Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / கூடங்குளம் – ஓயாத அலைகள்

கூடங்குளம் – ஓயாத அலைகள்

கடற்கரையோரம்,ஆயிரக்கணக்கில் ஆயுதமேந்திய காவல்துறையினர், எந்நேரமும் தாக்கத் தயாராய் காத்திருக்கின்றனர். எதிரே ஆயிரக்கணக்கில் மக்கள். தங்கள் போராட்ட உணர்வன்றி வேறு ஆயுதமில்லா மக்கள். காவலர்களுக்குப் பின்னே நிற்கின்றன பிரம்மாண்டமான அழிவின் சின்னங்கள். துப்பாக்கியாலும் லத்தியாலும் கண்மூடித்தனமாகத் தாக்கும் காவல்துறையினரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர்களுக்கு இருப்பதோ கடற்கரை மணல் மட்டும்தான். பாய்ந்து வரும் எதேச்சதிகாரத்திடமிருந்து தப்ப அவர்களுக்கு அப்பொழுது இருந்த ஒரே அடைக்களம் பரந்து விரிந்த கடல் மட்டும்தான்.

11THMOVEMENT_1204914f

செப்டம்பர் 10, 2012 அன்று கூடங்குளம் அணுவுலையை முற்றுகையிட முயன்ற மீனவ மக்கள் காவல்துறையின் கண்மூடித்தனமான வன்முறைக்கு இலக்காயினர். போராட்டத்தை முன்நின்று நடத்திய பெண்களும் குழந்தைகளும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். காவல்துறையினர் வன்மத்திலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் கடலுக்குள் பாய்ந்தனர். சிறிது நேரத்தில் ஊருக்குள் புகுந்த காவல்துறையினர் கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கினர். இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயத்தில் சிறுநீர் கழித்தனர். வீடு வீடாகச் சோதனை நடத்தி, கண்ணில் பட்ட நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்தனர். கண்ணில் பட்டவரெல்லாம் அடித்து, உதைத்து கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அட்டூழியங்களைப் படமெடுத்தவர‌து கையிலிருந்த அலைபேசியைப் பார்த்து வெடிகுண்டு வைத்திருக்கிறாயா என்று கேட்டுக் கொண்டே அவரை அடித்தனர். செய்தியாளார்களும் காவல்துறையின் அராஜகங்களிலிருந்து தப்பவில்லை. பதின்வ‌யதுச் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள்வரை பலரும் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

கூடங்குளத்தில் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு அணுவுலைகளுக்கெதிராக அப்பகுதி மக்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். தமது தொடர் போராட்டங்களின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். “உங்களில் ஒருத்தியாக”இருப்பேன்” என்று முதலமைச்சரைக் கூற வைத்தனர். மத்திய, மாநில அரசுகள் ஆய்வுக் குழுக்கள் மூலம் தமக்கு வேண்டியதைக் கூறி மக்களை சமாதானப்படுத்த முயன்றன. பின்னர் சிறிது காலம் தாழ்த்தி மக்களின் போராட்ட உணர்வு மங்கட்டும் என்று காத்திருந்தன. உண்மையான மக்கள் போராட்டம் வீரியம் குறைவதில்லை. அதனை உணர்ந்து கொண்ட அரசுகள், அடக்குமுறையில் இறங்கிய நாள் தான் செப்டம்பர் 10, 2012. “போராட்டத்திற்கு அமெரிக்காவிலிருந்து பணம் வருகிறது”, “அணுக் கதிர்வீச்சினால் புற்றுநோய் வராது” “அணுக் கழிவுகளைக் குப்பிக்குள் அடைத்து வைத்து எளிதாகப் பாதுகாக்கலாம்”,”உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சம்ங்கள் உள்ளன” என்று அடுக்கடுக்கான பலப் பொய்கள் கட்டப்பட்டு, போராடும் மக்களை ஏனைய தமிழகத்திலிருந்து தனிமைபடுத்திய அரசு, துணிந்து களத்தில் இறங்கியது. அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது எண்ணற்ற வழக்குகள் பாய்ந்தன. இதுவரை கூடங்குளம் காவல்துறையில் பதிவாகியிருக்கும் தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் எட்டாயிரத்துக்கும் அதிகம். பல்வேறு விதமான அறப்போராட்டங்களை நடத்திய இடிந்தகரைப் பகுதி மக்கள், செப்டம்பர் 9,2012 அன்று கூடங்குளம் அணுவுலையை முற்றுகையிடப் போவதாக அறிவித்து கடற்கரை வழியாக அணுவுலையை அணுகினர். அணுவுலைக்கு எண்ணூறு மீட்டர்களுக்கு முன்னால் அவர்களை மறித்த காவல்துறையினர் மேற்குறிப்பிட்ட அராஜகத்தை நடத்திக் காட்டினர்.

