடக்கின்றது. ஒற்றுமை, ஐக்கியம், பின்னாள் பார்த்துக்கொள்ளலாம் போன்ற வார்த்தைகள் தலித்களுக்குப் போதாது. அவர்களின் பிரச்சனையைப் பற்றி இங்கு பேசாமல் ஐக்கியம் சாத்தியமில்லை என்றார்.

திரு. சுகாதோ தோரட்

தனியார் துறையும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான அதன் வாதங்களும்…

இங்கே நலிவடைந்த பிரிவினர் என்பது ஒற்றை அர்த்தத்தில் இல்லை, இரண்டு சமூகமாக பிரிந்து கிடக்கின்றனர், வெறும் சமூக நலத்திட்டங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினர் முன்னேற உதவாது, தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பாதுகாப்பான தனித்த கொள்கைத்திட்டங்கள் இங்கு தேவை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என கேட்கும் பொழுது அவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைக்கின்றனர்.

1) இங்கு சாதிரீதியிலானப் பாகுபாடுகள் நடப்பதில்லை, தகுதி, திறமையின் அடிப்படையிலேயே எல்லாம் நடக்கின்றன.

2) தலித் ஏழையும், உயர்சாதி ஏழையும் ஒரே நிலைமையில்தான் வாடுகின்றனர். எனவே, பொருளாதார அடிப்படையிலேயே ஒதுக்கீடுகள் இருக்க வேண்டும்.

இந்த வாதங்களை கவனமாக பார்க்க வேண்டும், தனியார் துறை என்னதான் சாதிரீதியிலானப் பாகுபாடுகள் நடப்பதில்லை என்று கூறினாலும் யதார்த்தம் வேறு விதமாக உள்ளது. 2010ல் இந்தியாவில் உள்ள 1000 பெரிய (80விழுக்காடு வணிகத்தை கட்டுபடுத்தும்) நிறுவனங்களில் முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்ற ஆய்வு எடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 9052 பேரில் 8204 பேர் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்(அதாவது 92.7%, இதில் பிராமணர்கள் 47%, வைசியர்கள் 45.7%), 345 பேர் பிற்படுத்தப்பட்ட சாதியையும் (3.8%), 319பேர்(3.5%) தாழ்த்தப்பட்ட, பழங்குடி சாதியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சாதியைப் பார்க்காமல் தான் நாங்கள் செயல்படுகின்றோம் என்ற அவர்களின் வாதம் பொய் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. அடுத்து ஒரு ஆய்வு எங்கள் தலைமையில் நடத்தப்பட்டது. நாளிதழ்களில் வெளியாகும் வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கு நாங்கள் ஒரே தகுதி, திறமை கொண்ட உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரின் பெயர்களில் விண்ணப்பங்கள் அனுப்பினோம். ஒரே தகுதி கொண்டிருந்தாலும், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விகிதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35% குறைவாகவும், சிறுபான்மையினருக்கு 65% குறைவாகவும் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்தது. அதாவது தகுதி,திறமையின் அடிப்படையிலல்லாமல் சாதியின் அடிப்படையிலேயே தனியார் துறையும் செயல்பட்டுவருகின்றது. (இந்த ஆய்வுத் தகவல்கள் தோரட்டின் – Blocked by Caste – Economic Discrimination In Modern India என்ற நூலில் விரிவாக உள்ளது). இதனால் இங்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடுப் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தனியார் துறையிலும் தேவைப்படுகின்றது. அதே போல வேலைக்கு ஆட்களை எடுக்கும் முறையிலும் மூன்று புதிய முறைகளை தனியார்துறை பின்பற்றுகின்றது.

1) கல்லூரி வளாகத் தேர்வு (Campus interview)

2) இணையதளங்களில் அழைப்பு கொடுத்தல்

3) சில மனிதவள அலுவலகம் மூலம் (HR Agency)

இப்படி வேலைக்கு ஆள் எடுக்கும் முறையானது வெளிப்படைத்தன்மையில்லாமல் இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும். இங்கு சமூகத்தின் எல்லா தளங்களிலும் சாதி அடிப்படையில் புறக்கணிப்பு நடைபெறுகின்றது. அது வெறுமனே நடப்பதில்லை. இங்குள்ள ஒவ்வொருவரின் இரத்தத்திலும் சாதி புறக்கணிப்பு ஊறியுள்ளது(It is not just Discrimination, Here Discrimination Induced) என்றார்.

