Home / FITE சங்கம் / நேற்று IBM…இன்று Bally Technologies…நாளை ???

நேற்று IBM…இன்று Bally Technologies…நாளை ???தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களின் ஒவ்வொரு நாளும் விளையாட்டும், வேடிக்கையுமாகவே இருக்கும் என்று இருக்கும் பிம்பம் மீண்டும் ஒருமுறை சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. ஆனால்,எந்தவித சத்தமோ, சிறு சலசலப்போகூட இல்லாமல் நடந்தேறியுள்ளது. இந்த முறையும் இது பற்றிய தகவல்கள் எதுவும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களையோ, பொது மக்களையோ எட்டவில்லை, எட்டாதவண்ணம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பேலி டெக்னாலஜீஸ் (Bally Technologies) என்னும் தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய மொத்த பணியாளர்  எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் மேலான ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது. இதற்கும் இந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களுரு கிளைகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் பணிபுரிபவர்கள் 1300 ஊழியர்கள்தான்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நேரில் கண்ட ஊழியர் ஒருவர் பின்வருமாறு கூறினார்,”எப்போதும் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களின் தளத்திற்குள், சிபிஐ ரெய்டு போல உள்நுழைந்த மனிதவள ஊழியர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் பணிநீக்கம் செய்யப்படவிருக்கும் ஊழியர்களை குற்றவாளிகளைப்  போன்று வெளியில் இழுத்துச் சென்றனர்.”


பேலி டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை. அண்மையில் நாங்கள் விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனத்தை உட்கொண்டு வரும் மறுசீரமைப்பின் ஒருபகுதியாகவே ஆட்குறைப்பு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட கிளைகளில் 150 பேரோடு சேர்த்து, உலகம் முழுக்க 270 ஊழியர்களை, அதாவது நிறுவனத்தின் மொத்த மனித வளத்தில் 7 விழுக்காட்டைக் குறைக்கும் நடவடிக்கையினால் சந்தையில் தன் மதிப்பு சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தனது போட்டி நிறுவனமான SHFL எண்டெர்டைன்மெண்ட்(SHFL Entertainment) என்னும் நிறுவனத்தை அண்மையில் விலைக்கு வாங்கியது பேலி டெக்னாலஜீஸ்.

மென்மேலும் லாபம் சேர்க்க போட்டி நிறுவனத்தை கையகப்படுத்துவதையும், புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும் செய்து கொண்டே பணியில் இருந்த 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பேலி டெக்னாலஜீஸ். இப்போது பணிக்கமர்த்தும் புதிய ஊழியர்களை வேறொரு காரணம் காட்டி வெளியே விரட்டமாட்டர்கள் என்று எந்தவொரு உத்திரவாதமும் இல்லை.பேலி டெக்னாலஜீஸ் மட்டுமல்ல, புதிய ஊழியர்களையும்,கல்லூரி முடித்து வரும் இளம் பட்டதாரிகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒருபக்கம் வேலைக்கு அமர்த்திக் கொண்டே, மறுபுறம் வெவ்வேறு காரணங்களைக் கூறி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.

வேலையிழந்த ஊழியர்களுக்காக வருத்தப்படுவதோடு நில்லாமல்,எங்கள் நிறுவனத்தில் அவ்வாறு எல்லாம் இல்லை; எங்கள் நிறுவனம் ஒப்பீட்டளவில் நன்றாகவே நடத்துகிறது என்று நிறுவனப் பெருமை பேசுவதில் இருந்து வெளியில் வந்து தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களாக ஒருங்கிணைவதன் அவசரமும், அவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வேறொரு நிறுவனத்தில் பணிநீக்கம் செய்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும், என்னுடைய வேலைக்கு பங்கம் வந்தால்தான் கோபப்படுவேன் என்று இருந்தால் நாம் கோபப்பட்டு கொந்தளிக்கும் வேளையில் நமக்காக பேச யாரும் வரமாட்டார்கள் என்பதை ஒருமுறை நாம் மனதில் இருத்தி சிந்திக்க வேண்டும்.

நம்முடைய உரிமைகளை பாதுகாக்கவும், வென்றெடுக்கவும் தகவல் தொழில் நுட்பத் தொழிலாளர்கள் ஒன்றிணைவதின் அவசியத்தை இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நமக்கு அறிவிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

கதிரவன்

About கதிரவன்

2 comments

  1. இது நல்ல முடிவு….தொழில்நுட்பத் தொழிலாளர்கள் ஒன்றிணைவதின் அவசியத்தை இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நமக்கு அறிவிக்கின்றன….எனக்கு தெரிந்தவரை கேளிக்கைகளிலும் விழாக்களிலும் அதிக கவனம் செலுத்தி பாழ்படுத்திய நேரத்தில் …திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு..நிலமை ஏற்படும்போது அதை சமாளிப்பதற்கு தேவையான பாதை உங்களுக்கு கிடைத்திருக்கும். ஈ.சி.ஆர். ரோட்டில் பங்களாக்களை வாடகைக்கு

  2. தோழர் கடாட்சம்…வேடிக்கை, கேளிக்கை என்றிருக்கிறது என்பது வெற்று பிம்பம் மட்டுமே…ஒரு சிறு பிரிவினர் கேளிக்கைகளில் ஈடுபடுவதைக் கொண்டு இந்த ஐ.டி-ல இருக்கிறவங்களே இப்படித்தான்-னு பொதுமைப் படுத்துவது சரியல்ல. அத்தோடு மேற்சொன்ன சிறுபிரிவினரையும் ஒன்றிணைக்க வேண்டியதன் தேவை உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் பெரும்பான்மையினர் முதல் தலைமுறையாக பட்டப்படிப்பு படித்து வேலைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*