Home / அரசியல் / மத்திய அரசுத் தேர்வாணைய முற்றுகைப் போராட்ட துண்டறிக்கை

மத்திய அரசுத் தேர்வாணைய முற்றுகைப் போராட்ட துண்டறிக்கை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசின் நிறுவனமாகும் (Statutory Body) இவ்வாணையம் 145க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பலகட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களைப் பணியமர்த்தும் பணிகளை மேற்கொள்கிறது.

இவ்வாணையம் 2006வரை மண்டல அளவிலேயே பணியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.(இந்திய அளவில் 9 மண்டலங்களாக இவ்வாணையம் செயல்பட்டு வருகிறது). இதனால் மத்திய அரசின் துறைகளில் எல்லா மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் பெறும் வாய்ப்பிருந்தது.

2006ஆம் ஆண்டிற்கு பிறகு மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத்தேர்வுகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒட்டி அகில இந்திய அளவில் மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமென்று கூறியிருந்தாலும் 50% பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய அரசின் பணியாளர் நியமன அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தது. குறைந்த அளவில் இப்பரிந்துரையைக்கூட கவனத்தில் கொள்ளாத மத்திய அரசு உடனடியாக அனைத்து நிலையிலான தேர்வுகளையும் அகில இந்திய அளவிலேயே நடத்த உத்தரவிட்டது.

இவ்வாறு அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் ஏன், தென்னிந்தியர்கள் கூட பணியமர்த்தப்படுவது முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தமிழகத்தில் அதிக அளவில் பணியமர்த்தப்படுகின்றனர். உணவு இடைவேளையில் சென்னையில் உள்ள வருமான வரி உணவகத்திற்குச் சென்றால் நாம் இருப்பது தமிழ்நாடா அல்லது வடநாடா என்ற அளவிற்கு பீகார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நிரம்பியிருப்பார்கள் (புள்ளி விவ‌ரம் காண்க). இதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை விட நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என ஒரு பொய்யானக் காரணம் கூறப்படுகிறது.

ஆனால் உண்மை அதுவல்ல. அம்மாநிலங்களில் நிலவும் அளவுக்கதிமான வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு லக்னோ, பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் இலட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு குறுக்கு வழிகளில் மோசடிகள் செய்யத் தொடங்கின.

10556404_858059900873492_4467203740719990903_n
நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுக்கு முன்னரே வெளியிட்டுவிடுவது, தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு கால அளவை கூடுதலாக அளிப்பது, பணி நியமனத்திற்கு பணம் கொடுத்தவர்களை ஒரு குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வைத்து அவர்களுக்கு விடையை அளித்து தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது என பல முறைகேடுகளை இப்பயிற்சி நிறுவனங்கள் அரங்கேற்றியுள்ளன. இதற்கு சாட்சியாக ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பலர், ஒரே வீதியைச் சேர்ந்த பலர் என பீகாரில் இருந்தும், உ.பியில் இருந்தும் முறைகேடாகத் தேர்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசித் துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது நமக்குத் தெரியவந்துள்ளது.

இதில் உச்சகட்ட மோசடி கடந்த ஆன்டு 2013ல் நடைபெற்றது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது CGLE 2013 (Common Graduate Level Exam-2013) என்ற பெயரில் கணிசமான மாதச் சம்பளம் உள்ள‌ Inspector of Income tax, Customs Preventive Officer, Central Excise Inspector, Customs Appraiser, AGs Office Auditor போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 2013ல் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் பீகாரில் உள்ள 7 மையங்களில் வினாத்தாள்கள் வெளியானதால் கடந்த ஒரு ஆண்டாக தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இத்தேர்வு எழுதிய பலர் நீதிமன்றத்தை அணுகியதால் முறைகேடுகளை விசாரித்த நீதிமன்றம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட அத்தேர்வுகளை இரத்து செய்து உத்தரவிட்டது. இன்று வரை அத்தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதே, எவ்வளவு முறைகேடுகள் இதற்கு முன்னர் வெளிச்சத்திற்கு வராமல் போயிருக்கும் என்பதற்கு சாட்சி.

