Home / FITE சங்கம் / தனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ?!!

தனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ?!!

16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99 விழுக்காடு வாக்குப்பதிவும்,குறைந்த பட்சமாக தென்சென்னையில் 57.86 விழுக்காடும் பதிவாகி உள்ளது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் காஞ்சிபுரம் தொகுதியில் தமிழக வாக்குப்பதிவை விடக் குறைவாக 64.08 விழுக்காடு பதிவாகியுள்ளது.

குறைந்தபட்ச வாக்குபதிவைக் கொண்ட இதே சென்னை,காஞ்சிபுரம் பகுதிகளில் தேர்தல் நாளுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட விப்ரோ (WIPRO), ஹெச் சி எல் (HCL), டெக் மகிந்திரா (TechMahindra), சுடக் ஷோ (Sodexho) உள்ளிட்ட 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த 3500 ஊழியர்களை வெளியேற்றி நிறுவன அலுவலகங்களுக்கு பூட்டு போட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் இருந்து மீள்வது இந்நிறுவனங்களுக்கு ஒன்றும் பெரிய விடயமல்ல. அதே சமயம், தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற உத்தரவை சிறிதும் சட்டை செய்யாமல் செயல்படும் துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுமைச் சமூகத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் விலகியே இருக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் விலகி இருப்பதற்கு எப்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் காரணம் ஆகின்றன என்பதற்கான சிறிய உதாரணம்தான் தேர்தல் நாளன்றும் அலுவல்களை நடத்திய இந்த நிறுவனங்களின் செயல்.

1990-களில் திறந்து விடப்பட்ட சந்தையின் உற்பத்திதான் இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்களது அலுவலகங்களைத் திறக்க சலுகை விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், பலமான உட்கட்டுமானம் என்று அரசுகளிடம் இருந்து இவர்கள் பெறாத சலுகைகள் கிடையாது. இவர்களுக்கான நிலம் ஊருக்கு வெளியே குறைந்த விலையில் வழங்கப்பட்டு, இவர்கள் ஈட்டும் வருவாய்க்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிகளில் குடியேறின.

அத்தோடு இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தவோ, அமைப்பாக ஒருங்கிணைந்து சங்கம் அமைக்கவோ, தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பவோ எந்த உரிமையும் அளிக்கப்படுவதில்லை.

இவ்வாறு, பெரும்பான்மை மக்கள் திரளிடமிருந்து தங்கள் லாபத்திற்காக விலகி இருக்கும் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர் மத்தியிலும் அதே உளவியலை உட்புகுத்தி விடுகின்றன.

இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை சொல்லலாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருந்த சமயம், பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளுக்கும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்குமான ஒரு சந்திப்பு பெங்களூரில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய, ஒரு ஊழியர் பின்வருமாறு கூறினார் “

அரசியல் கட்சிகளாகிய நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பொதுப் பிரச்சனைகளுக்காக நடைபெறும் கதவடைப்புகளில் எங்களை இணைத்துக் கொள்ளாதீர்; எங்களின் உற்பத்தி நேரம் வீணாகிறது” என்றார்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பெரும்பான்மை கருத்து இது இல்லை என்கிறபோதும், நம்மில் ஒருபிரிவினரின் சிந்தனை பெருமுதலாளிகளின் சிந்தனையில் இருந்து பெறப்பட்டதாகவும், ஆளும் வர்க்கத்தின் சார்பாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறு பல்வேறு சலுகைகளை பெற்று ஊருக்கு வெளியில் செயல்படும் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு எப்படி உரிமைகளை புறக்கணிக்கிறதோ அதேபோன்று அரசின் எந்த உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் போக்கையே கடைப்பிடிக்கின்றன.

சென்னையில் பணிக்கு சென்ற 3500 தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிப்பார்கள் என்று உறுதி கூற இயலாது. அதே சமயம் சில நூறு ஊழியர்கள் வாக்களிக்க விரும்பினாலும், அதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே நாம் உள்ளோம் என்பதே தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் எதார்த்த நிலையாக உள்ளது.

தேர்தல் நாளில் மட்டுமல்லாது, மற்ற பொது விடுமுறை நாட்களிலும் இந்த நிறுவனங்களின் போக்கு இவ்வாறே உள்ளது. அமைப்பாக செயல்படும் போக்கை உடைத்து நம்மை உதிரிகள் ஆக்கிய திறந்த சந்தை பொருளாதாரம், நம்முடைய சனநாயக உரிமையைக் கூட கேட்டுப் பெற முடியாதவண்ணம் நம்மை முடக்கியுள்ளது என்பதே இதன் பொருள். நம்மை உதிரிகளாக ஆக்கியதோடல்லாமல், பொதுமைச் சமூகத்திற்கு பொருந்தும் எந்த சட்டமும் எங்களுக்கு பொருந்தாது என்று தனித்தீவாகச் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*