Home / அரசியல் / எம்தாய் பிள்ளை நான்தான்

எம்தாய் பிள்ளை நான்தான்

தலையில் பிறந்ததாய்
தலைக்கனம் கொண்டவன் – என்
தலைமேல் கால் வைத்தான்
வாமனக் காலால் எனைமிதித்தான்

தோள் வழியில் பிறந்ததாய்
திமிர் மொழி கொண்டவன் – எனை
ஏகலைவன் என்றான்- என்
வில் கலையெல்லாம் தன் கலையென்று
என் பெரு விரலைக் கொன்றான்

மாமுடி மணிமுடி தன்முடி சூட – என்
தெருவடி தேடி வந்தான்
தீண்டா எனை தீண்டித் தழுவி – என்
வாக்குகளை வென்றான்

ஓர் முடிவோடு போர்முடியொன்று – நாங்கள்
நேர்முடி சேர்கையிலே
தீமுடி கொண்டு எம் உயர்குடியெல்லாம்
வெண்மணியில் கொன்றாய் – வெறும்
நெல் மணிதான் என்றாய்.

திக்குகள் எட்டும் கொட்டும் மழைக்கு
தீண்டாமை தெரியாது – எனை
தீண்டிப் போகும் காற்றுக்கு வர்ண
பேதங்கள் புரியாது

வெஞ்சினம் கொண்ட உயர் சாதிகளே – எங்கள்
பிறப்பை பழிக்காதே – நாங்கள்
அஞ்சிடுவோமென மனப்பால் குடித்து
அழிவை தேடாதே

ராமனை வணங்கிய ராமானுஜனுக்கு
ராமனின் பிள்ளை நான் – நம்
தேச மகாத்மா காந்தியாருக்கு
ஹரியின் பிள்ளை நான்

யாரோ பிள்ளை நான்தான் என்கிற
கரையே இனி வேண்டாம்
எம்தாய் பிள்ளை நான்தான் என்கிற
நிலையே அது போதும் – அது
நிலைத்தே தான் வேண்டும்!!!!

— பாரதிதாசன்

About பாரதிதாசன்

One comment

1. // யாரோ பிள்ளை நான்தான் என்கிற
கரையே இனி வேண்டாம்
எம்தாய் பிள்ளை நான்தான் என்கிற
நிலையே அது போதும் – அது
நிலைத்தே தான் வேண்டும்!!!! //

வலிமையான வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *