Home / FITE சங்கம் / ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்…….

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்…….

 உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்… இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை மறுத்து அவர்களை வேலைக்கு வரச்செய்ததைத் தமிழகத்தில் பார்த்தோம்….

விப்ரோ (WIPRO), ஹெச் சி எல் (HCL), டெக் மகிந்திரா (TechMahindra), சுடக் ஷோ (Sodexho) 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களூம்(சுடக் ஷோ தவிர்த்த) தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று பணிசெய்தன.  அதை அறிந்த தேர்தல் ஆணையம் அந்நிறுவனங்களுக்குச் சென்று ஊழியர்களை வெளியேற்றியது, அது மட்டுமின்றித் தேர்தல் நாளில் பணி செய்ததற்கு அந்நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தன.

நேற்று ஹெச் சி எல்-லில் பணி புரியும் ஊழியர்களுக்கு மேலிடத்திலிருந்து பின்வரும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

//Important: Extra day pay for Election Day and May Day working

The employees who have worked on Election day and/or May Day are eligible for extra day pay.

This communication is intended for all India-based permanent employees of HCL Apps and Infra.

Allowance for Working on Election Day and/ or May Day

·Employees who have worked on Election Day and/ or May Day  are eligible for double wages for these days.

·For billable employees up to E3: Employees, who have worked on Election and / or May Day, should raise the request in SMM with necessary approval from their Reporting Managers./////

தேர்தல் நாளிலும், மே நாளிலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு  அவ்விரு தினங்களுக்கு இரட்டை ஊதியம்  வழங்கப்படுமென்றும், அந்நாளில் பணி புரிந்தவர்கள் இதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மேலே உள்ள இம்மின்னஞ்சலின் சாரம்…  அதுமட்டுமின்றி இந்த இரட்டை ஊதியம் அதே நிறுவனத்தில் பணி புரியும், ஒப்பந்த, பணி நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு உண்டா, இல்லையா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இந்தியாவில் இருக்கும் எந்த நிறுவனமானாலும் முக்கியமான அரசு விடுமுறை நாட்களான “சுதந்திர நாள், குடியரசு நாள்,  தேர்தல் நாள்” உள்ளிட்ட நாட்களில் வேலை செய்யக்கூடாது. அப்படி வேலை செய்தால் அந்நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை அதிகாரம் அரசுக்கு உள்ளது.  ஆனால் இங்கோ தேர்தல் நாள், மே நாளில் பணிபுரிந்தது மட்டுமின்றி, அவ்வேலை நாட்களுக்கு இரட்டை ஊதியம் வழங்க உள்ளது ஹெச்.சி.எல் நிறுவனம். இதே நிலையைத் தான் மற்ற நிறுவனங்களும் எடுத்திருக்கும். அதாவது தான் தவறு செய்தது மட்டுமின்றி… ஆமாப்பா நாங்க அப்படித் தான் செய்வோம் உன்னால என்ன செய்ய முடியும்? என்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சியைப் பார்த்துக் கொக்கரிக்கின்றன இந்நிறுவனங்கள்…  இதே நிறுவனங்கள் தான் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளிற்கெல்லாம் இங்கே இந்தியாவில் விடுமுறை விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உடனே நீங்கள் சொல்லலாம்… அவர்களின் வாடிக்கையாளர்கள் அமெரிக்கா சார்ந்து இருப்பதால் அவர்கள் அங்கு விடுமுறை இருக்கும் பொழுது, இங்கும் விடுமுறை விடுகின்றார்கள் என்று… விடுமுறை மட்டும் ஏன்… ஊதிய முறைகளிலும், வேலைப்பாதுகாப்பு சட்டங்களிலும் ஏன் அதைத் தொடரவில்லை ????  அப்பொழுது மட்டும் உங்களுக்கு இம்மண்ணின் சட்டம் (Law of the Land)  வரும்.. சரி அதையாவது இவர்கள் கடைபிடிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.

உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நினைவு கூறும் நாள் தான் மே நாள்,  இந்தியாவின் பல மாநிலங்களில் மே நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றும் தங்கள் பணியாளர்களைப் பணிக்கு வரச்சொல்வதிலிருந்தே  தெரிகின்றது, இந்நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் உரிமைகளை மதிக்கும் இலட்சணமும், இம்மண்ணின் சட்டங்களுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையும்… இந்தியாவில் அமைப்பு சார் பணியாளர்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சட்டங்கள் கூடத் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இல்லை, அதைக்கூட நான் செயல்படுத்த மாட்டேன் என்பது சர்வாதிகாரத்தனமேயன்றி வேறல்ல… மக்களாட்சியையும், இம்மண்ணின் சட்டங்களையும் கொஞ்சமும் மதிக்காத இந்நிறுவனங்களுக்குத் தான் சென்ற முறை மின்சாரக்கட்டணம் தமிழகத்தில் குறைக்கப்பட்டது. அதே சமயம் அரசின் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றும் பொது மக்களுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது, இவ்வரசுகள் முதலாளிகளின் நலன்களுக்காவே இயங்குகின்றன  என்பதும்,  விதிகளும் , சட்டங்களும் சாமானியர்களுக்காகவே என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றன…

 முதலாளிகள் இருக்கும் கொஞ்ச, நஞ்ச விதிகளையும் தங்கள் காலில் போட்டு மிதித்து வரும் நிலையில், இதைப் பற்றிய பிரஞையற்று தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இருப்பதும், தாங்கள் தொழிலாளி என்று அழைக்கப்படுவதையே அவமானமாகக் கருதுவதும்,  அடுத்த முதலாளி என்ற கனவில்  இருப்பதும் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது.  ஐ.டி பணியாளர்கள் முதலில் இம்மாய உலகில் இருந்து யதார்த்த உலகிற்கு வரும் நேரம் வந்துவிட்டது. முதலில் அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, மறுக்கப்படும் உரிமைகளைக்காகப் போராடத்தொடங்க வேண்டும்….

– நற்றமிழன்.ப‌

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*