Home / அரசியல் / இசுலாமிய நாடுகளில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

இசுலாமிய நாடுகளில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

இசுலாமிய நாடுகளில் ஏன் அமைதியிருப்பதில்லை எப்போதும் துப்பாக்கி, போர், வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல் என வன்முறையும், பதற்றமுமாக வளைகுடா நாடுகள் முழுதும் ஒரு வித ரத்தச்சகதிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதன் காரணமென்ன? அபரிமிதமான எண்ணெய் வளங்களைக் கொண்டிருந்தாலும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் ? ஒருபுறம் ISIS இயக்கம் சிரியாவிலும், இராக்கிலும் நடத்தும் தாக்குதல்களில்,சிறுபான்மையினரை கூட்டங்கூட்டமாக கொன்று குவிக்கிறது. இன்னொரு புறம் லிபியாவில் உள்நாட்டுப் போர், விமான நிலையத் தாக்குதல் என்று அனுதினமும் லிபியாவிலிருந்து போர்ச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இசுரேலிய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 2016.

இசுலாமியர்கள் என்றாலே வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள் என்ற தோற்றம், அமெரிக்க மேற்குலக ஊடகங்களால் உலகெங்கும் பரப்புரை செய்யப்பட்டு, இவர்கள் இப்படித்தான் அடித்துக் கொள்வார்கள் என்று அலட்சியமாக, இத்தகைய வன்முறைகள் கண்டும் காணாமல் செல்லும் போக்கிற்கு ஏனைய உலகம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது எல்லாவற்றிற்கும் அமெரிக்கா தான் காரணம் என்ற ஒரு விவாதமும் முன் வைக்கப்படுகிறது. அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அபகரிப்பதன் பின்னணியிலேயே இதெல்லாம் நடக்கின்றன என்றும் பேசப்படுகிறது. இதை மறுப்பதற்கில்லை என்றாலும், இதை அமெரிக்காவுக்கும் மேற்கு ஆசியாவிற்குமான போட்டியாக பார்ப்பதில், அழுத்தமான ஒரு தொள்ளாயிரம் ஆண்டுகால வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

இந்த அழுத்தமான பின்னணியைத்தான் நூலாசிரியர் மு.திருநாவுக்கரசு “ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்” என்ற தனது நூலில் ஆய்வு செய்கிறார். விரிவானதளத்தில், அமெரிக்க மயமான ஒற்றை மைய உலக அரசியலைப் பேசும் இவரது ஆய்வுகளில், மேற்கு ஆசியப் பிரச்சினை பற்றி மட்டும் நாம் இங்கே பேசினால், வளைகுடா நாடுகளில் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என நம்புகிறேன்.

“கி.பி பதினோராம் நூற்றாண்டில், பாரிஸிலிருந்து ஜெருசலம் வரை, கிறிஸ்துவர்கள் மேற்கொண்ட படையெடுப்பு மூன்றாண்டு காலம் வரை நீடிக்கிறது.

அதன் பிறகு, துருக்கியிலிருந்து கிரேக்கத்தினூடாக ஐரோப்பா நோக்கி இஸ்லாமிய படையெடுப்பு ஏற்படுகிறது. அவ்வாறே, ஜோர்டனிலிருந்து எகிப்து,லிபியா,அல்ஜீரியா,மொறாக்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கூடாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினை இஸ்லாம் சென்றடைகிறது.

மறுபுறம் ஆசியாவின் கிழக்கு நோக்கி ஈராக், ஈரான், பாகிஸ்தான், இந்தியா என ஒரு படர்ச்சியும், அதன் கிளையாக ஆப்கானிஸ்தான் மற்றும் பழைய சோவியத் ரஷ்யப் பகுதிகள்நோக்கியும் இஸ்லாமியப் படர்ச்சிகள் இடம் பெற்றன. இன்னும், மேற்காசியாவிலிருந்து, கிழக்கு, தென்கிழக்கு ஆகிய திசைகளில் இந்தியா உட்பட மலேசியா, இந்தோனேசியா வரையும் இஸ்லாம் படர்ந்திருப்பதையும், மேற்கு நோக்கி ஆப்பிரிக்காவின் வழியாக அதாவது வட ஆப்பிரிக்கா முழுவதையும் ஊடறுத்து ஸ்பெயின் வரை, அதாவது ஒருகண்டத்தைக் கடந்து ஐரோப்பாவை இஸ்லாம் அடைந்திருப்பதையும் காணலாம். இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது.

