Home / அரசியல் / போர்க்குற்றமா, இனப்படுகொலையா ? உள்நாட்டு விசாரணையா, பன்னாட்டு புலனாய்வா?

போர்க்குற்றமா, இனப்படுகொலையா ? உள்நாட்டு விசாரணையா, பன்னாட்டு புலனாய்வா?

பிப்ரவரி 26 அன்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் “இலங்கை செய்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தக்கோரியும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை ஐ.நா. அவையில் இந்திய அரசு கொண்டுவர வேண்டும்” என்ற கோரிக்கையை மையப்படுத்தி நடந்த கண்டனப் போராட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சாரம் பின்வருமாறு….

இப்போராட்டத்திற்கு வருகைதந்திருக்கும் மாணவர்களுக்கும், பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சார்ந்த தலைவர்களுக்கும் எனது பணிவான வணக்கம் !

2014 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலே அதன் 25 ஆவது கூட்டத்தொடர் நடக்க இருக்கின்றது. இலங்கைக்கு எதிரான ஒரு வலுவானத் தீர்மானம் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய அரசை நோக்கி இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இப்போது நாம் வருகின்ற மார்ச்சு திங்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டியிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே திங்களிலும் இதுபோலவே, இலங்கை குறித்தான ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலே நிறைவேற்றப்பட்டது. போர் முடிந்து பத்து நாட்கள் ஆகிய வேளையிலே ஐ.நா. மன்றத்திலே உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்துநின்று இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தன.

அப்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க வேண்டும் என்று சொன்ன சுவிட்சர்லாந்து தீர்மானத்தை விவாதத்திற்கே கொண்டுவராமல் முடக்கியதில் இந்திய அரசிற்குப் பங்கு இருக்கிறது. இப்படியாக 2009 ஆம் ஆண்டு முடிந்தது. 2010 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகரமாகிய இடப்ளினிலே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒன்றுகூடி, அந்தத் தீர்ப்பாயத்திலே இலங்கையரசு போர்க்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் புரிந்திருக்கின்றன, இனப்படுகொலை நடந்ததற்கான கூறுகள் இருக்கின்றன, ஆனால் அதை உறுதி செய்ய மேலதிக விசாரணை தேவை என்று தீர்ப்பளித்து இலங்கையரசு மீது தற்சார்புள்ள ஒரு பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டுமென்று சொன்னது. அத்தீர்ப்பாயம் சொன்ன அறிக்கையை நாம் ஒரு கேடயம் போல எடுத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தோம். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வெளியேயும் சென்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்து “இதோ பாருங்கள் ஐயா… வியட்நாமில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து தீர்ப்பளித்த அதே தீர்ப்பாயம், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எங்கள் பக்கம் நீதி இருக்கிறது என்று எடுத்துக் கூறினோம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களுக்கு அத்தீர்ப்பாயத்தின் அறிக்கையை எடுத்துச் சென்றோம். அதன் பிறகு இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கொடுத்த அழுத்தத்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தாலும், தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தின் காரணமாகவும் ஐ.நா. பொதுச்செயளாலர் பான் கி மூன் அவர்கள் மூன்று பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்றை அமர்த்தி இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்கச் சொன்னார். அக்குழு விசாரணை செய்து அதனுடைய அறிக்கையை முன்வைத்தது. அவ்வல்லுனர் குழுவின் அறிக்கையும் இலங்கையரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்று 2011 ஆம் ஆண்டு சொன்னது. பிறகு 2013 ஆம் ஆண்டில் செர்மனியில் உள்ள பிரம்மன் நகரிலே மீண்டும் நிரந்திர மக்கள் தீர்ப்பாயம் கூடியது. ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே’ என்று அத்தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வைந்து ஆண்டுகளில் சேனல்4 வெளியிட்ட நிகழ்படங்கள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகள், புகைப்படங்கள் என்று பல்வேறு சான்றுகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் தமிழ்நாட்டு மாணவர்கள், மக்கள் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலே இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. முதல் தீர்மானம் 2011 ஆம் ஆண்டிலும் மற்றொன்று 2013 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திலே போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களை இலங்கையரசு புரிந்துள்ளது என்றும், அதன் மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்றும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திலே இலங்கையரசு புரிந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்றும், ஈழத்திலே பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழர்களின் அரசியல் வேட்கையைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இவை தமிழ்நாட்டில் நடந்த மாற்றங்கள்.

