Home / கலை / என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ?
Malzhai Kaathalan

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ?

 

விழும் மழைத்துளி காமுகன், கடவுள், குழந்தை, விவசாயி, புத்தகப்புழு என ஐந்து பரிணாமங்களில் மாறி மாறி விழும்போது என்ன சொல்கிறது என்று நீங்களே கேளுங்களேன்.!!

காமுகனாக!!

கலவிகொள்ளும்
மோக மேகத்தின்
உச்சம் நான்..

விதைகளுக்கு உயிரூட்டும் விந்து நான்..

பெற்றவள் தொடாததையும்
உற்று, உள் சென்று, உரசி,
உருண்டு,உலர்ந்து உடலை தழுவும்
உணர்ச்சிப் பித்தன்..நான்..

உலகம் ஒரு விலைமாது
விறைப்புள்ள விருந்தாளி நான்..

நான் காமம்கொண்டால்
மழைக்காலம்..
என் காமம் தீர்ந்தால்
அதுவே கோடைகாலம்..

[pictures.4ever.eu] couple in the rain 158057

 

கடவுளாக!!

பலனை கேட்காத பரம்பொருள் நான்…
வாழ்த்தினாலும் வைதாலும் பெய்வேன்..

சமதர்மம் என் சமயம்..

வராதே என்றாலும்
வா.. என்றாலும்..
வருவதென்றால்..
வந்தே தீருவேன்..

நான் விழுவதே..
எழுவதற்குத்தான்…

நானே யோகம்
ஒன்றிலே ஒன்றி உருமாறி உய்ப்பேன்…

நானே அணு
மாறுவேன்.. மறைவேன்…
இருப்பேன்..இறப்பதில்லை..

நானே மரம்.. நானே மலர்..
நானே நதி.. நானே கடல்..
நானே உடல் .. நானே உயிர்..
நானே வெள்ளம்..
நானே எல்லாம்..!! எல்லாம் நானே!!

watching_the_rain_drops_by_musi1-d4vcxk1

குழந்தையாக!!

நான் சிறு குழந்தைகளின்
சிரிப்பு வங்கி..

என் ஆலங்கட்டிகள்
வானில் தயாரான
Gems  மிட்டாய்கள்…

தாய் தராத இடத்திலும்
முத்தமிடும் தவத்தாய் நான்..

பிஞ்சுக் கைகளில்
விழுந்தும் உடையும்
குட்டிக் குட்டி திரவ பலூன்கள் நான்..

காகிதக் கப்பல்களைக்
கவிழ்க்கும் இரட்டைச்சுழி
சிறுவன் நான்…

ஒரே சந்தத்தில் பாடியே
குழந்தைகளை உறங்கவைக்கும்
தெருப்பாடகன் நான்..

குழந்தைகளின் உடலில்
விழுந்து தெறிக்கையில் மட்டும்
சீனிச் சிதறல்கள் நான்..

 

Malzhai Kaathalan

 

விவசாயியாக!!

அவன் விதை விதைப்பான்..
நான் துளி விதைப்பேன்..

நானே கொடுப்பேன்..
நானே கெடுப்பேன்..

நான் கேணி நிறைத்தால்..
அவன் கோணி நிறையும்..

வேண்டப்படுவதும் நானே..
வெறுக்கப்படுவதும் நானே..

குடிக்கத்தரும் நீரைச்
செடிக்கு விடும்
விவசாயிகளின் விசுவாசி நான்…

அவன் கணுக்கால் அளவு கேட்டால்
முட்டிவரை பெய்வேன்..
முட்டிவரை கேட்டால்
கால்நகம்வரை பெய்வேன்…

அவன் அழுக்கு வேட்டியை
அலச சிலநாளும் ..
ஆறுதலுக்காகச் சிலநாளும்
பெய்வேன்..

பெரும்பாலும் பொய்ப்பேன்..

images (2)

 

புத்தகப்புழுவாக!!

கண்ணீர் போல்
வடிவம் கொண்டவனல்ல நான்..
கிடைமட்ட நீள் உருண்டையான
மாத்திரை வடிவமானவன்…

நொடியில்
ஒரு மில்லியன் லிட்டர்
மழைத்துளியை
உலகெங்கும் ஊற்றுவேன்..