சுருக்கமாக கூறினால், இஸ்லாம் அல்லது மேற்காசிய ஆதிக்கம் பல முனைகளில் இருந்து, பல கண்டங்களையும் நோக்கிப் படர்ந்திருக்கின்றது. குறிப்பாக, மேற்குலகின்ஆதிக்கத்திற்கு அது பெரும் சவாலை ஏற்படுத்தி விட்டது.”

அது மட்டுமின்றி, வரலாற்றின் மிகப்பெரிய திருப்பு முனையாக நூலாசிரியர் குறிப்பிடுவது, இசுலாமிய அரசான துருக்கியின் கையில் கான்ஸ்தாந்திநோபிள் 1453 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தான். கான்ஸ்தாந்திநோபிளைக் கைப்பற்றியதன் மூலம், கிழக்கு நோக்கிச் செல்லும் ஐரோப்பிய தரைவழிப்பாதை தடைபடுகிறது. உலகம் உருண்டை என்ற விஞ்ஞான உண்மை அப்போது கண்டு பிடிக்கப்பட்டு விட்டதால், தொடர்ந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்தால், கிழக்கை அடைந்து விடலாம் என்ற அடிப்படையில் ஐரோப்பியர் கடல்வழிக் கண்டுபிடிப்புப் பயணங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

oil2

1521 ஆம் ஆண்டு மெகல்லன் பூமியை வலம் வந்தார். உலகமயமாக்கலின் முதல் புள்ளியும் இதுவே. பூமி ஒன்றாக அதன் முழு வடிவில் அறியப்பட்டமையும்,அதன் வழி ஐரோப்பியரே பூமியின் ஆதிக்க சக்தியாக திகழ ஆரம்பித்தனர். கான்ஸ்தாந்திநோபிள் துருக்கியிடம் சிக்கியதால்,பூமி ஐரோப்பியரிடம் சிக்கும் நிலை தோன்றியது.துருக்கி என்பது உலகில் தோன்றிய முதலாவது பேரரசான ஆக்காட் பேரரசின் ஒரு பகுதி. அப்பேரரசின் ஒரு பகுதி தற்போதைய ஈராக் ஆகவும் அமைந்திருந்தது. இப்பகுதியை மையமாகக் கொண்டு தான் உலகளாவிய ஆதிக்கம் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஐரோப்பாவிலிருந்து கான்ஸ்தாந்திநோபிள் வழியான கிழக்குப்பாதை தடை பட்டதால், ஐரோப்பியர் கடல்வழி வாய்ப்பைத் தேடினர்.

மேற்சொன்னவாறு, ஈராக்கை மையமாகக் கொண்டு, பல திசைகளில் நீண்ட இசுலாமிய படையெடுப்புகளும் ஆட்சியமர்வுகளும் அதன் பக்கபலமாக இருந்த இஸ்லாமிய தத்துவமும் சென்று சேர்ந்து விரிவடைய மறுபக்கம் அதற்கு எதிரான மேற்குலகின் வன்மம் இசுலாமிய எதிர்ப்புணர்வின் வடிவமாய் மாற்றம் பெற்று, பொருளாதார நலன்களுக்கான ஆதிக்கங்களுக்கான போட்டி, கிறிஸ்தவ இசுலாம் என்ற வடிவில் இறுதி அணிகளாயின. இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஈராக்கை முக்கிய புள்ளியாகக் கொண்டு விரியும் வளைகுடாப் பிரதேசம் உலக ஆதிக்கத்திற்கான, உலகப் பொருளாதார, வர்த்தக ஆதிக்கத்திற்கான மையமாக அமைந்திருக்கிறது என்பது தான். அனைத்துமே ஆதிக்கத்திற்காக பொருளாதார ஆதிக்கத்திற்காக நிகழ்கின்றன. இனமென்றும், மொழியென்றும், மதமென்றும், சாதியென்றும், தேசியமென்றும் காணப்படும் அனைத்துப் போராட்டங்களும் இறுதியிலும் இறுதியாகப் பொருளாதாரநலன்களுக்கான அல்லது பொருளாதார ஆதிக்கத்திற்கான வடிவங்களேயாகும் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

ஆக இந்த பொருளாதார ஆதிக்கங்களுக்கான போட்டி என்பது, இப்போது நாம் பதற்றம் நிறைந்த பகுதியாக, போர்க்களமாக காணும் வளைகுடா பகுதியிலிருந்து தான் தொடங்கியது என்பது தெளிவு. ஆக இந்த வளைகுடா நாடுகளுக்கும் மேற்குலக ஐரோப்பிய நாடுகளுக்குமான போரில் அமெரிக்கா இணைந்து கொண்டமையும் தற்செயலானது அல்ல.

