Home / அரசியல் / காவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல….

காவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல….

பூவுலகின் நண்பர்கள் மற்றும் சேவ் தமிழ்சு இயக்கம் இணைந்து நடத்திய ”மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்” அரங்கக் கூட்டம் நேற்று ( 2 மார்ச் 2014 ) சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் காவிரிப் படுகை விவசாயிகள், அரசியல் சமுக ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

’மீத்தேன் திட்டமும் வரவிருக்கும் ஆபத்துகளும்’ என்ற தலைப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.தோழர் கோ.திருநாவுக்கரசு உரையாற்றும் போது, இயற்கை விவசாயம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பு விவசாயமே சாத்தியமற்றதாக மாறக்கூடிய ஒரு சூழல் தான் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.மனிதனின் அடிப்படை தேவையான உணவு உற்பத்திக்கு மூல ஆதாரமான நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கக் கூடிய ஒரு திட்டமாகத் தான் மீத்தேன் திட்டம் இருக்கிறது. ஏற்கெனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்த மண்ணை சிதைத்து விட்டார்கள். இப்போது மண்,காற்று, நிலம், நீர் ஆகிய அனைத்தையும் இந்த மீத்தேன் திட்டத்தின் மூலம் அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த மீத்தேன் திட்டத்திற்காக 500 அடி முதல் 1650 அடிவரை, ஆழ்துளை குழாய்கள் வளமான நிலத்தைக் குடைந்து அமைக்கப்படுகின்றன. அப்போது உருவாகும் வெற்றிடத்தில், நிலக்கரி உருவான காலத்தில் தோன்றிய, கடல் நீரை விட ஐந்து மடங்கு உப்பு நீர் சென்று சேருகிறது. இவ்வாறு சேரும் போது நிலத்தடி நீர் வறண்டு போகிறது. அது மட்டுமின்றி, இராசயனக் கலவையோடு வெளியே கொட்டப் படும் இந்த உப்பு நீர், கதிரியக்கம் வாய்ந்ததாக இருப்பதால் நிலத்தை நஞ்சாக்குவதோடு, பல்வேறு கொடிய நோய்களுக்கும் காரணமாக இருக்கப் போகிறது. வளர்ச்சி என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களான அம்மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது. இந்த மண்ணும், நீரும், காற்றும், சூரியனும் அம்மக்களின் உரிமை. இவ்வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஏலம் போடுவதற்கு துளியளவும் உரிமை கிடையாது.

அடுத்து பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு. தோழர் அலிஸ்பாகு, மீத்தேன் திட்டத்தின் செயல்முறை மற்றும் அபாயங்கள் பற்றி விளக்கும் காணொளி ஒன்றை திரையிட்டு பேசினார். ’நீரியல் விரிசல்’ (Hydralic fracturing) என்றழைக்கப்படும், ஓரிடத்தில் துளையிடப்பட்டு, செருகப்படும் இந்த ஆழ்துளைக் குழாய்கள், நீள்வாக்கில் மூன்று அல்லது நான்கு கி.மீட்டர்கள் வரை பயணிக்கக் கூடியது. ஆகவே ஓரிடத்தில் தான் துளையிடப் பட்டுள்ளது. மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது என்று நிம்மதியாக உறங்கி விட முடியாது. இத்திட்டத்தின் பிரதான இலக்கு கனிம வளம் நிறைந்த காவிரிப் படுகைகளில் கிடைக்கும் நிலக்கரியே. நேரடியாக திறந்த வெளிச் சுரங்கங்கள் அமைத்து நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு முன்பு, இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சி எடுப்பது தான் இவர்களின் முதற்பணி. அதற்கு முன்பு, நிலக்கரிப் படிமங்களின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீரையும் உணவு உற்பத்தியையும் பாதிக்கும் இந்நயவஞ்சக திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள பகட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மக்களுக்கு சாலை வசதிகள் அமைத்து தருவதாகவும் தொழில் வளம் பெருகி மக்கள் செல்வச் செழிப்படைவார்கள் என்றும் பொய்யான பரப்புரைகள் செய்யப்படுகின்றன.

திருவாரூர் வெள்ளக்குடி பகுதியில் ஏற்கெனவே ONGC நிறுவனத் திட்டத்தின் காரணமாக, அந்த மண் முழுதும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். ஒரு சிறுவனும் உயிரிழக்க இத்திட்டம் காரணமாக இருந்திருக்கிறது. இதுவரை அச்சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையும் காவல்துறையால் பதிவு செய்யப் படவில்லை. ONGC நிறுவனம், பல கோடி ரூபாய்கள் செலவழித்து, அரசியல்வாதிகளையும் ஊராட்சித் தலைவர்களையும் இவ்விபத்து குறித்து பேசாமல் இருக்க, விலைக்கு வாங்கியிருக்கிறது.

