Home / அரசியல் / தேவை குற்றப்பத்திரிக்கை அல்ல; தேர்தல் அறிக்கையே???

தேவை குற்றப்பத்திரிக்கை அல்ல; தேர்தல் அறிக்கையே???

2014 நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரச்சாரங்கள் மும்முரப்பட்டு அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் நரேந்திர மோடியை தேர்தலுக்கு முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று கூறி வெகுநாட்களுக்கு முன்னரே பிரச்சாரக் களத்தையும், சமூக வலை தளங்களையும் ஆக்கிரமித்த பாரதீய ஜனதா கட்சியால் இன்று வரை தங்களுடைய 2014 தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை, தேர்தல் அறிக்கை வெளிவரவில்லை. அதற்குப் பதிலாக, ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மீதான குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் ஒன்றை வெளியிட்டுள்ளது பா.ஜ.க தலைமை.

தேர்தல் அறிக்கையும், காங்கிரசு மீதான தாக்குதல் தொடுக்கும் குற்றப்பத்திரிக்கையும் எப்படி ஒன்றாக முடியும்?. முடியவே முடியாது. இவை இரண்டும் முற்றிலும் வேறானவை.

தேர்தல் அறிக்கை என்பது ” எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலோ, வெற்றி பெற்றாலோ” என்று தொடங்கி, அந்தந்த கட்சி மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதே ஆகும்.

பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான குற்றப்பத்திரிக்கை என்பது காங்கிரசு தலைமையிலான அரசின் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டது. இந்தக் கூச்சல்களைத்தான் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோமே. பின்னர் ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது பா.ஜ.க.

பாரதீய ஜனதா கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான், இதுவரை அவர்களால் தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் தொடங்கி ஏதோ ஒரு வழியில் உட்கட்சிப் பூசல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், மன்னிக்கவும். மோடி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்று அவர்கள் சொல்லியாக வேண்டும். ஆனால், இதற்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோர்
ஆதரவளிக்காமல் முரண்டு பிடிக்கின்றனர்.

இவர்கள் இப்படியிருக்க, அத்வானியோ ” மூவரில் ஒருவர்தான் மோடி” என்று திரி கிள்ளியுள்ளார். அதாவது, மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்து வரும் சிவராஜ்சிங் சௌகான், ராமன் சிங் ஆகியோரைப் போலத்தான் நரேந்திர மோடியும் என்பதே இதன் அர்த்தம்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன், பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அத்வானி அன்று கூறியதற்கான காரணமும் இதேதான். 2013 டிசம்பரில்தான் சிவராஜ்சிங் சௌகான், ராமன் சிங் ஆகிய இருவரும் மூன்றாவது முறை மாநில முதல்வராகப் பதவியேற்றனர். மோடிக்குப் போட்டியாக இவர்கள் இருவரையும் நிறுத்தி தான் பிரதமர் வேட்பாளராகிவிடலாம் என்கிற அத்வானியின் ஆசையில் மண் விழுந்து நாளாகிவிட்டது. ஆனால், இன்று வரை, மோடிக்கான பெருங்குடைச்சல் கட்சிக்குள்ளிருந்து வந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு விதமாக இதைப் பார்ப்போமானால், 1990-களில் காங்கிரசு கட்சி தலைமையிலான அரசால் திறந்துவிடப்பட்ட சந்தையை, மென்மேலும் திறந்துவிட்டு உலகமயமாக்கலையும், தனியார்மயத்தையும் நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சென்றது 1999 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசுதான். ஆகையால், இவர்கள் மக்களுக்குத் தேவையான கொள்கை அளவிலும், இதரப் பிரச்சனைகளிலும் காங்கிரசின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபடுவதில்லை. குற்றப்பத்திரிக்கை வெளியிடும் இவர்களால் மாற்று கொள்கைகளைக் கொண்ட அறிக்கையை வெளியிட முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி???

இந்த கையாலாகாதனத்தையும் காவி ஆதரவு ஊடகங்கள், ” பா.ஜ.க -வின் குற்றப்பத்திரிக்கைக்கு காங்கிரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ” (TIMES NOW) என்று காவிக் கொடி பிடிக்கின்றன. 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில்,அடுத்த இரண்டு நாட்கள் தேர்தல் காலத் தடை உத்தரவு இருக்கும். அப்படியிருக்கையில், பா.ஜ.க ஏன் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள் நம்முடைய பார்வையை திசைதிருப்பும் வேலையை செய்து வருகின்றன.

தன்னுடைய நிலையான கொள்கையான இந்துத்துவத்தை முன்வைத்தால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்று அச்சத்தில்தான் வளர்ச்சி என்கிற பெயரில் மோடியின் மீது சவாரி வருகிறது பாரதீய ஜனதா கட்சி. இவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டால், தற்போது இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான மாற்றையும், அது எப்படி மக்களுக்கு உதவும் என்பதையும் முன்வைக்க வேண்டும். முந்திரா துறைமுகம் அமைக்க அதானிக்கு உதவி, எரிவாயு விலை நிர்ணயத்தில் அம்பானிக்கு ஆதரவு என்று இவர்களால் அறிக்கை வெளியிட முடியாது.

இந்துத்துவத்திற்கும், சுரண்டல் முதலாளித்துவத்திற்கும் உகந்த கொள்கைகளை எப்படி மாற்று என்று முன்வைக்கப் போகிறார்கள் என்பது அயோத்தியில் வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்ட‌ அந்த ராமனுக்கே வெளிச்சம்.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

About கதிரவன்

4 comments

  1. நெத்தியடி.. மதவெறியர்களே… வெளியேறுங்கள்…

  2. //அயோத்தியில் வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்ட‌ அந்த ராமனுக்கே வெளிச்சம்.// Super

  3. மோடி அலையடிக்குது அலையடிக்குதுனு சொல்றாங்களே ஒழிய , தேர்தல் அறிக்கையில் இன்றைய தவறுகளுக்கு மாற்று கொள்கைகளோ , செயற்திட்டங்களோ எதுவுமே சொல்லாமா … அலையடிக்குது சொல்றது .நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது னு ஜக்கம்மா சொல்ற மாதிரி இருக்கு… உண்மையில அலை வீசுவது , காங்கிரசு எதிர்ப்பு அலை மட்டுமே..இதில் ஆட்சி பீடமேற முயற்சிக்கிறது மோடி மஸ்தான் அவ்வளவே ! அதன் வெளிப்பாடே காங்கிரசு மீதான

  4. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. தோழர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*