Home / FITE சங்கம் / ஐ.டி. துறையும், பெண்கள் உரிமையும்!

ஐ.டி. துறையும், பெண்கள் உரிமையும்!

கல்லூரி நாட்களில் என்னை விட வெகு சிறப்பாகப் படித்து, வளாகத் தேர்விலும் வெற்றி பெற்று ஐ.டி துறையில் பணிக்கு வந்த எத்தனையோ தோழிகள் இன்று வேலைக்குச் செல்வதில்லை. இது பற்றி என்னுடன் பணிபுரியும் சகதோழி ஒருவருடன் பேசிய போது,

“ஒரு பெண் திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்வதற்கு அதிகப்படியான ஆதரவு குடும்பத்தினரிடம் இருந்து தேவைப்படுகிறது, அதுவும் குறிப்பாக மகப்பேறு காலத்திற்குப் பிறகு மேலும் பலமடங்கு ஆதரவும், அக்கறையும் தேவைப்படுகிறது” என்று சொன்னார்.

நம்மைப் போன்றதொரு ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்து,கல்லூரியைக் கடந்து வேலைக்கு வருவது என்பது சாத்தியமாகியிருக்கும், பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த, இன்றைய உலகமய சூழலில், ஆண்களைப் போலவே சமூக உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள், தங்களுடைய குடும்பப் பணியில் இருந்து வெளியில் வரமுடியாத சூழல்தான் இங்கு உள்ளது.

இவ்வாறு பணியிடத்திலும்,வீட்டிலும் தங்கள் முழு உழைப்பைச் செலுத்தும் பெண்களுக்கான ஊதியமும், வெகுமதியும் எவ்வாறு இருக்கிறதென்று பார்த்தோமானால், அதுவும் தலைகீழ் விகிதமே.

நம்முடன் கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. துறையில் வேலைக்கு வரும் பெண்களின் ஊதியம் ஆனது தொடக்கக் காலங்களில் சக ஆண் ஊழியர்களை ஒத்தே இருக்கிறது.ஆனால், ஆண்டுகள் உருண்டோடும் போது பெண்களின் ஊதியம் ஆண்களை விடக் குறைவதோடு, ஐ.டி துறையில் உயர் பொறுப்புகளில் வேலை பார்க்கும் பெண்களின் விகிதமும் குறைந்து விடுகிறது.

அண்மையில் மான்ஸ்டர் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம், இந்தியாவில் ஐ.டி துறையில் பெண் ஊழியர்களின் விழுக்காடு வெறும் 30% மட்டுமே என்றும், பெண்களின் ஊதியமானது  ஆண்களைவிட 29% விழுக்காடு குறைவாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

u_s_enters_top_gender_equality_ranking

ஐ.டி துறையில் பணி புரியும் ஒரு ஆண் ஊழியர் சராசரியாக மணிக்கு 359.25 ரூபாய் ஊதியம் பெறுகிறார், ஆனால் பெண் ஊழியருக்கு வழங்கப்படும் ஊதியமோ மணிக்கு 254.04 ரூபாய்தான்.

இந்த ஆய்வறிக்கை பற்றி கருத்து வெளியிட்டுள்ள நாஸ்காம் தலைவர் ராதாகிருஷ்ணன், ” ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண்களில் 67 விழுக்காட்டினர் தொடக்கநிலை ஊழியர்களே, அதனால்தான் ஒட்டுமொத்த சராசரி குறைவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

மகப்பேறு காலங்களில் பெண்கள் எடுக்கும் விடுப்பையே, பெண் ஊழியர்கள் பெறும் குறைவான சம்பளத்திற்கான காரணமாகக் கூறும் இவ்வறிக்கை, மகப்பேறு கால விடுமுறை என்பது பெண்களுக்கான உரிமை என்பதை சுட்டிக்காட்ட தவறியுள்ளது.