’காவிரிப்படுகையும் மீத்தேன் திட்டமும்’ என்ற தலைப்பில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு. தோழர் க.மா.இரணியன் உரையாற்றும் போது, தமிழகம் எந்த அளவு கனிம வளச் சுரண்டல்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை விளக்கினார். தமிழகத்தின் வளம் மிக்க, காவிரிப்படுகையில், காவிரி நீர் மறுக்கப்பட்டிருப்பதால், நிலத்தடி நீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்யக் கூடிய நிலை தான் இன்று இருக்கிறது. மேலும் காவிரிப்படுகையில், பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. காவிரி நீர் மறுக்கப்படுவதில் தொடங்கி, இரசாயன உரங்களால் மண் பாதிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் குவாரி கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிப்பு, அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவதால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்படுதல், கடலோர பகுதிகளில் அமைக்கப்படும் இறால் குட்டைகள், சர்க்கரை ஆலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுதல் என்று ஒட்டு மொத்த காவிரிப்படுகையுமே இன்று பாலைவனமாக மாறக் கூடிய அபாயகரமான சூழலில் தான், மீத்தேன் திட்டம், அம்மக்களை ஒட்டுமொத்தமாக நாடோடிகளாக அம்மண்ணை விட்டு வெளியேறச் செய்யவிருக்கிறது.

2010 காங்கிரசு அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2011 திமுக ஆட்சியில், ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த்ததின் மூலம் வலுப்பெற்றது. தற்போது மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படவில்லை. சில இடங்களில் மக்களே போராடி, அக்குழாய்களை உடைத்து அகற்றியிருக்கின்றனர். மன்னார் குடி திறந்த வெளிச்சுரங்கம் தான் இவர்களின் பிரதான இலக்காக இருப்பதால், இத்தகைய மக்கள் போராட்டங்களை ஒட்டுமொத்தமாக நசுக்க வேண்டும். அதற்கு முன்பு, மக்கள் தாமாகவே ஊரை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் அப்படி வெளியேற வேண்டுமானால், விவசாயத்தை அடியோடு அழிக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆதாரமான நிலத்தடி நீரை நஞ்சாக்க வேண்டும். மண்ணை பாலைவனமாக்க வேண்டும் என்பதே அரசுகளின், பன்னாட்டு நிறுவனங்களின் திட்டமாக இருக்கிறது.

தமிழகத்தில் வீராணம் குடிநீர் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் காவிரிப்படுகை பாதுகாக்கப்பட வேண்டும். காவிரிப்படுகை பாதுக்காக்கப்பட வேண்டுமெனில் குடிநீர்க்குழாய், விவசாயத்திற்கு பயன்படும் நிலத்தடி நீர்க்குழாய், நிலத்தடி நீரை மேம்படுத்த பயன்படுத்தப்படும் குழாய் ஆகிய மூன்று குழாய்களைத் தவிர வேறேந்த குழாய்களையும் நம் மண்ணில் அனுமதிக்கக் கூடாது. கெயில், மீத்தேன் போன்ற அழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராட வேண்டும்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின், சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் சுந்தரராசன் அவர்கள், மாற்றுவழிகள் குறித்து தமது விவாதத்தை முன் வைத்தார். மனிதக் கழிவுகளிலிருந்து எரிவாயு எடுக்கப்பட்டு, அதை அன்றாட வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை செய்முறை வடிவில் எடுத்துரைக்கும் புதிய தலைமுறை காணொளி ஒன்றைத் திரையிட்டார். ஆழ்துளை கிணறுகள் மூலமாகத் தான் மீத்தேன் எடுத்தாக வேண்டும் என்பது பொய்யான பரப்புரை. மனிதக் கழிவுகளிலிருந்து கூட மீத்தேன் எடுக்கலாம். மனிதக் கழிவுகளைக் கையாளுவதில் மன ரீதியான சிக்கல்கள் நம்மிடையே இருக்கின்றன. மலத்தை அள்ளும் வேலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுடையது என்ற நமது மனத்தடைகளை அகற்றினால் மட்டுமே, மாற்றுவழிகள் குறித்து நாம் யோசிக்க முடியும். கூடங்குளம் அணு உலையில் உள்ள டர்பனைச் சுழலச் செய்ய, அணுப்பிளவின் மூலம் பயன்படுத்தப்படும் வெப்பத்திற்கு பதிலாக, மீத்தேன் வாயுவைக் கூட பயன்படுத்தலாம். இந்த மீத்தேன் வாயுவை, மேற்சொன்ன மனிதக் கழிவுகளிலிருந்தும் உருவாக்கலாம்.