2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.நா. மனித உரிமை அவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்விரண்டு தீர்மானங்களும் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு பற்றிப் பேசவில்லை எனவே நாம் அத்தீர்மானங்களை ஏற்கவில்லை. 2012 ஆம் ஆண்டிலும், 2013 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள், இலங்கையரசு அமைத்த ‘கற்றப் பாடங்கள் – நல்லிணக்க ஆணைக்குழு’வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அங்கே ஒர் உள்நாட்டு விசாரணை வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டன. அப்படி முன்வைக்கபட்ட தீர்மானங்களைச் சீர்குலைப்பதில் இலங்கையரசிற்குத் துணை நின்றது யார் தெரியுமா? 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை வெற்றிகரமாக நடந்து முடிவதற்குத் துணை செய்த அதே இந்திய அரசுதான். தமிழ்நாட்டின் இறையாண்மையைக் கோருகின்ற இந்திய அரசுதான் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலே இலங்கையரசுக்கு சார்பாக நின்று அத்தீர்மானத்தை சீர்குலைத்தது.

அத்தீர்மானம் எப்படி நீர்த்துபோகச் செய்யப்பட்டது? 2012 ஆம் ஆண்டில் வந்தத் தீர்மானத்திலே “இலங்கை அரசின் உடன்பாட்டுடன்தான் (in consultation and concurrence) ஐ.நா. மனித உரிமை மன்றம் தலையிட முடியும்” என்ற இரண்டு வரிகளைச் சேர்த்ததிலே இந்திய அரசுக்குப் பங்கு இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டில் வந்தத் தீர்மானத்தை ஏற்பதா? எதிர்ப்பதா என்று தமிழ்நாட்டிலே நாம் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு இருந்த வேளையிலே இந்திய அரசு மிக நேர்த்தியாக அத்தீர்மானத்தை ஒவ்வொரு வரிகளாக நீர்த்துப் போகச்செய்தது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஊடகத்துறை, மனித உரிமை அமைப்புகள், நீதித்துறை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்புப் பேராளர்கள் (பிரதிநிதி) இலங்கைக்குள் தங்கு தடையின்றி நுழைய வேண்டுமென்று கடந்த ஆண்டு வந்தத் தீர்மானத்திலே ஒரு பரிந்துரை இருந்தது. அதன் சாரம் என்பது, ஐ.நா. அலுவளர்களுக்கு இலங்கைக்குள் செல்ல தங்குதடையற்ற இசைவு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஒருவேளை அத்தீர்மானத்தில் இப்பரிந்துரை நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஐ.நா. அவையின் சிறப்புப் பேராளர்கள் அங்கு சென்று இன்னும் பல்வேறு சான்றுகள், பல்வேறு அறிக்கைகள் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. மொத்தமாக நான்கு வரைவுகள் வந்தன. நான்காவது வரைவுதான் இறுதியானது, அதுவே நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு வரைவிலும் கொஞ்சம், கொஞ்சமாக இலங்கைக்கு எதிராக இருந்தவை நீக்கப்பட்டும் திருத்தப்பட்டும் இறுதி வரைவில் உப்புச்சப்பில்லாத ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பதற்கு இந்திய அரசுதான் பக்கபலமாக இருந்தது. இவைதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த காட்சிகள். இப்பொழுது ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் உயர்ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதில் தெளிவாக இரண்டு பரிந்துரைகளை வழங்கியுள்ளார். ஒன்று இலங்கையரசுக்கும் மற்றொன்று பன்னாட்டுக் குமுகத்திற்கும் ஆகும். இலங்கையரசு புரிந்த பன்னாட்டு விதிமீறல்கள், குற்றங்கள் குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்று ஒரு பரிந்துறையை முன்வைத்துள்ளார். வரும் மார்ச்சு 3 ஆம் நாள் (2014) ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒன்றுகூட இருக்கிறது. ஒரு திங்களுக்கு இவ்விவாதம் நடக்கும், அதில் ஏதோ ஒரு நாளில் இலங்கை குறித்த விவாதம் நடக்கும். அப்பொழுதும் ஏதோ ஒரு தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். மேற்குலக நாடுகள்தான் இத்தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பதுதான் இன்றைய நிலை.