மகப்பேறு காலத்தில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை விடுப்பு எடுத்து வரும் பெண் ஊழியர்களுக்கு ஐ.டி நிறுவனங்களில் உள்ள எத்தனை மேலாளர்கள் சரியான ஆண்டு மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். அதாவது பெண் ஊழியர்கள் விடுப்பு எடுத்த காலத்தை கணக்கில் கொள்ளாமல் இருக்க வேண்டிய ஆண்டு மதிப்பீடு எத்தனை நிறுவனங்களில் சரியாக அமல்படுத்தப்படுகிறது.

பெண் ஊழியர்கள் என்றாலே, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்றும், அதனால் அவர்களுக்கான ஆண்டு மதிப்பீடும், ஊதிய உயர்வும் குறைவாக இருப்பதில் வியப்பில்லை என்னும் கருத்து ஐ.டி துறை ஊழியர்களிடையே வெகுவாக பரவியுள்ளது. பெண் ஊழியர்களிடமே கூட இந்த கருத்து உள்ளது, மகப்பேறு கால விடுமுறை என்பது ஊழியரின் உரிமை என்பதை உணராத நிலை உள்ளது. தங்களது உரிமைகள் பற்றி உணராத காரணத்தால், விடுப்பு முடிந்து வரும் காலத்தில் நடக்கும் ஆண்டு மதிப்பீட்டில் தங்களுக்கு இருக்கும் உரிமைகளை பற்றிக் கூறி சரியான மதிப்பீட்டையும், ஊதிய உயர்வையும் பெற முடியாத நிலை உள்ளது.

 

அனைத்துத் தடைகளையும் மீறி பதவி உயர்வையோ, ஊதிய உயர்வையோ பெண் ஊழியர்கள் பெறும்போது, அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் அவள் பெண் என்பதற்காகவே கிடைத்தவை;திறமையினாலும் ,உழைப்பினாலும் அல்ல என்று சொற்களால் சுட்டு பொசுக்கும் தீ நாவுகள் இங்கு தாராளமும், ஏராளமுமாக இருக்கின்றன.

 

இப்படியான பெண்களின் மீதான பாகுபாடு என்பது, உலகம் முழுக்கவே இவ்வாறுதான் உள்ளது. உதாரணமாக, 1970-ல் அமெரிக்காவில் ஆண்கள் ஊதியமாக பெற்ற ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும், பெண்கள் பெற்றது வெறும் 59 சென்ட்களே. 2010-ல் வீதிக்கு வந்து போராடியதால் பெண்களின் ஊதியம் 77 சென்ட்களாக உயர்ந்தது. இது பற்றி பெண்ணியச் செயற்பாட்டாளர் ஒருவர், ” நாற்பது ஆண்டுகளில் நாங்கள் பெற்ற சம்பள உயர்வு வெறும் 18 சென்ட்கள்; ஆனால் ஒரு டஜன் முட்டையின் விலையோ பத்து மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது ” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

 

பெண் என்பவள் ஆணைப் போன்றே சமூக உற்பத்தியில் ஈடுபட்டாலும், குடும்பத்தையும், குழந்தைகளையும், வீட்டில் உள்ள முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பானது பெண்களின் தலைகளிலேயே வைக்கப்படுகிறது.

 Gender-equality_full_page_cropped

குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சமயங்களில், வேலைக்கு வரும் பெண்களைப் பார்த்து “ஏன் விடுமுறை எடுக்கவில்லை? குழந்தையைப் பார்த்து கொள்ளவில்லையா என்று கேட்கும் எவரும் இதே கேள்வியை ஆண்களைப் பார்த்து கேட்பதேயில்லை ” என்று தோழி ஒருவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 

