Home / அரசியல் / பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் பின்னணி என்ன? – ப்ரியம்வதா

பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் பின்னணி என்ன? – ப்ரியம்வதா

 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

ஜூலை 8 முதல் வான்வழி , கடல் வழி , தரை வழி என முப்படைகளையும் கொண்டு பாலஸ்தீனப் பகுதியான காசாவின் மீது இசுரேல் கொடூரமான போர்த்தொடுத்து வருகிறது. இதுவரை இரண்டு ஆயிரத்திறகும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது. அதிக அளவில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் எனபது மிகவும் வருத்ததிற்கு உரிய செய்தி. ஐநா நடத்தி வந்த பள்ளிகளும் இசுரேலின் குண்டுவீச்சில் தாக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் பல்வேறு அரசுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த கோரிக்கையோடு நின்றுவிடாமல் , இலத்தீன் அமெரிக்க நாடுகள் இசுரேல் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் , பனிப்போருக்குப் பின்னான (1992) காலத்தில் தான் இசுரேலுடனான அயலுறவை ஏற்படுத்திக் கொண்டு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்தியாவோ கள்ள மௌனம் காத்துவருகிறது.

 

இந்திய நாடாளுமன்றத்தில் இசுரேலைக் கண்டித்து தீர்மானமோ கருத்துகளோ வந்து விடா வண்ணம் பாலஸ்தீனத்துடனும், இசுரேலுடனும் நமக்கு வர்த்தக உறவு உள்ளது, இங்கு நடைபெறும்விவாதம் அவ்வர்த்தகத்தை பாதிக்கும் எனக்கூறி விவாதத்திற்கே எடுத்து விடாமல் தடுத்து விட்டார் அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் . அதே நேரம் BRICS கூட்டமைப்பில் உள்ள எல்லா நாடுகளும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இசுரேலுக்கு எதிரானத் தீர்மானத்திற்கு வாக்களித்ததால் வேறு வழியின்றி தானும் இசுரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா.  இதற்கும் கூட‌ இந்திய வலதுசாரிகள் தங்களது கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இந்த நேரத்தில் தான் ப்ரியம்வ‌தா அவர்களின் பின்வரும் கட்டுரை பாலசுதீனம்,இசுரேல் தொடர்பான இந்தியாவின் அயலுறவு கொள்கை மாற்றம், இந்தியாவில் உள்ள வலதுசாரிகள் ஏன் இசுரேலை ஆதரிக்கக் கோருகின்றனர் என்பதை விளக்கும் வகையில் “India’s Forgotten Solidarity with Palestine ”  என்ற‌ கட்டுரையை ஆகத்து 6 அன்று அல்-ஜசீரா இணையதளத்திற்காக எழுதி இருந்தார். கட்டுரையின் முக்கியத்துவம் கருதி , முழுக்கட்டுரையையும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

———————————-

 

காசாவில் பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தற்பொழுது இசுரேல் நடத்திக்கொண்டிருக்கும் கொடூரமான தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகள் மௌனம் காக்கும் இச்சூழலில், இசுரேலின் மனித உரிமை மீறல்கள் மீது விசாரணை நடத்தக்கோரி ஐ.நா.மனித உரிமை மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது .

போர் நடக்கும் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சட்டங்கள், விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய இசுரேலை கண்டிப்பதற்கு பொதுவாக ஆர்வம் காட்டாத நாடுகளிடம் கூட, தற்போதைய‌ சூழல் சிறு சலனத்தை உண்டாக்கியுள்ளதன் விளைவே இந்தத் தீர்மானம். கடந்த சில நாட்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை நூற்றுக்குமதிகமான பாலஸ்தீன குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

 

இதுவரை காசா பிரச்சனையில் தன்னை நடுநிலையாக காட்டிக்கொண்ட இந்தியா, பலருக்கும் ஆறுதல் தரும் விதத்தில், இசுரேல் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நாவில் தற்போது வாக்களித்தது (ஐரோப்பிய நாடுகள் எவையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை). இந்தக் குறைந்தபட்ச செயலைக் கூட ஆளும் இந்துதேசியவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த விசாரணைக்கு எதிராக வாக்களித்த ஓரே நாடான அமெரிக்காவின் வழித்தடத்தை பின்பற்றிச்செல்ல வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான எண்ணமாக இருக்கிறது.

