Home / சமூகம் / இந்துத்துவம் / சிதம்பரப்பட்டி சோழியன் குடுமியும் – முண்டாசுப்பட்டி வானமுனியும்!
முண்டாசுப்பட்டி

சிதம்பரப்பட்டி சோழியன் குடுமியும் – முண்டாசுப்பட்டி வானமுனியும்!

சிதம்பரப்பட்டி-னு ஒரு ஊரு. அந்த ஊருல இருக்குறவங்க எல்லாருக்குமே ஒரு மூட நம்பிக்கை. அது என்னன்னா, ‘கோவில் சிற்றம்பலத்துல வச்சு தமிழ்ல பாடுறத கேட்டா’ தொத்து வியாதி வந்து மக்கள் இறந்துடுவாங்க. அதுக்கு ஒரு ‘கொசுவத்தி’ கத இருக்கு (ப்ளாஷ்பேக்).

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு…..

அந்தக் கோவில அப்பதான் கட்டி முடிச்சாங்க. பல நூறு ஏக்கர் பரப்பளவு. அங்க உள்ள குருக்கள்(தீட்சிதர்கள்) எண்ணிக்கையே சில ஆயிரத்தைத் தொட்டுச்சுன்னா பாத்துக்குங்களேன். அப்படியாப்பட்ட பெரிய கோவில்ல உள்ள ‘சிற்றம்பல’த்துல வச்சி ஒரு பக்தர் தமிழ்ல பாட ஆரம்பிச்சாரு. அவர் பாட ஆரம்பிச்ச நாள்லேருந்து அந்தப் பக்கமா வந்த ஒவ்வொரு தீட்சிதருக்கா உடம்புக்கு சரியில்லாம போயிடுச்சி. ஏதோ ஒரு வியாதி வந்து ஒவ்வொருத்தரா உசுர விட ஆரம்பிச்சாங்க. ஒருநாள், இதேமாதிரி சிற்றம்பலத்துல தமிழ்ப் பாட்டு பாடினப்போ மூலவர் கருவறைல அர்ச்சனை பண்ணிட்டு இருந்த ஒரு சீனியர் ‘சோழியனோட'(தீட்சிதர்) குடுமில ஒரு காக்கா வந்து உக்காந்துச்சி. அதனால குடுமி லேசா ஆடிச்சி. சிற்றம்பலத்துல பக்தர், தமிழ்ப் பாட்டு பாடுனத நிறுத்தினதும் குடுமிலருந்து  காக்கா கிளம்பி போறதும் ஒரே நேரத்துல நடந்துச்சி; குடுமி ஆடுறதும் நின்னுச்சி. அப்ப அந்த தீட்சிதரு, தமிழ்ப் பாட்டு படிச்சதுதான் எல்லாத்துக்கும் காரணம்னு முடிவு பண்ணி, மத்த தீட்சிதருங்களையெல்லாம் ஒண்ணா கூட்டினாரு. உடனடியா கோவில் ஆகம விதிகள், பழக்கவழக்கம் எல்லாத்தையும் மாத்தி  வச்சாங்க. ‘சிற்றம்பலத்துல தமிழ்ல பாடக்கூடாது’ங்கறதும் அதுல ஒண்ணு. மழகாலம் முடியவும், நோய் பரவுரதும் நின்னுச்சு. ஆனா, ‘சிற்றம்பலத்துல தமிழ்ல பாடுனத கேட்டதாலதான் வியாது வந்துச்சு’ன்னு அந்த தீட்சிதருங்கல்லாம் உறுதியா நம்பினாங்க. அது காலங்காலமா தொடர்ந்துச்சி.