நாம் இன்று பிப்ரவரி 26 ஆம் நாள் நின்றுகொண்டு இந்திய அரசை நோக்கி இக்கோரிக்கையை வைத்துள்ளோம். இதுவரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றதேவொழிய, இந்திய நாடாளுமன்றத்திலே எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வேளையிலேதான் நாம் இங்கு தமிழ்நாட்டிலே ஒரு முதன்மையான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் நாள் போர் முடிந்த நாளிலிருந்து, 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாளுக்குள் ஏறத்தாழ 1500 நாட்கள் கடந்துவிட்டன. இந்த 1500 நாட்களிலும், அதற்கு முன்னதாகவும் இலங்கையில் நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை தமிழ்நாட்டில் உள்ள எவரும் மறுக்கவில்லை. இந்த ஐந்து ஆண்டுகளிலே இந்திய நாடாளுமன்றத்திலே ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து, அதைப் பன்னாட்டு அளவில் எடுத்து செல்லுக்கூடிய வலிமை நமக்கில்லை. அதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த ஐந்து ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரும் முடிந்துவிட்டது. இனி அடுத்தத் தேர்தல்தான் வரப்போகிறதேவொழிய இடையே அவர்கள் (நாடாளுமன்றம்) கூடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஒருவேளை ஈழச்சிக்கலை முன்னிட்டு இங்கு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தால், தமிழ்நாட்டில் உற்பத்தி முடக்கப்பட்டால், இந்திய அமைச்சரவை கூடி ஒரு தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் முன்மொழிவது குறித்து முடிவு எடுக்கலாம்.

மற்றபடி இந்திய அரசே ஒரு தீர்மானத்தைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இயல்புநிலையில் (யதார்த்தம்) இருந்து என்ன நடக்கப் போகின்றது? நாம் எப்படி வினையாற்றுவது? என்று முடிவு எடுக்க வேண்டி உள்ளது. மார்ச்சு திங்களை நெருங்கிவிட்டோம். இத்திங்கள் முடியும்வரை இந்திய அரசு தீர்மானம் கொண்டுவரும், கொண்டுவரும் என்று சொல்வதில் எந்த ஒரு பொருளும் இல்லை. மேற்குலக நாடுகள்தான் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றன. அத்தீர்மானத்தின் சாரமாக ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு இலங்கையரசு மீது நடத்தப்பட வேண்டும் என்று வந்தால் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்? என்பதுதான் நம்முன் உள்ள வினா.

இலங்கையரசு என்ன செய்து கொண்டு இருக்கின்றது? இப்படி ஒரு தீர்மானம் வரப்போகின்றது, அத்தீர்மானத்தை வரவிடாமல் தடுப்பதற்காகவும், தனக்குச் சார்பாகப் பல்வேறு நாடுகளை அணி சேர்ப்பதற்காகவும் இராசபக்சே நடுக்கிழக்கு நாடுகள் தோறும், ஆப்பிரிக்க நாடுகள் தோறும் பயணம் செய்து முடித்துவிட்டு, இலங்கைக்குத் திரும்பி விட்டார். இராசபக்சேவின் தனிச்செயலர் இலலித் வீரதுங்கா என்பவர் கொழும்பில் இருந்து புறப்பட்டு, இசுரேல் வழியாக அமெரிக்கா (வாசிங்டன்) சென்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று வருவதைத் தடுக்க முயற்சி எடுக்கின்றார். இலலித் வீரதுங்கா என்பவர் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்றபோதும் இராசபக்சேவின் செயலாளராக இருந்தார், இப்போதும் அவரே தனிச்செயலர் ஆவர்.