20148484654217734_20

பிற BRICS நாடுகளுடன் சேர்ந்து இசுரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது, கடந்த இருபதாண்டுகளாக அது பின்பற்றிவந்த இசுரேல் பக்கச் சார்பு நிலையுடன் முரண்படுவதுபோல் தெரியலாம்.ஆனாலும் மேலும் மேலும் நெருக்கமாகிக் கொண்டுவரும் இந்திய இசுரேலிய உறவு இதனால் எந்தவித பாதிப்பும் அடைந்ததாகத் தெரியவில்லை. இசுரேலுடன் 600 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வர்த்தகத்தைப் பேணிவரும் இந்தியா, இசுரேலிய ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடுகளில் முதலிடத்திலுள்ளது.

அண்மையில், ட்விட்டர் வலைதள‌த்தில் #IndiawithIsrael ஐ பயன்படுத்தி, இசுரேலிய யூத அரசுக்கு ஆதரவாக நாட்டுப்பற்று கொண்ட இந்துக்கள் இசுலாமியர்களை எதிர்த்து வசைபாடுமாறு தூண்டப்பட்டனர். இந்த ஆதரவுக்குக் காரணம் இசுரேலின் யூத அரசு, ”பச்சை ஆபத்தை” (இஸ்லாமை) தங்கள் நாட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தி விட்டார்கள் என்பதே, இதையே தான் இந்தியாவும் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் விரும்புகின்றன. இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது வெட்கக்கேடான செயல் என்று செல்வாக்குள்ள வலதுசாரி அறிவுஜீவிகள் கூச்சலிடுகின்றனர். இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் இஸ்ரேலுக்கு வரம்பற்ற ஆதரவு அளிப்பது தான் இந்திய தேச நலன்களுக்கு நல்லது என்பதாகும்.

 

அதே சமயத்தில், ஆளும் இந்து அடிப்படைவாதக்கட்சியான பாஜக, மாநிலங்களவையில் இசுரேல் பொது மக்களைக் கொல்வதைக் கண்டிக்கும் தீர்மானத்தையும், மக்களவையில் காசாவின் மீது வாக்களிப்பதையும் தடுத்து விட்டது. பாஜக அரசு முதலில் இருந்தே இப்பிரச்சனையை பற்றிய விவாதங்களை முடக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தது.

இசுரேலுடனான நட்பையும் துண்டிக்க விரும்பாமல், அதே சமயம் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் “நடுநிலை” மிகக் குழப்பமானது. இந்த “நடுநிலையும்” கைவிடப்பட்டு தெளிவான இசுரேல் ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்ற குரல்களும், சியானிசத்தை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்ற குரல்களும் மிக சமீபகாலத்தில் தான் இங்கே கேட்கத் தொடங்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு:

பிரிட்டனில் இருந்து இந்தியா விடுதலையடைந்த 1947 லிருந்து 1992இல் இசுரேலுடன் முழுமையான இராஜதந்திர உறவுகள் தொடங்கும் வரை, இந்தியா பாலஸ்தீனர்களின் தார்மீக உரிமைகளுக்கு ஆதரவு அளித்தே வந்தது.பிரிட்டனிடம் போராடிப்பெற்ற தன்னுடைய சுதந்திர போராட்டத்திற்கு ஒப்பானதாகவே இறையாண்மை மிக்க பாலஸ்தீன மக்களின் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தை அணுகிய அடிப்படையில் இருந்து இந்த ஆதரவு எழுந்தது.

இந்தியக் கொடியும், பாலஸ்தீனக் கொடியும் சேர்த்துப் பின்னப்பட்டது போலவும், அதில் “பாலஸ்தீனுக்கு ஆதரவு” என்ற வாசகத்துடன் இந்தியா வெளியிட்ட ஒரு தபால்தலையை எனது சிறுவயதில் பார்த்த நினைவு இருக்கிறது. ஐரோப்பியக் காலனியாதீக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் ஒன்றுக்கு ஒன்று உதவ வேண்டும் என்பதே இந்த ஆதரவுக்கு பின்புலமாகும்,

india-palestine

ஆனால் இதை இன்று வலதுசாரி.ஆதரவாளர்கள்(இவர்களுக்கு காலனியாதீக்க எதிர்ப்பு என்பது ஆணவம் மிக்க கலாச்சாரமேலாதிக்கமாக மாறிவிட்டது) காலாவதியான ”மூன்றாம் உலக நாட்டுக் கொள்கை”(third worldism) என்று ஏளனப்படுத்துகிறார்கள்.

