Home / அரசியல் / தமிழ் நாடு / ஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு-3

ஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு-3

அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் மார்ச் 8, 2014

மார்ச் 8. ஆண்டுதோறும் வருகின்றது. பெண்கள் தின வாழ்த்துகள் என்று மின்னஞ்சல் வருகின்றது. பெண்களின் மாண்பும், உயர்வும், பெருமையும் பேசப்படுகின்றது. கோலப் போட்டிகள், அழகுப் போட்டிகள், நடனப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நம்மில் சிலர் புத்தாடை அணிந்து செல்கின்றோம். ஆனால், இவை அனைத்தையும் விட இந்நாளுக்கென்றொரு முக்கியத்துவம் உண்டு. வாக்குரிமைக்காவும் ஆணுக்கு இணையான சம்பளத்திற்காகவும் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும் பெண்கள் போராடிப் பெற்ற வெற்றியைக் குறிக்கும் நாள். அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டு தான் இருந்தது என்பதை உணர்த்தி நிற்கும் நாள். போராடினால்தான் நம் உரிமைகள் கிடைக்கும் என்ற உண்மையை உரைக்கும் நாள்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன சமூகத்தில் நாம் படித்து பட்டம் பெற்று பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்களுக்குள் பணி செய்ய வந்ததற்கு பின்னால் எத்தனையோ பெண்களின் போராட்ட வரலாறு இருக்கின்றது. ஆனால் இன்னும் உடைத்தெறியப்படாத அடிமை விலங்குகள் நம்மீது சுமத்தப்பட்டே இருக்கின்றன.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தோழி ஏதோ ஒரு வடிவில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றாள். பாலியல் சீண்டல், ஆசிட் வீச்சு, பாலியல் வன்புணர்ச்சி, கொலை என்று எத்தனையோ வடிவங்களில் வன்முறை நடந்தவண்ணமே இருக்கின்றது.

தில்லியில் நிர்பயா, காரைக்காலில், வினோதினி, ஆதம்பாக்கத்தில் வித்யா என்று நீளும் பட்டியலில் இப்போது சிறுசேரியில் உமா மகேஸ்வரி. பெண்கள் வன்முறைக்கு ஆட்படும்போது பெண்களே குற்றஞ்சாட்டப் படுகின்றனர். நாம் என்ன ஆடை அணிய வேண்டும், எத்தனை மணி வரை வெளியில் இருக்கலாம், எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்று பெண்களின் தலையில் சுமத்தப்படும் விதிகள். எத்தனையோ! பெட்டிக்குள் பூட்டி வைத்து பாதுகாக்க நாம் ஒன்றும் உயிரற்ற பொருள் அல்ல. வெறும் சதை குவியலும் அல்ல. உயிரும் உணர்வும், விருப்பங்களும், தேர்வுகளும், சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட மனிதர்கள்.

சென்னையில் மட்டும் 4 இலட்சம் பேர் ஐ.டி. துறையில் பணிபுரிகின்றனர். அதில் 40% பெண்களாம். சரி, ப்ராஜெக்ட் மானேஜர்கள், லீடர்களில் எத்தனை சதவிகிதம் பேர் பெண்கள்? பெண் என்பதால் வெளிநாட்டு வாய்ப்புகள் மறுக்கப்படவில்லையா? பெண் என்பதால் appraisal இல் வேறுபாடு இல்லையா? திருமணத்தின் பெயராலும் குழந்தை பிறந்துவிட்ட காரணத்தாலும் வேலையைவிட்டு வீட்டுக்குள் முடங்கிய பெண்கள் எத்தனை சதவிகிதம் பேர்? ’career’ என்பது ஆணுக்கு மட்டும் உரித்தான சொல்லா? இந்த சமத்துவமின்மைக்காக யார் பேசப் போகின்றார்கள்? சமையல் செய்வதும் குழந்தை வளர்ப்பதும் பெண்ணின் பிறவிக் கடமையென்று சொல்லி வளர்க்கப்படும் ஆண்களா?

இல்லை. நாம் தான் பேசியாக வேண்டும். நமக்காகப் பேசியாக வேண்டும். சுயமரியாதைக்காகவும் பாதுகாப்புகாகவும் சமத்துவத்துக்காகவும் நாம் பேசியாக வேண்டும். கெஞ்சினாலோ கொஞ்சினாலோ இவை மாறப் போவதில்லை. வேண்டிக் கேட்டுக் கொள்ள இவை ஒன்றும் நமக்கு வழங்கப்படும் சலுகைகள் அல்ல. இவை நம் உரிமைகள் இந்த ஆணாதிக்க சமூகத்தின் செவிப் பறைகள் கிழியும்படி உரக்கச் சொல்வோம்!

பாதுகாப்பும் சமத்துவமும் எமக்கு சலுகைகள் அல்ல; எமது உரிமைகள்

இப்படிக்கு,

உழைக்கும் பெண்.

About விசை

2 comments

  1. எத்தனை கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பதில் மட்டும் வராது. வாயடைத்துப் போனவர்களாக, நாக்கற்றவர்களாக மாறி விடுவதும் இங்கு ’யதார்த்தம்’……. <br />

  2. இந்த யதார்த்தத்தை மாற்றும் போராட்டத்தில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*