Home / அரசியல் / ஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:

ஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:

கடற்கரை மணலின் அலையில்

முகம் புதைய கிடந்தனர்

நான்கு சிறுவர்கள்.

அப்பொழுது அந்தியின் கடைவாயில் இருந்து

ஷெல்கள் சீறிப் பாய்ந்தன.

 

ஷிஃபாயின் மருத்துவமனை

நிணமும் கெட்டி குருதியும் விம்மல்களும்

துடிக்கும் தொண்டைக் குழிகளும்

 

gaza_5

 

அங்கே கூட

ஆங்காரங் கொண்ட தீச்சுவாலைகள் விழுங்கித் தின்றன

ஆக்சிஜன் சிலிண்டர்களும் சிரிஞ்சுகளும்

சாகக் கிடந்தன.

அது பின் மதிய வேளையாக இருந்திருக்கலாம்

 

ஷுஜயாவின் வீடுகள் வெறும் இடிபாடுகளாயின

சிறுமிகள் பிணங்களாயினர்

பிரியமானவர்களின் உயிர் உஷ்ணம் உலர்வதற்குள்

அவர்களின் செத்த உடல் தொட்டு பார்க்க தேடி சென்றவர்கள்

எங்கே

பாஸ்பரசும் ஆணிகளும்

அமைதியின் காவலர்களாகி பீடு நடை போட்டன

அப்பொழுது அதிகாலை புலர்ந்து எரிந்தது

 

”என்னை எப்பொழுது கொல்வீர்கள்? சீக்கிரம்

என்னால் இதை தாங்க முடியவில்லை” என்று கூறிய சிறுவனின்

கோரலுக்கு சீக்கிரமே நீதி கிடைத்தது

அப்பொழுது இரவு வெடிக்க தொடங்கியது

 

மரணம் தலை மேல் கவிழ

ரத்தப்பிசுபிசுப்பு பெருகியோடியது

வரலாற்றின் முடிவுறாத செந்நிற பேராறு

 

முன்னொரு காலத்தில்

வாக்களிக்கப்பட்ட இடத்தில்

தீர்க்கப்படாத கணக்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன

 

எங்கள் ஊரிலும் இதே கதை

திரிசூலங்களும் ராம ராஜ்யங்களும்

புடைத்த புஜங்களும்

பசித்து நிற்கின்றன

 

gaza_7

 

புகைப்படங்களும் ஆவணங்களும்

ஏதொரு அர்த்தமுமற்று நிரம்பி வழிகின்றன

ஒவ்வொருமுறையும்

முன்னதை விட குரூரமானவையை கண்டால் தான்

பித்தேறி

பதைக்கிறது மனம்.

தயவு செய்து

அடுத்த முறை இன்னும் கொடுமையான காணொளியை

கொடுக்கவும்

 

 

பச்சை நிற டீ ஷர்ட் அணிந்த அந்த இளைஞன்

தனது இறுதி சுவாசப் பெருமூச்சினூடே

எனது காதில் ஏதோ முணுமுணுத்தான்

 

புகைப்படம் எடுக்க குனிந்தவனும்

முதலுதவி செய்ய குனிந்தவனும்

கூட ஏதோ சொல்லி மாண்டனர்

 

கட்டெறும்புகளும் ரோஸ் நிற ஷூக்களும்

எரிந்து சாவதைப் போல கனவு காண்கிறாள்

மூன்று வயது நூர்.

அவள் விழிக்கப்போவதில்லை.

 

ஏவுகணைகளின் காலத்தில்

அம்புகள் எம்மாத்திரம்

அரசியல் தந்திரங்களின் காலத்தில்

நியாயங்களையும் நீதிகளையும்

யார் காதில் சென்று ஊத

 

எமது அரசியல் நிலைப்பாடுகளும்

எமது மானுட நேசமும்

எமது மயிர்கூச்செறிய வைக்கும் முழக்கங்களும்

எமது விடுதலை தவிப்பும்

இழவு வீட்டின் சாம்பிராணியன்றி வேறென்ன

 

திறந்த கண்களுடன்

சொல்லாத கனவுடன்

புதைந்து போன ஃபௌவாதின்

மெல்லிய இருதயத்துடிப்பு

என் செவிப்பறைகளின் உள்ளறையில்

சுற்றி சுழன்று ரீங்கரிக்கிறது

விரல்கள் நீண்ட காயில்லின்

இமைகள்

ஆழ்மன கடற்குகையில்

ஓவியம் தீட்டி ஓய்கின்றன

 

நட்சத்திரங்கள் பருத்து சிரித்த நாளொன்றில்

அன்பு சுடர் விட

நாம் சிரித்திருப்போம் அன்பே

மெத்தென திரண்ட உள்ளங்கையின்

ஓரத்தில் இருக்கும் உன் பவள மோதிரத்தை

உருட்டி விளையாடியபடி

அந்த மலையுச்சி விளிம்பில்

ஒரு நொடியேனும் அன்பே

பகை மறந்து

சினம் மறந்து

மரணம் மறந்து

முத்தமிடுவோம்

அன்பே நாம் முத்தமிடுவோம்

என்று சொல்லிய ஓமர் செல்கிறான்

டாங்குகளை நோக்கி

கைகளில் கற்களை இறுக பிடித்தபடி.

—- முத்துவேல்

About முத்துவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*