முதல் உலகப் போருக்குப் பின் 1929 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார பெருமந்தத்தை உலகம் சந்தித்தது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியானதொரு, பொருளாதார நெருக்கடியை, பணவீக்கத்தை அமெரிக்காவும், மேற்குலகமும் சந்திக்கும் என உலகம் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 1973 ஆம் ஆண்டு, எகிப்து சிரியாவுக்கு எதிராக இசுரேல், “யோம் கிப்பூர்” என்ற போரை நடத்தியது. உலகம் முழுதும் மிகப்பெரிய பாதிப்புகளையும் சேதத்தையும் விளைவித்தது இப்போர். எகிப்தின் அதிபரான சாதத், இசுரேலின் கூட்டாளியான அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, எண்ணெய்த் தடையை கொண்டு வர வேண்டும் என சவூதி மன்னர் ஃபைசலை வலியுறுத்தினார். அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து அரபு நாடுகள் எண்ணெய் விலையில் 10 விழுக்காடு உயர்வை அறிவித்தன.

அது ம‌ட்டுமின்றி, அர‌பு நாடுக‌ளின் பெட்ரோலிய‌த் துறை அமைச்ச‌ர்க‌ள் குவைத் ந‌க‌ரில் ஒன்று கூடி, மேல் ந‌ட‌வ‌டிக்கை குறித்து ஆராய்ந்த‌ன‌ர். அமெரிக்காவைக் குறி வைக்க‌ வேண்டுமென ஈராக்கின் அமைச்ச‌ர் க‌டுமையாக‌ வாதிட்டார். இதில் சில‌ ப‌ரிந்துரைக‌ள் முன் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அரபு நாடுகளிலுள்ள‌ அனைத்து அமெரிக்க‌ வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ளையும் நாட்டுடைமை ஆக்குவ‌து, அமெரிக்கா ம‌ற்றும் இஸ்ரேலுக்கு ஆத‌ர‌வாக‌ உள்ள‌ ம‌ற்ற‌ நாடுக‌ள் மீது முழுமையான‌ எண்ணெய்த் த‌டையைச் செய‌ல்ப‌டுத்துவ‌து, அமெரிக்க‌ வ‌ங்கிக‌ள் அனைத்திலிருந்தும் அரபு நிதியைத் திரும்ப‌ப் பெறுவ‌து என்ப‌ன‌ அவ‌ற்றுள் சில‌. அர‌பு வ‌ங்கிக் கண‌க்குக‌ள் க‌ணிச‌மான‌வை என்ப‌தால் இப்ப‌டியொரு ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌ட்டால், 1929 ஆம் ஆண்டில் ஏற்ப‌ட்ட‌ பொருளாதார‌ நெருக்க‌டியையும் ப‌ண‌வீக்க‌த்தையும் ஏற்ப‌டுத்த‌ முடியும் என‌ ஈராக்கிய‌ பிர‌திநிதி குறிப்பிட்டார். இந்த‌ ந‌ட‌வ‌டிக்கைகள் முழுமையாகச் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டாவிட்டாலும் எண்ணெய்த் தடையையும், 5 முத‌ல் 10 விழுக்காடு உற்ப‌த்திக் குறைப்பையும் பெரும்பாலான‌ அர‌பு நாடுக‌ள் ந‌டைமுறைப்ப‌டுத்தின‌. இதை பொருட்ப‌டுத்தாத அமெரிக்க‌ அதிப‌ர், நிக்ச‌ன் இசுரேலுக்கு உத‌வ‌ 2.2 பில்லிய‌ன் டால‌ர்க‌ள் நிதிய‌ளிக்குமாறு, அமெரிக்க‌ நாடாளும‌ன்ற‌த்தில் கோரினார். இத‌னால் கொதிப்ப‌டைந்த‌ ச‌வூதி அரேபியாவும் ம‌ற்ற அர‌பு நாடுக‌ளும், அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றும‌தி செய்வ‌தை முழுமையாக‌த் த‌டை செய்த‌ன‌.