சிற்றம்பலம்

சிதம்பரம் கோவில்

இப்போ, கதை நடக்குற காலம்… கி.பி.2014

நம்ம படத்தோட கதாநாயகன் ஒரு போட்டோ புடிக்கிற ஆளு. அவரோட நண்பர், சங்க இலக்கியம், இலக்கணம், தேவாரம் திருவாசகம்-னு சுத்துற ஒரு ஆளு. தொழிலுக்காக கதாநாயகன் ‘சிதம்பரப்பட்டி’ வரும்போது, நண்பரும் கூடவே வர்றாரு. ஹீரோ அந்த ஊரு தீட்சிதரோட மகள பார்த்து காதல்ல விழுறாரு. அந்தப் பொண்ணுக்கும் இவர புடிச்சுடுது. ஒரு நாளு, நம்ம நாயகனும் அவரு நண்பரும் அந்தக் கோவில்ல சுத்திபாத்துட்டு இருந்தப்போ, கோவிலப் பாத்துஅசந்துபோயி நாயகனோட நண்பர் ஒரு ‘தேவாரப்’பாட்ட எடுத்து உட்டாரு. அவ்ளோதான், தீட்சிதருங்கல்லாம் தெரிச்சு ஓடுறாங்க. இவங்களுக்கு என்னான்னு புரியாம அந்த இடத்த விட்டு கிளம்புறாங்க. கொஞ்சதூரம்தான் போயிருப்பாங்க, இவங்க ரெண்டு பேரையும் சுத்தி வளச்சி, கும்மு கும்முன்னு கும்முறாங்க, குடுமிகாரங்க. தமிழ்ல பாடுனதுக்குத் தண்டனையா கோவில் கிணற தூர்வார வைக்கிறாங்க. கதாநாயகி மேல இருந்த காதல்னால, நாயகன் சந்தோசமா தண்டனைய ஏத்துக்கிடுறாரு. இந்த நேரத்துல, கோவில்ல ஒரு சிலைய யாரோ கடத்திடுறாங்க. தீட்சிதருங்க எல்லாம் பரபரப்பா அதத் தேடிகிட்டு இருக்கும்போது, நாயகி வந்து ஹீரோவ இழுத்துட்டுப் போயி சாமி முன்னாடி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணறாங்க. இதப் பார்த்த ஒரு தீட்சிதரு, சத்தம்போட்டு மத்த தீட்சிதருங்கள கூட்டுறாரு. அவங்கல்லாம் வந்து கல்யாணத்த தடுக்க முயற்சி செய்யுறாங்க. நாயகி, நாயகன் அப்புறம் அவரோட நண்பர் மூணுபேருமா கோவில்லேருந்து தப்பி ஓட முயற்சி பண்றாங்க. அந்த களேபரத்துல ‘சிற்றம்பலத்’துக்கு வந்துடறாங்க. இப்ப நாயகனோட நண்பனுக்கு பளீர்னு ஒரு ஐடியா வருது. ‘யாராவது பக்கத்துல வந்து கல்யாணத்த தடுத்தீங்கன்னா, தேவாரம் பாடிருவேன். ஒழுங்கா அங்குனயே நின்னு அட்சதைய போட்டுட்டு போங்க’ அப்படிங்குறாரு. இப்ப, ஒரு தீட்சிதருங்களும் பக்கத்துலயே நெருங்கலையே! நம்ம கதாநாயகன் தாலிய கட்டும்போதுகூட, எல்லா தீட்சிதருங்களும் அட்சதைய போட்டாங்க. ஒரு சிலர் மந்திரம் கூட சொன்னாங்க. இப்படி சுபமா முடிஞ்சது நம்ம கதாநாயகன்-நாயகியோட கல்யாணம்!

*************

இதுமாதிரி, பெருதெய்வங்கள் மீதான நம்பிக்கையைக் கேலி செய்து ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்துவிட முடியுமா? அப்படியே எடுத்தாலும் அது சென்சார் போர்டுகளுக்கோ, இந்து மத வெறியர்களின் கூச்சலுக்கோ தப்பி வெளிவந்துவிடுமா?

முண்டாசுப்பட்டி:  ஒரு கிராமத்தின் குல (குறிப்பிட்ட சாதியின்) தெய்வமான ‘வானமுனி’யைப் பற்றிய மூடநம்பிக்கைகளைக் கேலிசெய்து, எண்ணற்ற தமிழர்களைச் சிரிக்க வைத்திருக்கிறது. எங்கோ தூரத்திலுள்ள, கேள்விப்பட்டிராத ஒரு சிறுதெய்வத்தைக் கேலிசெய்வது சிரிப்பை வரவழைக்கிறது. எளிய மக்களின் மூடநம்பிக்கைகளை இயல்பாக கிண்டல் செய்யும் காட்சிகளைக் கொண்டுள்ள இந்தப் படத்தை, இம்மட்டுமாவது எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில், இதில் சொல்லப்படாத மறுபக்கத்தையும் கவனிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தப் படம் பார்த்து சிரித்துவிட்டுச் செல்லும் மக்களில் பெரும்பாலானோர், எத்தனையோ மூடநம்பிக்கைகளை, சிவன், பெருமாள், கணபதி போன்ற பெருதெய்வங்களின் வழிபாடுகளிலும் கொண்டிருக்கின்றனர். அவற்றைக் கேலிசெய்தால் என்ன நடக்கும்? இவர்கள், இதே மாதிரி சிரிப்பார்களா?