இந்தியாவும் இஸ்ரேலும் ஒரே சமயத்தில்தான் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றார்கள் என்ற கருத்தைச் சில இஸ்ரேல் ஆதரவுக் கல்வியாளர்கள் முன் வைக்கிறார்கள். இஸ்ரேல் என்ற நாடு, தோன்றும் போதே காலனியாதிக்க நாடாகத் தோன்றியதையும், அதனை உருவாக்கியதே பிரித்தானியப் பேரரசின் நேச நாடுகள்தான்என்ற உண்மையையும் வசதியாக ஒதுக்குகிறார்கள்.

ஒரு இழிந்த தேர்தல் தந்திரமாகச் சித்தரிக்கப் பட்டாலும், காலனியாதீக்கத்திற்குப் பிறகான இந்திய அரசு, நாட்டின் மிகப் பெரிய மதச் சிறுபான்மையினரான இசுலாமியர்களின் அரசியல் உணார்வுகளுக்குத் தனி கவனம் செலுத்தியது. இந்திய அரசின் அன்றைய வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைச் “சிறுபான்மையினரைத் சாந்தப்படுத்துவது” என்று தட்டையாக நோக்குவதற்குமுன், அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் இல்லாதபோதும், நிறவெறி தென்னாப்பிரிக்க அரசுடன் இராஜதந்திர உறவினை இந்திய அரசு முழுமையாக மறுத்தது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

காசாவும் இசுரேலும் சமமான எதிரிகள் என்ற ஒரு முட்டாள்தனமான பொய்யைக் கூறுகிறவர்கள், இசுரேல் என்னும் ஆதிக்க சக்தியின் பக்கம் நிற்பவர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். இப்பிரச்சனையில், இந்தியா தனது நடுநிலையான அணுகுமுறையைக் கைவிட்டுத் தெளிவான இசுரேல் ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவிலுள்ள செல்வாக்குமிகுந்த வலதுசாரிப் பண்டிதர்களின் நோக்கமாகும்.

இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பாலஸ்தீனர்களை இரக்கமற்ற வகையில் கையாள்வது, வலுவிழந்த நிலையிலுள்ளதாக இவர்கள் கூறும் இந்துப் பெரும்பான்மைச் சமூகத்துக்கு உந்து சக்தியாக அமைவதோடல்லாமல், இசுரேலிடமிருந்து பெறப்படும் பொருளுதவி(ஆயுத மற்றும் உளவு) மூலமாகவும் இந்திய இசுலாமியர்களையும், பாகிஸ்தானையும் அடக்கி வைக்கமுடியும் எனவும் இவர்கள் கருதுகின்றனர்.

மத்திய கிழக்கு பகுதிகளில் ஒரு யூத நாட்டின் தங்குதடையற்ற பேராதிக்கம் என்ற கருத்து, இந்துத்துவ(இந்து அடிப்படைவாத) இந்தியா தெற்காசியாவில் தனது பேராதிக்கத்தை நிறுவ வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. சராசரி இந்தியர்களின் பாலஸ்தீனம் பற்றிய கருத்து பல இடங்களில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டாலும், புலம் பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் நகர்ப்புற-நடுத்தரவர்க்க இந்தியர்களின் மத்தியில் வளர்ந்துவரும் இந்துத்துவ வெறி, இந்தியாவில் சியானிசத்தின் பால் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

ஒரு கூர்மையான மாற்றம்:

பிரிட்டன், பிரான்சு போன்ற முன்னால் காலனியாதிக்க சக்திகளின் தூண்டுதலில் செயல்படும் இசுரேலின் அக்கிரமங்களுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்ற இந்தியாவின் காலனியாதிக்க எதிர்ப்பு நிலைப்பாடு முற்றிலுமாக‌ மாறி இன்று சியானிசத்துடனான இராணுவ மற்றும் வணிகரீதியிலான உறவுகளை உற்சாகத்துடன் மேம்படுத்துவது என்ற நிலைப்பாடாக மாறி உள்ளது. இதனையும் இந்தியா, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், ”மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்” என்றழைக்கப்படும் மத்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில், ஒடுக்க முயல்வதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் கொள்கை மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம், “பயங்கரவாதத்திற்கெதிரான உலகப் போர்” . இது வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு உரிமம் கொடுக்கும் கோட்பாடு தான். இந்து வெறியர்கள், என்னதான் அவர்கள் ஹிட்லரை வெகுவாகப் பாராட்டினாலும், நீண்ட காலமாகவே, இந்தியா, அமெரிக்கா, இசுரேல் உள்ளிட்ட மூன்று நாடுகளும் இணைந்து “பயங்கரவாத்ததிற்கு எதிரான” அமைப்பை மேலும் வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

24

சில நாட்களுக்கு முன்பு “பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவோம்” என்று இந்துத்துவ அமைப்புகள் காசாவைத் தாக்கும் இசுரேலுக்கு ஆதரவு அளித்து போராட்டம் நடத்தினர்.