10489800_858056194207196_3272326761051395875_n

அதுமட்டுமல்லாமல் இத்தேர்வுகளின் வினாத்தாள்கள் அனைத்தும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் இருப்பதால் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு விடையளிப்பது மிகவும் வசதியாக இருக்கிறது. மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலத்தில் மட்டும் தேர்வெழுதும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது இந்தி பேசும் மக்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. மிக உயரியப் பதவிகளான முதல் நிலை IFS, IAS, IPS பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தும் UPSCயில் கூட தமிழில் பதிலளிக்கலாம், ஆனால் மக்களிடையே நேரடியாகத் தொடர்பு கொண்டு களத்தில் பணியாற்றும் இப்பணியிடங்களுக்கு நாம் பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசானது தமிழில் பதிலளிக்கவோ, தேர்வுகளை நடத்தவோ மறுக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு இந்தி பேசும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் பணியமர்த்தப்பட்டு கடந்த 5 ஆன்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும், மத்திய அரசின் சேவைகளைப் பெறவேண்டுமானால் அங்கு பணியாற்றும் இந்தி மட்டுமே தெரிந்த வடமாநில ஊழியர்களிடம் சென்று இந்தி தெரிந்தால் மட்டுமே பணிகளை முடித்துக் கொள்ள முடியும் என்ற நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

10500274_858059774206838_3797238019419305959_n

அது மட்டுமில்லாமல் இவ்வாறு இந்தி பேசும் பணியாளர்களை வைத்துக் கொண்டு நிர்வாகத்தை நடத்துவதில் தமிழகத்திலுள்ள மத்திய அரசின் நிறுவனங்கள்- பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. வட மாநிலத்திலிருந்து பணியாற்ற வரும் ஊழியர்கள் மீண்டும் தமது மாநிலத்திற்கே செல்ல பணியிட மாற்ற விண்ணப்பம் செய்து அப்பணியிட மாற்றத்திலேயே குறியாக இருப்பதாலும், மொழிச்சிக்கல்கள் உள்ளதாலும் பணிகளில் சுணக்கம் காட்டுகின்றனர். பணியிட மாற்றம் கிடைத்த பின்பு காலியாகும் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படுவதில்லை.  அவ்வாறு நிரப்பப்பட்டாலும் அதிலும் இந்தி பேசுபவர்களே மீண்டும் வருகிறார்கள். இவற்றைக் களையக்கோரி சம்மந்தப்பட்ட மத்திய அரசின் தலைமை நிர்வாகிகளும், ஊழியர் சங்கங்களும் பலமுறை மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாடு வருமான வரித்துறையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணி நியமனங்கள்
ஆண்டுமொத்த பணி நியமனங்கள்தமிழ்நாட்டவர்வடமாநிலத்தவர்
200725564191
200811711106
200933627
201038731
201116828141
201238428356
201342240
201478375
மொத்தம்1115149966

 

தமிழ்நாடு சுங்கத்துறையில் ஆய்வாளர் பதவிக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணி நியமனங்கள்
ஆண்டுமொத்த பணி நியமனங்கள்தென் மாநிலத்த‌வர்வடமாநிலத்தவர்
2006 முதல்201412314109

 

தமிழ்நாடு கலால் துறையில்  (Central Excise)  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணி நியமனங்கள்
ஆண்டுமொத்த பணி நியமனங்கள்தென் மாநிலத்த‌வர்வடமாநிலத்தவர்
200767259
200828226
200931427
201058157
201185382
20122243221
மொத்தம்49315478

 

ஆகவே மத்திய அரசின் இப்போக்கினைக் கண்டித்து தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டிட மத்திய அரசை வலியுறுத்தவே இப்போராட்டம்.

கோரிக்கைகள்:

மத்திய அரசே!

* மத்திய தேர்வாணையத் தேர்வுகளை மாநில அளவில் நடத்து!

* தேவையானால் அதற்கு இசைய அரசியல் சட்டத்தைத் திருத்து!

* ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளிலும் வினாத்தாள்களை வழங்கு!

– மத்திய அரசுப் பணிகளில் தமிழர் வேலைவாய்ப்பு பறிப்புக்கு எதிரான கூட்டியக்கம்

உறுப்பியக்கங்கள் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம்.

————————————————————————————————————————————————————–

—– மத்திய அரசு தேர்வாணைய முற்றுக்கைப் போராட்டம் – மத்திய அரசுப் பணிகளில் தமிழர் வேலைவாய்ப்பு பறிப்புக்கு எதிரான கூட்டியக்கத்தால் 17.07.2014 அன்று நடைபெற்றது. அந்த போராட்டத்திற்காக எழுதப்பட்ட துண்டறிக்கையே இது. துண்டறிக்கையின் முக்கியத்துவம் கருதி இங்கே மறுபதிப்பு செய்யப்படுகின்றது. —– விசை ஆசிரியர் குழு

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*