Home / கலை / தனி நாடு வருமென்று…

தனி நாடு வருமென்று…

எல்லா உயிர்களும்
சேர்ந்து தான் சுழலுதே பூமி!
உயிர்களில்
உயர்வு, தாழ்வு இல்லையே சாமி!
-இல்லையே சாமி…!
எல்லாரும் ஒரு நாளில்
மரிக்க,
எதை கொண்டு உயர் சாதி, தாழ் சாதி
பிரிக்க….

மனசிருந்தால்,
மனுச சாதி….
இல்லையேல்
மிருக சாதி….
இதைத்தவிர வேறுசாதி இல்லை,
இருப்பதெல்லாம் பொய்யின் பிள்ளை…..
வேர்களின்றி செடிகள்
பூப்பதில்லை…… ஆனால்
பூக்கின்ற பூக்களை
வேர்கள் பார்ப்பதில்லை…..
அரசியல் கட்சிகளே, உங்கள்
அடித்தளமாய் இருக்கும் எங்கள்
பாமர வேர்களுக்கு,
தண்ணீர் கொடுக்காமல்
கண்ணீர் கொடுத்த கதை
காலந்தால் தொடராது இனி,
இதுவே
எங்கள் களப் பணி….

 

அரசியல் ஐயாக்களே!
அம்மாக்களே!
களைகள் பிடுங்குவதாய் சொல்லி
எங்கள்
தலைகள் பிடுங்கியது போதும்…..
என் இளம் தம்பி,
இளவரசன் செய்த‌தென்ன?
விரும்பிய பெண்ணை கரம் பிடித்தான்
அதையும் ஒருவன்
அரசியலாக்கி
இரத்தம் குடித்தான்…..
இளைய சமுதாயமே…..
இனியும் நீ களம் காணாமல் போனால்
இனியதொரு இளந்தமிழகம்
எப்படி உதிக்கும்…..

unnamed
இத்தனை இலட்சம்
உயிர்களை ஒருவன் அழித்தபின்னும்,
உன் உணர்ச்சி
எழவில்லையா இன்னும்……
இறந்தவன் யாரோ ஒருவர் அல்ல‌
இரங்கற்பா பாடிவிட்டு செல்ல…
தஞ்சை வாழ்கிற தமிழரைப் போல்,
மதுரை வாழ்கிற தமிழரைப் போல்
ஈழத்தில் வாழ்கிற தமிழர் அவர்
நிலத்தை கடல் பிரித்து போனாதால்,
நிசத்தில் உயிர் இரண்டாய் போகுமா?
என் இனத்தையே அழித்தவன்
இனப சுற்றுலா வந்து போகிறான்
இந்தியாவிற்கு….
காந்தி தேசமே….
நாங்கள் உன் மக்கள் இல்லையா?
இல்லை
நாங்கள் என்ன தத்துப் பிள்ளையா?
நாங்கள் என்ன‌
இந்தியா சாயம் பூசப்பட்ட எந்திரமா?

unnamed (1)

எனது விரோதி
உனக்கு விருந்தாளியா.

நான் உனக்கு உதிரி என்றால்
நீ எனக்கு எதிரி….

இடிந்தகரையை
மடிந்த கரையாக்கப்பார்க்கிறாய்.
மீன் பிடிக்க போகிறவன்
மீண்டும் திரும்ப முடிவதில்லை….
எப்படி மார்தட்டி சொல்வேன்
நான் இந்தியனென்று…..

எனக்கான
நீதிமன்றத் தீர்ப்புகள்
தேதி செத்துக் கிடக்கின்றன….

இந்தியாவே
அரசியல் அடுப்புக்கு
எங்களை விறகாய் மாற்றினாய்…..
இளைய சமுதாயத்தையே
சருகாய் மாற்றினாய்.

தெரிந்துகொள்
பூவை சருகென்று
ஒதுக்கி விட முடியும்- ஆனால்
வாசத்தை எப்படி
மறைக்க முடியும்……

இளைய சமுதாயமே…
உன்னை ஒடுக்க‌
உலகம் எப்போதோ ஆகிவிட்டது ஆயுத்தம்
இப்போதாவது எடு
ஒற்றுமையெனும் ஆயுதம் ……..
முத்துக்குமரனும்,
செங்கொடியும்
செத்த பின்னும் புரியாதா உனக்கு,
இப்படி இழந்த கணக்குகள்
தெரியாதா? உனக்கு….

unnamed (2)

பறவைகள் வலைதூக்கி
பறந்த கதை
பள்ளியிலேயே பயின்றோம்
பலமுறை நாமே பிறர்க்கு நவின்றோம்
ஆனால்
எப்போது அந்த பறவைகள் போல முயன்றோம்…..
எல்லோரும் எழுந்து நின்றால்
இமயத்தின் உயரம் குறையும்
இருக்கின்ற துன்பங்கள் யாவும் கரையும்……

நம்பிக்கை இருக்கின்றது,
நம் தலைமுறையோடு
தமிழன சாபங்கள் வீடுபெறுமென்று,
தமிழனெக்கென்று தனி நாடுகள் வருமென்று…..
அங்கே
சாதிக்கு இடமில்லை, மதத்திற்கு மடமில்லை
மனித நேயம் மட்டுமே செல்லப்பிள்ளை……………………………..

– மு.சதிஷ்குமார்

 

 

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*