Home / கலை / மந்திரக்காரனின் புறா

மந்திரக்காரனின் புறா

 

வண்ணப் படிமங்கள் படர்ந்த

மின் திரையின்

அம்புக்குறித் தீண்டலில்

களங்கிக் கலைகிறதென்

கனவுகளின் கன்னித்தன்மை

 

விரல்களைக் குதறியெடுத்து

விரைந்தோடும் எலிகளை

விரட்டிப் பிடித்து

பொறிக்குள் அடக்குமுன்

தட்டச்சிய எழுத்துகள்

வார்த்தைச் சட்டங்களில் இருந்து

தாவிக் குதித்து மறைகின்றன…

 

சொல்நஞ்சுகள் துருத்தியபடி கிடக்கும்

மென்பஞ்சு இருக்கையில்

புரையோடிக் கிடக்கின்றன

காயங்கள் புசித்த நுண்ணுயிரிகள்…

Pura

குளிர் ஊடுருவும் தேகத்தில்

தூண்டிலின் உறுத்தல்களோடே

ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன்

உறவுகளின் உடைந்த மிச்சங்களுக்கிடையில்…

 

பின்னிரவுத் தேநீரின்

பித்த மயக்கத்தில்

ஒரு மந்திரக்காரனின் புறாவாக

இறகுகளின் படபடப்பில்

எனது சுதந்திரத்தை

உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்

அகழ்ந்தெடுத்த தரவுகளின் குவியலில்

அவை குப்பையாய் விழுந்து மரிக்கின்றன…

 

இடம்: இரவுப் பணியின் தனிமையில் தோன்றும் உணர்வுகள்

திணை: நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (வருந்துதல்)

துறை: மென்பொருள் துறை

 

அருஞ்சொற்பொருள்:

படிமம் – Image | மின்திரை – Monitor | நுண்ணுயிரி – Virus | தரவு – Data | தரவு அகழ்தல் – Data Mining

 

— அவனி அரவிந்தன்

About அவனி அரவிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*