இன்று பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. அதில் பல தொழில்கள் இல்லாவிட்டாலும் மனிதன் நிம்மதியாக உயிர்வாழ முடியும். ஆனால் விவசாயமின்றி மனிதன் உயிர் வாழ முடியாது. அத்தகைய விவசாயத்தின் மீது தான் அரசு, அழிவுத் திட்டங்களை ஏவுகிறது. அத்திட்டங்களை சட்டமாக்குகிறது. இது குறித்த விழிப்புணர்வு, விவாதம் இன்று ஊடகங்களிலும் பொதுத் தளங்களிலும் அதிக அளவில் இல்லை. ஏனெனில் ஊடகங்கள் முதலாளிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் சிக்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு ஆபத்தான போக்கு.

சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில், யாருக்காக மீத்தேன் திட்டம் என்ற அரசியலை முன் வைத்து தனது கருத்துகளை பதிவு செய்தார். மீத்தேன் திட்டத்திற்கு பல மாற்று வழிகள் இருக்கும் போது, அரசு ஏன் இப்படி ஒரு அபாயகரமான திட்டத்தை கையிலெடுக்க வேண்டும். உலகமய பொருளியல் கொள்கையானது, எவ்வளவு வேகமாக பொருளீட்ட முடியுமோ, அத்தகைய வழிமுறைகளையே பின்பற்றுகிறது. ஆய்வுகள் சார்ந்து, மக்களுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று வழிகள், கால அவகாசம் எடுப்பதால், அம்மாற்று வழிகள் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. எவ்வளவு வேகமாக இயற்கை வளங்களைச் சூறையாட முடியுமோ, லாபம் சம்பாதிக்க முடியுமோ அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இதை Crony Capitalism என்றழைப்பார்கள்.

இந்திய அரசின் வளர்ச்சிக் கொள்கையில் தான் கெயில்(GAIL), மீத்தேன், கூடங்குளம் அணு உலை ஆகிய அனைத்து நாசகார திட்டங்களும் மையம் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே கெயில் நிறுவனம் குழாய்களை நம் நிலத்தினூடே அமைத்து விட்ட காரணத்தால் தான், மீத்தேன் திட்டமும் தமிழகத்தில் எளிதாக ஊடுருவ முடிகிறது. ஆகவே இந்த திட்டங்கள் அனைத்தும், ஒன்றுக்கொன்று மறைமுகமாக தொடர்பு கொண்டவை. மீதேன் திட்டம் விவசாயிகள் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை மீனவர்கள் பிரச்சினை என அந்தந்த வட்டாரப் பிரச்சினைகளாக இவைகளைச் சுருக்காமல், பரந்து பட்ட மக்களை ஒன்று திரட்டி, இந்திய அரசின் ஏகாதிபத்திய உலக மயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்க்கும் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்திய அரசுக்கு எதிராக, தமிழகம் தழுவிய ஒரு போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

’மீத்தேன் திட்டமும் நம்மாழ்வாரும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய, தோழர் அரச்சலூர் செல்வம், விவசாயிகளை முற்றாக ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தி பேசினார். 68 விழுக்காடாக இருக்கும் விவசாயிகளை, 25 விழுக்காடாக குறைப்பதன் மூலம், உள்ளூர் உற்பத்தியை கட்டுப்படுத்தி, அந்நிய சந்தையிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யலாம். அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டலாம் என்றும் ஆளும் அரசுகள் கணக்கு போடுகின்றன. “விவசாயிகள் வேறு வேலை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின், வளர்ச்சி சிந்தனைகளைப் பாருங்கள். இப்படியான விவசாயிகள் விரோதப் போக்கை எதிர்த்துத் தான்,நம்மாழ்வார் போராடினார். தனது உடல்நிலை தொடர்ந்து ஒத்துழைக்காத நிலையிலும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தவர் நம்மாழ்வார். காவிரிப்படுகையில் கிராமம் கிராமமாகச் சென்று பரப்புரை செய்தார். இந்த அழிவுத் திட்டங்களை எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதற்கான மாற்று வழிகளையும் முன் வைத்தார். களத்திலியே தனது உயிரையும் இழந்தார். அவர் ஒரு துப்பாக்கி தூக்காத செகுவேரா.

அரங்கக் கூட்டத்தில், திருவாரூரில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும், மத்திய அரசு ஊழியர் தோழர் சக்திவேலும் தனது கருத்துகளை பதிவு செய்தார். மருத்துவர் இரா.பாரதி செல்வன் அவர்கள் எழுதிய, மீத்தேன் திட்டம் – கண்ணை விற்றுச் சித்திரமா? என்ற குறுநூலும் வெளியிடப்பட்டது. முதல் நூலை, தோழர் கோ.திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். தோழர் பாரதி செல்வன், உலகெங்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்கள் அணி திரண்டு போராடியதால் தான், இன்று அத்திட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடி, மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறுத்தச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

About செந்தில்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*