அடுத்து சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரான தேவனூர் மகாதேவன் பேசும் பொழுது சில முக்கியமான புள்ளிவிவரங்களைக் கூறினார். கர்நாடக வீட்டு வசதி வாரியம் இதுவரை 40,000த்திற்குமதிகமான வீடுகளை பொதுமக்களுக்காக கட்டிகொடுத்ததில் வெறும் 400 வீடுகள் மட்டுமே தலித் மக்களுக்கு கிடைத்துள்ளது, அதே போல கர்நாடக சிறு தொழில் வளர்ச்சி ஆணையம் இதுவரை தொடங்கியுள்ள 60000 தொழில்களில், 350 மட்டுமே தலித்துகளுக்கு கிடைத்துள்ளது என பகிர்ந்தார்.

மாநாட்டு மலர் வெளியீடு, வலமிருந்து இடம்- திரு.மாதேஸ்வரன். தோழர்.சிறீராம், திரு.தோரட், தோழர்.தேவனூர் மகா தேவய்யா…

அடுத்து பொருளாதாரத்துறை பேராசிரியர் மாதேஸ்வரன் பேசும்பொழுது, தமிழ்நாட்டில் தனியார்துறையில் 18% தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர்(மொத்த மக்கள் தொகை 20%), இதே கர்நாடகத்தில் வெறும் 9%(மொத்த மக்கள் தொகை 24%) உள்ளனர். அதே போல அவரது அண்மைய ஆய்வு ஒன்றில் 30% சாதிய புறக்கணிப்பு தனியார் துறையிலும், 10% சாதியப்புறக்கணிப்பு பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெற்றுவருகின்றது எனக் கூறினார். 60 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வரும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே 10% சாதிய புறக்கணிப்பு நடந்துவருகின்றது என்பது இங்கே சாதி எந்த அளவு பரவியுள்ளது என்பதையே காட்டுகின்றது, இதில் இடஒதுக்கீடே இல்லாத தனியார்துறையில் சாதிப்புறக்கணிப்பே இல்லை என்பது பொய்யே எனக்கூறினார்.

அடுத்து மார்க்சிஸ்டு கட்சியின் கர்நாடகாவிற்கான மையக்குழு உறுப்பினர் சிறீராம் பேசும்பொழுது, உலகில் 1% பேர் மொத்தமுள்ள சொத்தில் 80% கொண்டுள்ளனர், அதே போல இங்கே இந்தியாவில் 20% மக்களிடம் 80% நிலங்கள் உள்ளன, மீதமுள்ள 80% மக்களிடம் 20% நிலமே உள்ளது, தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களாகவே உள்ளனர். 1950ல் அம்பேத்கர் அவர்கள் இங்கு சமூகப் பொருளாதார சமத்துவமின்மை நீடித்துவருகின்றது எனக்கூறினார். இன்று 2014லும் இதே நிலைதான் உள்ளது. அம்பேத்கரைப் பின்பற்றுவது என்பது அவரது புகைப்படத்தைத் தொழுவதும்,அவரது பிறந்த தினத்திற்கு விடுமுறை கோருவதமன்று, அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளைச் செய்வதும், அவரது கொள்கைகளை வளர்த்தெடுப்பதுவுமேயாகும். அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டது எனவும், இங்கு அனைவருக்குமான வளர்ச்சி (Inclusive Growth) என்ற பதம் அடிக்கடி அரசால் பயன்படுத்தப்படுகின்றது, எப்பொழுது இங்குள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடி, சிறுபான்மையின மக்களும் வளர்கின்றார்களோ அப்பொழுது தான் அது உண்மையான அனைவருக்குமான வளர்ச்சியாகும்,அதுவரை அது வெறும் பதமே என அவர் கூறினார். தோழர்.சிறீராமின் உரையுடன் காலை அமர்வு முடிவடைந்தது.

நற்றமிழன்.ப

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*