oil-embargo1

இந்த‌ எண்ணெய்த் த‌டை மிக‌ப்பெரிய‌ பாதிப்பை ஏற்ப‌டுத்திய‌து. பெட்ரோல் விலை க‌டுமையாக‌ அதிக‌ரித்த‌து.அமெரிக்க வீதிகளில் வாகனங்கள் முடங்கின. சில‌ மாத‌ங்க‌ளே நீடித்த‌ இந்த பொருளாதார‌த் த‌டை, த‌ந்த‌ உள‌விய‌ல் அதிர்ச்சி அமெரிக்காவை நிலைகுலைய‌ வைத்த‌து. எண்ணெய்த் தேவைக‌ளுக்கான‌ அடிப்ப‌டைக‌ளை பாதுகாப்ப‌தென்ப‌து தான் அமெரிக்காவின் தலையாயக் கோட்பாடாக‌ மாறிய‌து. இந்த‌ பொருளாதார‌த் த‌டை ச‌வுதி அர‌சுக்கு மிக‌ப்பெரிய‌ பிராந்திய‌ முக்கிய‌த்துவ‌த்தை அளித்த‌தோடு, எண்ணெய் ஆதார‌ங்க‌ளுக்கான‌ உல‌க‌ப் பொருளாதார ஆதிக்க‌த்திற்கான‌ புள்ளியாக‌ அர‌பு நாடுக‌ள் திக‌ழ்கின்ற‌ன‌ என்ற‌ உண்மையை அமெரிக்கா புரிந்து கொண்ட‌து.இந்த‌ பொருளாதார‌த் த‌டையின் மூல‌ம், சவூதி அரேபியாவுக்கு மிகப்பெரிய பணபலம் கிடைத்தது. சவுதியில் குவிந்த ‌பெட்ரோ டாலர்களை திரும்ப அமெரிக்காவிற்கே கொண்டு வர வேண்டும். அதற்கு சவூதி அரேபிய அரசுக்கு உதவுவது போல, நீண்ட காலத்துக்கு சவூதி அரசை தன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்ற அரபு நாடுகளையும் அடிபணியச் செய்ய வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை சீர் குலைக்கவேண்டும். அரபு நாடுகளை மீண்டும் ஒன்றுபட விடாமல், அப்பகுதியின் நிலைத் தன்மையை நிரந்தரமாகக் குலைக்க வேண்டும். இந்த வியூகத்தைத் தான், மறைமுகமாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையாக அமெரிக்க அரசு கொண்டிருக்கிறது.

சீனாவில் 1989 ஜூன் மாதம் நிகழ்ந்த தியானமென் சதுக்கப்படுகொலையில், சுமார் ஆயிரம் மாணவர்கள் சீன இராணுவ டாங்கிகளால் ஏற்றப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். இதனை எதிர்க்கும் விதமாக, முதலாம் புஷ் சீனாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தார். இது சீனப் பொருளாதாரத்தை பாதித்ததை விட, அமெரிக்க பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது. 1990 ஆம் ஆண்டு உலகின் முதலாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்காவின், வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு லட்சத்து முப்பதினாயிரம் டாலர்கள் துண்டு விழுந்தது. இதனால் அமெரிக்க வர்த்தகர்களும் பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாயினர். அமெரிக்க காங்கிரசு அரசு, இதன் பொருட்டு பொருளாதாரத் தடையை நீக்குமாறு, புஷ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. மனித உரிமை, ஜனநாயகம் போன்ற லட்சியங்களெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, வர்த்தகமே முதன்மை, என்று அப்பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டார் புஷ். சதாம் உசைனை வழிக்கு கொண்டு வரும் முயற்சியிலும் புஷ் தோல்வியடைந்தார். கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த புஷ், வெளிய வர முயற்சி செய்து கொண்டிருந்த போது தான், 1990ல் சதாம் உசைனே வலிய வந்து பொறியில் சிக்கினார்.

