Home / அரசியல் / காசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல்

காசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல்

காசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல்

யூலை 26, 2014
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காசா கரையின் மீது ஒரு படை நடவடிக்கையை இசுரேல் மேற்கொண்டது, அப்படை நடவடிக்கைக்கு “அமுத் அனான்” எனப்பெயர். இப்பெயரின் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பு “மேகங்களாலான தூண்” என்ற போதிலும், இந்த நடவடிக்கை அலுவல் பெயரான “தற்காப்பின் தூண்” என்றே அழைக்கப்பட்டது. இப்போது, சில நாட்களுக்குமுன் “பலம்பொருந்திய தூண்” என்ற பெயர்கொண்ட‌ அந்த நடவடிக்கையின் உண்மையான அலுவல்பெயர் “பாதுகாப்பின் விளிம்பு”. இந்தப் பெயரிலும் ஒரு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த இரண்டு நடவடிக்கைகளுக்காவும் வைக்கப்பட்ட பெயர்கள் அதன் கருத்தில் “த‌ற்காப்பையே” உணர்த்துவதாக இருக்கிறது. காசாவின் மீதானத் தாக்குதல்களுக்கு வைக்கப்படும் பெயர்களை (குறிப்பாகப் பன்னாட்டுப் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பெயர்களை) கேட்கும் போதெல்லாம், “இசுரேல் தற்காப்புப் படைகள்” (Israel Defence Forces) என்று பெயரிடப்பட்டிருக்கும் (ஆங்கிலத்திலும் எபிரேயத்திலும் ஒரே பொருள் கொண்ட) இசுரேலிய இராணுவத்தில் படைவீரனாக நான் பணியாற்றியது என் நினைவுக்கு வரும்.

இந்த இராணுவப் பணியின்போது “இசுரேல் தற்காப்புப் படைகள்” என்ற பெயரில் உள்ள பொருளுக்கும், “மேற்குக் கரை” பகுதியில் நாங்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கும் பெரும்இடைவெளி இருந்ததாக எனக்கு ஏற்பட்ட உணர்வு இந்நாட்களில் நினைவுக்கு வருகிறது. எங்கள் முன்னிருந்த பணியென்பது தற்காப்பு, நாங்கள் தீவிரவாதத்தைத் தடுப்பது போன்ற “வரும் முன் காக்கும்” நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.

 ”வரும் முன் காப்பது” என்ற பெயரை வைத்துக்கொண்டு நாங்கள் (இசுரேல்) நடத்தியதெல்லாம் ‘வலிந்தத் தாக்குதல்’ நடவடிக்கைகள் என்பதை நானும் என் நண்பர்களும் அறிந்துகொண்டோம். இன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் அன்று இராணுவ வீரர்களின் தலைவராகவும் இருந்த போகுவி யாலோன், “பாலசுதீனிய உள்ளுணர்வைச் சாம்பலாக்கு” என்று எங்களுக்குக் கட்டளையிட்டார். இந்தக் கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் மக்கள் சமூகத்தை ஒடுக்கவும், தண்டிக்கவும் நாங்கள் அனுப்பப்பட்டோம். அவர்களைக் காயப்படுத்தவும், மக்களைக் காயப்படுத்தினால், ஒடுக்கினால் அவர்கள் கலகம் செய்ய மாட்டார்கள் என்ற கருதுகோளின் அடிப்படையிலே இப்படைநடவடிக்கை இருந்தது. பாலஸ்தீன மக்களின் உள்ளுணர்வை அச்சுறுத்தலுக்குள்ளாக்கு என்பதைத் தான் நாங்கள் “பாலஸ்தீனம் என்ற உள்ளுணர்வை எரித்துவிடுங்கள்” என்ற பெயரில் கூறி வந்தோம்.

breaking-the-silence-400x93
பாலசுதீனிய மக்களை ”அடித்து நொறுக்க” வேண்டுமென்றால் ஒவ்வொரு பாலசுதீனியரையும் எதிரியாகவும், தாக்கப்பட வேண்டியவராகவும் பார்க்க நானும், என் நண்பர்களும் கற்றுக் கொண்டோம். ”எங்கள் இருப்பை உணர்த்தும்” நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டபோதெல்லாம், பாலசுதீனியக் குடிமக்களைக் குழப்பி, அச்சுறுத்தி அவர்கள் என்றென்றும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்க வேண்டும் என உணர்த்துவதுதான். அவர்கள் வாழ்ந்தப் பகுதிகளைத் தொடர்ச்சியான கண்காணிப்பின்கீழ் வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும், அவர்களின் வீடுகளில் இரவு, பகல் பாராமல் நுழைந்து அச்சுறுத்தியதன் மூலமும் இக்குறிக்கோளை நாங்கள் அடைந்தோம். உளவுத் துறை தகவல்களுக்குக் காத்திருந்து, அதனை அடிப்படையாகக் கொண்டெல்லாம் இது போன்ற நடவடிக்கைகள் எதையும் நாங்கள் எடுக்கவில்லை.