பெண்தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இயற்கையில் அமைந்த ஒன்று. ஆனால், தன்னுடைய மகவை ஈன்று மறுபிறப்பு எடுக்கும் பெண்ணுக்கு இந்த சமூகம் மென்மேலும் சுமக்க வேண்டிய பணிகளையே பரிசாகத் தருகிறது. குழந்தை வளர்ப்பு, சமையல், வீட்டு பராமரிப்பு, அலுவலுக வேலை என்று வேலைப்பளு ஒருபக்கம் ஏறிக்கொண்டேயிருக்க, மகப்பேறு முடிந்து பெண்ணிற்கு ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தோ, இடர்கள் பற்றியோ சிந்தையற்றே இருக்கிறது இந்த ஆணாதிக்க சமூகம். கருவை சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்க பெண் செலுத்தும் உழைப்பு அபிரிமிதமானது. இந்த உழைப்பு சமூக வளர்சிக்கான உழைப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, நடைபெறும் சமூக மாற்றங்களும், வளர்ச்சிகளும் பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

 

மகப்பேறு தவிர்த்த அனைத்து வேலைகளிலும் ஆண்களின் பங்கும் இருப்பதற்கான மாற்றங்களை நோக்கி நகர‌வேண்டும். பின்லாந்து போன்ற நாடுகளில் குழந்தை பிறப்பிற்குப் பிறகு “பெற்றோர்களுக்கான விடுமுறை” என்பது ஆண்களுக்கும் சேர்த்தே வழங்கப்படுகிறது.

 

நம்முடைய ஐ.டி துறையில் பெண்ணை விட ஆணின் உழைப்பும், பணியிடத்தில் செலவிடக் கூடிய நேரமும் அதிகம் என்கிற எண்ணம் பரவலாக்கப்பட்டு, ஒரு திட்டத்தை செயல்படுத்த பெண்ணைக் காட்டிலும் ஆண்களே தேவை என்கிற நிலையில் நிர்வாகத்தினர் உள்ளனர்.

ஆணாதிக்க சமூகம் பெண்களிடம் பாகுபட்டோடு செயல்படுவதும், பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதும் நாம் அறிந்த விடயங்களே. அவற்றை எதிர்த்து போராட வேண்டிய தேவை நம்முன் தொடர்ந்து இருந்துள்ளது.

தகுதி, திறமைக்கு தான் இங்கு வேலை என்று பெருமை பேசும் ஐ.டி நிறுவனங்களும் கூட ஆண், பெண் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதும், இதன் மூலம் பெண் ஊழியர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், ஊதிய உயர்வுகள், வெளிநாட்டு பணி அமர்வுகள் பாதிக்கப்படுவதும் இருந்தேதான் வருகின்றன.

பெண்களின் சராசரி ஊதியம் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் 67 விழுக்காடு தொடக்க நிலை ஊழியர்களாக பெண்கள் இருப்பதே காரணம் என்று கூறுபவர்கள், பெண்கள் தங்கள் அலுவலகங்களில் உயர் பொறுப்புகளை அடைய எந்தவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியே.

அதேசமயம், தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றி பேச்சு எழும் போதும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் தகுதி, திறமை என்று பேசும் படித்த நடுத்தர வர்க்கம் தங்களோடு பணிபுரியும் சக பெண் ஊழியர்களின் இயற்கை நடைமுறையைப் புரிந்து கொள்ளாதிருப்பதும், புரிந்து கொண்டாலும் சுயநலப் போக்கோடு இருப்பதும் தான் மிகவும் வருத்தத்திற்குரிய விடயங்கள்.

நம்முடைய சமூகத்தில் ஒப்பீட்டளவில் முன்னேறிவிட்டதாக கருதப்படும் ஐ.டி பெண் ஊழியர்களின் உரிமைகளும் கூட  மறுக்கப்பட்டும், சுரண்டப்பட்டுமே வருகிறது.பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில், பெண்களை அமைப்பாக்கி, அவர்களுடன் முன்னின்று போராட வேண்டிய தேவை அதிகரித்தே உள்ளது.

ஐ.டி நிறுவனங்களில் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதங்களை தொடங்குவதற்கும் , தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பற்றிய விழிப்பைக் கொண்டு வருவதற்கும் ஆனா பரப்புரைகளையும் மேற்கொள்வோம். பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் பெண்களுடன் இணைந்து களம் காண்போம்.

கதிரவன்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*