இலங்கையரசின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் ’groundviews’ வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், “அமெரிக்காவிடவும், இசுரேலிடமும் உதவி பெறுவதை விட, அதன் திறவுகோல் என்பது புதுதில்லியில்தான் உள்ளது. அங்கு சென்று பேசினால் அத்தீர்மானத்தைத் தடுக்கவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ முடியுமேவொழிய அமெரிக்காவிடமும், இசுரேலிடமும் செல்வதால் பயனில்லை” என்று தன் நண்பர் இலலித் வீரதுங்காவுக்கு அறிவுரை வழங்குகின்றார். இப்படியாக இலங்கை அரசுத் தரப்பு தமக்கு எதிராக ஒரு தீர்மானம் வருவதை தடுக்க முயன்று வருகின்றது. வரவிருக்கும் ஒரு திங்கள் கால அளவிற்கு இலங்கையின் குறிக்கோள் என்பது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க வேண்டும், அதை உள்நாட்டு விசாரணையாக மாற்ற வேண்டும், இப்படியே காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதுதான்.

இப் பின்னணியிலிருந்து, நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் நம்முன் இருக்கும் வினா. இப்போது நாம், ‘அந்தப் போரே குற்றம் – அதில் என்னப் போர்க்குற்றம்? போர்க்குற்றம் என்பதை நாம் ஏற்கவில்லை’ என்று சொல்கின்றோம். யாரெல்லாம் அன்று இடப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பரப்புரை செய்தார்களோ அத்தோழர்களே, ‘போர்க்குற்றம் என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை’ என்ற இடத்திற்குப் போய்விட்டார்கள். போர்க்குற்றத்தையும், இனப்படுகொலைக் குற்றத்தையும் நேரெதிராக பேசிக்கொண்டிருக்கும் விவாவதம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

சட்ட நுணுக்கங்களுக்குள் சென்று முன்மாதிரிகளைக் காட்டி உருவாண்டா, சூடான், கிழக்கு தைமொர் என்று விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சட்ட விதிகள் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. பன்னாட்டு விதிகளும்சரி உள்நாட்டுச் சட்டங்களும்சரி மக்களுடைய போராட்டங்களின் அழுத்தத்திற்கேற்பவும், உலக அரசுகளின் நலன்களுக்கு ஏற்பவும்தான் பயன்படுத்தப்படுகின்றன. சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை மட்டுமே வைத்து அரசியலை முடிவு செய்ய முடியாது. நமக்கிருக்கும் சிந்தனைத் தடை என்னவென்றால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னால் தமிழ்நாட்டில் வந்திருக்கும் ஆற்றல்களும், புலம்பெயர் நாடுகளில் வந்திருக்கும் ஆற்றல்களும் சூரப்புலிகளாக மாறி ஐ.நா. அவைக்குள்ளேயே தமிழீழ விடுதலையை பெற்றுத்தந்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழீழ விடுதலை என்பது ஈழத்தில்தான் இருக்கின்றது. தாயகத்திலிருந்து போராடுவதிலிருந்துதான் சிங்களப் பேரினவாத அச்சை முறிக்க முடியுமேவொழிய தமிழ்நாட்டில் இருப்பவர்களோ, புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களோ ஈழத்தமிழர்களுக்கு விடுதலையை வாங்கி, தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தரமுடியாது. நம்முடையப் போராட்டம் அனைத்தும் ஈழத்தமிழர்கள் போராடுவதற்கான ஓர் அரசியல் வெளியை உருவாக்குவதற்கு மட்டுமேவொழிய, நாமே அவர்களின் விடுதலை பாரத்தைச் சுமந்துவிடமுடியாது. நம் தோழர்களில் சிலர் இப்படி நினைக்கிறார்கள், இங்கு நாம் போராடுவதால் மேற்குலக அரசுகள் ஐ.நா. அவையில் “பாருங்க, பாருங்க இனப்படுகொலை நடந்திருக்கு என்று ஒரு புலனாய்வு ஆணையம் அமைத்து, அதன் தொடர்ச்சியாக இனப்படுகொலை என்று நிறுவப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, தமிழீழத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள்” என்று நினைக்கின்றார்கள். அப்படியெல்லாம் கொடுக்கமாட்டார்கள்.