Landscape

எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத் அரசை, சதாம் ஆக்கிரமிக்க முனைந்த போது, தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கழுகு விழித்துக் கொண்டது. குவைத்தை காப்பாற்றுகிறேன் என களத்தில் குதித்தது. ஐந்து லட்சம் அமெரிக்க படை வீரர்கள் ஈராக்கினுள் அனுப்பப்பட்டனர். வான்வழியாகவும் தரைவழியாகவும் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான பொதுமக்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்தனர். இந்த வளைகுடா போரில், ஏற்கெனவே பலவீனமாக இருந்த ஈராக்கிய இராணுவம், முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டது. சதாம் உசைன், ஈராக்கினுள்ளேயே முடக்கி வைக்கப்பட்டார். அப்போதே ஏன் சதாமை, அமெரிக்கா பிடித்து, மரண தண்டனை கொடுக்கவில்லை என்ற இயல்பானகேள்வி நம் அனைவருக்குமே எழ வாய்ப்பிருக்கிறது. அங்கு தான் இருக்கிறது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முடிச்சு.

புவியியல் ரீதியாக, ஈராக் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கு மிகப்பெரிய தலைவலியாக, அச்சுறுத்தலாக ஈரான் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது. அணு ஆயுதத்தில் முனைப்பு காட்டத் துவங்கிய ஈரானை வீழ்த்துவதற்கும் அதன் மூலம் இசுலாமியப் படர்ச்சியையும் தடுப்பதற்கு, அப்போது சதாம் உசைன் தேவைப்பட்டார். காரணம் சதாமை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளத்தக்க அளவு, அமெரிக்காவிற்கு வாய்ப்புகள் வழங்கக் கூடியவராக சதாம் இருந்தார். அதாவது சொந்த மக்களையே கொடூரமாக இனப்படுகொலை செய்து, இஸ்லாமிய உலகில் எந்த நற்பெயரும் மதிப்புமின்றியும் அவர் இருந்தார். ஆகவே ஈராக்கை முழுமையாக கைப்பற்றி, ஈரானை வீழ்த்துவதற்குரிய காலம் அல்லது தேவை வந்திருக்கவில்லை. அதுவரை, சதாமை பேணிக்காப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது(90களில்).

ஈரான், இசுலாமிய நாடுகளின் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையாக உருவெடுத்தது. 1979 ஆம் ஆண்டு, அயத்துல்லா கொமேய்னி தலைமையில், இசுலாமிய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, ஈரானியப் புரட்சி, அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த ஷா அரசை தூக்கியெறிந்தது. ஷா ஈரானை விட்டு தப்பி, எகிப்துக்கு ஓடினார். பின் புற்றுநோய் சிகிச்சைக்காக, நியூயார்க்கில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. ஈரானியப் புரட்சிக்கு பின், இசுலாமிய போராளிக் குழுவொன்று, அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றியது. 52 அமெரிக்கர்கள், 444 நாட்கள் பிணைக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் இராணுவ முயற்சியும் பேரழிவில் முடிந்ததால், 1980 அமெரிக்கத் தேர்தலில் கார்ட்டர் மண்ணைக் கவ்வினார். 1979 புரட்சியிலிருந்து, இன்றளவும் ஈரானை, அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பது, வலுவான சனநாயக நாடாக ஈரான் இருப்பது தான்.

1991-92 ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் பயனாய், முதலாம் புஷ், அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்தார். கிளிண்டன் ஆட்சிக்கு வந்தார். கிளிண்டனின் வெளியுறவுக் கொள்கையானது, En-En என்று அழைக்கப்பட்டது. அதாவது Engagement -Enlargement. தன்னுடைய பொருளாதார ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும், உலகமயத்தை விரிவாக்குவதற்கும் இந்த கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு தடையாக இருக்கும் நாடுகளான கியூபா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் அனைத்தையும் ”கெட்ட அரசுகள்”( Rogue States ) என்று முத்திரையிட்டு தனிமைப்படுத்தி, முற்றாக அழிப்பதாகவும் அவரது கோட்பாடுகள் அமைந்திருந்தன. இதன் மூலம் ஆக்கிரமிப்புகளை முறியடித்து திறந்த பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கக் கோரினார், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அந்தோணி லேக் (Anthony Lake).

2001 செப்டம்பர் 11 ஆம் நாள், உலக வர்த்தக மைய கட்டிடத் தாக்குதல், அமெரிக்காவின் “கெட்ட அரசுகள்” முத்திரைக்கு, “பன்னாட்டு பயங்கரவாத எதிர்ப்பு” என்ற வண்ணம் தீட்டத் துவங்கியது. ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற கோலை வைத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தது அமெரிக்கா. சோவியத்தை எதிர்க்க, தன் உதவியால் மட்டுமே சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட பின் லாடன், மற்றும் அவரது அல்கொய்தாவை அழிப்பதே நோக்கம் என்று களமிறங்கினாலும், ஈரானைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு தற்காலிக வசிப்பிடத்தை, ஆப்கனைக் கைப்பற்றியதன் மூலம் அமெரிக்கா உறுதி செய்தி கொண்டது.

