Home / அரசியல் / யார் இந்த அமித் ஷா?!!

யார் இந்த அமித் ஷா?!!

கடந்த வாரம் பாரதிய சனதா கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதால் பாரதிய சனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழமைப் போலவே, புதிதாக பதவியேற்றுள்ள கட்சித் தலைவரின் கடந்த காலங்களை அசைபோடும் 24 மணி நேர செய்தி ஊடகங்கள், அமித் ஷாவின் திறமைகளையும், தேர்தலுக்கு அவர் வகுத்த உத்திகளையும் சிலாகித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

*குஜராத் மாநில சட்ட மன்ற உறுப்பினராக நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.

*தற்போதைய பிரதம அமைச்சரும், முன்னாள் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

*கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பா.ச.க வெல்ல திட்டம் போட்டு வேலை பார்த்த சூத்திரதாரி.

இவ்வாறெல்லாம், அமித் ஷா-வைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஊடகங்கள் எல்லாம் அம்னீஷியாவில் சிக்கி சில விடயங்களை மறந்தும், மறைத்தும் விட்டன.

amit-shah-pres2

*2010 ஆம் ஆண்டு போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்தார்.

*போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இருபது நாட்களுக்கு காவல்துறையிடமிருந்து தப்பி தலைமறைவாகி இருந்தார்.

*இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

*சொரப்புதின் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்ட போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர் மீது, துளசி பிரஜாபதி என்பவர் போலி என்கவுன்ட்டர் கொலை வழக்கிலும் சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

*குஜராத்தை விட்டு வெளியேறி இருந்த காலத்தில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது உத்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டதையும், அப்போது நடைபெற்ற முசாபார் நகர் கலவரத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

*சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டும் தனது பேச்சால் உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையம் இவரது பிரச்சாரத்திற்கு தடை விதித்தது.

*இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது குஜராத் மாநிலத்தில் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்த வழக்கிலும் இவருக்கு இருக்கும் தொடர்பு ஊரெங்கும் நாறியது நாம் அறிந்ததே.

இவ்வாறான அமித் ஷா-வின் தகுதிகளை மறைத்துவிட்டுதான் இன்று ஊடகங்கள் அவரைக் கொண்டாடி வருகின்றன.

2000 பேரைக் கொன்றால் பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கும் போது, வன்முறை செய்ய உறுதுணையாக இருப்பதும், சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமித் ஷா ஒரு கட்சியின் தலைவராவது எப்படி தவறாக தெரியும்.

இந்த செய்தியை வெளியிட்டிருந்த ஜூனியர் விகடன் , தன்னுடைய செய்திக் கட்டுரையை பின்வருமாறு தொடங்கியிருந்தது, ” நண்பனை நாட்டின் பிரதமர் ஆக்கிவிட்டு, கட்சியின் தலைவர் ஆகிவிட்டார் அமித் ஷா. ஒரே நேரத்தில் இரண்டு நண்பர்கள் உச்சமான பதவியை அடைந்திருப்பதுதான் சமீபகால சாதனை!”.

அல்லவைத் தவிர்த்து நல்லவற்றின் பக்கம் நிற்க வேண்டிய ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தின் செய்தி ஊடகமாக வேலை செய்வதையே இது காட்டுகிறது.

மோடி – வெளிச்சங்களின் நிழலில் என்னும் என்னுடைய கட்டுரைத் தொடரில் மோடியையும், ராஜபக்சேவையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரையில் பின்வரும் கருத்தை முன்வைத்திருந்தோம், ” தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை அரசின் பல்வேறு பதவிகளில் அமர்த்தி சர்வதிகார ஆட்சி நடத்துகிறார், இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தால் இதே போலத்தான் செயல்படுவார் ” என்ற கருத்தை எழுதியிருந்தேன்.

உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு, சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் நோக்கி வேகமாக நடைபோடுவதன் வெளிப்பாடே பாசிச பாரதிய சனதாவின் தலைவராக அமித் ஷா தேர்வாகியுள்ளது.

கதிரவன்

About கதிரவன்

One comment

  1. Amit Shah was much involved in Gujrat massacre and Muzzafarbad riots

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*