வேறு சில நேரங்களில் தீவிரவாதத்தைத் “தடுக்க” அப்பாவி பாலசுதீனியர்களைக் கூட்டுத்தண்டனைக்கு உட்படுத்தினோம். ஓர் இசுரேலிய சிறுமி கொல்லப்பட்டபோது, பாலசுதீனியர்கள் மீது கூட்டுத்தண்டனையை நிறைவேற்றதான் நாங்கள் அதோரா குடியிருப்பு பகுதிக்குச் சென்றோம்.

அந்தக் கொலை நடந்த சில மணிநேரத்தில், அதோரா குடியிருப்புப் பகுதியின் அருகிலிருக்கும் துஃபாக் எனும் சிற்றூரை நாங்கள் முற்றுகையிட்டோம். ஒரு நாள் முழுக்க அவ்வூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்துச் சோதனையிட்டோம். அப்போதைக்கு எங்களின் விசாரணைக் கூடமாக மாறிவிட்டிருந்த அவ்வூரின் பள்ளிக்கூடத்திற்கு, அனைத்து ஆண்களையும் விசாரணைக்காக அனுப்பினோம். அதன் முடிவில் நாங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. சிந்தித்துப் பார்த்தால் எதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோளாகவும் இல்லை என்று தோன்றுகிறது. கூட்டம் கூட்டமாகக் குடிமக்களைக் கைது செய்ததன் மூலமும், அவர்களின் வீடுகளுக்குள் படையெடுத்தன் மூலமும் நாங்கள் அவர்களின் உள்ளத்தில் அச்சத்தை விதைத்தோம். அதோரா சமூகத்தையே “தண்டித்தோம்”. இன்றைக்கே அனைவரையும் தண்டித்து விட்டால் வருங்காலத்தில் எதை ஒன்றைச் செய்யவும் அவர்கள் அஞ்சுவார்கள் எனும் வாதம்தான் இதையெல்லாம் எங்களைச் செய்ய வைத்தது.

mqdefault
காசாவிலிருந்து ஏவப்பட்ட எறிகணை, இசுரேலின் இரண்டு குடிமக்களை இசுரேலின் எல்லைக்குள்ளேயே கொன்றிருக்கிறது. இது முறையற்ற, கொடூரமான செயல், இதனை எவ்வகையிலும் சரியென நிறுவ முடியாது. இசுரேல் முழுவதிலுமுள்ள பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இந்தத் தாக்குதல்கள் இருக்கின்றன. பல குடிமக்கள் காயமடையவும் காரணமாக இத்தாக்குதல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறிகணைத் தாக்குதல்களை, காசா பகுதியில் வாழும் அனைவரையும் கூட்டுத்தண்டனைக்கு உட்படுத்த ஒரு காரணமாக ஏற்க முடியாது. எப்படி அச்சிறுமியின் கொலை நடந்திருக்கக்கூடாதோ, அதேபோல் துஃபாக் பகுதியிலிருந்த அனைவரையும் தண்டணைக்குரியவர்களாக, கைது செய்யப்படவேண்டியவர்களாக, கண்மூடித்தனமான தேடுதலுக்கு உள்ளாக்கப்படவேண்டியவர்களாக நாங்கள் மாற்றியிருக்கக் கூடாது.

காசா பகுதியின் தற்போதையத் தாக்குதல்களின் போது உயிரிழந்த 18 இசுரேலிய இராணுவ வீரர்களின் இழப்புக்கு நாம் உள்ளம் கலங்கி நிற்கும் அதே வேளையில், நம் இழப்புகளின் தாக்கத்தில், போர்விதிகளை மீறமுடியாது. இசுரேலின் தாக்குதலுக்கு ஏறக்குறைய 500 பாலசுதீனியர்கள், அதில் பெரும்பாலும் குடிமக்கள், உயிரிழந்துள்ளார்கள். இப்போதெல்லாம் இசுரேலின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கும் பாலசுதீனியர்களுக்கு, தற்காப்பு என்ற பெயரில் ஆண்டுமுழுக்கத் தீங்கிழைத்து வருகிறோம்.