1981 இசுரேலிய வான்படை, ஈராக்கின் ஓசிராக் (Osirak) எனும் பகுதியில், சதாம் உசைனால் நிர்மாணிக்கப்பட்டு வந்த அணு உலையை முற்றாக தகர்த்து ஒழித்தது. அதன் பிறகு, இம்முயற்சியில் சதாம் தீவிரம் காட்டவில்லை. சதாமிடம் அணு குண்டு இல்லை என்பதும் வேறு எந்த பேரழிவு (WMD) ஆயுதங்களும் இல்லை என்பதும் அமெரிக்காவுக்கு தெளிவாகத் தெரியும். ஐ.நா நிபுணர் குழு அறிக்கையிலும், பரிசோதனைக் குழு அறிக்கைகளிலும், அவ்வாறான அணு அல்லது பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதும் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் அமெரிக்கா, ஈராக்கின் மீது திரும்பவும் படையெடுத்ததற்கு, சில காரணங்கள் இருக்கின்றன.

nixon

சமகால மதிப்பீடுகளின் அடிப்படையில் சவூதி அரசைக் காட்டிலும் ஈராக்கில் தான் அதிகம் எண்ணெய் வயல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி, எதிர்காலத்தின் முக்கிய அடிப்படையாக இருக்கப்போகிற, நீர் வளங்களையும் ஈராக் பெற்றிருக்கிறது. யூப்ரடிஸ், டைகீரீஸ் என்ற இரு பெரும் ஆறுகளும் ஈராக்கை கடந்து தான் பாய்கின்றன. ஆகவே அப்பகுதியில் உள்ள, மற்ற நாடுகளைக் காட்டிலும் ஈராக் மட்டுமே, அதிக நீர் வளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அரசியல் இராணுவ பொருளாதார ரீதியாக, ஈராக்கின் புவியியல் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஈராக்கை கைப்பற்றுவதன் மூலம், அதன் ஊடான இசுலாமியப் படர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது, மற்றும் நிரந்தர எதிரியான ஈரானைக் கட்டுப்படுத்துவதற்குரிய களம் அமைப்பது. ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய பின்பு, அங்கு அணு மற்றும் வேறெந்த பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனாலும், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தொடர்ந்து பல ஆண்டுகள் நிலை கொண்டிருந்ததற்கு, மேற்சொன்ன மூன்று காரணங்களால் தான் அடிப்படை. சதாம் உசைனுக்கு மரண தண்டனை கொடுத்ததன் மூலம், மற்ற இசுலாமிய நாடுகளின் தலைவர்களையும் ஈரானையும் எச்சரித்து விட்டதாக அமெரிக்கா உணர்கிறது.

