Home / சமூகம் / தமிழக அரசே உன் சாதி என்ன?

தமிழக அரசே உன் சாதி என்ன?

அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு வீசி அழிக்கப்பட்டன, இத்தோடு நிறுத்தாமல் திருமணமான இளவரசன்- திவ்யா இணையரை பிரித்து(இதில் நீதிமன்றத்தின் பங்குமுண்டு) இளவரசனை கொலை செய்து வட மாவட்டங்களில் சாதி வெறியை தங்களது சுயநலத்துக்காகத் தூண்டி விட்டது பா.ம.க . இந்த ஆதிக்கச் சாதி வெறியை பா.ம.க சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குகளாக அறுவடையும் செய்தது. அன்புமணி தர்மபுரியில் வெற்றி பெற்றார், சிலர் இரண்டாமிடம் பிடித்தனர், பலர் மூன்றாமிடம் பிடித்தனர். “ருசி கண்ட பூனை சும்மா இருக்காது” என்பது போல அண்மையில் மதுராந்தகம் அருகிலுள்ள நுகும்பல் என்ற கிராமத்தை திட்டமிட்டு அழித்துள்ளது இந்தக் கும்பல். அதுமட்டுமின்றி வட மாவட்டங்களில் பல சாதி வெறித் தாக்குதல்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அன்றாடம் நிகழ்த்தி வருகின்றனர்.

2011ல் தோழர்.இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவுதினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்த கூடிய மக்களின் மேல் திட்டமிட்ட வகையில் அரச வன்முறையை ஏவப்பட்டு ஆறு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு முத்துராமலிங்கத்தின் நினைவு தினத்தன்று ஜெயலலிதா அவரது சிலைக்குத் தங்க கவசம் அணிவித்தார். 2012 சித்திரை முழு நிலவு மாநாட்டில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசிய காடு வெட்டி குரு, இராமதாஸ் போன்றோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியாமல், கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாகக் கூட்டம் நடத்தினார்கள் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்ததன் மூலம், நாங்கள் உங்களுக்கு ஆதரவாகத் தான் உள்ளோம் என்று அவர்களுக்குச் சமிஞ்சை கொடுத்தது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து நவம்பரில் நத்தம் காலணி, கொண்டாடம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் சாதி வெறியர்களினால் அறு மணி நேரத்துக்கும் மேலாகக் கொள்ளையடிக்கப்பட்டும், ஒவ்வொரு வீடும் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி அழிக்கப்படும் வரை தமிழக அரசும், காவல் துறையில் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தன. அதுமட்டுமின்றி ளை திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யாமல் அவர்கள் மேலும் பல வன்முறைகளில் ஈடுபட ஊக்குவித்தும் வருகின்றது. இப்பொழுது இளவரசன் நினைவு தினத்தை ஒரு கருவியாகப் பாவித்து அரசு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

முதலில் தர்மபுரி மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு, சாதி வெறியர்கள் மூன்று கிராமத்தை தாக்கும் போதும், அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்து , ஊக்குவித்த அரசு, இன்று இளவரசனின் நினைவு தினத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாதென்று 144 தடையுத்தரவை விதித்தது. அடுத்து சூன் 28ஆம் திகதி ஊர்த்தலைவர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தது, , அடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் இளவரசன் நினைவுதினத்தன்று குண்டு வைக்கத்திட்டமிருந்தார்கள் என்று பொய்ப்புகார் சுமத்தி பலரைக் கைது செய்தனர், இத்தோடு நிறுத்தாமல் நத்தம்காலணியிலிருந்து பிழைப்பிற்காகப் பெங்களூர் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஐந்து நபர்களைப் பெங்களூர் பதுங்கியுள்ளனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பொழுது இளவரசன் நினைவு தினத்தை ஒரு கருவியாகப் பாவித்து அரசு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலில் தர்மபுரி மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு, சாதி வெறியர்கள் மூன்று கிராமத்தை தாக்கும் போதும், அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்து , ஊக்குவித்த அரசு, இன்று இளவரசனின் நினைவு தினத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாதென்று 144 தடையுத்தரவை விதித்தது. அடுத்து சூன் 28ஆம் திகதி ஊர்த்தலைவர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தது, , அடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் இளவரசன் நினைவுதினத்தன்று குண்டு வைக்கத்திட்டமிருந்தார்கள் என்று பொய்ப்புகார் சுமத்தி பலரைக் கைது செய்தனர், இத்தோடு நிறுத்தாமல் நத்தம்காலணியிலிருந்து பிழைப்பிற்காகப் பெங்களூர் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஐந்து நபர்களைப் பெங்களூர் பதுங்கியுள்ளனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் வரலாறெங்கிலும் எந்த அரசும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றதில்லை, அது காங்கிரசாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி. கீழ் வெண்மணியும், தாமிரபரணியும், திண்ணியமும் நமக்கு உணர்த்துவது இதைத் தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நிற்கவேண்டிய அரசு, ஒடுக்குபவர்களுக்குத் துணை நின்று, தன் பங்குக்கு மேலும் ஒடுக்குகின்றது. இங்கே நத்தம் காலணியில் முன்பு நக்சல்கள் இருக்கும் பொழுது இது போன்ற சாதிய ஒடுக்குமுறைகள் இல்லை, ஒரு சமத்துவமான சமூகமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழக அரசு நக்சல்களை அழித்த பிறகு சாதிய பிரச்சனைகள் உருவாகின்றன. முன்பு நக்சல்பாரி கிராமங்களான இம்மூன்று கிராமங்களூம் தாக்கப்பட்டதில் அரசிற்கும், சாதி வெறியர்களூக்கும் கள்ள கூட்டு உள்ளது என்பது திண்ணம்.

வட தமிழகத்தில் வரவிருக்கும் அனல் மின்நிலையங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றினால் வாழ்வாதாரத்தை இழக்கவிருக்கும் பெரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து போராடினால் அரசுக்குப் பிரச்சனை என்பதால் இங்கே சமூகப் பிளவை சாதி வெறி மூலம் அரசு திட்டமிட்டு வளர்ந்து வருகின்றது . இதைத் தமிழகத்தின் எதிர்கட்சியாகக் கருதப்படும் திமுகவோ, கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றது. சனநாயக ஆற்றல்களும், இடதுசாரி இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் ஒன்றிணைந்து இதை முறியடிப்போம். உழைக்கும் மக்களே உங்களைச் சாதி வெறியூட்டி அதன் மூலம் அரசியல் இலாபமடையை நினைக்கும் இராமதாசையும், ஜெயலலிதாவையும் புறக்கணிப்பீர், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தந்து வட தமிழகத்தில் பாசிசத்திற்கும், பெரு முதலாளிச் சுரண்டல்களுக்கும், சாதி வெறிக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பீர்.

“அரசு அதிகாரம் என்பது ஆளும் வர்க்கங்கள், நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும் தங்களுடைய சமூகச் சலுகைகளைப் பாதுகாப்பாதற்குத் தமக்கென்று ஏற்படுத்திக் கொண்டுள்ள அமைப்பு முறை என்பதைக் காட்டிலும் கூடுதலான வேறு ஒன்றல்ல – ஏங்கல்ஸ்  (தேர்வு நூல்கள் தொகுதி 4, பக்கம் எண்-185)”

நற்றமிழன்.ப‌

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*