Home / FITE சங்கம் / ஐ.டி தோழி பேசுகின்றேன்… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 5

ஐ.டி தோழி பேசுகின்றேன்… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 5

தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் நான் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். எழாண்டுகளாக இத்துறையில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். இங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் உண்மை நிலைமையைப் பலர் அறிந்திருக்கவில்லை என‌ நான் கருதுகின்றேன்.

இங்கே வேலை செய்பவர்களை மதீப்பீடு செய்ய பயன்படுத்தும் முறைக்கு அப்ரைசல் (Self Appraisal) எனப்பெயர், உண்மையில் இது சுயதம்பட்டமே. எப்படி ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் தங்களைத் தாங்களே விளம்பரம் செய்கின்றார்களோ அதைப் போல, நன்றாக திறன்பட வேலை செய்தாலும், நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் அப்ரைசல். இந்தப் போட்டியின் மதிப்பெண்னைக் கொண்டே அந்த ஆண்டுக்கான போனஸ்(Bonus/incentive), ஊதியம் தீர்மானமாகிறது. என்னுடன் வேலை செய்யும் தோழிக்கு நடந்த சம்பவம் இது. அவளுக்கும், அந்த அணியில் பணிப் புரியும் ஆண் நண்பனுக்கும் கடும் போட்டி. அவனை விட அவள் தொழில் நுட்பத் திறன் மிகுந்தவள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அயினும் அந்த ஆணுக்கே முன்னுரிமை வழங்கி, அங்கீகாரம் கிடைத்தது. அந்தப் பெண் தன் மேலதிகாரியிடம் முறையிட்ட போது கிடைத்த பதில், “ You haven’t created the visiibily. I was not aware that you would be expecting a good rating!! I know that you are a key resource in this project. But still we missed to recognize you.”. பெண் என்ற காரணத்தால் அவளுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

பெண்கள் சிறிய காலம் வேலை செய்வார்கள், அப்புறம் கல்யாணம் செய்து ஒரு குழந்தைப் பெற்றப் பிறகு வேலை விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படுகின்றது, கர்ப்பமான பெண்ணை ப்ரோஜெக்ட்டில் சேர்க்க தயங்குகின்றனர். இப்பெண்களால் ப்ரொஜெக்ட்டில் நீண்ட நேரம், பணிச்சுமையால் ஏற்படும் மன‌அழுத்தத்தோடு (Stress due to work load) வேலை செய்ய முடியாது என்றுக் காரணம் சொல்லப்படுக்கின்றது. கர்ப்ப‌ காலத்தில் பெண்களுக்கு உடலாலும், மனதாலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும், எனவே அவர்களால் முழுக் கவனமும் செலுத்தி வேலை செய்ய முடியாது போகாலாம். இது இயற்கையில் நடக்கும் மாற்றம் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும்.

திறன் மிக்கவர்களாக இருந்தாலும் மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெரும்பாலான பெண்களுக்கு அப்ரைசலில் குறைந்த மதீப்பீடு வழங்க‌ப்படுக்கின்றது. சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு காலம் 3 மாதமாக உள்ளது. மருத்துவரின் சான்றிதழ் வாங்கினால் மேலும் 1 மாதம் விடுப்பு எடுக்கலாம். தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப 1 வருடம் வரை விடுப்பு எடுக்கலாம். ஆனால் அதற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. 4 மாதக் கால மகப்பேறு விடுப்பை இந்த ஆண் சமூகம் பெண்களுக்கு அளிக்கும் சலுகையாகவே பார்க்கிறது. சில நிறுவனங்களில் 3 மாதம் மட்டுமே விடுப்பு தரப்படுகிறது.

வெளிநாட்டுக்குச் சென்று பணிப் புரிய தரப்படும் அனுமதிச்சீட்டும் (விசா) பெண்களுக்கு மறைமுகமாக மறுக்கப்படுகிறது. விசா பெற்ற பெண்கள் குடும்பச் சூழல் காரணம் காட்டி போவதில்லை என்ற காரணத்தை பயன்படுத்தி, அந்த வாய்பை விருப்பமுள்ள ஒரு ஆணுக்குத் தரலாம் என்ற கருத்து பெரும்பான்மையான மேனேஜர்களிடம் இருக்கின்றது.

குழந்தை பெறுதல், அவர்களை பேணுதல் என்பது ஒரு பெண்ணின் கடமையாகவே இருக்கின்றது. பெரும்பாலான பெண்கள் குடும்பம், வேலைப் பளு இரண்டையும் சமாளிக்க முடியாமல் வேலையை விட வேண்டிய சூழலுக்குத் தள்ளப் படுகின்றனர். ஆணுக்கும் தன் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புள்ளது என்பதை இந்த சமூதாயம் ஏற்க மறுக்கின்றது.

வர்மா கமிடியின் பரிந்துரையின் படி வேலையிடத்தில் நடக்கும் பாலியல் சீண்டலகள் குறித்துப் புகார் அளிக்க “Sexual Harassment Complaints Committee” எல்லா நிறுவனங்களிலும் அமைத்திட வேண்டும். அந்த கமிட்டியில் பெண்கள் சுதந்திரமாக தனது பிரச்சனைகளைப் பற்றிப் பேசி, அதற்கான தீர்வுகள் கிடைக்க‌ வேண்டும். ஆனால் இதுவரை பெரும்பாலான நிறுவனங்கள் இதை அமல்படுத்தவில்லை, இதை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதை முதலாளித்துவத்தோடு சேர்ந்து ஆணாதிக்கமும் தடுக்கின்றது.

என் கோரிக்கைகள் சில…

1) அரசு நிறுவனங்களில் சம்பளத்துடன் 6 மாதக் காலம் “மகப்பேறு விடுமுறை” தரப்படுவது போல ஏன் தொழில் நுட்ப நிறுவனங்கள் தரக்கூடாது?

2)கர்ப்பிணி பெண்கள் ஓய்வு எடுக்க இட வசதி எத்தனை நிறுவனங்களில் இருக்கிறது? அலுவங்களில் தங்கள் குழ்ந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வசதி வெளிநாடுகளில் இருப்பது போல ஏன் இங்கே இல்லை? ஏன் இந்த இரட்டைச் செயல்பாடு ?

இந்தக் கட்டுரைப் படித்துவிட்டு ஆண் வர்க்கத்திர்க்கு எதிராக இருக்கிறது என்றுப் போர்க்கொடித் தூக்க வேண்டாம். பெண்களும் ஆண்களைப் போல எந்த தடையும் இன்றி பணியிடத்தில் சாதிக்க வேண்டும். அதற்கு இந்த சமூகம் பெண்களுக்கு போட்டு இருக்கும் கைவிள‌ங்கை உடைத்தெரிய ஆண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை ஆண்கள் உணர்ந்து செயல்ப்பட வேண்டும்.

சமந்தா
சேவ் தமிழ்சு இயக்கம்

About சம‌ந்தா

4 comments

  1. தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களின் அவல நிலையை பல பெண்களே பேச முன்வராமல் தயங்கும் இச்சூழலில்,<br />வெளிவந்திருக்கும் துணிச்சலான கட்டுரை.<br /><br />கட்டுரை எழுதிய தோழர் சமந்தாவிற்கு வணக்கமும் வாழ்த்துகளும் !

  2. well said sister, its really true. <br />

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*