முதல் உலகப்போரின் போது அமெரிக்க வெள்ளை ஆதிக்கத்தின், நிரந்தர எதிரியாக “சிவப்பு” இருந்தது. முதல் உலகப் போருக்குப் பின், ஹிட்லரின் மண்ணிற சட்டைகள் என்ற நாஜிகள், அமெரிக்காவின் “பழுப்பு” நிற எதிரியாக இருந்தனர். இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் தோல்வியடைந்ததையடுத்து, (War against Brown) பழுப்புக்கெதிரான போர் நிறைவடைந்தது. 1990 சோவியத் யூனியன் சிதறுண்டதால், சிவப்புக்கெதிரான (War against Red) போரும் முடிவடைந்தது. பனிப்போருக்குப் பின்னான புதிய உலக ஒழுங்கின் தலை விதி,வெள்ளை அமெரிக்கா ஆதிக்கத்திற்கெதிராக, (War against Green) “பச்சை” இசுலாமிய நாடுகளைக் குறிவைப்பதாகவே இருக்கிறது. அதன் மூலம் தனது நீண்ட கால எதிரியான மஞ்சள் சீனாவை எச்சரிப்பது அதன் மூலம் வடகொரியாவையும் கியூபாவையும் கட்டுப்படுத்துவது. அதன் பொருட்டே ஆப்கானிஸ்தானில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்கள். போஸ்னியா, செச்னியா, பெய்ரூட், பாலஸ்தீனம் வரை இசுலாமியர்கள் கொல்லப்படுகிறார்கள். ஈராக்கிலும் இசுலாமியர்கள் தான் கொல்லப்பட்டார்கள். இன்று ஈராக்கில், சிரியாவில் அமெரிக்க நிதியுதவியால் வளர்ந்து செழித்த, மற்ற இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களைப் போலவே இன்றும் ISIS உம் வளர்ச்சியடைந்து, அப்பிராந்தியத்தில் கிளை பரப்பி நிற்கிறது. சிறுபான்மையினரை கொன்று குவிக்கிறது. இசுலாமியர்களே, இசுலாமியர்களைக் கொல்லும் நிலையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தன் ஆக்கிரமிப்புகளையும், பொருளாதார விரிவாதிக்கப் போக்கினையும் நியாயப்படுத்துவதற்கு, அமெரிக்கா எனும் பாசிச பூதத்திற்கு, வரலாறு நெடுகிலும் ஒரு எதிரியின் தேவை இருந்து கொண்டேதானிருக்கிறது. இறுதி அர்த்தத்தில், அமெரிக்கா என்ற பயங்கரவாத அரசுக்கு, அதன் பொருளாதாரத் தேடல்களுக்கு, விரிவாதிக்க நலன்களுக்கு, தொடர்ந்து இசுலாமிய நாடுகள் குறி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து பச்சைக்கெதிரான தனது போரை, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று அறிவித்துக் கொண்டு, மேற்குலக ஊடகங்களை தன் கையில் வைத்திருப்பதன் மூலம், உலக மூளைகளைச் சலவை செய்து, இசுலாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற போலிப்பரப்புரையைத் திட்டமிட்டு செய்து வருகிறது அமெரிக்கா. வளைகுடா பகுதியில் அமைதியைக் கெடுப்பதற்கும், அரபு நாடுகளை ஒன்றிணைய விடாமல் தடுப்பதற்கும், அவர்களின் அருகிலேயே இருந்து கண்காணிப்பதற்கும், இசுரேல் என்ற பயங்கரவாத அரசை இன்றளவும் பாதுகாத்து வருகிறது. பெரும்பாலான அமெரிக்க குடிமக்கள் வேலை வாய்ப்பின்மையால் வீதிக்கு வந்தாலும், இசுரேலுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருவதன் நோக்கமும் இதுதான்.

சதாம் உசைன் இரண்டு பன்னாட்டுச் சட்டங்களை மீறினார் என்ற குற்றம் சாட்டி, ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா, இசுரேல் 60 பன்னாட்டுச் சட்டங்களை மீறியது குறித்து கவலைப்படாது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று கூவும் அமெரிக்கா தான் உலக அளவில் அதிக அணு ஆயுதக் கையிருப்பைப் பெற்றிருக்கிறது. அது மட்டுமின்றி அணு ஆயுதங்களை பொது மக்கள் மீது பயன்படுத்தி, லட்சக்கணக்கானோரை ஈவு இரக்கமின்றி கொன்றது அமெரிக்க அரசு மட்டும் தான். உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அரசு அமெரிக்காவே. மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு அமெரிக்க இராணுவம் தான். ஆப்கானிஸ்தானில் அழிக்கப்பட்ட மாதுளைத் தோட்டங்களில் இருக்கின்றன ஷெல்களின் நாற்றம். தாயின்றி பாலுக்கு அழும் பாலஸ்தீனக் குழந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள் யார் உண்மையான பயங்கரவாதியென்று? 20 லட்சம் ஈராக்கிய விதவைகளிடம் கேட்டுப்பாருங்கள் யார் தங்கள் கனவையும் வாழ்வையும் பறித்ததென்று? உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையாளன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஹிரோஷிமா நகருக்குச் சென்று பாருங்கள். பயங்கர‌வாதத்தை ஒழிக்க அதன் மூல வேரான அமெரிக்காவையும், அதனையொத்த அரசுகளையும் எதிர்த்து போராடுவோம், சனநாயகத்தை மீட்டெடுப்போம்.

–அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

One comment

  1. அமெரிக்க நிதி உதவியில் பல இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுகின்றன isis போல என்ற உண்மை தெரியாமல் சில இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது Tshirt ல் isis என்று பதிந்து போட்டிருக்கிறார்கள்.இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக கெட்டவர்களையும் ஆதரிப்பார்களோ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*