Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?……

Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?……

          இந்திய உளவுத்துறை(Intelligence Bureau) பிரதமருக்கு அனுப்பிய அறிக்கையில் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக Green Peace  போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும், Amnesty International, Action Aid  போன்ற மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இவ்வமைப்புகள் இங்குள்ள மக்கள் சிவில் உரிமை அமைப்பு (PUCL), நர்மதை அணையெதிர்ப்பியக்கம் போன்ற அமைப்புகள் மூலம் செயல்பட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது.  இவ்வறிக்கையில் சில பகுதிகள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.  உளவுத்துறை பிரதமருக்கு அனுப்பிய ஒரு அறிக்கை எப்படி ஊடகங்களுக்கு அதே நாளே கிடைக்கும் நிலையில் தான் உளவுத்துறை அறிக்கைகளின் இரகசியத்தன்மை இந்த நாட்டில் கட்டிகாக்கப்படுகின்றது.  சில நேரங்களில் இது போன்ற அறிக்கைகள் ஊடகங்களின் செய்திகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது போல் இருக்கும். சனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடக‌ங்களில், பெரும்பான்மையான ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகவே பல நேரங்களில் செயல்பட்டுவருகின்றன.
சரி, அன்னிய கைக்கூலிகள் கதைக்கு வருவோம்… உளவுத்துறை கூறியபடி இந்திய நாட்டின் வளர்ச்சியை அவர்கள் எப்படி தடுத்தார்கள் எனப்பார்ப்போம்…  சுற்றுச்சூழல் அமைப்புகள் நாட்டிலுள்ள நிலக்கரி, அணு உலை மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எதிராக போராடிவருகின்றன, அதனால் நாட்டின் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டு இதன் மூலம் பொருட்கள் உற்பத்தி குறைந்து வளர்ச்சி குறைகின்றது… சரி அப்படி சுற்றுச்சூழல் அமைப்புகள் போராடி இதுவரை எத்தனை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை நிறுத்தியிருக்கின்றார்கள் என்றால் அதற்கு பதில் சுழியம்..  அணு உலை எதிர்ப்பு போராட்டங்களும் அப்படியே, என்ன தான் மக்கள் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடத்தினாலும், அரசு காவல்துறை மூலம் வன்முறையை ஏவி அணு உலைப்பணிகளை தொடர்ந்தது தானே இங்கு வரலாறு…. சரி அப்படி துவங்கியதாக சொல்லப்பட்ட அணு உலையிலிருந்து மின்சாரம் வருகின்றதா என்றால் வரும் ஆனா வராது என்ற பதிலே எஞ்சியுள்ளது.
     அடுத்து மனித உரிமை அமைப்புகள் கதைக்கு செல்வோம்…. மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டினால் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாம். இந்த மனித உரிமை அமைப்புகள் பழங்குடி இன மக்களின் உரிமைக்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக‌வும், தீவிரவாதிகளாக கருதப்படுபவர்களுக்காகவும் போராடுகின்றனர்,  இதனால் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  இவ்வ‌றிக்கை மூலம் உளவுத்துறை சொல்லவரும் கருத்து  இது தான் … சத்தீஸ்கர் உள்ளிட்ட மத்திய மாநிலங்களில் சுரங்கங்களினால் வாழ்வாதாரம் இழந்து போராடும் பழங்குடி இன மக்களை அரசு ஒடுக்கிவருகின்றது, இதை யாரும் தடுக்கக்கூடாது. அதே போல பழங்குடி மக்களின் சுகாதாரத்திற்காக உழைத்த பினாயக் சென் உள்ளிட்டோர் மீது  நாங்கள் குற்றம் சாட்டினால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகளே அவர்களுக்கென்று எந்த உரிமையும் இல்லை.  அதே போல உளவுத்துறையும், காவல்துறையும் குற்றம் சாட்டும் அனைவரும் தீவிரவாதிகளே அவர்களுக்கென்று எந்த உரிமையும் இல்லை.  ஒருவரியில் சொல்வதானால் அரசியல் சாசனப்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடும், போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் யாருக்கும் செல்லப்படியாகாது.  அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு வாழுங்கள், இல்லையென்றால் சிறைச்சாலையில் வாடுங்கள்…..
    இந்திய நாடாளுமன்ற விவாதத்திற்கே வராமல் அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதை நாடாளுமன்றத்தில் கண்துடைப்பிற்காக விவாதம் செய்ய பல கோடி ரூபாய்களை இறைத்தது இந்த அன்னிய கைக்கூலி அரசு, அதே போல 4 கோடிக்கும் அதிகமான மக்கள் நடுரோட்டிற்கு வந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு அன்னிய முதலாளிகளின் நலனே முக்கியம் என்று சில்லறை வணிகத்திலும்,  இந்திய மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இராணுவத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக‌ அன்னிய முதலீட்டை திணித்த இந்த அன்னிய கைக்கூலி அரசு, இந்த மக்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக போராடுபவர்களையும், அதற்கு துணை நிற்கும் அமைப்புகளையும் அன்னிய கைக்கூலி என்று கூறுவதை கேட்டு சிரிப்பதா, அழுவதா எனத்தெரியவில்லை… அடுத்த முக்கியமான புளுகு அன்னிய நாட்டு பணம் மூலம் தான் இவர்கள் போராடுகின்றார்கள் என்பது, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள இந்த அரசு அப்படி அன்னிய நாட்டு பணம் வருகின்றது என்றால் அதை தகுந்த ஆதாரங்களோடு வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, அதைவிடுத்து டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் என்று சிறுபிள்ளைப் போல கோள் மூட்டுவது ஏன்????
      அரசு, அதன் திட்டங்கள், சட்டங்கள் அதை எதிர்த்து யாரும் எதுவும் பேசக்கூடாது,  போராடக்கூடாது, அப்படி செய்தால் அவர்கள் அனைவரும் தேசத்துரோகிகளே, அன்னிய கைக்கூலிகளே, அவர்களுக்கென்ற எந்த அடிப்படை உரிமையும் இல்லை. அரசையும், அதன்  கொள்கையையும் ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே கருத்துரிமை, மற்றவர்களுக்கு எதுவுமில்லை என்பதே இந்த உளவுத்துறையின் அறிக்கை….  இதன் பெயர் சனநாயகமல்ல, சர்வாதிகாரம்.  தேர்தல் திருவிழாவில் பங்கு கொள்வது மட்டுமல்ல சனநாயகத்தில் மக்களின் கடமை, அரசு ஒரு சிறுபான்மை முதலாளிகள் கூட்டத்தின் நலன்களுக்காக, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் போது அதை எதிர்ப்பதும் மக்களின் கடமை தான்…
சனநாயகத்தை காக்க ஒன்றிணைவோம்… தொடர்ந்து  போராடுவோம்…….
நற்றமிழன்.ப‌
தரவுகள்…

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*