Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / புலிப் பார்வை படத்தைக் கண்டித்த மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு இளந்தமிழகம் இயக்கம் கண்டன‌ம்

புலிப் பார்வை படத்தைக் கண்டித்த மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு இளந்தமிழகம் இயக்கம் கண்டன‌ம்

ஆகத்து 16, 2014 அன்று காலை 10 மணியளவில் ‘புலிப் பார்வை’ என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்தை பிரவீன் காந்தி என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும், இந்திய ஜனநாயகக் கட்சியின்(IJK) தலைவருமான பச்சமுத்துவின் ’வேந்தர் மூவீஸ்’ இப்படத்தை தயாரித்திருக்கிறது. விழாவின் சிறப்பு அழைப்பாளர்களான மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பச்சமுத்து உள்ளிட்டோர் மேடையில் இருந்திருக்கிறார்கள். மாணவர்கள் யாராவது வந்தால் தடுப்புக் காவலில் வைக்கும்படி காவலர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ் இளைஞர்கள் & மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், முற்போக்கு மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாறன் மற்றும் செம்பியன், கணேஷ், வளவன் உள்ளிட்ட 10 மாணவர்கள், இளைஞர்கள் அரங்கிற்குள் நுழையும் போது காவல்துறை தடுத்திருக்கிறது. ஆனால், மாணவர்கள் வரும்போது அழைப்பிதழோடு வந்ததாலும், விழா ஏற்பாட்டாளர்கள் ஒன்றும் பிரச்சனையில்லை என்று சொன்னதாலும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விழாவின் இறுதிக் கணத்தில், பச்சமுத்து பேசப் போன நேரத்தில், மாணவர்கள் எழுந்து நின்று தங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு மேடையில் இருந்தவர்கள் உரிய பதிலைத் தரவில்லை. ஆனால், மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, அவர்களை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று சராமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.

மாணவர்களைத் தாக்கியவர்களில் நாம் தமிழர் கட்சி, ஐ.ஜே.கே, பிஜேபி கட்சியின் தொண்டர்களும் அடங்குவர். மாணவர்கள் தாக்கப்படும்போது சீமான் மற்றும் இதர தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்கள்.

மாணவர்களைத் தாக்கி வெளியில் தள்ளிய அந்தக் கும்பல், திரையரங்கு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் குழாய்களை எடுத்து மாணவர்களைத் தாக்கியுள்ளனர். அனைவருக்கும் சராமாரியான அடி. மிக மோசமான வசவுச் சொற்களால் மாணவர் இயக்கங்களைத் திட்டிக் கொண்டே தாக்கியுள்ளனர். காவல் துறை பெரும்பாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. தடுக்க வந்த சில காவலர்களுக்கும் அடி விழுந்திருக்கிறது.

அங்கிருந்து மாணவர்களை அப்புறப்படுத்திய காவல் துறை அடித்தவர்களை அப்படியே விட்டுவிட்டு, அடிபட்ட மாணவர்களைத் தூக்கிக் கொண்டுபோய் ஜாம் பஜார் காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்தது! கழுத்து, கால், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மோசமான காயங்களுடன் அவதிப்பட்ட மாணவர்கள் முதலுதவி மறுக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரம் வலியில் வேதனைப்பட்டனர். பின்னரே செவிலியர்கள் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது.

Condemn

மாணவர்களைச் சிறையில் அடைக்கும் நோக்கில் இருந்த காவல்துறை பல்வேறு அமைப்புகள் அங்கே திரண்டதும் மாலை 6 மணியளவில் விடுவித்தனர். மாணவர்களையும், காவல்துறையையும் தாக்கியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

’புலிப் பார்வை’ என்னும் படத்தில் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் விடுதலைப் புலிகள் உடையுடன் வருவது போலவும், விடுதலைப் புலிகள் கண்ணியமற்ற நிலையில் பெண்களுடன் நடனமாடுவது போலவும் காட்சிகள் இருப்பதாகவும், அதை எதிர்த்தே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். தாங்கள் தாக்கப்படும் போது, அதைத் தடுக்காமல் சீமான் வேடிக்கை பார்த்ததாக மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

முன்னதாக, இப்படத்தின் முன் காட்சியானது சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், ஐயா பழ.நெடுமாறன், மதிமுக கட்சியினர் சிலரிடமும் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் 75% காட்சிகள் தமிழர்களுக்கு விரோதமானது என்று ஐயா பழ.நெடுமாறன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நான்காம் கட்ட ஈழப் போரின் ரத்த சாட்சியங்களாக பலப் புகைப்படங்களும், காணொளிகளும் அவ்வப்போது வெளிவந்து உலகத்தின் மனசாட்யைக் குலுக்குகிறது. 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த சிறுவன் பாலச்சந்திரனின் மரணப் புகைப்படம் தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டு ஈழத்தமிழருக்கு நீதி கேட்டுப் போராடினர்.

ஈழத்தில் நடந்தது ஒரு இன அழிப்பு என்பதை உலக அரங்கில் ஆணித்தரமாக நிறுவிய சாட்சியமாக பாலச்சந்திரன் என்னும் பாலகன் கொல்லப்பட்ட சம்பவம் விளங்குகிறது. அதைத் தவறாக சித்தரித்துப் படம் எடுப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். மேலும்,, இது இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவுவது போல் அமையும்.

மேலும், கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன ஒரு போராளி இயக்கத்தின் வீரர்கள் பெண்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆடிப் பாடுவது போல் கொச்சைப்படுத்துவதுவும் கண்டனத்துக்குரியதாகும்.

இத்தகைய தமிழர் விரோதக் காட்சிகளை சித்தரித்த இப்படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி மற்றும் தயாரிப்பாளர் பச்சைமுத்துவை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். 

மேலும், இதைக் கண்டித்து மாணவர்கள் எழுப்பிய குரலுக்கு சனநாயக வழியில் பதில் கூறாமல் பொன்.ராதாகிருஷ்ணன், சீமான், பச்சமுத்து போன்ற கட்சித் தலைவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டதை இளந்தமிழகம் இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அந்த அரங்கத்தில் இருந்த இத்தலைவர்கள் தாக்குதலைத் தடுத்திருக்க வேண்டும். மாறாக அதை ஊக்கப்படுத்துவதுபோல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இளந்தமிழகம் இயக்கம் கோருகின்றது.

ச.இளங்கோவன்,
செய்தித் தொடர்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்
(18 ஆக 2014)

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*