நம்முடையப் போராட்டம் அனைத்தும் ஈழ்த்தில் ஒரு மக்களாட்சி வெளி உருவாவதற்கும், தமிழீழ மக்கள் மீண்டும் சிங்கள அரசிற்கு எதிராக எழுந்து நின்று போராடுவதற்கும் உதவ முடியுமேவொழிய, நாமே விடுதலையைப் பெற்றுத் தந்துவிட முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமையால்தான் ‘போர்க்குற்ற விசாரணை’ என்ற தீர்மானம் வந்துவிட்டால் இதுவாகிவிடும், அதுவாகிவிடும் என்றெல்லாம் விவாதித்துக்கொண்டு இருக்கிறோம்.

நான் சில வாதங்களை இங்கிருக்கும் தோழர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்வைக்க விரும்புகின்றேன். இந்த மேடையில் அமர்ந்து இருக்கும் மாணவர் கிருட்டிணாவோடு இணைந்து 2009 ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தை நோக்கி ‘பொதுவாக்கெடுப்பு நடத்து’ என்ற கோரிக்கையை முன்வைத்து, (போர் முடிந்து மூன்று திங்கள் முடிந்தநிலையில்) மதுரையில் ஒரு மாநாடு நடத்தினோம். அப்போது தமிழ்நாட்டில் என்ன விவாதம் நடந்தது தெரியுமா? “ஏம்பா 1977 ஆம் ஆண்டிலேயே தமிழீழ மக்களெல்லாம் வாக்களித்து தனிநாடுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நீங்க என்ன புதுசா பொதுவாக்கெடுப்பு நடத்தனும்னு சொல்லி கோரிக்கை வைக்குறீங்க. ஈழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்துனு சொல்றீங்க” என்று சொன்னார்கள். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து, “பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோருவது சரியானதுதான். இன்னும் பரவலாக ஆற்றல்களை நாம் அணிதிரட்ட முடியும்” என்று சொன்ன பிறகு தமிழ்நாட்டில் ஒப்புக்கொண்டார்கள். அது வரைக்கும் பொதுவாக்கெடுப்பையும் தனிஈழத்தையும் எதிராக நிறுத்திவைத்துப் பேசினார்கள். பொதுவாக்கெடுப்பு நடத்தினால் இலங்கையா, தமிழீழமா என்ற வினாவைத் தமிழீழ மக்களிடம் வைப்பார்கள். பொதுவாக்கெடுப்பு என்று சொன்னால் இலங்கையைக் கூட தமிழீழ மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நீங்கள் ஈழக் கோரிக்கைக்கு எதிராகப் பேசுகின்றீர்கள் என்று சொல்வது தவறான கருத்து. தமிழீழ மக்களை ஒரு போராட்ட ஆற்றல் என்று கணக்கில் எடுக்காதவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். ‘வீரவிடுதலை வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என்ரொரு பாரதியார் கவிதை இருக்கின்றது. இலங்கையா? ஈழமா? என்று கேட்டால் தமிழீழ மக்கள் ஈழம் என்று தேர்ந்தெடுப்பார்கள் என்ற அடிப்படையில்தான் நாம் பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம். எனவே தமிழீழ மக்களின் போராட்டமும், அவர்களின் விடுதலை வேட்கையும்தான், அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்கின்றது என்பதை நாம் எப்போதும் கணக்கில் எடுக்க வேண்டும்.