2005 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து விலகிக்கொள்வது என்று முடிவு எடுத்த பின்னரும் காசாவின் வான்வெளியையும், நீர் எல்லையையும், அப்பகுதியினுள் சில இடங்களையும், காசாவிலிருந்தும் காசாவிற்குள்ளும் செல்லும் மக்களையும், பொருட்களையும் ஏறக்குறைய முழுமையாக நம் கட்டுப்பாட்டின் கீழ் தான் வைத்துள்ளோம். காசாவின் மக்கள் தொகை பதிவு இசுரேலின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது. 16 வயதான பாலசுதீனர் அடையாளஅட்டையைப் பெற்றுக் கொள்ள இசுரேலின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் இச்சிக்கலின் ஒரு சிறு எடுத்துக்காட்டு மட்டுமே. இசுரேலின் தொடர் தாக்குதல்கள் என்பது, காசா பகுதியில் உள்ள படைக்கட்டமைப்புகளை மட்டுமல்லாமல், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அங்கு வாழும் அனைத்துப் பொதுமக்களையும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இப்போது நடந்து கொண்டிருப்பவை நம் மீது திணிக்கப்பட்ட ‘உண்மைச் சூழல்’ அல்ல. பாலசுதீனத்தின் மீதும் அதன் மக்களின் மீதும் கட்டுப்பாட்டைச் செலுத்த, நம் தலைமையின் அன்றாடத் தெரிவுகளின் வெளிப்பாடு தான் இந்த நிதர்சனம். இத்தகைய தெரிவுகளின் விளைவுகளை நான் நன்கு அறிந்தவன். ஏனென்றால் ஒரு படைவீரனாக, படைத்தலைவனாக நான் இந்தத் தெரிவுகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளப் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது எத்தகைய பலம் கொண்டும் ஓர் அந்நிய அரசு பலபத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது முறையல்ல என்பதை நான் கற்றிருக்கிறேன், அது அறமுமல்ல.

காசாவின் மீதானத் தாக்குதல்களுக்கு நாம் கொடுக்கும் பெயர்களை மட்டும் மாற்றித் தற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதனால் மட்டுமே நம் தாக்குதல்களின் தன்மை மாறப்போவது கிடையாது. ஆக்கிரமிப்பை நிறுத்திக் கொண்டால் மட்டுமே குறிப்பிடும்படியான மாற்றங்கள் நிகழும். உண்மையாகச் சொல்லப் போனால், ஆக்கிரமிப்பு நின்றால்கூட இசுரேலின் தென்பகுதியிலுள்ள நகரங்களின் மீதான, மக்களின் மீதானத் தாக்குதல் குறையுமா என்பதை உறுதியாகச் சொல்வது இயலாது. ஆனால், இன்னும் ஆக்கிரமிப்பு முடியவில்லை என்பதையும், உடனடியான மாற்றங்கள் வரவில்லையென்றால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இப்போது சந்திப்பது போன்றதொரு மோசமான இரத்தக்களறியான சூழலை நாம் மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும். வெறும் சொல்விளையாட்டுகளால் இச்சூழலை மாற்றமுடியாது. இசுரேல் தன்னைத் தற்காத்துகொள்ளவும், பாலசுதீனத்தைத் தாக்கவும் முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளைத் தற்போதும், நாள்தோறும் எடுத்துவருகின்றது. இன்றைய நிலைமையை விளக்கவும், சரியென நிறுவவும் முற்படாமல், மாற்றங்களைக் கொண்டுவர நாம் முடிவெடுக்க வேண்டும். “ஆக்கிரமிப்பை நிறுத்து” என்று நாம் சொல்ல வேண்டும்.
___
யஃசூதா சாவுல் இசுரேலிய படையில் வீரராகவும், படைத்தலைவனாகவும் பணிபுரிந்திருக்கிறார். இசுரேலிய தற்காப்புப் படையில் பணிபுரிந்து, ஆனால் இன்றைக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் வீரர்களின் இயக்கமான ‘மௌனத்தை உடைத்தெறிவோம்’ (Breaking the Silence) என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினராக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – ஜெனி

மூலப்பதிவு –

http://kafila.org/2014/07/26/breaking-the-silence-about-gaza-from-israel-yehuda-shaul/

About ஜெனி

One comment

  1. End occupation #FreeGaza #freePalestine
    #Isolate_Israel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*