முண்டாசுப்பட்டி

முண்டாசுப்பட்டி

சிறுதெய்வங்களின் மீதான மக்களின் மூடநம்பிக்கையை இகழ்வதும், பெருதெய்வங்களின் மீதான தங்களின் மூடநம்பிக்கை மற்றும் சடங்குகளை அதிகரித்துக்கொண்டே செல்வதும், புதிதாக உருவாகிவரும் நடுத்தர வர்க்கத்திற்குப் பழக்கமாகிவருகிறது. தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர்களிலிருந்து, புதிது புதிதாக இவர்கள் பின்பற்றும் விரதங்கள் சடங்குமுறைகள் அத்தனைக்கும், பெருந்தெய்வ வழிபாடுகளை ஊக்குவிக்கும் ‘பார்ப்பனர்களை’யே அட்டைக்காப்பியடிக்கிறார்கள். இப்படிச் செய்வது, தங்களின் சமூக மதிப்பைக் கூட்டும் என்று நம்புகிறார்கள். பெருந்தெய்வங்களை மையமாக வைத்து இந்தியா முழுமையையும் இணைத்து ‘இந்து தேசம்’ கட்டுவதற்கு கடும் உழைப்பைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன பல பெரு நிறுவனங்கள். (ஆண்டுக்கு ஆண்டு அதி தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் ‘விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்’ எடுத்துக்காட்டு). மைய அரசில் ஏற்பட்டுள்ள அண்மைய ஆட்சிமாற்றத்தில் கூட, இந்தக் கூறின் தாக்கம் உள்ளது.

எளிய மக்களின் நம்பிக்கைகளை கேலி செய்துவிடும் இவர்கள்தான், இயற்கை எதிர் விளைவுகளை கணக்கில் கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு, ‘ராமர் கட்டிய பாலம்’ என்ற புள்ளியிலிருந்து அதனை எதிர்க்கிறார்கள். இந்தப் புதிய, முதல் தலைமுறை பணக்காரர்கள்(?) எதற்கெடுத்தாலும் ‘ஜாதகம்’ பார்க்கிறார்கள். திருமணத்திற்கு பெண் தேடுவதிலிருந்து, பிறந்த பிள்ளையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு நல்ல நேரம் பார்ப்பதற்குக் கூட ஜாதகம் பார்க்கிறார்கள். அதே குழந்தையை ‘நல்ல'(?) நேரத்தில் பிறக்க வைக்க, ஜாதகம் பார்த்து அறுவை சிகிச்சை செய்தவர்கள்/செய்கிறவர்களும் கூட நம்முடனேயே அலுவலகங்களில் பக்கத்து இருக்கைகளில் இருக்கிறார்கள்.

மகாபாரத காலத்திலேயே நம்மவர்கள் ‘குளோனிங்’ முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள்” என்று அறிவுஜீவித்தனமாக(?) பேசுவது, “தண்ணீரில் இருப்பது H2O மூலக்கூறு என்பதைக் கண்டுபிடித்து பதிவு செய்தது அதர்வண வேதம்” என்று திடீர் குபீர் அதிரடி விஞ்ஞானிகளாக உருவாகிவிடுவது, இப்படி, பெருதெய்வ வழிபாட்டில் இருக்கும் அத்தனை மூடநம்பிக்கைகளுக்கும், அறிவியல் பின்னணி கொண்ட புதுப்புது விளக்கங்களை தேடித்தேடிக் கொடுப்பது, என்று படித்த நடுத்தட்டு வர்க்கம் தன்னுடைய மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றையும் ‘போலி’ப் பெருமிதங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது.

‘சத்ய’ சாய் பாபாவின் கைவிரல்களிலிருந்து (கூடை கூடையாய் வந்திருந்தால் கூட பரவாயில்லை) கொஞ்சூண்டு ஒளித்து வைத்திருந்த விபூதியை உருட்டி எடுத்ததற்கே, ‘ஆ’ வென்று வாய் பிளந்ததெல்லாம் நம்ம மக்கள் மறந்துவிட்டார்கள் போல. இன்றளவும் இந்துக் கோவில்களில் அர்ச்சகராக பார்ப்பனரல்லாதவர்கள் வர இயலவில்லை. (சாதி அல்லாமல்) இந்துமதத்தின் எந்தச் சட்டத்தால் இது தடுக்கப்பட்டுள்ளது என்று யாரேனும் விளக்க முடியுமா? மக்களில் பெரும்பாலானோர், அது ‘பார்ப்பனர்களுக்கு மட்டுமான வேலை’ என்று நம்புகிறார்கள்! இதுவெல்லாம் மூட நம்பிக்கையில் வராதோ என்னவோ?

-ஊர்சுற்றி ஜோன்சன்

Image: http://jataayu.blogspot.in/2008/03/blog-post.html

About ஊர்சுற்றி ஜோன்சன்

மென்பொருள் துறையில் பணிபுரிபவர். தற்போது வசிக்கும் ஊர்: சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*