இரண்டாவது கூடங்குளம் அணுவுலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அணுவுலையை மூட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது, மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. அப்போது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறு என்று ஒரு கோரிக்கை வைக்கிறோம். உடனே வழக்குகளைத் திரும்பப்பெறு என்று கோரிக்கை வைக்கிறார்கள், அணுவுலையை மூட வேண்டாமா? என்று கேட்பார்களாயின் நம்முடைய பதில் இதுதான் – அவ்வழக்குகளைத் திரும்பப்பெறவேண்டும் என்று சொல்வதே மக்கள் போராடுவதற்கான வெளியை உருவாக்கத்தான். அப்போரட்டத்தின் மூலமாக அணுவுலையை மூட வேண்டும் என்பதற்காகவேவொழிய வழக்குகளை திரும்பப்பெறு என்பதும் அணுவுலையை மூடவேண்டும் என்பதும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எடுத்துக் கொள்வோம். மூன்று தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்றோம். தலைமைநீதிமன்றத்திற்குள் நமது தரப்பால் முன்வைக்கப்பட்ட வாதம் என்ன? மூத்த வழக்குரைஞர் இராம் செத்மலானி எப்படி வாதாடினார்? மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் என்று சொல்லியா வாதாடினார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குள் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன் வாதத்தை முன்வைத்தார். ‘23 ஆண்டுகள் சிறைக்குள் கழித்து விட்டார்கள், இதற்குப் பிறகும், மீண்டும் ஒருமுறை அவர்களைத் தூக்கில் போடக்கூடாது’ என்றுதான் வாதாடினார். மூவருக்கும் சாவுத்தண்டனைக் கொடுத்த முந்தைய தீர்ப்பை வினாவிற்குட்படுத்தவில்லை அவர். அவர்களுக்கான வாழ்வுரிமை என்ற அடிப்படையிலேயே வாதத்தை முன்வைத்து வெற்றி கண்டார். மூவரும் குற்றமற்றவர்கள் என்று இராம் செத்மலானி வாதாடி இருக்க வேண்டும் என்று யாராவது குறை கூறினார்களா? நமது நோக்கமான மூவரை தூக்குக் கயிற்றிலிருந்து விடுவிக்க முடிந்தது என்று எல்லோரும் பாராட்டத்தானே செய்தார்கள்.

அது போலத்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்குள்ளே நாம் வைக்க வேண்டிய வாதம், அங்குள்ள விதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு நாம் எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் ஆராய வேண்டும். இங்கு மக்கள் மன்றத்திலே நாம் வைத்துக் கொண்டிருக்கும் முழக்கங்களை ஐ.நா. மன்றத்திலேயும் வைத்தால், நாம் ஆட்டத்திலேயே இல்லை என்று பொருள். பல நாடுகள் இதுபோன்ற தீர்மானம் வரும்போது யாருக்கும் வாக்களிக்காமல் விலகி நிற்கின்றார்கள். அது போல் நாமும் புறக்கணிக்கின்றோம் என்பதுதான் மேற்படி வாதங்களின் பொருள். அத்தீர்மானத்தைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதோ அல்லது கண்டும் காணாமல் இருப்பதோ அரசியல் போராட்டத்தில் முன்னேறிச் செல்வதற்கு உதவாது.