இசுரேல் நடத்தி வரும் அரேபியர்களுக்கு எதிரான இனவாதத்தை, நிலத்தின் மீதான பிரச்சனை தான் காரண‌ம் என்று கூறி இனவாதத்தை விவாதத்தளத்திற்கு வரவிடாமல் செய்யப்படுகின்றது. இந்தியாவில் இது போன்ற காரணங்கள் கூற முடியாததால், “சியானிசம்” மதம் மற்றும் இன வெறுப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் முன் வைக்கும் வாதம் யூதர்களின் சொந்த பூமியை இசுலாமியர்கள் ஆக்கிரமித்திருப்பது போலவே, பழங்கால இந்தியாவின் பல பகுதிகளையும் இசுலாமியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை இசுலாத்தின் அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே.

இந்தியாவின் காலனியாதிக்க எதிர்ப்பாற்றல்களை ஒடுக்க, ஆங்கிலேய அரசு அவர்களைப் பயங்கர‌வாதிகளாக சித்தரித்ததைப் போலவே, அன்றைய காலனியாதீக்க எதிர்ப்புகளில் மிகச் சொற்பமாகக் கலந்துகொண்ட இந்து தேசியவாதிகள்தான் இன்று அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி சியானிசத்தை ஆதரிக்கின்றனர்.

ஒரு பிரபல இந்து தேசியவாதி, இசுரேலின் தாக்குதல் ஹமாஸ் இயக்கத்தின் மீதுதான்என்றும் ஹமாஸ் என்றுமே அமைதி ஒப்பந்தங்களை மதித்ததில்லை போன்ற அபத்தமான விவாதங்களைக் கூறிக்கொண்டே இருக்கிறார். இன்னும் சிலர் பாலஸ்தீன ஆதரவை,இஸ்லாமிய ஆதரவு என்று பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அது இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு உருவாக்குவதற்கு உதவும் என்றும் அஞ்சுகிறார்கள். வேறு சிலரோ“காசா என்ற பகுதி 2005 ஆம் ஆண்டு ஏரியல் ஷரோன் வெளியேறிய பின்பு ஹமாஸ் இயக்கத்தின் கட்டுபாட்டுக்குள் வந்தது” என்கின்றனர். மேலும் பாலசுதீனத்திற்காதவாக மேற்குலகில் இருந்து குரல் கொடுப்பவர்கள் அனைவரும் முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரிகளே என்றும் சொல்கின்றனர்.

வலதுசாரி இந்து அரசின் வழக்கமற்ற நடவடிக்கையான, ஐ.நா. வில் இசுரேலுக்கெதிராக வாக்களித்ததைத் தொடர்ந்து “அவமானம்”, ”மிகப்பெரிய தவறு” போன்ற வார்த்தைகள் வலைப்பதிவுகளெங்கும் எதிரொலித்தன. ஐ.நா பாலஸ்தீனத்தைப் பொறுத்தவரையிலும் இதுவரை சக்தியற்றதாகவே இருந்து வந்துள்ளது என்பதை நாமறிவோம்.

இதில் வெட்கப்ப‌ட வேண்டிய செய்தி என்னவென்றால், இந்தியா காலனித்துவத்துக்கெதிராகப் போராடுகிற மக்களுக்கு ஆதரவு அளிப்போம் என்ற நீண்டநாள் நிலைப்பாட்டை முற்றிலும் மறந்ததுதான். இலத்தீன் அமெரிக்க நாடுகளானபிரேசில், இக்குவேடார் மற்றும் சிலீ போன்ற நாடுகள் தத்தமது காலனியாதீக்கத்திற்கெதிரான கடந்தகாலப் போராட்டங்களை மறக்காமல் இசுரேலுடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளன. இசுரேல்-காசா பிரச்சனையில் இந்தியாவின் நடுநிலை வரலாற்றின் பக்கங்களில் மிக வெட்கக்கேடான நிலைப்பாடாகப் பேசப்படும்.

 

மொழிபெயர்ப்பாளர் : சரவணன்.
மூலப்பதிவு :

http://www.aljazeera.com/indepth/opinion/2014/08/india-forgotten-solidarity-with-p-2014848848765551.html

 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*