காவல்துறையின் இத்தகைய அராஜகம் நிறைவேறி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. போராட்டத்தின் இன்றைய நிலை என்ன?

சில மாதங்களுக்குமுன் கூடங்குளம் முதல் அணுவுலை முழுமையடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அணுவுலையிலிருந்து மின்சாரம் மத்தியத் தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மத்தியத் தொகுப்பில் அப்படி எதுவும் பதிவாகவில்லை. இன்றுவரை அணுவுலைக்குள் டன் கனக்கில் டீசல் கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “உலகிலேயே பாதுகாப்பான” அணுவுலை செயல்படத் தயாரானதாக அறிவிக்கப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே கொதிநீர் கசிந்து ஆறுபேர் விபத்துக்குள்ளாயினர். பின்னர், அணுவுலை நிறுத்தப்பட்டது, சோதனை செய்யப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணான பல செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இப்படி உலகத் தரம் வாய்ந்த முதல் அணுமின்நிலையத்தின் நிலை பல்லிளித்துக் கொண்டிருக்க, இரண்டாவது அணுவுலையும் விரைவில் செயல்படப் போவதாகவும், அடுத்து மூன்றாவது, நாலாவது அணுவுலைகள் குறித்து இரசிய அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு பெருமையுடன் தெரிவிக்கிறது.

DSC_0247

கூடங்குளம் 3,4 அணுஉலைக்கான திட்டம் நீண்ட நாட்களாகவே இருந்தாலும், அது தொடர்பான ஒப்பந்தத்தை கையொப்பமிடுவதில் இரு தரப்பினருக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், மத்திய அரசு அணுசக்தி விபத்து இழப்பீடு தொடர்பாக இயற்றிய சட்டம் தான். அச்சட்டத்தின் மூலம், கூடங்குளம் 3,4 அணுவுலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு இரசியாவையே பொறுப்பாளியாக்க முடியும். உலகத் தரம் வாய்ந்த அணுவுலை என வாய் கிழியக் கூறினாலும், எந்த விபத்தும் நேராது என்று வாக்குறுதிகள் பல அளித்தாலும், அணுவுலையைக் கொடுத்த இரசிய அரசே, அதனை நம்பவில்லை, ஆனால் நாம் மட்டும் நம்ப வேண்டுமாம். இரசிய முதலாளிகளின் மனம் கோணாமல் நடக்க இந்திய அரசும் அச்சட்டத்தை எவ்வளவு தளர்த்த முடியுமோ அவ்வளவு தளர்த்தியும் பயனில்லை. வேறு வழியின்றி, கூடங்குளம் அணுவுலை 3,4 தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த ஜூலை மாதம் இரு தரப்பின் அதிகார வர்க்கமும் கையெழுத்திட்டன. ஒப்புக்கொள்ள முடியாத விடயங்களைப் பின்னர் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றது இரசியத் தரப்பு. இதன் அர்த்தம், இந்திய அரசு, சட்டங்களை இரசிய முதலாளிகளுக்காக வளைத்துவிடும் என்பதுதான்.

போராட்டக்குழுவினர் ஒவ்வொரு கட்சியினரிடமும் சென்று 3,4 அணு உலை ஒப்பந்தத்திற்கெதிரான நிலையை எடுக்கச் சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு மேலாகியும் மக்கள் போராட்டம் ஓயவில்லை. 1,2 அணுவுலைகளை எதிர்த்த அதே வீரியத்தோடே மக்கள் பிற அணுவுலைகளையும் எதிர்க்கிறார்கள். தமிழகத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் எகாதிபத்தியத்திற்கும், அக்கொள்ளைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிராக தொடர்ச்சியாகப் போராடும் இடிந்தகரை மக்களோடு தோள் சேர்வோம். போராட்டத்திற்கு வலு சேர்ப்போம்.

– பாலாஜி

About பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*