வரலாறு நமக்கு தந்திருக்கும் படிப்பினைகளை, தங்கத்தாம்பளத்தில் வைத்துக் கொடுக்கவில்லை. குருதியும் சதையுமாக பல்லாயிரணக்கான உயிர்களின் அழிவில்தான் சில படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறது. எதிரிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் நிறையவே இருக்கின்றது. அவன் நம்மைவிட வலிமையுடையவனாக, திறமையாளனாக, பலரையும் தன்னோடு இணைத்துக்கொண்டுதான் இப்போரில் வெற்றி பெற்றிருக்கின்றான். அதை யாரும் மறுப்பதற்கில்லை. அவன் வெற்றியின் உச்சத்தில்தான் நின்றுகொண்டிருக்கின்றான். இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் நாம் போராடிப் போராடி அவனுக்குச் சில நெருக்கடிகளைத் தந்துகொண்டிருக்கின்றோம். இயங்கியலில் ஒரு விதியிருக்கிறது, எல்லா முரண்பாடுகளும் ஒரு புள்ளியில் இரு அணிகளாகப் பிரிகின்றன. இராசபக்சே அதை மிக நேர்த்தியாகக் கையாண்டு, ‘விடுதலைப் புலிகள் எதிர்ப்பு’ என்ற ஒற்றைப்புள்ளியிலே, இலங்கைக்குள்ளே அவனால் சே.வி.பியையும் தன்னருகில் வைத்துக்கொள்ள முடிந்தது, கருணாவையும் தன்னருகில் வைத்துக்கொள்ள முடிந்தது. உலக நாடுகளிலே பாகிசுதான், இந்தியா, சீனா, இசுரேல், பாலசுதீனம், அமெரிக்கா, கியூபா என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நாடுகளைத் தன்னருகே வைத்துக்கொள்ள முடிந்தது. தீவிரவாத எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலே அந்த வெற்றியை ஈட்டினான். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அந்த ஒற்றைப்புள்ளியைக் கண்டுபிடித்து, அந்த ஒற்றைப்புள்ளியிலே நின்று கொண்டு இலங்கை அரசை தனிமைப்படுத்துவதன் மூலமாகத்தான் தமிழீழ மக்கள் போராடுவதற்கான அரசியல் வெளியை உருவாக்க முடியும். இந்த மார்ச்சு திங்களில் நாம் பற்றிப்பிடிக்க வேண்டிய ஒற்றைப்புள்ளி எது? தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வா? அல்லது இலங்கை அரசே நடத்தும் உள்நாட்டு விசாரணையா? என்பதுதான் அந்த ஒற்றைப்புள்ளி. அந்த ஒற்றைப்புள்ளியிலே மேற்குலக நாடுகளும் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளும், தமிழர்களாகிய நாமும் பன்னாட்டுப் புலனாய்வு என்று ஒரு பக்கம் நின்றோமென்றால் இராசபக்சே தனிமைப்படுத்தப்படுவார்.

அந்த ஒற்றைப்புள்ளியிலே இராசபக்சேவிற்கு பக்கபலமாக இருப்பது இந்திய அரசு. இந்திய அரசின் கைகளை முறித்து வரவிருக்கின்ற தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு இருக்கின்றது.

இந்த ஒருமாத காலம் இந்திய அரசு அத்தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யவிடாமல் தடுத்து, தற்சார்புள்ள ஒரு பன்னாட்டுப் புலனாய்வைக் கொண்டுவருவதும், அதில் இனப்படுகொலைக் குற்றத்தையும் சேர்க்கச் சொல்லி இந்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும். அந்தக் கடமையை நோக்கிப் பயணிப்போம். நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை அறிவுப்பூர்வமாக அணுகி சிங்கள அரசை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் நாம் குறியாகக்கொண்டு, சிங்கள அரசிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு வருகின்ற (மே 19 ஆம் நாள்) முள்ளிவாய்க்கால் நினைவுநாளுக்குள் ‘சிங்கள அரசின் மீது தற்சார்புள்ள ஒரு பன்னாட்டுப் புலனாய்வை கொண்டுவந்தோம்’ என்ற ஒரு வெற்றியை நாம் அடைவோம்.
நன்றி !

உரைத் தட்டச்சு –
தோழர். இராகவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

About விசை

2 comments

  1. சிறந்த பேச்சு.வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*