நான் பிறக்கும்
ஒரு சிறிய கருவறை மேகம்
பத்து யானை கனம்..

என் பெரிய கருவறை
பத்தாயிரம் யானைக்குச் சமம்..

என் PH ஏழுக்குக்கீழ்
சென்றால் நானே அமில மழை..

images (1)

அதி வேதிப்பொருள் கலந்தால்
நானே குருதிமழை..

அவசரமாக விழுந்தால்
நானே ஆலங்கட்டி மழை..

ஆம்.. நானே.. நானே..

நானே தான்.. எங்கும் நானே தான்..

மண்ணை மறைத்தது மாமத மழை..
மண்ணில் மறைந்தது மாமத மழை…

— இரா.சங்கர்.

குறிப்பு – இக்கவிதை சூரியன் பண்பலையில் கவிஞர்.வைரமுத்து பிறந்தநாளை ஒட்டி நடந்த கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.

 

About இரா.சங்கர்

8 comments

 1. This is wonderful that the rain itself stated its characters in a different manner.
  Writer has the spiritual clarity. Stated the need of water as well. But Its disappointing that some English world mixed up. It would be better if you are sharing the 1st & 3rd place poems too.
  Overall writer has a brilliant creativity. Keep writing Shankar.

  • ”spiritual clarity” என்று சொன்னதற்கு முதலில் நன்றி தோழர் Kuttimani Senguttuvan . கவிதையை யாருமே பார்க்காத கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள் நன்றி . மற்றவை நம் குழு கருத்து பறிமாற்றப்பகுதியில் முன்னமே பதிந்திருக்கின்றேன். நன்றி. 🙂

 2. ராஜராஜா.ஏஆர்கே

  தம்பி சுரா.சங்கரின் கவிதை
  (ஒரு மழைத்துளி ஐந்து வேறு,வேறு விதமான கோணங்களில்)
  மிக அற்புதமாக எழுதியிருக்கிறான்.
  வார்த்தைகள் அவன் வயதை மீறிய முதிர்ச்சியோடு இருக்கிறது….
  வாழ்த்துக்கள் சங்கர்.
  உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது…
  நிச்சயம் நீ சிகரம் தொடுவாய்

  • இதற்கு நான் எப்படி பதில் சொல்வது .
   உங்கள் ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் வார்த்தைகள்
   ஒளிந்து கொண்டிருக்கின்றன.
   அதை எப்படி மொழி பெயர்ப்பது.
   இதற்கு சரியான பதில் தேடி தோற்றுப்போய் தான் ..
   என் அர்த்தச்செறிவு இல்லாத சொற்கள் கோர்த்து எழுதிவிட்டேன்.

   முதலில் உங்கள் பொன் நேரம் செலவிட்டு என் கவிதையை படித்ததற்கு பெரும் நன்றி. ஏனென்றால் எனக்கு தெரியும் உங்கள் நேரம் எவ்வளவு நெருக்கடியானதென்று.
   என்னை செத்துக்கியதில் சினிமாவுக்கு பெரும்பங்கு இருக்கின்றது. அதே அளவு உங்களுக்கும் இருக்கின்றது. ஏனென்றால் என் சினிமாவே நீங்கள் தானே..

   உங்கள் வார்த்தையை வெரும் வாழ்த்தாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை நான்..
   இது.. வாக்கு…
   தான் பார்த்து பார்த்து வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறுவனைப்பார்த்து ஒரு தீர்க்க தரிசி சொல்லும் வாக்கு…
   அந்த ”நிச்சயம்“ என்ற வார்த்தை என்னை இன்னும் புத்துணர்ச்சியாக்கி ஒடச்சொல்கிறது.
   உண்மையை சொல்வதென்றால்..
   வைரமுத்துவிடம் பரிசையும் பாராட்டையும் வாங்கியபோது இல்லாத பெருமகிழ்ச்சி . 🙂 🙂 🙂
   நன்றி ஆசானே… 🙂

 3. கமலகண்ணன்

  வாழ்த்துக்கள் தோழர் சங்கர்.

 4. அருமை சங்கர்…:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*