Home / FITE சங்கம் / இரவுகளை மீட்டெடுப்போம்

இரவுகளை மீட்டெடுப்போம்

இது ஒரு இருள் படிந்த கணம். உமா மகேஸ்வரி எதிர்கொண்ட கொடூரமான வன்முறையும் அவரின் துர்மரணமும் கோபம் அச்சம் துயரம் என எல்லாம் கலந்த ஒரு இருள்வெளியை நம்மீது சுமத்துகிறது. அவரை இழந்து நிற்கும் அவரின் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் அவருடைய இழப்பு ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஈடு செய்யமுடியாதது. அவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கேட்டு உமா மகேஸ்வரிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்கும் அதே வேளையில் பெண்களின் சுதந்திரம், மாண்பு, பாதுகாப்பு குறித்த கவலைகள் நம்மை தினமும் அரித்தெடுக்கின்றன. கடந்த ஓராண்டில் நடந்துள்ள பெண்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பெண்கள் இயல்பாக தெருக்களில் குறிப்பாக இரவு நேரங்களில் நடமாடுவதற்கான பாதுகாப்பு குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன. ஏனெனில் இந்த வன்முறை நம் அன்பிற்குரிய தோழியின் உயிரைப் பறித்த அதே நேரத்தில் நம் அனைவரின் குடும்பத்தாரையும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. நாம் நம்முடைய நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய பாதுகாப்பு வசதிகளை கேட்டுப் பெறும் அதே வேளையில் நாம் அனைவரும் இணைந்து நின்று வளாகங்களின் உள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு ஏற்றதான ஒரு வெளியை உருவாக்க குரல்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.

படித்து பட்டம் பெற்று போராடிப் பெற்ற பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த அச்சமும் அது எழுப்பும் பாதுகாப்பு வளையங்களுக்கான கோரிக்கையும் மட்டுமே அவர்களுக்கான விடையாக இருக்கமுடியாது. ஒரு சமமான நீதியான உலகத்தை விரும்பும் பெண்களாகவும் ஆண்களாகவும் நாம் பெண்களை முடக்கிப் போட முயலும் இந்த வன்முறைகளை எதிர்த்து ஒரு வலிமையான குரலை எழுப்ப வேண்டியிருக்கிறது.

நாங்கள் பயப்படமாட்டோம், ஒன்றுபட்டு ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுப்போம், எங்கள் இரவுகளையும் பகல்களையும் நகரங்களையும் அதன் வெளிகளையும் மீட்டெடுப்போம். உமாவின் நினைவை இந்த இருளில் ஒரு நினைவாக ஏந்தி நிற்போம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு மெழுகுவர்த்தியாக… அதே நேரம் இது போன்ற வன்முறைகள் நம்முள் விதைக்க முயலும் அச்சத்தை வேரறுக்கும் தீப்பந்தமாக… ஒன்றுபட்டு நாம் தகவல் தொழிநுட்ப வளாக சாலைகளை, ஆளற்ற ரயில் நிலையங்களை, வெறிச்சோடிய பேருந்து நிலையங்களை மட்டுமல்ல இருண்டு கிடக்கும் இந்த ஆணாதிக்க சமுகத்திற்கும் ஒளியேற்றுவோம்.

About விசை

4 comments

1. முதல் நாள் இரவு உமாவை ஒரு வட மாநிலத் தொழிலாளி தாக்க முற்படுகையில், அவர், அவனை அடித்து விலக்கியிருக்கிறார். நிச்சயம் இதைப் பற்றி அவர் தனது சக ஊழியர்களிடம் கூறியிருப்பார். தனது மனித வளத்துறையிலும் கூறியிருப்பார். ஆனால், உமாவின் சக ஊழியர்களோ, அதைப் பற்றிக் கவலைப்பட்டவர்களாலாகவே தெரியவில்லை. அவரது மேலதிகாரிகளும் அப்படியே. இவ்வளவு பொறுப்பற்ற நிலையில் இருக்கும் இவர்கள், வெறும் மெழுகுவர்த்தி ஏந்திவந்து

2.
அவர் கூறியிருப்பார், இவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பது எல்லாம் அனுமானத்தின் அடிப்படையில் எழுவது, அனுமானத்தை வைத்து கொண்டு இவர்கள் இப்படித்தான் என சொல்வது மிகவும் தவறு.

ஐ.டி ஊழியர்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என்பதை தான் 24 அன்று மாலை சிறுசேரி சிப்காட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் உடைத்து காட்டியுள்ளது. அதைப் பற்றிய பதிவும் இதே வலைதளத்தில் "உமா மகேசுவரி படுகொலையை

3. //இரவை ஆண்களுக்கான ஒன்றாக மட்டும் மாற்ற எத்தனிக்கும் முயற்சிகளும் அதே வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த முயற்சியை முறியடிக்கவும் இரவைப் பெண்களுக்கான வெளியாக மாற்றவும் ‘இரவை மீட்டெடுப்போம்’ என்கிற கோஷத்துடன் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் பெண்களையும் ஆண்களையும் திரட்டிப் பேரணி நடத்தினார்கள் சேவ் தமிழ் அமைப்பினர். பிப்ரவரி 28ஆம் தேதி அன்று இரவு நடந்த இந்த ஊர்வலத்தில் வழக்கமாகக்

4. //சென்னை சிறுசேரியில் படுகொலை செய்யப்பட்ட பெண் மென் பொறியாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, அவர் பணிபுரிந்த அலுவலகம் முன் நடைபெற்றது.
சேவ் தமிழ் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மேலும், இரவுகளை மீட்டெடுப்போம் எனும் பொருளை மையமாகக் கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தியபடி அமைதி ஊர்வலமும் நடத்தப்பட்டது.//

http://

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *