Home / அரசியல் / மோடியை(இந்தியாவை) கோமாளியாக்கும் சிங்களப்பேரினவாதம்…

மோடியை(இந்தியாவை) கோமாளியாக்கும் சிங்களப்பேரினவாதம்…

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும் கடந்த சூலை 24 முதல் இராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 50 மீனவர்களை சேர்த்து இதுவரை 94 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது வரை தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இலங்கையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை மீட்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசை கண்டித்து ‘கச்சத்தீவிற்கு செல்வோம்’ என நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் படகுகளில் கச்சத்தீவுக்கு செல்லும் ‘நீதிக்கான பயணம்’ எனும் போராட்டத்தை இன்று (ஆகத்து 02) தொடங்குகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் எந்த வெளிநாட்டவரையும் உடனடியாக இலங்கை கடற்படை கைது செய்யும் என எச்சரித்துள்ளது.

 இதுவரை இந்தப் போராட்டம் குறித்தும் மீனவர்களின் படகுகளை திரும்பப் பெறுவது குறித்தும் இந்திய அரசு தரப்பில் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

 மேலும் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசு நடத்தும் ‘பாதுகாப்புத் துறை கருத்தரங்கம்’ இந்த ஆண்டு வரும் ஆகத்து மாதம் 18 ஆம் நாள் கொழும்பில் தொடங்குகின்றது. இந்தக் கருத்தரங்கில் இந்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், பாரதிய சனதா கட்சி சார்பில் சுப்ரமணிய சாமி தலைமையில் ஒரு குழுவும் பங்கெடுக்கின்றது.

 கடந்த முறை நடைபெற்ற கருத்தரங்கிலும் சுப்ரமணிய சாமி கலந்து கொண்டு இலங்கை அரசிற்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு புரிந்து வரும் இனப்படுகொலைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது புரிந்து வரும் இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் இந்திய அரசு இந்த கருத்தரங்கில் தமிழகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் தமிழக முதல்வர் செயலலிதா தமிழக மீனவர்கள் கைதைத் தடுக்கவும், படகுகளை மீட்பதை வலியுறுத்தியும் இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிவரும் கடிதங்களை விமர்சித்து ‘செயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும்’ என்ற தலைப்பில் சேனாலி வடுகே என்ற சிங்கள ஊடகவியலாளர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையை கடந்த வியாழன் அன்று இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணையதளம் கேலிச் சித்திரத்துடன் வெளியிட்டிருந்தது.

 இலங்கையின் அதிபர் இராசபக்சேவின் தம்பி கோத்தபாய இராசபக்சேவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை இலங்கை அரசு வெளிப்படுத்த விழையும் கருத்தே ஆகும்.

 fisherman

ஒரு நாட்டு மக்களின் பிரதிநிதியை இத்தனை இழிவாக விமர்சனத்திற்கு உட்படுத்தியிருப்பது குறிப்பாக பெண் என்ற காரணத்தினால் பாலியல் முறையிலான பகடிகளுக்கு உட்படுத்தியதற்கு நாம் கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியுள்ளது.

 அதே வேளை காலந்தோறும் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகவே இந்த கட்டுரையை அதிர்ச்சிகள் இன்றி கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவிடாத சூழலில் தமிழகத்தில் எழுந்த வலிமையான எதிர்ப்புக் குரல்கள் காரணமாக நெருக்கடியை சந்திக்க விரும்பாது இந்திய அயலுறவுத் துறை, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அந்த கட்டுரையை அப்புறப்படுத்தவும் மன்னிப்பு வெளியிடவும் ஏற்பாடு செய்துள்ளது.

 பிரச்சனையின் அடிப்படையான மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்காத இந்திய அரசு ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்து வரும் இலங்கை அரசோடு நட்பு பாராட்டுவது தான் இலங்கையை தமிழக முதல்வர் குறித்து இத்தகைய இழிவான கட்டுரையையும் சித்திரத்தையும் வெளியிட ஊக்குவிக்கின்றது.

 இந்திய ஊடகங்கள் இக்கடித விடயத்தில் இலங்கை நோக்கி எதிர் கருத்துக்களை கட்டி எழுப்புகின்றனர். இதற்கு முன்னர் செயலலிதா குறித்து வெளியான கேலிச்சித்திரம் குறித்து கள்ள மௌனம் சாதித்த இந்த ஊடகங்கள், இன்று இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்பதற்கு “மோடியை” அவர்கள் கட்டுரைக்குள் கொண்டு வந்ததே காரணமாகும். ஊடகங்களைப் பொறுத்தவரை தில்லி தான் இந்தியா. குறிப்பான பார்வையில் இது இலங்கை குறித்து எதிர் கருத்தை எழுப்புவதாக தோன்றினாலும் நடைமுறையில் ஒட்டுமொத்தமாக இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காது நட்பு நாடு என்று அறிவித்துள்ள இந்திய அரசே ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் அரசியல் பின்னடைவுகளை சந்திக்க அடிப்படையாக இருக்கின்றது. தமிழகத் தமிழர்களின் போராட்டம் இலங்கையை ஊக்குவிக்கும் இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்து அம்பலப் படுத்துவதே நமக்கு அரசியல் பலம் சேர்க்கும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

இளங்கோவன்

தரவுகள்:

1) http://www.lankaweb.com/news/items/2014/07/31/how-meaningful-are-jayalalithas-love-letters-to-narendra-modi/

புகைப்படம் – நன்றி – டைம்ஸ் நவ் (Times Now)

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*